இதையெல்லாம் சொல்லிவிட்டு, “என்ன செய்யலாம் அண்ணா? அண்ணியில கைய வச்சவன சும்மா விடவே கூடாது!” என்று பல்லைக் கடித்தான் ஆதி.
ஆமென்பது போல் தலையசைத்தான் கலிங்கன்.
வருணா மூலம் விடயமறிந்த வருணாவின் பெற்றோர் பதறியடித்துக்கொண்டு வைத்தியசாலைக்கு ஓடிவந்தார்கள். காலையிலிருந்தே சேலையில் இருந்தவள், அவர்களிடம் மாற்றுடையும் கொண்டுவரச் சொல்லியிருந்தாள்.
அதையும் மாற்றிக்கொண்டு, மதியழகனையும் சிவசுந்தரியையும் அழைத்துக்கொண்டு கலிங்கன் இருந்த அறைக்கு வந்தாள் வருணா.
அப்படி அவர்களின் வரவைக்க கலிங்கன் எதிர்பார்க்கவில்லை. அதுவும் அவனைப் பார்க்க வருவார்கள் என்று நினைக்கவில்லை. மெல்லிய ஆச்சரியத்தோடு ஒருவிதத் தர்மசங்கடமும் அவனுக்கு உண்டாயிற்று.
முதுகில் காயம் என்பதால் மேலாடை இன்றிப் படுக்கையில் சாய்ந்திருந்தான். அவர்களைக் கண்டதும் கால் மாட்டில் இருந்த போர்வையை எடுத்துத் தன்னை மூடிக்கொள்ள முயன்றான்.
அதற்குள் அவனுடைய ஆட்கள் கொண்டுவந்து வைத்திருந்த அவனின் உடைகள் அடங்கிய பையிலிருந்து பெரியதொரு துவாலையை எடுத்த வருணா, அதை அவன் மேலுடலைச் சுற்றிப் போர்த்திவிட்டாள்.
தன்னுடைய சங்கடத்தை ஒரு நொடியில் புரிந்துகொண்டு, அவள் செய்த அந்தச் செயலில் கலிங்கனின் பார்வை அவளை ஒருமுறை தொட்டுத் திரும்பியது.
உள்ளே வந்த மதியழகனுக்கும் சிவசுந்தரிக்கும் என்ன பேசுவது, எப்படி விசாரிப்பது என்றே தெரியவில்லை. யாரோ ஒருவர் தங்களுடைய மகளைக் கத்தியால் குத்த வந்திருக்கிறார் என்கிற விடயம் அவர்களை உலுக்கியிருந்தது. அவளுக்குப் பதிலாகக் கலிங்கன் குறுக்கே பாய்ந்து அந்தக் காயத்தைத் தானே வாங்கியிருக்கிறான்!
அதை எண்ணி மகிழ முடியவில்லை. இதற்குத்தானே அவர்கள் பயந்தார்கள்! இந்த வாழ்க்கை வேண்டாம் என்று எத்தனையோ முறை அவனிடம் சொன்னார்கள்? அவனுடைய தொழிலும், அவனைச் சுற்றியிருக்கும் ஆபத்துகளும் தங்களுடைய மகளுக்குப் பெரும் ஆபத்தாகிவிடுமோ என்ற பயத்தில்தானே அவனை எதிர்த்தார்கள்.
இப்போது அவர்கள் அஞ்சியதே நடந்துவிட்டது. கோபம் ஒருபுறம், பதற்றம் ஒருபுறம், பயம் மறுபுறம் என்று பலவிதமான உணர்வுகளோடு வந்திருந்தார்கள்.
அதே நேரத்தில் கத்தியால் வெட்டுப்பட்டு வைத்தியசாலையில் இருக்கும் ஒருவனிடம், சூழ்நிலையை மறந்து கோபத்தைக் காட்டவும் மதியழகனால் முடியவில்லை.
“எப்படி இருக்கிறீங்க?” என்று சம்பிரதாயமாக விசாரித்தார்.
