கலிங்கனின் காவியம் 31.1

அத்தியாயம் 31

நீயும் நானும் கணவன் மனைவி, இனி இம்மையிலும் மறுமையிலும் நமக்கு நாம்தான் என்று அவன் வார்த்தைகளால் சொல்லவில்லை. மாறாக, தன்னுடைய ஒவ்வொரு செய்கையாலும் அவளுக்கு அழுத்தமாகப் புரியவைத்தான்.

இனி அவள் நினைத்தால் கூட இந்த வாழ்க்கையிலிருந்து விலகிவிட முடியாது. அவள் உள்ளமே அதற்கு விடாது என்கிற உண்மை பாரமாக அழுத்தியது.

அதே நேரத்தில், அவன் மீதான ஏதோவொரு புதிய உணர்வு தனக்குள் மெல்ல உருவாகத் தொடங்கியிருப்பதையும் அவள் உணர்ந்தாள். அந்தப் பந்தத்தின் ஆழமும், அவன் மீதான அந்தப் புதிய உணர்வும், இனி அவனோடு வாழப்போகும் வாழ்க்கை குறித்த புரியாத கலக்கமும் ஒன்றாகச் சேர்ந்து அவளுடைய கண்களில் கண்ணீராக வழிந்துகொண்டிருந்தன.

அது அவனுக்குள் ஒருவித இறுக்கத்தை உண்டாக்கிற்று. “பிடிக்கேல்லையா?” கிடைத்த சந்தர்ப்பத்தில் அவள் விழிகளையே பார்த்தபடி கேட்டான் அவன்.

இதே கேள்வியை இதற்கு முன்பு கேட்டிருந்தால், எந்தத் தயக்கமுமின்றி பிடிக்கவில்லை என்று சொல்லியிருப்பாள். ஆனால் இன்றைக்கு முடியவில்லை. மாறாக அவள் விழிகளில் கண்ணீர்தான் கசிந்தது.

தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முயன்றவள், அவனுடைய புஜத்தில் நெற்றியைப் பதித்துக் கண்ணீர் சொரிந்தாள். தம்மைச் சுற்றி பார்வையைச் சுழற்றியபடி, “வரும்மா, கோயில்ல நிக்கிறம்.” என்று தாம் இருக்குமிடத்தை அவளுக்கு உணர்த்த முயன்றான்.

அவளுக்கும் புரிந்தது. அவனிடமிருந்து மெல்ல விலகி, சேலை முந்தானையால் கண்களை ஒற்றிக்கொண்டு தன்னைச் சீர்படுத்திக்கொண்டாள்.

அதன்பின்னர் கடாவெட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கின. நேர்த்திக்கடனாக அழைத்து வரப்பட்ட கடாவுக்கு மஞ்சள், குங்குமம் பூசி மாலை அணிவித்திருந்தனர்.

அர்ச்சகர் வைரவருக்கு விசேட பூஜை செய்து தீபாராதனை காட்டினார். நேர்த்திக்கடன் செலுத்திய குடும்பத்தினர் கைகூப்பி வணங்கினர். ஆலய மரபின்படி கடாவெட்டுச் சடங்கு நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க, பக்தர்கள் வைரவரை வணங்கினர்.

வருணாவுக்கு இதை பற்றித் தெரியும்தானே. ஆனால், கண் முன்னாள் அது நடந்தபோது எப்படி உணர்வது என்றே தெரியவில்லை.

சடங்கு நிறைவடைந்ததும் கோயில் வளாகத்தின் மறுபுறத்தில் பொங்கல் வைக்கும் ஏற்பாடுகள் மும்முரமாகின. ஊரார் புதுப் பெண்ணான அவளுக்கும் ஒரு பொங்கல் பானையையை ஏற்பாடு செய்தனர்.

“பொங்கத் தெரியுமா?” மற்றவர்கள் அறியாமல் மெல்லிய குரலில் வினவினான் கலிங்கராயன்.

அதற்கு அவள் அவனைப் பார்த்து முறைத்த முறைப்பே பதிலைச் சொல்லிவிடம் “தெரியும் போல.” என்றான் உதட்டோர முறுவலுடன்.

செங்கற்களால் அமைக்கப்பட்ட அடுப்புகளில் புதுப்பானைகள் வைக்கப்பட்டு, விறகுகள் பற்றவைக்கப்பட்டன. வருணாவும் பொங்கல் பானையை ஏற்றினாள்.

