அத்தியாயம் 3
முந்தைய நாள் இரவின் தவிப்புகளும் கண்ணீரும் விடியலில் காணாமல் போய்விட்டாலும், நிலாவினியின் கோபம் மட்டும் குறைந்தபாடில்லை. அன்று காலை எழுந்ததிலிருந்தே யாரிடமும் சரியாகப் பேசவில்லை. முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தாள். வீட்டு வேலைகளுக்கு, சமையலுக்கு என்று இருந்தவர்களிடம் எரிந்து விழுந்தாள்.
இந்த உலகத்தின் முன்னே கலிங்கராயன் என்பவன், ‘KNS Transport & Logistics’ என்கிற பெயரில் சரக்குப் போக்குவரத்து நிறுவனம் நடத்துகிறவன்.
உள்நாட்டுக்குள் பொருட்கள் அல்லது சரக்குகளை ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பாதுகாப்பாகவும் முறையாகவும் கொண்டுபோய்ச் சேர்ப்பதுதான் அதன் வேலை.
தன் சொந்த லொறிகளை வைத்தும் செய்கிறான். அதே நேரத்தில் சரக்குகளை அனுப்பும் வணிகர்களுக்கும், அந்தச் சரக்குகளை ஏற்றிச் செல்லும் லொறிகளை வைத்திருக்கும் நிறுவனங்களுக்கும் இடையே இணைப்புப் பாலமாகவும் இருக்கிறான்.
அதாவது காலநிலை, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, சேர வேண்டிய இடத்திற்குச் செல்ல எந்த வழி மிகவும் பாதுகாப்பானது என்று திட்டமிட்டுக் கொடுத்தல், கப்பலில் வந்திறங்கும் பொருள்களிற்கான சுங்கத்துறை அனுமதிகள், காப்பீட்டு ஆவணங்களைத் தயாரிப்பது, பொருட்களைப் பாதுகாப்பாகத் தற்காலிகமாகப் பதுக்கி வைப்பதற்கான கிடங்கு வசதிகளை வழங்குவது என்று பலவற்றையும் அவன் நிறுவனம் பார்த்துக் கொடுத்துக்கொண்டிருந்தது.
சுருக்கமாகச் சொன்னால், ஒரு வணிகர் தன் தயாரிப்புகளை எங்கு வேண்டுமானாலும் எந்தத் தலைவலியும் இல்லாமல் அனுப்பி வைக்க உதவும் போக்குவரத்து மேலாண்மை நிறுவனம்தான் அவன் நிறுவனம்.
இது அவன் பார்க்கும் நிழல் உலகத் தொழிலுக்கும் உதவிக்கொண்டிருந்தது. இன்னும் சொல்லப்போனால் அதற்காகத்தான் இந்த நிறுவனத்தையே ஆரம்பித்திருந்தான்.
அந்த நிறுவனம் கலிங்கராயனின் தலைமையில் நடந்தாலும் நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்பவள் நிலாவினிதான். ஒரு அலுவலகப் பின்னணியில், அதிகாரம் மிக்க ஒருத்தியாக அவளைப் பார்ப்பதில் அவனுக்குள் ஒரு ஆனந்தம். அப்படியானவள் இன்றைக்குக் கோபத்தில் முறுக்கிக்கொண்டு நின்றுவிட்டு, காரை எடுத்துக்கொண்டு அலுவலகம் புறப்பட்டுச் சென்றுவிட்டாள்.
அவளைக் கவனித்துக்கொண்டிருந்த கலிங்கராயனின் உதட்டோரம் லேசான புன்னகை. அவனின் ஒற்றைக் கண்ணசைவில் அவள் பாதுகாப்பாக அலுவலகம் சென்று சேரும் வரையில் அவளைப் பின்தொடர்ந்தான் ஒருவன். அப்போது அவன் தோளைச் சுற்றிக் கையைப் போட்டுக்கொண்டு வந்து நின்றான் சூர்யா.
“என்னவாம் மேடம்?”
“கோவமா இருக்கிறாளாம்.” உதட்டோரம் மலர்ந்திருந்த சிறு புன்னகையுடன் அவன் புறம் திரும்பிச் சொன்னான் கலிங்கராயன்.
“நீதான்டா இடம் குடுத்து வச்சிருக்கிறாய்.”
“நான் குடுக்காம வேற ஆர் குடுக்கிறது?”
அவன் சரிவரமாட்டான் என்பதுபோல் தலையை அசைத்தான் சூர்யா. அவர்களின் கரடுமுரடான வாழ்க்கைக்கு மத்தியில் இருவரினதும் நிம்மதியே நிலாதான். அவர்கள் இளகி நிற்பதும் அசைந்து கொடுப்பதும் அவளிடம்தான். கலிங்கராயனைக் கடிந்துகொண்டாலும் சூர்யாவும் அவளுக்கு அடங்கியவன்தான். என்ன, நிலா என்று வருகையில் கலிங்கன் அமைதியாகப் போய்விடுவதால் சூர்யா கொஞ்சம் கண்டிப்புக் காட்ட முயல்வான்.
அதில் அதைத் தவிர்த்துவிட்டு, “இண்டைக்கு என்ன பிளான்?” என்று விசாரித்தான் சூர்யா.
“‘எஸ்பி’ய போய்ப் பாத்துக்கொண்டு வந்திட்டு நிலாவைக் கூட்டிக்கொண்டு வெளில போகப்போறன்.” என்று சொன்னான் கலிங்கன்.