கலிங்கனுக்கும் இப்படியான விசாரிப்புகள் பழக்கமில்லை. நன்றாக இருப்பதாகச் சொல்வதுபோல் சிறிதாகத் தலையசைத்துவிட்டு வருணாவைப் பார்த்தான்.
“கத்தி ஆழமா இறங்கியிருந்தாத்தானே அவர் நல்லா இல்லாம இருப்பார்! மற்றும்படி அவருக்கு இதெல்லாம் சின்ன காயம்தான்.” அவன் மீதிருந்த கோபத்துடன் சொன்னபடி அவனுடைய காயத்தில் போடப்பட்டிருந்த தையல்களைச் சரிபார்த்தாள். மருந்து சரியாக இருக்கிறதா என்று பார்த்தாள். காய்ச்சல் இருக்கிறதா, வேறு ஏதாவது உடல் உபாதைகள் இருக்கின்றனவா என்று ஒவ்வொன்றாக விசாரித்து அவனைப் பரிசோதித்தாள்.
அவளுடைய பெற்றோர் அமைதியாக அதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தார்கள். தனக்காகக் கத்திக்குத்தைத் தாங்கியவன் என்பதற்காக மட்டும் அவள் கரிசனையோடு நடப்பதுபோல் அவர்களுக்குத் தோன்றவில்லை.
அவளுடைய ஒவ்வொரு செயலும் இயல்பாக இருந்தது. அவன் உடல்நிலை பற்றிய கவலை, அவனிடம் பேசும் விதம், அவன் தேவைகளை முன்கூட்டியே உணர்ந்து கவனித்துக்கொள்ளும் பாங்கு என எல்லாவற்றிலும் ஒருவிதமான நெருக்கம் தெரிந்தது.
அவர்களுடைய மகள் இவ்வளவு மாறியிருக்கிறாளா? அதை நம்ப முடியாமல் மதியழகனும் சிவசுந்தரியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். மகளின் இந்தப் புதிய பரிமாணத்தை அவர்களால் உடனடியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏதோ ஒரு வகையில் அது பிடிக்கவும் இல்லை.
“பெரிய காயமா?” தம்மைச் சமாளித்துக்கொள்ள வேண்டியிருந்ததால் கேட்டார் சிவசுந்தரி.
“ஓமம்மா, ரெண்டு நாள் இஞ்ச நிண்டா நல்லம்.” என்று தாயிடம் சொன்னவள், அப்படி நிற்பானா என்கிற கேள்வியோடு அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
அவளுடைய பார்வையைச் சந்தித்தவன், மிகச் சிறியதாகத் தலையசைத்து மறுத்தான். கூடவே, அவளைக் கோபப்படுத்த விரும்பாதவனாக, பார்வையிலேயே மெதுவான ஒரு கெஞ்சலையும் சேர்த்திருந்தான்.
வருணா அவனை முறைத்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“உங்களுக்கு என்னம்மா வாங்கி வரச் சொல்ல? என்ன குடிக்கப்போறீங்க?” என்று அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தாள்.
“ஆர் எண்டு தெரிஞ்சதா?” அவ்வளவு நேரமாகக் குடைந்துகொண்டிருந்த கேள்வியை இனியும் அடக்க முடியாமல் மதியழகன் கேட்டார்.
“விசாரணை போய்க்கொண்டிருக்கு.” தண்டனைக்கான ஏற்பாடுகளையே செய்ய ஆரம்பித்துவிட்ட கலிங்கன், அதைக் காட்டிக்கொள்ளாமல் சொன்னான்.
“இப்ப விளங்குதா? இதுக்குத்தான் நாங்க பயந்தனாங்க! இதாலதான் எங்கட மகளுக்கு இந்த வாழ்க்கை வேண்டாமெண்டு சொன்னனாங்க! தப்பித்தவறி அவாக்கு ஒண்டு நடந்திருந்தா எங்கட நிலைமை என்ன?”
