கலிங்கனின் காவியம் 30.2

அவள் இறங்கியதும் அவளை அழைத்துக்கொண்டு கோயிலுக்கு நடக்க ஆரம்பித்தான். குறிப்பிட்ட தூரத்தில் அவன் ஆட்கள் அவர்களைப் பின் தொடர்ந்தார்கள். திரும்பி அவர்களைப் பார்த்துவிட்டு, “இவே எல்லாரும் ஏன் வருகினம்?” என்று கேட்டாள்.

“ஏன், அவங்கள் கோயிலுக்கு வரக்கூடாதா?” கண்ணோரம் சுருங்க வினவினான் அவன்.

“பகிடி?” என்று முறைத்துவிட்டு, “உங்க எல்லாரையும் பாத்தா கும்பிட வாற ஆக்கள் மாதிரியா இருக்கு?” என்று கேட்டாள்.

அவன் ஒன்றும் சொல்லாமல் வர, “அதான்! உங்களுக்கு என்ன கதைக்கோணுமோ அது மட்டும்தான் வாயில இருந்து வரும் என்ன?” என்று சீறினாள்.

“வரும்மா, கோயிலுக்கு வந்திருக்கிறம். இவ்வளவு கோபம் என்னத்துக்கு?” என்றான் அவன் இதமாய்.

அவள் நடை ஒரு கணம் நின்றுபோயிற்று. அவனின் வரு என்ற அழைப்பே அவள் இதயத்தைச் சென்று தாக்கும். இன்னுமே அவன் அப்படி அழைத்தால் அவளுக்குள் என்னவோ கரைவது போலிருக்கும் அந்த உணர்வு போகவில்லை. இதில் வரும்மா என்றால்?

“என்ன, வா!” நின்றுவிட்டவளைக் கரம் பற்றி அழைத்துக்கொண்டு நடந்தான் அவன்.

ஒரு காலம் அந்த வைரவர் கோயிலில்தான் அவன் வயிறு வளர்த்திருக்கிறான். அவனுடைய உணவிடமாக, உறைவிடமாக, ஓய்வெடுக்கும் இடமாக இந்த வைரவர்தான் இருந்திருக்கிறார். அவனுடைய இளமைக்காலத்தின் வலிகளையும் தனிமையையும் சுமந்து நின்ற அந்தக் கோயிலின் மீது அவனுக்குத் தனிப்பட்ட பாசம் உண்டு. அதனாலேயே வருடா வருடம் வைரவருக்கான திருவிழாவைப் பெரும் கோலாகலமாகக் கொண்டாடுவான்.

அன்றைக்குச் சாதாரணத் திருவிழையல்ல. கடா வெட்டி வைரவருக்குப் பொங்கல் வைத்து வழிபடும் விசேட நாள். ஊரே திரண்டு வந்து கொண்டாடும் அந்த விழாவுக்காகக் கோயில் வளாகம் களைகட்டியிருந்தது.

இவர்கள் கோயிலை நெருங்க நெருங்கக் கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது. இவனைக் கண்டுவிட்டு இவனிடம் வர ஆரம்பித்தனர்.

கலிங்கராயன் உயிருடன் இருக்கிறானா இல்லையா என்று தெரியாமல் ஒருகாலத்தில் தவித்துப்போயிருந்தவர்களுக்கு அவன் திரும்பி வந்துவிட்டான் என்ற செய்தி எட்டியிருந்தது. ஆனால், அவனை நேரில் பார்ப்பதற்கான வாய்ப்பு மட்டும் இதுவரை கிடைத்ததில்லை. அவனும் திரும்பி வந்ததிலிருந்து எந்த நேரமும் ஓடிக்கொண்டிருந்தானே.

வைரவர் கோயில் திருவிழாவுக்குக் கட்டாயம் வருவான் என்று தெரியும். அதிலும், அவனுடைய புதுமனைவியையும் அழைத்துக்கொண்டு வருகிறான் என்ற செய்தி வேறு பரவியிருந்தது.

