கலிங்கனின் காவியம் 32.1

அத்தியாயம் 32

வைத்தியசாலை அறையிலிருந்த கட்டிலின் இருபுறமும் கைகளை ஊன்றியபடி, உடலின் பாரத்தை அவற்றில் தாங்கிக்கொண்டு அமர்ந்திருந்தான் கலிங்கராயன். தையல் போடப்பட்டிருந்த முதுகுப்பகுதி முழுவதும் எரிச்சல் பரவியிருந்தது. சற்றே பின்னால் சாய்ந்தாலோ, உடலைத் திருப்ப முயன்றாலோ காயத்தின் வலி கூர்மையாகத் தாக்கியது. கைகளை அசைத்தாலும் அதே நிலைதான்.

ஆனாலும் முகத்தில் வலியின் சாயல் துளியளவும் வெளிப்படவில்லை. இறுகிய தாடையும், அமைதியாக நிலைத்திருந்த பார்வையும் அவன் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பத்தைச் சொல்லிற்று.

என்னதான் அவன் வலியைக் காட்டிக்கொள்ளாமல் அப்படி அமர்ந்திருந்தாலும், அந்தக் காயம் எந்தளவுக்கு வலிக்கும் என்று வருணாவுக்குப் தெரியுமே. “கொஞ்ச நேரம் குப்புறப் படுத்து நித்திரை கொள்ளுறீங்களா? ஸ்லீப்பிங் டேப்ளெட்ஸ் தாறன்.” என்று கேட்டுப் பார்த்தாள்.

அவன் மறுப்பாகத் தலையசைத்தான். கூடவே, அவன் முக பாவனை எதற்கோ காத்திருப்பதைப் போல அவளுக்குத் தோன்றியது.

அது என்னவென்று புரியாமல், “என்ன?” என்று கேட்டாள்.

அதற்கும் ஒன்றுமில்லை என்பதுபோலத் தலையசைத்தான்.
மனம் திறந்து எதையும் சொல்கிறான் இல்லையே என்கிற ஆதங்கம் அவளுக்குள் உண்டாயிற்று. அவனருகே வந்தவள் அவனுடைய கழுத்திலும் நெற்றியிலும் கைவைத்துப் பார்த்தாள். காய்ச்சல் எதுவும் இல்லை.

முதுகிலிருந்த காயத்தையும் கட்டையும் கவனமாகப் பரிசோதித்தாள். நல்லபடியாகத்தான் இருந்தது. ஏற்கெனவே தேவையான மருந்துகளையும் கொடுத்திருந்தாள். முடிந்தவரையில் அவனுக்கு வலி தெரியாமல் பார்த்துக்கொள்ளத்தான் முயல்கிறாள்.

ஆனாலும் வலிக்கும். அப்படி அத்தனை வலியையும் எப்படி இப்படி அமைதியாகத் தாங்கிக்கொள்கிறானோ என்கிற பரிதவிப்பு அவளுக்குள் எழுந்தது.

“ஏதாவது குடிக்க வேணுமா?”

அதற்கும் மறுப்பாகவே தலையசைத்தான்.

அவளுக்கு ஆற்றாமையாக இருந்தது. “என்ன கலிங்கா இது? வாயைத் திறந்து கதைங்கோவன். என்ன நினைக்கிறீங்க எண்டு சொல்லுங்கோ. அப்பத்தானே எனக்கும் தெரியும்.” மெல்லிய இதத்துடனும் அவனைப் பேசத் தூண்டும் விதமாயும் சொன்னாள்.

அவளையே சில கணங்களுக்குப் பார்த்தவன் விழிகளை ஒருமுறை மூடித் திறந்து, “ஒண்டுமில்லை.” என்றான்.

“உங்களை…” என்று ஆரம்பித்தவளுக்கு அடுத்து என்ன சொல்வதென்றே புரியவில்லை.

அவனுடைய மருத்துவ அறிக்கையை எடுத்துப் பார்த்தாள். ஏற்கெனவே கொடுத்த மருந்துகளைத் தவிர வேறு ஏதாவது கொடுக்க முடியுமா, வலியைக் குறைக்க இன்னும் ஏதாவது செய்ய முடியுமா என்று ஒவ்வொன்றாகப் பார்த்தாள்.

ஆனால், மருத்துவ ரீதியாக அவளால் செய்ய முடிந்தவற்றையெல்லாம் செய்திருந்தாள். ஆனாலும் அவனுடைய வலியைத் தன்னால் பகிர்ந்துகொள்ள முடியவில்லையே என்ற தவிப்பு மட்டும் அவளிடம் எஞ்சியிருந்தது.

அப்போதுதான் அந்த அறையின் வாசலில் வந்து நின்றான் ஆதி. அவனை முதலில் கவனித்த வருணா கேள்வியாக ஏறிட்டாள். அவன் அவளுக்குப் பதிலிறுக்காமல் கலிங்கராயனைப் பார்த்தான்.