அந்த இடத்தில் இதைப் பற்றிப் பேச வேண்டாமென்றுதான் மதியழகன் நினைத்திருந்தார். ஆனால், பேச்சு வந்ததும் அவரால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. குரலில் இருந்த இறுக்கமும், கலிங்கன் மீதான குற்றச்சாட்டும் அப்பட்டமாக வெளிப்பட்டன.
வருணாவுக்கு ஒரு மாதிரியாகிற்று. அவன் இருக்கும் இந்த நிலையில் இந்தப் பேச்சு வேண்டாம் என்று எண்ணி, “அப்பா ப்ளீஸ்! முதல் அவர் சுகமாகட்டுமே.” என்று அந்தப் பேச்சை நிறுத்த முயன்றாள்.
பெற்றோருக்கு அதுவே இன்னுமொரு அதிர்ச்சியாக இருந்தது. மகளையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தவர்கள், தமக்குள்ளும் பார்வையைப் பரிமாறிக்கொண்டார்கள்.
“எப்பிடிப் பிள்ளை கதைக்காம இருக்கிறது? இது எண்டைக்கும் உங்களுக்கு ஆபத்துதானம்மா. நீங்க நாளைக்கு நாலு இடத்துக்கு வெளியில போறேல்லையா? சுதந்திரமா நடமாடுறேல்லையா? வேலைக்குப் போக மாட்டீங்களா? அப்ப எல்லாம் உங்களோடயே இருந்து உங்களைப் பாதுகாப்பாரா இவர்? இண்டைக்கு அவர் இருந்தும்தானே இவ்வளவு நடந்திருக்கு? எங்களாலயும் எந்த நேரம் என்ன நடக்குமோ, ஆர் எப்ப எடுத்து எங்கட பிள்ளைக்கு இப்பிடி நடந்துபோச்சு எண்டு சொல்லுவினமோ எண்டு பயந்து சாக்கேலாது பிள்ளை.” என்றார் மதியழகன்.
அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் அவள் மீதான அக்கறையும், எதிர்காலத்தைப் பற்றிய அச்சமும் நிறைந்திருந்தன.
அதில் தவறேதும் இல்லையே. எல்லாமே உண்மைதானே. அவரின் கவலையில் நியாயம் உண்டே. ஏன், வருணாவுக்குமே அந்தப் பயம் இல்லாமல் இல்லை. கோயிலில் நடந்ததை நினைத்தாலே இப்போதும் அவளுடைய உடலுக்குள் நடுக்கம் ஓடத்தான் செய்தது.
ஆனாலும், அந்தக் கவலையின் பெயரால் கலிங்கராயனை விட்டுக்கொடுத்து எதையும் பேச அவளால் முடியவில்லை. அதேநேரம் பெற்றோரின் அச்சத்தையும் அலட்சியப்படுத்த முடியாதவளாகத் தடுமாறினாள்.
பதிலறியாத பார்வையுடன் அவனை ஒருமுறை பார்த்துவிட்டு,
“எனக்கு விளங்குது அப்பா. நானும் உங்களைப் பிழை சொல்லேல்ல. அவர் இப்ப நல்ல நிலையில இல்லை எல்லா. அதான்.” என்றாள் இம்முறையும் கெஞ்சலாக.
மகளின் இந்த மாற்றம் மதியழகனுக்கும் சிவசுந்தரிக்கும் மிகுந்த அதிருப்தியைக் கொடுத்தது.
சிவசுந்தரி மகள் முகத்தையே பார்த்தார். அவள் பார்வையில் தெரிந்த பதற்றம், கலிங்கராயன் மீதான அக்கறை, அவனைத் தந்தை ஒரு வார்த்தை சொல்லிவிடக் கூடாது என்கிற அந்தரிப்பு என எல்லாமே அவருக்குப் புரிந்தது.
அதேநேரம், படுக்கையில் சாய்ந்திருந்த கலிங்கராயனோ எந்த விளக்கமும் கொடுக்க முயலவில்லை. தனக்காகப் பேசும் அவளையே பார்த்திருந்தான்.