“நிலாக்கு இதெல்லாம் வராது.” யாரோ யாரிடமோ சொல்வது இவள் காதில் விழுந்தது. யாரைப் பற்றியோ பேசுகிறார்கள் என்கிற நினைப்புடன் தன் வேளையில் கவனமாக இருந்தாள் அவள்.

அது வெறும் கோயில் திருவிழா மட்டுமல்ல. வருடாவருடம் ஒருவரை ஒருவர் தாக்குவதற்குச் சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருக்கும் நாளும்கூட!

அதுவும் இரு ஊர்களுக்கும் பொதுவான இடத்தில் அமைந்திருந்த கோயில் என்பதால், இரண்டு ஊர் மக்களுமே பெருமளவில் திரண்டு வருவார்கள். அத்தனை மக்களையும் கண்காணிப்பதோ, ஒவ்வொருவரையும் கட்டுப்படுத்துவதோ சாத்தியமில்லாத காரியம்.

எதிரிகள் எங்கிருந்து வருவார்கள், எந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்வார்கள் என்று யாராலும் கணிக்க முடியாது. இருந்தாலும், கலிங்கராயன் எப்போதும் இதுபோன்ற சூழல்களை எதிர்கொள்ளத் தயாராகவே இருப்பான். எத்தனை ஆபத்துகள் வந்தாலும் அவற்றைச் சமாளித்துவிடலாம் என்ற நெஞ்சுரம் அவனுக்கு இருந்தது.

ஆனால், இந்த முறை மட்டும் அவனிடம் வழக்கத்தை விடக் கூடுதல் எச்சரிக்கை தெரிந்தது. ஆதியில் தொடங்கி தன்னுடைய ஆட்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக எச்சரித்திருந்தான். கூட்டத்துக்குள் யாரையும் அலட்சியமாக விட்டுவிடக் கூடாது என்றும், சுற்றுப்புறத்தில் நடக்கும் ஒவ்வொரு அசைவையும் கவனிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தான்.

காரணம் வருணா. அவளைப் பொறுத்தவரையில் கோயில் திருவிழா என்றால் அது ஒரு திருவிழா மட்டுமே. மக்கள் கூட்டமாக வந்து சுவாமி தரிசனம் செய்வதும், நேர்த்திக்கடன் செலுத்துவதும், உறவினர்களையும் தெரிந்தவர்களையும் சந்திப்பதும்தான் அவளுக்குத் தெரிந்த உலகம்.

வருடாவருடம் இந்த நாளுக்காகவே காத்திருந்து, ஒருவரையொருவர் பழிவாங்கத் துடிக்கும் மனிதர்களைப் பற்றியோ, அந்தப் பகைக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஆபத்துகளைப் பற்றியோ அவளுக்குத் தெரியாது.

பொங்கும் பெண்களோடு அவளை விட்டுவிட்டுத் தள்ளி நின்றிருந்தாலும் அவளைக் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். கூடவே அவளை சுற்றியிருந்த கூட்டத்தைச் விழிகள் சல்லடை போட்டுத் துழாவின. ஒவ்வொரு முகத்தையும், ஒவ்வோர் அசைவையும் கூர்ந்து கவனித்தன.

கை வேளையில் கவனமாக இருந்தாலும் வருணாவும் அவனையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தாள்.யாரைத் தேடுகிறான், இல்லை ஏதும் பிரச்சனையா என்று அவளுக்குப் புரியவில்லை.

அவன் அவள் பார்வையைச் சந்தித்த நொடியில் என்னவென்று சிறு புருவ அசைவால் வினவினாள். அவனிடத்தில் மெல்லிய வியப்பு. கூடவே, கண்ணோரங்களும் சிரிப்பில் சுருங்க ஒன்றுமில்லை என்றான் அவனும் தலையசைப்பிலேயே.

அவள் விழிகள் வியப்பில் விரிந்தன. அவன் சிரித்தது மட்டுமல்லாமல், எதுவுமே இல்லை என்று ஒரு குழந்தைக்குச் சமாதானம் சொல்வதுபோலத் தலையசைத்த விதமும் அவளைத் திகைக்க வைத்தது.

அவள் பொங்கலில் கவனமாகிவிட கலிங்கராயனின் கைப்பேசி சத்தமிட்டது. எடுத்துப் பார்த்தான். ஆதி என்று காட்டியது.

அவன் அழைப்பை ஏற்றபோது மறுமுனையில் குளப்பமான பல சத்தங்கள். அழைப்பும் நின்றுபோயிற்று. இங்கேதானே இருந்தான் என்றபடி மக்களுக்கிடையே விழிகளைச் சுழற்றினான்.

