அந்தச் சிரிப்பைக் கண்டா வரதனுக்கும் மாறனுக்கும் அடிவயிற்றுக்குள் ஏதோ உருண்டு புரள்வது போன்ற அச்சம் எழுந்தது. அதைக் கண்டு திருதியாகப் புன்னகைத்தான் கலிங்கன். அந்தக் கொடூரமான புன்னகை, அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்ற பதற்றத்தை இரட்டிப்பாக்கியது.
க்ளிக்! சிகரெட்டை மூட்டி வாயில் வைத்துப் புகையை நன்றாக இழுத்துவிட்டான். “அப்பிடியொரு பேச்சுவார்த்தைக்குத்தானே அண்டைக்கு உன்னட்ட வந்தனான் வரதா? நீ எவ்வளவு வடிவாகக் கதைப்பாய் எண்டு என்னைத் தவிர இன்னொருத்தனுக்குத் தெரியுமா?” என்ற அவன் கேள்விக்கு வரதனால் பதிலளிக்க முடியவில்லை.
அந்தச் சிகரெட்டை முழுவதுமாகப் புகைத்து முடித்துவிட்டு வந்தது, இருவருடைய தோள்களிலும் தனது இரு கைகளையும் வைத்துக்கொண்டவன், அவர்களை மாறிமாறிப் பார்த்தான்.
“உன்னை நான் விடோணும் எண்டா உன்ர சித்தப்பன் எனக்கு உண்மையைச் சொல்லோணும்.” என்றான் மாறனிடம்.
இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. என்ன உண்மை, எதைக் கேட்கப்போகிறான் என்று தெரியாமல் கலக்கத்துடன் தமக்குள்ள பார்வையைப் பரிமாறிக்கொண்டார்கள்.
கலிங்கராயன் மெல்லத் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு சிறிய கேமராவை எடுத்தான். அதை வரதனுக்கு எதிரே இருந்த மேசையின் மீது பொருத்திவிட்டு, அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தெளிவாகப் பதிவாகும் வகையில் சரிசெய்துவிட்டு, “உன்ர ஹோட்டல்ல என்னென்ன நடக்குது எண்டு சொல்லு!” என்றான்.
வரதனுக்குத் திக்கென்றிருந்தது. என்றைக்குமே அவனால் அதை பற்றி வாயைத் திறக்கவே முடியாதே. அது அவன் மட்டும் சம்மந்தப்பட்டது இல்லையே. மறுப்பாகத் தலையை அசைத்தான் வரதன்.
அடுத்த நொடியே, ஒற்றைக் கரத்தாலேயே மாறி மாறி மாறனின் இரண்டு கன்னங்களிலும் பளார் பளார் பளார் என்று அறைந்தான் கலிங்கன். ஒவ்வொரு அடியும் இடிபோல் இறங்கியதில் அவன் தலை எல்லா பக்கமுமாகச் சுழன்றது. துடித்துப்போய்த் தடுக்க வந்த வரதனை ஆதி பிடித்துக்கொண்டான்.
பார்வை மங்கி, மூச்செடுக்க முடியாமல் தடுமாறி விழப்போனவனை மீண்டும் பிடித்து நிறுத்தி, தொடர்ந்து அறைந்தான் கலிங்கராயன்.
அவனை நெருங்கிய ஆதி, “அண்ணா, பின்னால தையல் போட்டிருக்கு. அது பிரிஞ்சா அண்ணிக்குப் பதில் சொல்லணும்.” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் முணுமுணுத்தான்.
சட்டென்று அவன் ஆக்ரோஷம் ஒரு நிலைக்கு வந்தது. ஆதியிடம் கண்ணைக் காட்டிவிட்டுத் தள்ளி நின்றுகொண்டான். அதன்பிறகு மாறனின் நிலைமை படு மோசமாகிற்று. அவனிடம் எதிர்த்துப் போராடும் தெம்பும் இல்லை. தப்பிச் செல்வதற்கான வழியும் இல்லை.
ஒரு கட்டத்துக்கு மேல் வரதனால் இதை பொறுக்க முடியவில்லை. அவனிடம் சிக்கியிருக்கிறோம் என்பதையும் மீறி, “கலிங்கா, நீ செய்றது மகா பிழை. கட்டாயம் இதுக்காக வருந்துவதை. உன்ன வருந்த வைப்பன். இத நீ செய்தே இருக்கக் கூடாது!” என்று ஆத்திரமும் அகங்காரமும் கலந்த குரலில் எச்சரித்தான்.