அந்தச் செயல் வருணாவுக்குப் பிடிக்கவில்லை. எப்போதுமே அவன் இப்படித்தானே என்று தோன்றிவிட, “இப்ப அவர் கதைக்கிற நிலைமையில இல்லை!” என்றாள் குரலில் இறுக்கத்தைக் கொண்டுவந்து.

கலிங்கனிடமும் திரும்பி, “நீங்க இப்ப ரெஸ்ட் எடுக்கோணும். அவரைப் போகச் சொல்லிப்போட்டு அமைதியா இருங்க.” என்று அதட்டலாகச் சொன்னாள்.

“வருணா ப்ளீஸ்!” கலிங்கன் மென்மையாகக் கெஞ்சியபோதும் அவள் அசையவில்லை.

இதையெல்லாம் பார்த்திருந்த ஆதிக்கு கலிங்கராயன் ஒருவரிடம் இப்படிக் கெஞ்சிக்கொண்டு நிற்பதைக் உதட்டோரம் மெல்லிய முறுவல். வருணா அறியாதபடி மறைத்துக்கொண்டான். பின்னே இன்னொரு முறை அவளிடம் அறை வாங்கவா முடியும்?

“நீ போ, கூப்பிடுறன்.” என்று சொல்லி அவனை அனுப்பிவைத்தான் கலிங்கன்.

அவன் போனதும், “என்ன கதைக்கப் போறீங்க?” என்று கேட்டாள் வருணா.

பதிலேதும் சொல்லாமல் சிறு புன்னகையுடன் அவளையே பார்த்திருந்தான் அவன்.

“அதானே! உங்கட வாயில இருந்து ஒரு முத்துக்கூட வராதே! என்னவோ செய்ங்க!” என்றுவிட்டு அவள் அறையை விட்டு வெளியேறினாள் அவள்.

உள்ளே வந்த ஆதியின் முகத்திலிருந்த புன்னகையைக் கவனித்துவிட்டான் கலிங்கன். “என்னடா?” என்று அதட்டலாகக் கேட்டான்.

இன்னும் கொஞ்சம் முறுவல் விரிய, ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை குறுக்காக அசைத்தான் ஆதி.

“சிரிப்பா இருக்கு உனக்கு?”

அதைக் கேட்டதும் ஆதியின் முறுவல் இன்னும் கொஞ்சம் விரிந்தது.

இப்போது கலிங்கன் முகத்திலும் அது தொற்றிக்கொண்டது. “உள்ளுக்க பூந்து என்னவோ செய்றாளடா.” என்று இலேசாகத் தலையைக் கோதிக்கொடுத்தான்.

ஆதிக்கு அவனைப் பார்க்கவே மிகுந்த சந்தோஷமாக இருந்தது. அவனுக்கு நடந்த துரோகம் எத்தகையது என்று ஆதிக்குக்குத் தெரியும்.

வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும் அவன் அதிலிருந்து வெளியே வருவதற்கு தனக்குள்ளே எந்தளவுக்குப் போராடினான் என்றும் தெரியும். இன்றைக்கு அந்த போராட்டத்தின் வெற்றியாய் அவன் மனமாற்றம் மிகத் தெளிவாய்த் தெரிந்தது.

அந்தக் காயமெல்லாம் கலிங்கனுக்கு ஒன்றுமேயில்லைதான். ஆனாலும் கூட காருக்குள்ளும் அந்தக் காயத்தைப் பற்றி எந்த யோசனையும் இல்லாமல், மயங்கிவிட்ட வருணாவுக்காய் அவன் முகத்தில் தெரிந்த பதற்றம், அவன் மனத்தை ஆதிக்குச் சொல்லியிருந்தது.

இப்போது இதுவும் சேர, “சந்தோஷமா இருக்கு அண்ணா!” என்றான்.

சின்ன முறுவல் ஒன்றுடன், “வாழ்க்கையில நாங்க என்னவும் செய்யலாம். ஆனா நல்ல மனம் உள்ள ஒரு பார்ட்னர கண்டுபிடிச்சிட்டம் எண்டு வை. அந்த வாழ்க்கைல உனக்கு வேற எதுவும் வேண்டாம்.” என்றான் கலிங்கன்.

ஆமென்பது போல் தலையசைத்துக் கேட்டுக் கொண்டான் ஆதி. இத்தனை காலம் அவனுக்கு அந்த நினைப்பெல்லாம் இருந்ததில்லை. ஆனால் இப்போது கலிங்கனைப் பார்க்கையில் தனக்கும் இப்படி ஒரு வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்கிற ஆசை உண்டாயிற்று.

“ஆர்?” என்றான் கலிங்கன் சுருக்கமாக.

“மாறன்.” என்றான் ஆதியும் சுருக்கமாக.

“நினைச்சன்.”

வரதனாகவோ சூர்யாவாகவோ இருந்திருந்தால் நிச்சயமாக இத்தனை எளிதில் பிடிபடக்கூடிய ஒரு திட்டத்தைத் தீட்டியிருக்க மாட்டார்கள். வருணாவைக் கத்தியால் குத்திவிட்டு அந்தப் பெண் தப்பி ஓடியிருந்தால் கூட, கலிங்கனின் ஆட்கள் அவரை விரட்டிப் பிடித்திருப்பார்கள்.

