கலிங்கனின் காவியம் 34.1

அத்தியாயம் 34

வரதன் தனது போதைப்பொருள் வியாபாரம் தொடர்பான எந்த விஷயத்திலும் அவசரப்பட்டு இறங்குபவன் அல்லன். குறிப்பாக, கடல் வழியாக நடைபெறும் பரிமாற்றங்களில் மிகுந்த எச்சரிக்கையைக் கடைப்பிடிப்பான்.

பெரும் தொகை புழங்கும். நேர்மை, நியாயம், விசுவாசம் என்பதற்கெல்லாம் இடமில்லை. எவன் கை ஓங்குகிறதோ அங்கே அவன் சம்பாதித்துவிடுவான்.

சரக்கைக் கொண்டு வரும் கப்பலாக இருந்தாலும் சரி, அவனைச் சந்திக்க வரும் கப்பலாக இருந்தாலும் சரி கடலில் குறிப்பிட்ட இடத்தை வந்தடைந்துவிட்டதாகத் தகவல் கிடைத்தாலும், அதை அப்படியே நம்பி அங்கே சென்றுவிட மாட்டான்.

அவர்கள் வந்திருப்பது உண்மையா என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகே இறங்குவான்.

திருகோணமலைத் துறைமுக சுங்கத்துறையில் அதிகாரியாகப் பணியாற்றும் ஒருவன் அவனுக்காக அந்த வேலையைச் செய்து வந்தான்.

கடலுக்குள் கப்பல் வந்திருக்கிறதா, நடமாட்டங்கள் எப்படி இருக்கின்றன என்று அவன் மூலமாகவே வரதன் அறிந்துகொள்வான். அந்த அதிகாரியின் உறுதியான தகவல் கிடைத்த பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவான்.

அன்றைக்குக் கலிங்கனின் சரக்கை இறக்கவிடாமல் முன்னின்று தடுத்தவன் அந்த அதிகாரி. ஒருவன் கலிங்கனுக்கு எதிராக நிற்கிறான் என்றால் அவன் வரதனின் ஆள். அவனைக் கலிங்கன் கை காட்ட, அந்த அதிகாரியைத்தான் ஆதி வளைத்துப் பிடித்திருந்தான்.
தன் அதிகாரத்தைக் காட்டி மிரட்ட முயன்றவனை அடித்து வீழ்த்திக் கைகளைக் கட்டியிருந்தான். முதலில் எதையும் சொல்ல மறுத்தவன், அடிகள் தொடர்ந்ததும் மெல்ல மெல்ல வாயைத் திறந்தான். வரதனுக்காகத் தான் செய்து வந்த வேலைகளையும், அன்றைய தினம் கடலில் வந்து நிற்கவிருந்த கப்பலைப் பற்றியும் அவன் மூலம் தகவல்களைப் பெற்றுக்கொண்டான் ஆதி.

அந்தத் தகவல்களின் அடிப்படையில்தான் கடலுக்குள் தனியாக நின்றுகொண்டிருந்த அந்தக் கப்பலை அவர்கள் கண்டுபிடித்தார்கள்.

அவர்கள் தேடிச் சென்றது பொய்க்கவில்லை.

எதிர்பார்த்தபடியே அந்தக் கப்பல் அங்கே இருந்தது. அதற்குள் வரதனின் முக்கிய புள்ளியும் அவன் ஆட்களும் இருந்தார்கள். அவர்களை ஆதியின் ஆட்கள் சுற்றிவளைத்துப் பிடித்து அடித்து வீழ்த்தினார்கள்.

கைகளையும் கால்களையும் கட்டி, கப்பலின் ஓர் இடத்தில் தொங்கவிட்டிருந்தார்கள். அடியின் தாக்கத்தில் அவன் மயக்கமடைந்து கிடந்தான்.

அந்த நேரத்தில்தான் வரத்தான் அங்கே வந்து சேர்ந்தான்.

*****

மாறனுக்கு அழைத்து கப்பலுக்கு வரச் சொன்னான் வரதன். மாறனுக்கோ ஆச்சரியம். இதுவரையில் அப்படி வரதன் வரச் சொன்னதே இல்லை. “கப்பலுக்கா சித்தப்பா?” என்று நம்ப முடியாமல் வினவினான்.