அன்று நடந்த சண்டையை மொத்தமாக மூடி மறைக்கப்போகிறான். பெரும் தொகை ஒன்று கை மாறப்போகிறது. கூடவே, அனுப்பிவைத்த சரக்குகள் எந்த ஆபத்தும் இல்லாமல் போய்ச் சேரவேண்டும். அதற்கும் அவர்தான் அவர்களின் ஆள். புரிந்தது என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு, “நான் கோடவுனுக்குப் போகப்போறன்.” என்றான் சூர்யா.
அவனிடம் சொன்னது போன்று ‘எஸ்பி’யைச் சென்று சந்தித்துவிட்டு வர கலிங்கனுக்கு மதியமாகியிருந்தது. போன காரியம் வெற்றி. அடுத்ததாக அவர்களின் அலுவலகத்திற்குக் சென்றான்.
அங்கே, நேராக நிலாவினியின் அலுவலக அறைக்குச் சென்று,
கதவைத் தட்டாமல் திறந்தான். யார் என்று நிமிர்ந்து பார்த்தவள், அவன் என்றதும் ஒரு முறைப்பை வீசிவிட்டு, மறுபடியும் கையில் இருந்த போக்குவரத்து ஆவணங்கள் அடங்கிய கோப்பில் முகத்தைப் புதைத்தாள்.
அவளது அந்தச் செயலைக் கவனித்தபடியே, அவள் எதிரில் இருந்த இருக்கையை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தான் கலிங்கன்.
அவன் அமர்ந்த விதத்திலும், அவனது பார்வையின் ஊடுருவலிலும் நிலாவினி தடுமாறினாள். அவளால் தொடர்ந்து வேலை பார்ப்பதுபோல் பாசாங்கு செய்ய முடியவில்லை. ஆனாலும் நிமிரவில்லை. கோப்புகளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“இன்னும் எவ்வளவு நேரம் இப்பிடியே இருக்கிற ஐடியா?” நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தபடி வினவினான்.
அவள் அதற்கும் பதில் பேசாமல் இருந்தாள். அவளது மேசையில் இருந்த பேனாவை எடுத்துத் தன் விரல்களில் சுழற்றியபடி, “இப்ப என்ன கோவம் உனக்கு?” என்று வினவினான் அவன்.
விழுக்கென்று நிமிர்ந்து நன்றாக முறைத்தாள் நிலாவினி. இரவு முழுக்க அவ்வளவு சொல்லியிருக்கிறாள். இப்போது வந்து என்ன கோபமாம்?
“நிலா! காயமே ஒழிய பாரதூரமா ஒண்டும் இல்லையே. இதெல்லாம் நீ பாக்காததா?” என்றான் அவன் மறுபடியும்.
“இதுதான் நாங்க. இதுதான் எங்கட வாழ்க்கை, அது உனக்கு நல்லாவே தெரியும். அப்பிடி இருந்தும் ஒவ்வொரு முறையும் இப்பிடி நீ முகத்தைத் திருப்பிக்கொண்டு திரிஞ்சா என்ன அர்த்தம்?”
“உண்மைதான். இதுதான் வாழ்க்கை, இந்த நரகத்திலதான் இருக்கிறம். அதுக்காக சாகிற வரைக்கும் இப்பிடியேதான் இருக்கோணும் எண்டு இல்லையே. நாங்களும் கொஞ்சம் நிம்மதியா, சந்தோசமா வாழலாம்தானே? நாங்க இதுக்க இருந்து வெளில வந்தா, எங்கட பிள்ளைகளுக்கும் நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் ராயன். எனக்கு எங்கட குழந்தைகளுக்கு இந்த வாழ்க்கை வேண்டாம். அவேயாது எங்களை மாதிரி இல்லாம நிம்மதியா, சந்தோசமா அந்தந்த பருவத்தை அனுபவிச்சு வாழட்டுமே. இல்லை… அவேயும் எங்கள மாதிரி…” என்று ஆவேசமாகச் சொல்லிக்கொண்டு வந்தவளை, “நிலா!” என்ற அவனின் ஒற்றை அதட்டல் அடக்கிற்று.
அவள் முகத்தைத் திருப்பிக்கொள்ள, அவனுக்கும் சற்று நேரத்துக்கு எதுவும் பேச முடியாமல் போயிற்று.
“வா, வெளில போயிற்று வருவம்.”
பேச்சைக் கத்தரிக்கிறான். ஆக, இவ்வளவு சொல்லியும் அவன் கேட்பதாயில்லை. “எனக்கு வேலை இருக்கு.” அவனைப் பாராமல் சொல்லிவிட்டுக் கோப்பில் பார்வையைக் குவித்தாள்.
கொஞ்ச நேரம் விழிகளை அகற்றாமல் அவள் மீதே குவித்தவன் எழுந்து, அவளையும் வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே நடந்தான். அவள் விடச்சொல்லி எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை.
முதல் வேலையாக நல்ல உணவகமாகச் சென்று பசியாறினார்கள். அடுத்ததாக அங்கிருந்த பூங்காவிற்கு அழைத்துப்போனான். அங்கே கொத்துக் கொத்தாக நிற்கும் மான்களைக் கண்டால் நிலா தானும் ஒரு மானைப்போன்று மாறிவிடுவான்.
அவற்றோடு விளையாடி, கொஞ்சி, உணவு கொடுத்து, கோபம் மறந்து நின்றவளோடு படத்துக்குச் சென்றான். அது முடிந்து வெளியே வந்தபோது இரவாகியிருந்தது. இரவுணவையும் முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் நிலாவின் முகத்தில் மலர்ந்த முறுவல் நிரந்தரமாகத் தங்கியிருந்தது.
அதைக் கெடுப்பது போன்று அவனது கைப்பேசி அணுங்கிற்று.

