அத்தியாயம் 35
கப்பலின் விளிம்பைப் பற்றிக்கொண்டு நின்றிருந்தான் கலிங்கராயன். முகத்தில் வந்து மோதிய கடற்காற்று அவன் கேசத்தைக் கலைத்துச் சென்றது. ஆனால், சில நொடிகளுக்கு முன்னர் அவனுடைய காதுகளுக்குள் ரீங்காரமிட்ட அந்தக் குரல் ஏற்படுத்திய உணர்வு, அந்தக் காற்றின் ஸ்பரிசத்தைவிடவும் அலாதியானதாக இருந்தது.
அவள் கோபமாக இருக்கிறாள் என்று அவனுக்குத் தெரியாமலில்லை. தான் அவளுக்கு நியாயம் செய்யவில்லை என்பதும் புரியாமலில்லை. இருந்தும் கூட, அன்பு, ஆதரவு, அணைப்பு, அரவணைப்பு என்று அவளிடமிருந்து கிடைக்கும் ஒவ்வொன்றையும் பேராசையுடன் எதிர்பார்க்கும் ஒருவனாக மாறிக்கொண்டிருந்தான் அவன்.
அவளும் அவன் மீது எவ்வளவு கோபம் குறைகள் இருந்தாலும் அவனைப் பார்த்துக்கொள்வதில் எந்தக் குறையும் வைக்க மாட்டாள். இப்போதெல்லாம் சிறு சிராய்ப்பைக் கூட அவளிடம் காட்டி, சலுகை பெறலாமா என்கிற அளவுக்கு அவன் மாறிக்கொண்டிருந்தான்.
அது தந்த இதமான மனநிலையுடன் மீண்டும் மேல் தளத்துக்கு வந்தான். அங்கே ஆதி மாறனை அடித்து நொருக்கித் தரையில் சரித்துவிட்டு, இடுப்பில் கைகளை ஊன்றி, மூச்சு வாங்கிக்கொண்டிருந்தான்.
கடல் காற்றுக்கு மத்தியிலும் அவன் உடல் வியர்வையில் குளித்திருந்தது. படிகளில் ஏறிவந்த கலிங்கராயனை கண்டுவிட்டுக் கைகளைக் இறக்கிவிட்டு நின்றான்.
“என்னவாம் அப்பனும் மகனும்?”
“வாயே திறக்கேல்ல அண்ணா.”
“சரி அவனை எழுப்பு.”
மாறனின் சட்டைக் கொலரைப் பற்றிப் பிடித்துத் தூக்கி நிறுத்தினான் ஆதி.
மறுபடியுமா என்று நடுங்கினான் மாறன். அவனால் நேராக நிற்கக் கூட முடியவில்லை. உடல் முழுவதும் வலி. கால்கள் தடுமாறின. ஆதியின் பிடி மட்டும் இல்லையென்றால் மீண்டும் தரையில் விழுந்துவிடுவான்.
அவன் முன்னால் சென்று நின்றான் கலிங்கராயன்.
அவனைக் கண்டு மாறனின் உடல் மீண்டும் நடுங்கியது.
“உன்ர நிலமைக்கு ஆர் காரணம் எண்டு தெரியுமா?” என்று வினவினான் கலிங்கராயன்.
மாறனுக்கு கண்கள் கலங்கின. இந்தளவுக்கு ஆகும் என்று தெரிந்திருக்க அன்றைக்கு அப்படி ஒரு காரியத்தைச் செய்யத் துணிந்தே இருக்க மாட்டான்.
“நீ காரணம் இல்ல.” என்று கலிங்கனே பதிலையும் சொன்னான்.
மாறனுக்குப் புரியவில்லை. வருணாவை அவன் தாக்க முயன்றதுதானே காரணம். பிறகு எப்படி அவன் காரணம் இல்லை என்பான்?
“வருணாவ நான் ஏன் தூக்கினனான் எண்டு தெரியுமா?”
மாறன் இல்லை என்பது போலத் தலையசைத்தான். ஆனாலும், தன்னைப் பழிவாங்கும் வெறியில், ஊரின் முக்கிய பிரமுகர்கள் கூடியிருந்த அந்த இடத்தில் வைத்து, அவமானப்படுத்தவே அதைச் செய்தான் என்று வரதன் கூறியிருந்தான்.
அதைத்தான் மாறனும் இத்தனை காலமாக உண்மையென்று நம்பிக்கொண்டிருந்தான்.
ஆனால் இப்போது, கலிங்கராயன் கேட்கும் கேள்விகள் அவனுக்குள் சந்தேகத்தை விதைத்தன. அவனுடைய முகத்தில் குழப்பம் அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனால், அதைப் பற்றிப் பேசுவதற்கான தெம்போ, தைரியமோ அவனிடம் இல்லை.
“உன்ர சித்தப்பன் எனக்கு என்ன செய்தவன் தெரியுமா?”
என்று கலிங்கராயன் கேட்டதும் வரதனுக்கு ஒரு கணம் பகீரென்றது.
“ராயா! போதும் நிப்பாட்டு. அவன் செய்த பிழைக்கும் மேலால திருப்பிக் குடுத்திட்டாய். இதோட எங்கள விடு!” என்று அவசரமாக இடையில் புகுந்தான்.
அவனைப் பார்த்துச் சிரித்த கலிங்கராயன், “உனக்கேன் இவ்வளவு பதட்டம் வரதா?” என்று கேட்டான்.