அவர்கள் இருவரையும் பார்க்க, நலன் விசாரிக்க, திருமணத்திற்கு வாழ்த்த என்று மக்கள் அவனைச் சூழ ஆரம்பித்தனர்.

ஒருவர் அவனுடைய கையைப் பிடித்துக்கொண்டு நலம் விசாரித்தார். இன்னொருவர் அவனுடைய தோளைத் தட்டிப் பாசத்துடன் ஏதோ கேட்டார். வயதானவர்கள் அவனைப் பார்த்ததும் கண் கலங்கினார்கள்.

அத்தனை பேருக்கும் அவன் மீது பாசம் இருந்தது. அவன் திரும்பி வந்துவிட்டான் என்ற மகிழ்ச்சி அவர்கள் முகங்களில் அப்பட்டமாகத் தெரிந்தது. அந்த அன்பை அவர்கள் அவள் மீதும் திருப்ப அவளுக்குச் சமாளிக்க முடியவில்லை. ஏதோ ஒரு பதற்றம். அவன் கையைப் பற்றிக்கொண்டு நெருங்கி நின்றாள்.

அவள் செயலை உணர்ந்து அவள் கண்களைச் சந்தித்தவன், மெதுவாகக் கண்களை மூடித் திறந்து தைரியம் கொடுத்தான்.
என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லை! அவன் கைகளுக்குள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்கிற உணர்வா, இல்லை, அவன் தன்னோடு இருக்கிறான் என்கிற நம்பிக்கையா அவளுக்கே புரியவில்லை.

ஆனால், அவளுடைய படபடப்பும் பயமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தன. அதன் பிறகுதான் சுற்றியிருந்த மக்களின் ஆரவாரத்தையும், அவர்களுடைய முகங்களில் தெரிந்த அன்பையும் அவளால் நிதானமாகக் கவனிக்க முடிந்தது.

கோயிலை நெருங்கியதும் அங்கிருந்த மேளதாளங்களின் ஓசை அவர்களை வரவேற்றது. கோயில் வாசலில் ஏற்கெனவே பலரும் காத்திருந்தனர்.

கலிங்கனைக் கண்டதும் அங்கிருந்த பெரியவர்கள் முன்னால் வந்து அவனை வரவேற்றனர். மாலை அணிவித்து, சந்தனம் பூசி மரியாதை செய்தனர். அவன் மனைவி என்கிற பெயரில் அவனுக்கு கிடைத்த அத்தனை மரியாதையும் அவளுக்கும் கிடைத்தது. கோயில் நிர்வாகத்தினர் அவர்களை அழைத்துச் சென்று முன்னிலைப்படுத்தினர்.

அவனுக்குக் கிடைத்த அந்த முக்கியத்துவத்தைப் பார்த்த வருணாவுக்குச் சற்றே வியப்பாக இருந்தது.

வைரவருக்கு விசேட பூஜைகள் ஆரம்பமாகின. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சந்நிதியில் விளக்குகள் ஒளிர்ந்தன. கற்பூரத்தின் மணமும் ஊதுபத்தியின் நறுமணமும் காற்றில் கலந்திருந்தன. அர்ச்சகர் பூசையைத் தொடங்கினார்.
மணியோசை தொடர்ந்து ஒலித்தது. மக்கள் கைகளைக் கூப்பி வணங்கினார்கள். வருணாவும் கண்களை மூடிப் பிரார்த்தித்தாள்.

அவளுடைய மனத்தில் எத்தனையோ குழப்பங்கள் இருந்தன. கலிங்கராயன் மீது கோபம் இருந்தது. அவன் தன்னுடைய சுதந்திரத்தைப் பறித்துக்கொண்ட ஆதங்கம் இருந்தது. அடுத்து என்ன என்று தெரியாத தவிப்பும் இருந்தது.

ஆனால், அந்தச் சந்நிதியின் முன்னால் அவனோடு நின்றபோது அவள் உள்ளம் நிறைந்து, ஏதோ ஒரு அமைதியில் ஆழ்ந்துபோயிற்று.