இதை முன்கூட்டியே கணிக்க முடியாதவர்களா அவர்கள்? இப்படியொரு செயலுக்குத் திட்டமிடுபவர்கள், தங்களுடைய ஆள் பிடிபடுவதற்கான வாய்ப்புகளையும் கணக்கில் கொண்டிருப்பார்கள்.

அதனாலேயே, இத்தகைய திட்டங்களிலும் வெட்டுக்குத்து சம்பவங்களிலும் போதிய அனுபவமில்லாத ஒருவன்தான் இதற்குப் பின்னால் இருக்க வேண்டும் என்று, சம்பவம் நடந்த அந்த நேரமே கலிங்கராயன் ஊகித்திருந்தான்.

இப்போது மாறன் என்று சொன்னதும் அது உறுதியாகிற்று.

தன்னில் கை வைத்தபோது கூட கலிங்கன் நிதானமாகத்தான் இருந்தான். இப்போது வரை நிறுத்தி நிதானமாகத்தான் அவர்களை அடித்துக்கொண்டிருக்கிறான்.

ஆனால், வருணாவின் மீது கை வைத்தவன் மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்தவனாகவே அவன் பார்வையில் பட்டான். தண்டனைக்குரிய குற்றமாக அதை மனத்தில் பதித்துக்கொண்டான்.

அவன் காரிலிருந்து இறங்கி வைத்தியசாலைக்குள் நுழையும் முன்னர், திரும்பி ஆதியைப் பார்த்த ஒற்றைப் பார்வை போதுமாயிற்று, ஆதி அத்தனையையும் விசாரித்துக்கொண்டு வருவதற்கு.

அவன் இவ்வளவு நேரமாகக் காத்திருந்தும் அதற்குத்தான்.

கலிங்கராயனைச் சூர்யா கத்தியால் குத்திய அன்று, அவனைக் காப்பாற்றும் அவசரத்தில் ஆதியின் கைப்பேசி எங்கோ தவறியிருந்தது.

அதைத் தேடிப் பார்த்துக் கிடைக்காததால் அப்படியே விட்டுவிட்டான். அது ஒன்றும் விலையுயர்ந்த கைப்பேசி கிடையாது. அதில் பாதுகாக்க வேண்டிய ரகசியங்களும் எதுவும் இருக்கவில்லை.

தங்களைப் போன்றவர்கள் காவல்துறையிடமோ, எதிரிகளிடமோ சிக்கிக்கொண்டால் முதலில் ஆராயப்படுவது தங்களுடைய கைப்பேசியாகத்தான் இருக்கும் என்று ஆதிக்குத் தெரியும்.

அதனாலேயே எப்போதும் ஒரு சாதாரணமான, அதிக மதிப்பில்லாத கைப்பேசியையே பயன்படுத்துவான். அதற்குக் கடவுச்சொல்லும் இருக்காது. எந்த இரகசியங்களையும் அதில் வைத்துக்கொள்ளவும் மாட்டான்.

அதனால், அது தொலைந்ததை எண்ணிப் பெரிதாக அவன் அலட்டிக்கொள்ளவில்லை. அதேபோன்ற இன்னொரு கைப்பேசியை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியிருந்தான்.

கலிங்கராயனின் கைப்பேசியில் ஆதியின் பழைய இலக்கம் ‘ஆதி’ என்கிற பெயரிலும், புதிதாக வாங்கிய கைப்பேசி இலக்கம் ‘ஆதி நியூ’ என்ற பெயரிலும் பதிவாகியிருந்தன.

அந்தப் பெயர் குழப்பம் மாறனுக்கு வசதியாகிப்போயிற்று. கூடவே பிடிபட்ட அந்தப் பெண்மணியை விசாரித்து அறிந்துகொண்டதையும் சொன்னான் ஆதி.

கணவன் இல்லாத ஏழைப் பெண்மணி அவர். மகள் வயிற்றுப பேத்தி மட்டுமே இருக்கிறாள். மகளின் கணவன் விட்டுவிட்டுப் போய்விட, அந்த மகள் வேறு ஒருவனுடன் தான் பெற்ற மகளை விட்டுவிட்டு ஓடியிருந்தாள். அதில் பேத்தியோடு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தார் அவர்.

துப்பரவுப் பணியாளராக அவர் பணிபுரிவது மாறன் வேலை செய்யும் அரசாங்க வைத்தியசாலையில். அவருக்குப் பேத்தி இருப்பது அவனுக்கும் தெரியும். அவளைக் காட்டி இதைச் செய்யச் சொல்லி அவன் மிரட்டியிருக்கிறான்.

பேத்திக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என்ற பயத்தில், ஐவரும் வேறு வழியின்றி அவன் சொன்னதைச் செய்யச் சம்மதித்திருக்கிறார்.

error: Alert: Content selection is disabled!!