“ஓம் மாறா. உன்னோட தனியா கதைக்கோணும். வா!”

“சித்தப்பா?” என்றவனுக்குள் மெல்லிய கலவரம்.

ஏன் எதற்கு என்கிற கேள்விகள் உள்ளே சுழன்றடிக்க, “ஏதும் பிரச்சனையா சித்தப்பா?” என்று மெல்லக் கேட்டுப்பார்த்தான்.

அவனிடம் உண்மையைச் சொல்லிவிடலாமா என்கிற யோசனையோடு கலிங்கராயனைப் பார்த்தான் வரதன். சொல்லித்தான் பாரேன் என்கிற ஒரு மாதிரிச் சிரிப்புடன் அமர்ந்திருந்தான் அவன்.

வேறு வழியற்று, “அப்படியெல்லாம் ஒண்டுமில்ல. வெளிக்கிட்டு வா. அங்க கரையில நிக்கிற ஆக்கள் உன்ன கப்பலுக்குக் கூட்டிக்கொண்டு வருவீனம்!” என்றுவிட்டு மேலே பேசவிடாமல் அழைப்பைத் துண்டித்தான் வரதன்.

மாறன் வரக்கூடாது, தன் பேச்சை கேட்கக்கூடாது என்று ஒரு மனம் அடித்துக்கொண்டது. அதே நேரத்தில் அப்படி மாறன் வராமல் இருக்க மாட்டான் என்றும் நினைத்தான். கூடவே, அவன் வராமல் தனக்கு விடுதலை இல்லை என்றும் தெரிந்தது.

நேரம் நழுவ ஆரம்பித்தது. அரை மணி நேரம் கடந்தது. கப்பலருகே படகு ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டது. வரதனின் முகத்தில் கலவரம் மூண்டது. தன்னைப் போலவே தன் பெறா மகனும் மாட்டிக்கொள்ளப்போகிறான் என்று புரிந்துபோயிற்று.

மாறனும் உள்ளே இருக்கும் சூழ்நிலை தெரியாமல் ஏணியில் ஏறி கப்பலுக்குள் வந்தான். “சித்தப்பா!” என்று அழைத்தபடி மேல் தளத்துக்கு வந்தவன், வரதனோடு கலிங்கராயனை எதிர்பார்க்கவேயில்லை.

சட்டென்று பதற்றமானான். அவன் கண்களில் பயம் வந்து அமர்ந்தது.

அதைவிட எப்போதும் சிங்கம் போல் கர்ஜித்துக்கொண்டு, அதிகாரத்தோடும் ஆணவத்தோடும் மற்றவர்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் வரதனைத்தான் இத்தனை காலமும் பார்த்திருக்கிறான்.

அப்படியான அவன் மீது அவனுக்குள் ஒருவிதப் பெருமைகூட உண்டு. அப்படிப்பட்ட மனிதன் இன்று முகம் கன்றி, இவனைப் பார்க்கக் கூட முடியாமல் கூனி, ஆடை கசங்கி, அழுக்குப் படிந்து, தலை கலைந்து, முகமெல்லாம் வியர்த்து, கண்கள் சிவந்த நிலையில் நின்றுகொண்டிருந்தார்.

அதுவே அவரை அடித்திருக்கிறார்கள் என்று சொல்லிற்று. அவருக்கே அந்த நிலையானால் அவனுக்கு? அந்த கேள்வியே மாறனின் இதயத்துடிப்பை எகிறச் செய்தது. கைகால்கள் நடுங்க ஆரம்பித்தன.

துணிந்து ஒரு காரியத்தைச் செய்திருந்தாலும், அதன் விளைவாக இப்படியொரு ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அவன் நினைத்திருக்கவில்லை. இப்போது அந்தச் சூழ்நிலையை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் நின்றான். திரும்பி ஓடி விடலாமா என்று கூட யோசித்தான்.

இந்த இடத்திற்குத் தன்னை வரவழைத்த வரதன் மீது அவன் கோபம் திரும்பியது. “ஏன் சித்தப்பா, என்னை என்னத்துக்கு இஞ்ச கூப்பிட்டனீங்க?” என்று அதட்டினான்.

இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த கலிங்கராயனின் உதடுகளில் மெல்லிய புன்னகை அரும்பியது. வரதன் இதற்கு என்ன சொல்லப்போகிறேன் என்று பார்த்தான். அவனால் என்ன சொல்ல முடியும்?