பூசை முடிந்ததும் அர்ச்சகர் பிரசாதத்தை முதலில் அவர்கள் இருவருக்கும் வழங்கினார். கலிங்கராயன் அதைப் பெற்றுக்கொண்டு, அவர் கொண்டுவந்த மாலைகளில் ஒன்றை எடுத்து அவளுக்கு அணிவித்துவிட்டு, மற்றொரு மாலையை அவளிடம் நீட்டினான்.

வருணா திகைத்துப்போய் அவனைப் பார்த்தாள். சுற்றிலும் ஊரே கூடியிருக்க, பல கண்கள் அவர்களைச் சூழ்ந்திருந்தன.

அவன் எதுவும் பேசவில்லை. அவளையே பார்த்திருந்தான். கடைசியில் அந்த மாலையை வருணா வாங்கினாள். அவள் கைகள் லேசாக நடுங்கின. மெல்ல கலிங்கராயனின் கழுத்தில் அதை அணிவித்தாள். அவனும் அவள் உயரத்திற்கு ஏற்ப தலையைக் குனிந்து அதை வாங்கிக்கொண்டான்.

மக்களிடையே மகிழ்ச்சியான ஆரவாரம் எழுந்தது. வருணாவுக்கு அது காதில் விழவேயில்லை. அவள் பார்வை முற்றிலுமாகக் முழுவதும் கலிங்கராயனிடமே இருந்தது.

அவன் அவளுடைய கழுத்தில் இருந்த மாலையைச் சரி செய்துவிட்டு, அவள் நெற்றியிலும் உச்சியிலும் திலகமிட்டுவிட்டு, அவளுடைய சேலைக்குள் மறைந்திருந்த தாலிக்கொடியை மெதுவாக வெளியே எடுத்து, அதற்கும் குங்குமம் தீட்டினான்.

அந்தச் செயல் அவளுக்குள் உண்டாக்கிய மாற்றம் பெரும் மாற்றமாக இருந்தது.

அவன் தாலி கட்டியபோது அவள் மனத்தில் இருந்தவை எதிர்ப்பும் கோபமும்தான். அந்தத் தாலியை அதன் பிறகும் தனக்கான சுமையாக, விலங்காகத்தான் பார்த்திருக்கிறாள்.

ஆனால் இன்றைக்கு? அவளுடைய கண்கள் கலங்கின. இது கோயிலின் புனிதமான சூழல் ஏற்படுத்திய உணர்வா? வைரவரின் சந்நிதியில் நின்றிருப்பதன் தாக்கமா?

அல்லது, அவள் நெற்றியிலும் உச்சியிலும் குங்குமம் வைத்து, அவள் உள்ளத்தினுள் தனக்கான இடத்தை அவன் நிலை நாட்டியத்து அவளுக்குள் இத்தனை உணர்வுகளையும் கிளறிவிட்டதா?

எதுவென்று அவளுக்குப் பிரித்தறியத் தெரியவில்லை. ஆனால், ஏதோவொரு கயிறு தன்னையும் அவனையும் இறுக்கமாகப் பிணைத்துவிட்டதை மிக நன்றாகவே உணர்ந்தாள்.

அவள் கண்களை இமைத்தாள். கண்ணீர்த் துளிகள் இமைகளில் தேங்கின.

அவனோடு தன்னை இணைக்கும் எந்தப் பந்தத்தையும் இதுவரை மனதளவில் ஏற்றுக்கொள்ளாதவள், இப்போது அவனிடமிருந்து விலகி நிற்க முடியாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

சந்நிதியில் மணியோசை முழங்கியது. அர்ச்சகர் தீபாராதனை காட்ட, மக்கள் அனைவரும் கைகளைக் கூப்பி வணங்கினார்கள்.
இதுவரை அவனுடனான உறவை மனதளவில் ஏற்க மறுத்தவள், இன்று வைரவரைச் சாட்சியாக வைத்து, ஊர் கூடியிருக்க, கலிங்கராயனோடு தன்னையும் இணைக்கும் அந்தப் பந்தத்தைத் தன் மனதின் ஆழத்தில் முதன்முறையாக உணர்ந்தாள்.

error: Alert: Content selection is disabled!!