பெற்றவர்களுக்கும் அவன் முன்னே மகளைக் கடியாவோ தம் அதிருப்தியைக் காட்டவோ விருப்பமில்லை. அதில் எதையும் காட்டிக்கொள்ளாமல், அவன் நலமடைய வேண்டும் என்று வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்கள்.
மறுத்தவர்களை விடாமல் கேண்டீன் அழைத்துச் சென்று, அவர்களோடு தானும் உணவை முடித்துக்கொண்டு, ஓரளவுக்கு அவர்களை சமாதானம் செய்வித்தே அனுப்பிவைத்தாள்.
அவள் மேலே அவன் அறைக்கு வந்தபோது, அவனுடைய உடல்நிலைக்கு ஏற்றவாறு, புரதமும் திரவச்சத்தும் நிறைந்த சிக்கன் சூப்பைச் கொண்டுவரச் சொல்லியிருந்தாள் வருணா.
அது வந்ததும் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அவனருகில் வந்து அமர்ந்தாள். கிண்ணத்திலிருந்து ஒரு கரண்டி சூப்பை அள்ளியவள், அவனுடைய வாயருகில் நீட்டினாள்.
அவன் சற்றே திகைத்தான்.
அவளுடைய முகத்திலோ அதைப் பற்றிய எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. அவன் சாப்பிடுவதற்காகக் காத்திருந்தாள்.
ஆனால், அவளுடைய எண்ணங்கள் மட்டும் பெற்றவர்களிடமே தங்கியிருந்தன. அவர்கள் மனத்தில் பெரும் குழப்பத்துடனும் பாரத்துடனும், ஒருவிதமான பயத்துடனும்தான் இங்கிருந்து போகிறார்கள் என்பது அவளுக்குத் தெரியாமலில்லை.
அவர்களுடைய கவலைகளை எப்படிப் போக்குவது என்ற யோசனை அவளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன் மெல்ல அவளுடைய தாடையைப் பற்றித் தன்னைப் பார்க்க வைத்தான்.
அப்போதுதான் அவளுடைய சிந்தனை அறுபட்டது. கவனம் அவனில் குவிய, அவனைப் பார்த்தாள். அவன் ஒருமுறை கண்களை மூடித் திறந்தான். அதற்கே அவளுக்குச் சட்டென்று கண்கள் கலங்கித் தளும்பின.
அவள் கையிலிருந்த சூப்புக் கிண்ணத்தையும் கரண்டியையும் வாங்கி அருகிலிருந்த மேசையில் வைத்துவிட்டு, அவளுடைய இரு கரங்களையும் பற்றித் தன்னை நோக்கி மெதுவாக இழுத்தான். அவளும் மறுப்பேதும் சொல்லாமல் அவனருகில் நெருங்கி வந்தாள்.
பெற்றவர்கள் ஒருபுறம், அவன் மறுபுறம். இரு தரப்பினரின் கவலைகளுக்கும் இடையில் சிக்கிக்கொண்டிருக்கும் தன் மனநிலை என்னவென்று அவளுக்கே தெளிவாகப் புரியவில்லை. குழப்பமும் கலக்கமும் நிறைந்த பார்வையுடன் அவனைப் பார்த்தாள்.
அவள் கண்களைத் துடைத்துவிட்டு, “எல்லாமே மாறும். நான் மாத்தித் தருவன். கொஞ்சம் டைம் மட்டும் எனக்குத் தா.” என்றான் அவள் கண்களையே பார்த்து.
பனித்துவிட்ட விழிகளும் சின்ன முறுவலுடனும் சரி என்று தலையசைத்தாள் அவள். பின்னர் மேசையிலிருந்த சூப்புக் கிண்ணத்தை எடுத்து அவனுக்குக் கொடுக்க ஆரம்பித்தாள்.
“உனக்கு?”
“அம்மா அப்பாவோட சாப்பிட்டன்.”
அதன் பிறகு அவன் மறுக்கவில்லை. அவளையே பார்த்தபடி அவள் தருவதை வணங்கினான்.