இப்போது ராயனின் கைபேசிக்கு அடுத்தடுத்துக் குறுஞ்செய்திகள் வந்து விழுந்தன.

“அண்ணா!”

“என்னை காப்பாத்துங்க.”

“ஓடி வாங்க…” என்று பதற்றமான தகவல்கள் திரையில் ஒளிர்ந்தன.

அவன் புருவங்கள் சுருங்கின. புத்தி கூர்மையாயிற்று. எங்கே நிற்கிறாய் என்று கேட்டுக் குறுந்தகவல் அனுப்ப முயன்றபோதுதான் அவன் மூளைக்குள் திடீரென்று ஒரு எச்சரிக்கை மணி அடித்தது.

ஆதி ஒரு நாளும் இப்படிப் பதறிப் பேச மாட்டான்! அவனுக்கு என்ன ஆபத்து வந்தாலும் அதைத் தனித்து நின்று கையாளுபவன்! அந்தச் சந்தேகம் மின்னலாய் அவனது மூளையில் வெடித்த கணமே நிமிர்ந்து பார்த்தான்!

நொடியில் அரங்கேற முயன்ற கோரக் காட்சியில் ஒரு கணம் அவன் உயிர்த்துடிப்பு அப்படியே நின்றுபோயிற்று.

குறுந்தகவல் அனுப்ப எண்ணி அவன் கைப்பேசியில் கவனம் குவித்த அந்த நொடியைப் பயன்படுத்திக்கொண்டு, கூட்டத்திற்குள் மறைந்திருந்த ஒரு பெண், கூர்மையான கத்தியை ஓங்கிக்கொண்டு, வருணனை நோக்கி வேகமாகப் பாய்ந்து வந்துகொண்டிருந்தாள்!

அடுத்த நொடியே மின்னல் வேகத்தில் ஓடிச்சென்று, அவளுக்குச் சிறு கீறலும் விழுந்துவிடாமலிருக்க, தன் அகன்ற மார்பையும் கைகளையும் விரித்து நின்று, கேடயமாகத் தடுத்தான் ராயன்!

அந்தப் பெண் ஓங்கிய கத்தி, நேராகப் சென்று கலிங்கராயனின் முதுகைக் கிழித்துக்கொண்டு இறங்கியது.

சுற்றியிருந்தவர்களின், “ஐயோ!” என்ற பதறலான அலறல் சத்தத்தைக் கேட்டு, பொங்கல் பானையில் கவனமாக இருந்த வருணா திடுக்கிட்டுத் திரும்பினாள்.

“ஒண்டுமில்ல ஒண்டுமில்ல!” என்று அவளைத் தன் சிறகுகளுக்குள் ராயன் பொத்திக்கொள்ள, அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“என்ன, ஏன் சனமெல்லாம் கத்தினம்?” என்றவளுக்கு என்னவோ ஏதோ என்று தவிப்பு. அவன் முகத்திலிருந்து எதையும் படிக்கவும் முடியவிலை. அவர்களுக்குப் பின்னால் கேட்ட பதற்றமான சத்தத்தில் அவள் எட்டிப் பார்க்க முயல அவன் விடவில்லை. அவளைத் தனக்குள் பொத்திக்கொண்டான்.

அதற்குள் சுதாரித்துக்கொண்ட ராயனின் ஆட்கள் அந்தப் பெண்ணை வளைத்துப் பிடித்து அடிக்கப் போனார்கள். “தம்பி காப்பாத்துங்க தம்பி!” என்ற அந்தப் பெண்ணின் அலறலில் தன்னை மறந்து திரும்பினான் அவன்.

அப்போதுதான் அவனுடைய முதுகிலிருந்து வழிந்துகொண்டிருந்த இரத்தத்தைப் பார்த்தாள் வருணா.
அவளுடைய பார்வை அங்கேயே உறைந்தது.

பட்டுச் சட்டையின் முதுகுப் பகுதி கிழிந்து, இரத்தத்தில் நனைந்திருந்தது. காயத்திலிருந்து பீறிட்டுப் பாய்ந்த இரத்தம் அவனுடைய இடுப்புவரை வழிந்துகொண்டிருந்தது.
“ஐயோ… ரெத்தம்!” அவளுடைய குரல் தொண்டைக்குள்ளேயே சிக்கிக்கொண்டது.

error: Alert: Content selection is disabled!!