அவன் மிரட்டலைக் கேட்டுக் கலிங்கன் பெரிதாக அலட்டிக்கொள்ளவெல்லாம் இல்லை.
ஆனால் மாறனுக்கோ, இத்தனை சித்திரவதைகளை அனுபவித்தும் தன்னைப் பாதுகாக்க ஒரு வார்த்தைகூடப் பேசாத சித்தப்பன் மீது கோபம் கொப்பளித்தது.
அதைப் பொறுக்க முடியாமல், “வாயைத் திறந்து சொல்லடா! உன்னைப் போய் என்னைக் காப்பாத்துவாய் எண்டு நம்பினேனே! சொல்லு! சொல்லித் தொலை!” என்று வரதனைப் பார்த்துக் கத்தினான்.
அவனுடைய குரலில் வலியைவிட ஆத்திரமே அதிகமாக இருந்தது. ஆனால், வரதன் வாயைத் திறக்கவே இல்லை.
அப்போதுதான் கலிங்கனின் கைப்பேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தவனின் புருவங்கள் ஆச்சரியத்தில் உயர்ந்தன.
வருணா!
முதன் முதலாக அழைக்கிறாள். சற்று முன்னர் வரை கோபமும் ஆத்திரமும் கொடூரமும் கலந்த மனநிலையில் இருந்தவனுக்குள், அந்தப் பெயரைப் பார்த்த மாத்திரத்தில் ஏதோ ஒன்று மாறியது.
கொதித்துக்கொண்டிருந்த உடலின் மீது யாரோ குளிர்ந்த நீரைத் தெளித்தது போல, அவனுடைய உள்ளமும் உடலும் சட்டென்று குளிர்ந்து போயின.
கைப்பேசியை எடுத்துக்கொண்டு கீழ்த்தளத்துக்கு வேகமாக இறங்கினான். அடித்தளத்தில் கப்பலில் வந்தவர்களை மொத்தமாக வைத்திருக்கிறார்கள் என்பதில் நடுத்தளத்தின் ஒரு மூலைக்கு வந்து சேர்ந்தான்.
அதற்குள் அவளுடைய அழைப்பு நின்றுவிட்டிருந்தது. அடுத்த கணமே குறுந்தகவல் வந்து விழுந்தது.
‘எங்க நிக்கிறீங்க?’
‘கோல் பண்ணினா எடுக்க மாட்டீங்களா?’
அந்தக் கேள்விகளின் வழியே டெஹ்ரிந்த அவள் கோபத்தை ரசித்தபடி நின்றான் கலிங்கராயன். கூடவே வந்து விழுந்த கோப ஸ்மைலியைக் கண்டு அவனுடைய உதடுகளில் மிக மெல்லிய புன்னகை ஒன்று அரும்பியது.
உடனே திருப்பி அவளுக்கு அழைத்தான்.
“எங்க போயிட்டீங்க? எங்க நிக்கிறீங்க?” அந்தக் கேள்விகளோடுதான் அழைப்பையே ஏற்றாள்.
“வரு!” அவள் பெயரையே பதிலாக்கி மெல்லச் சிரித்தான் அவன். அவள் விசாரணைகள் அவனுக்குள் சாமரம் வீசின.
இதற்குள் கைப்பேசி வழி கேட்ட கடல் காற்றின் சத்தத்தில், “கார்பர்லயா நிக்கிறீங்க?” என்று அவளே கேட்டாள்.
“ம்!” என்றபடி அவன் மெல்லச் சிரித்தான். அவனுக்கு அவளோடு பேச வேண்டும் போலெல்லாம் இல்லை. அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பதே
“என்னையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாம்தானே என்றாள் உடனேயே.
அப்படி அழைத்து வந்திருக்க மாறனின் இடத்தில் அவனும் ஆதியின் இடத்தில் அவளும் இருந்திருப்பார்கள்.
“ம்ஹூம்? கடல் விருப்பமா? அந்தக் கடல் பயணம் விருப்பமா?” என்றான் இலேசான சிரிப்போடு.
“ரெண்டும்தான். அண்டைக்கு மாதிரி!”
அவளுடைய குரலில் அன்றைய நாளின் களிப்பு இன்னமும் மிச்சமிருந்தது. அவன் கண்களை மெல்ல மூடினான். கடல் காற்றில் தலைமுடி பறக்க, தன்னை மறந்து அவள் ரசித்த பொழுதுகள் நினைவில் வந்தன.