அதுதானே? மாறனின் புருவங்களும் சுருங்கின.
“கொஞ்ச நேரத்துக்கு முதல் என்ன சொன்னனி? அவன் ஆசைப்பட்ட பெட்டையத் தூக்கினா அவனுக்குக் கோபம் வரும் எண்டு எல்லா? அப்ப எனக்கு எவ்வளவு வெறி இருக்கும் எண்டு விளங்குதா உனக்கு?”
“போதும் ராயன்! நிப்பாட்டு இந்தக் கதைய! இப்ப என்ன உன்ர முடிவு? அதச் சொல்லு!” என்று அவசரமாக அவனை அடக்க முயன்றான் வரதன்.
“பார்த்தியா, பதறுறான் உன்ர சித்தப்பன்!” என்றுவிட்டு, “நீ கட்ட இருந்த பிள்ளைய நான் தூக்கிற அளவுக்கு அவன் எனக்கு என்ன செய்தவன் எண்டு கேளு!” என்று மாறனை ஏவினான் கலிங்கராயன்.
மாறன் திரும்பி வரதனைக் கேள்வியாகப் பார்த்தான். இதுவரை தனக்குத் தெரிந்த கதைக்கும் இப்போது கலிங்கராயன் கேட்கும் கேள்விகளுக்கும் இடையில் ஏதோ பெரிய உண்மை மறைந்திருப்பதாக அவன் உள்மனம் சொல்லிற்று. அது என்னவென்று புரியவில்லை.
வரதனின் முகத்திலிருந்த பதற்றம் அந்தச் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. “என்ன சித்தப்பா?” என்றான் சிரமப்பட்டு.
“அவன்ர கதையை நம்புறியா நீ?” என்று சீறினான் வரதன்.
மாறன் இப்போது கலிங்கனைப் பார்த்தான்.
“உன்ர சித்தப்பன் வாயைத் திறக்கிற வரைக்கும் நீ அவனை அடிக்கோணும். அப்பிடி நீ அடிக்காம நிப்பாட்டினா, உனக்கு ஆதி அடிப்பான். ஓகேயா?” என்றவன், அங்கிருந்த கொட்டான் ஒன்றை எடுத்து மாறனை நோக்கி வீசினான்.
தன் மீது விழுந்துவிடுமோ என்கிற பதற்றத்திலேயே அதை அவசரமாகப் பிடித்துக்கொண்டான் மாறன். அடுத்த மரக்கட்டையை ஆதியிடம் தூக்கிப்போட்ட கலிங்கராயன்,
“ம்!” என்று தொடங்கச் சொன்னான்.
மாறனால் அதை அவ்வளவு எளிதாகச் செய்ய முடியவில்லை. என்ன இருந்தாலும் அவன் சித்தப்பா. சிறுவயது முதலே பாசத்தோடும் மரியாதையோடும் பார்த்து வளர்ந்திருக்கிறேன்.
அவரை அடிப்பதற்குக் கட்டையை ஓங்கினாலும், “என்னால அடி வாங்கேலாது சித்தப்பா. உண்மையைச் சொல்லுங்க. தயவுசெய்து சொல்லுங்க.” என்று அழுதான்.
அவன் சொல்லச் சொல்லிக் கேட்பது நிலாவினியைப் பற்றி. அதை எப்படிச் சொல்லுவான்? அதுவும் பெறா மகனிடம்.
“கலிங்கா, நீ பிழைக்கு மேல பிழை செய்றாய். இது நல்லதுக்கே இல்ல.” என்று எச்சரித்தான்.
அடுத்த நொடியே படபடவென்று நான்கைந்து அடிகளை மாறனின் மீது இறக்கினான் ஆதி.
ஏற்கெனவே உடலில் இருந்த வலிகளோடு அந்த அடிகளையும் தாங்க முடியாமல் மாறன் நிலைகுலைந்து போனான். இனியும் தன்னால் முடியாது என்பதை உணர்ந்தவன், “சொல்லு! உண்மையைச் சொல்லு! சொல்லித் தொலையடா! என்ன மறச்சு வச்சிருக்கிறாய்? சொல்லு… சொல்லு… சொல்லு… சொல்லு!” என்று கண்ணை இறுக மூடிக்கொண்டு, சடசடவென்று வரதனை அடிக்கத் தொடங்கினான்.
அந்தக் காட்சியைத் திருப்தியாகச் சிறிது நேரம் பார்த்திருந்துவிட்டு, “நான் வெளிக்கிடப்போறன் ஆதி. எத்தினை நாளானாலும் சரி, எத்தின இரவானாலும் சரி. இவன் உண்மைய சொல்லுற வரை அவன் அடிக்கிறத நிப்பாட்டக் கூடாது. உனக்குக் களைப்பா இருந்தா கீழ நிக்கிற எங்கட பெடியலக் கூப்பிடு. ஆனா இவனுகள் ரெண்டு பேரையும் விடாத!” என்றுவிட்டுப் புறப்பட்டான்.
“ராயா, என்னை விட்டுடு, இப்பிடிச் செய்யாத. அவன் எனக்கு மகன்!” என்று பதற்றத்துடன் அவனை நோக்கி ஓட முயன்றான் வரதன்.
அதற்கு ஆதி இடமளிக்கவில்லை. கலிங்கராயன் கப்பலை விட்டு இறங்கும் வரையிலும் வரதனை அசையவிடாமல் தடுத்து நிறுத்தியிருந்தான்.
*****