வரதனின் அமைதியைப் பார்த்துவிட்டு மாறனின் முன்னால் வந்து நின்றான் கலிங்கராயன்.

அவனுடைய உயரமும், இறுகிய முகமும், எதையும் வெளிக்காட்டாத அந்தப் பார்வையும் மாறனுக்குள் இருந்த கொஞ்சநஞ்சத் துணிவையும் குலைத்தன. தொண்டை வறண்டு போனது. கைகால்கள் தன்னையறியாமலேயே நடுங்கின.

“என்…ன?” தடுமாறிய குரலில் கேட்டான்.

“ஒண்டுமில்லையே.” என்றான் கலிங்கன் மிகச் சாதாரணமாக.

அந்தத் தொனியே மாறனுக்குப் பெரும் அச்சத்தைக் கொடுத்தது.

“நான்… நான் ஒண்டும் செய்யேல.”

“நானும் நீ ஏதோ செய்திருக்கிறாய் என்று சொல்லேல்லையே!”

“பேந்து என்னத்துக்கு…” என்று சொல்லி முடிப்பதற்குள், ‘பளார்!’ என்று ஒரு சத்தம்.

கலிங்கனின் கை ஓங்கி இறங்கியதில் மாறன் நிலைதடுமாறிச் சுழன்று போய் தரையில் விழுந்தான். எதிர்பாராத அந்த அடியில் என்ன நடந்ததென்றே அவனுக்குப் புரியவில்லை. காதுக்குள் இடைவிடாமல் ‘கொய்ங்’ என்ற சத்தம் ஒலித்தது. கண்களுக்கு முன்னால் இருள் சூழ்ந்து, பூச்சி பறந்தது.

அவன் சட்டைக் கொலரைப் பற்றித் தூக்கி, “அவளில் கை வைக்க உனக்குத் தைரியம் வந்திருக்கக் கூடாது தம்பி…” என்றவன் அவன் வலது கையைப் பின்னால் வளைத்து முறுக்கிய முறுக்கில் அடி வயிற்றிலிருந்து அலறித் தீர்த்தான் மாறன்.

தோள்பட்டை கழன்று விடுமோ என்பதுபோல அவன் உடல் வளைந்து துடித்தது. வலியைத் தாங்க முடியாமல் கால்களைத் தரையில் உதைத்துக்கொண்டு கத்தினான்.

வரதனால் அவன் துடிப்பதை பார்க்க முடியவில்லை.

“ராயா, விடு அவனை! அவன் ஆசைப்பட்ட பெட்டைய நீ தூக்கினா சும்மா இருப்பானா அவன்?” என்று ஆவேசமாகக் கத்தியபடி மாறனை அவனிடமிருந்து இழுத்துக்கொள்ள முயன்றான்.

“சரியா சொன்னாய். அவளத் தூக்கினது நான். அப்ப அவன் என்னட்டத்தான் வந்திருக்கோணும். அவளிட்ட இல்ல.” என்று அவன் கையை விட்டான்.

மாறனுக்கு அந்தக் கையில் உணர்வு இருக்கிறதா என்றே தெரியவில்லை. அவன் விட்ட பிறகும் அவனிடம் மாட்டிக்கொண்டிருப்பது போலவே இருந்தது.

சட்டென்று இருவருக்கும் நடுவில் வந்து நின்ற வரதன், “என்னவா இருந்தாலும் கதைச்சு ஒரு முடிவுக்கு வரலாம் ராயன். நான் சொல்றதைக் கேளு. நாங்க கதைப்பம். உனக்கு என்ன வேணுமெண்டு சொல்லு. நான் செய்றன். தயவுசெய்து கொஞ்சம் பொறுமையா இரு.” என்று கெஞ்சலில் இறங்கினான்.

அதைக் கேட்டுக் கலிங்கராயன் சிரித்தான். அது சாதாரண சிரிப்பாக இல்லை. ஒருவித அசுரத்தனமும் கொடூரமும் கலந்த சிரிப்பாக, எதிரில் நின்று கொண்டிருந்தவர்களின் மன உறுதியையே ஆட்டங்காண வைக்கும் பயங்கரத்துடன் வெளிப்பட்டது.

error: Alert: Content selection is disabled!!