“இன்னொரு நாள் கூட்டிக்கொண்டு வாறன், சரியா?”
“ஓகே! ஆனா அலையாதீங்க கலிங்கா. காயம் ஆறினாத்தான் தையல் பிரிக்கலாம்.”
“வீட்டிலேயே இருக்க அலுப்பா இருக்கா?” அவளை அப்படி வீட்டுக்குள்ளேயே பிடித்துவைத்திருக்கிறோம் என்கிற மெல்லிய சங்கடத்தோடு வினவினான்.
பதில் தெரிந்துகொண்டே கேட்கிறவனிடம் அவளும் என்ன சொல்வாள்?
“ஹொஸ்ப்பிட்டல்ல ரெண்டு நாள் நிக்கச் சொன்னதுக்கே என்ன சொன்னநீங்க என்று திருப்பிக் கேட்டாள் அவள்.
அதற்கே உன்னால் முடியவில்லை என்கையில் என் நிலையை யோசித்துப் பார் என்கிறாள். “வரு!” என்றான் தன் தாடையைத் தேய்த்துவிட்டபடி.
“நினைச்சே பாக்காத நேரத்தில பிடிக்காத ஒருத்தனோட கலியாணம். அவனோடயே வாழ வேண்டிய கட்டாயம். ஆசையாப் படிச்ச வேலையைக் கூடப் பாக்கேலாம சிறை இருக்கிறது கொடுமையா இருக்கா வருணா?”
அவள் அமைதியாகிவிட்டாள். அவன் சொன்ன அத்தனையும் உண்மைதான். இது கொடுமைதான். என்ன, எப்போதும்போன்று முகத்தில் அடித்தாற்போன்று ஆம் அப்படித்தான் என்று சொல்ல முடியவில்லை. என்னவோ உள்ளத்தைப் பிசைந்தது.
“என்ர சீஃப் ஃபோன் பண்ணினவர்.” என்றாள் அவள்.
“அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல இன்னும் கொஞ்ச நாள் வேணும் போல என்ன?” என்றான் அவன்.
“டியூட்டிக்கு எப்ப வருவன் எண்டு கேட்டவர்.” அவள் குரலில் மெல்லிய முறைப்பு வந்து அமர்ந்திருந்தது.
மெல்லச் சிரித்தபடி, “ஓ! உன்ர புது நம்பர் அவருக்கு எப்பிடி கிடைச்சது?” என்று விசாரித்தான்.
“என்ன கேள்வி இது? அண்டைக்கு உங்களக் கூட்டிக்கொண்டு போன நேரம் நான்தான் குடுத்தனான். இல்லாட்டியும் அப்பாட்ட கேட்டா அவர் குடுப்பார்.” அவள் இலக்கத்தை அவளின் தலைமை வைத்தியருக்கு கொடுப்பதில் என்ன இருக்கிறது என்கிற கேள்வி தொக்கி நின்றது அவள் பதிலில்.
“ஓ!” என்று இழுத்தவன் நெற்றியைக் கீறிவிட்டான். “தேவை இல்லாத நம்பர்ல இருந்து ஃபோன் வந்தார எடுக்காத.” என்றான் எச்சரிக்கும் குரலில்.
அவள் அமைதியாகிவிட்டாள்.
தான் அப்படிச் சொன்னது அவளுக்குப் பிடிக்கவில்லை என்று உணர்ந்து, “வரு?” என்றான் அவன்
“நேரத்துக்கே வாங்க. காயத்தை பாக்கோணும்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டிக்கப்போனாள் அவள். அவ்வளவு நேரமாக இருந்த இணக்கம் இப்போது காணாமல் போயிருந்தது.
அது அவனுக்குப் பிடிக்கவில்லை. மனம் வாடிட்று. அவளின் சிறு முகத்திருப்பலைக் கூட தாங்கும் சக்தி அவனுக்கில்லை.
“என்னவாம் அவர்?” பேச்சை வளர்த்து அவள் கோபத்தை ஆற்ற ஆசைப்பட்டான்.
“இதுக்குப் பதில் முதலே சொல்லிட்டன்!” என்றாள் அவள்.
“வரு! என்னட்ட இப்பிடிக் கோவப்படாத.” அவன் சொல்லியேவிட்டான்.
அழைப்பைத் துண்டித்த பின்னும் இருவருக்கும் மற்றவரின் நினைவுதான்.

