வருணாவின் மனநிலை முற்றிலுமாகக் குலைந்திருந்தது. வைரவர் கோயிலில் வைத்து அவளுக்குள் ஏதோவொரு மாற்றம் நிகழ்ந்தது உண்மைதான். அவனோடு அவள் உள்ளம் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்றால் பிணைக்கப்பட்டதும் உண்மைதான். எதையுமே ஏற்றுக்கொள்ள முடியாமல் அல்லாடிக்கொண்டிருந்தவள் ஒரு நிலைக்கு வந்து, இனி இதுதான் என் வாழ்க்கை என்றொரு முடிவுக்கு வந்திருந்தாள்.
அதற்காக அவன் மீது இருந்த கோபங்களும் குமுறல்களும் மறைந்துவிடுமா என்ன?
ஓராயிரம் கனவுகளோடு இருந்தவளின் வாழ்க்கையை ஒரே நொடியில் சிதைத்து, அவள் முன்பின் அறியாத பெரும் ஆபத்தான உலகத்தில் அவளைத் தூக்கி எறிந்து, கூண்டுக்குள் அடைத்து வைப்பது போல் ஒரு வீட்டுக்குள் சிறை வைத்திருக்கிறான்.
இன்றைக்கு அவன் அவளிடம் அன்பாகத்தான் நடந்துகொள்கிறான். அவளது தேவைகளைப் பார்த்து பார்த்துச் செய்கிறான். அவள்மீது அக்கறை காட்டுகிறான். ஆனால், இதே கலிங்கராயனிடம், ‘நான் என் வீட்டுக்குப் போகப் போகிறேன்’ என்று அவள் சொன்னால் என்னாகும்?
அவனுடைய உண்மை முகம் வெளியில் வரும். அவன் கோபத்தையும் கடுமையையும் அவள் சந்திப்பாள்.
அவன் சொன்னதற்கு அடங்கி அவள் இங்கே இருக்கும் வரைக்கும்தான் அவன் அன்பு, அக்கறை, அனுசரிப்பு எல்லாம். இன்னுமே அவள் சிறைப்பறவைதானே? அவள் பெயர் வெளியுலகில் கெட்டது கெட்டதுதானே. பெற்ற தாய் தந்தையரைப் பார்ப்பதற்கு கூட அவனிடம் கெஞ்சும் நிலையில்தானே இருக்கிறாள். அப்படி இருக்க அவளால் எப்படி நடந்தவற்றை மறக்க முடியும்? அதை எல்லாம் யோசிக்க யோசிக்கக் கண்கள் கரித்துக்கொண்டு வந்தன.
இவன் எதற்கு இதையெல்லாம் நினைவுபடுத்தினார் என்று அவன் மீது கோபமும் உண்டாயிற்று.
அவள் இப்படித் தனக்குள் கொந்தளித்துக்கொண்டிருக்கையில்தான் கலிங்கன் வந்தான். அவள் கோபத்தோடு இருக்கிறாள் என்கிற எண்ணம் ஒருவித அழுத்தத்தை அவனுக்குள் ஏற்படுத்தியிருந்தது. அதனால்தான் வரதன், மாறனின் பொறுப்பை ஆதியிடம் ஒப்படைத்துவிட்டுப் புறப்பட்டு வந்திருந்தான். அவன் பார்வை முழுக்க முழுக்க அவள் நெஞ்சையே அலசுவது போன்று அவளில்தான்.
அவளோ அவனது பார்வையைச் சந்திக்க மறுத்தாள். வேகமாகக் கனகளைத் துடைத்துக்கொண்டு உள்ளே சென்று, அவன் காயத்திற்கான மருந்துகள் அடங்கிய பெட்டியை எடுத்துக்கொண்டு வந்து, “காயத்தைக் காட்டுங்க” என்றாள் அவனைப் பாராமல்.
அப்படி அவள் பேசிய விதமே அவனது முகத்தசைகளை இறுகச் செய்தது. அவளையே பார்த்து நின்றான். அந்தப் பார்வை அவளைத் துளைக்காமல் இல்லை. ஆனாலும் பெட்டிக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டு நின்றாள்.
முகம் இறுக விடுவிடுவென்று சட்டையின் பட்டன்களை விடுவித்து, சட்டையைக் கழற்றித் தூக்கிப் போட்டுவிட்டு அவளுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு அமர்ந்தான்.
விறைப்பாக நிமிர்ந்து நின்ற அவன் தோள்களே அவன் கோபத்தைச் சொல்லின.
இப்போது இவன் எதற்குக் கோபமாக இருக்கிறானாம் என்று அவள் உள்ளம் குமுறியது. காட்டிக்கொள்ளாமல் காயத்தின் மீது இருந்த கட்டை மெல்லப் பிரித்து, தையல் போட்டிருந்த இடத்தை உன்னிப்பாகப் பரிசோதித்தாள்.
அங்கிருந்த தோலைச் சுற்றி லேசான சிவப்புப் படர்ந்திருந்தது. சில இடங்களில் சிறிய அளவில் இரத்தக் கசிவையும் கண்டு அவளுக்கு மெல்லிய அதிர்ச்சியும் கோபமும்.
“என்ன செய்தனீங்க?” அவள் குரல் அவனை அதட்டியது.
அவன் பதில் சொல்லாமல் இருந்தான்.
அவன் முன்னால் வந்து நின்று, “நான் கேக்கிறது விளங்கேல்லையா உங்களுக்கு? நல்லா ஆறிக்கொண்டு வந்த காயம். இப்ப தையலைச் சுத்தி அப்பிடிச் சிவந்திருக்கு. அந்தளவுக்கு என்ன செய்தனீங்க?” என்று அதட்டினாள்.
கைகளைத் தொடைகளில் ஊன்றி, கரங்களை இறுக்கிக் கோர்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான் அவன். அவன் தாடையின் இறுக்கமே பற்களைக் கடித்து ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு இருக்கிறான் என்று சொல்லிற்று.
இந்தக் கோபம் அவளுக்கு வரவேண்டியது. அது கொடுத்த சினத்துடன், “கலிங்கா!” என்று அவன் தாடையைப் பற்றி நிமிர்த்தப் போனாள்.
சட்டென்று முகத்தைப் பின்னால் இழுத்துக்கொண்டு அவளை பார்த்தான். அவன் கண்களில் கொப்பளித்த கோபத்தைக் கண்டு அவள் திடுக்கிட்டாள். இவன் இந்தளவு கோபப்படுகிற அளவுக்கு இங்கே என்ன நடந்தது? “என்ன?” என்றாள் ஒன்றும் புரியாமல்.
அதற்குள், “இப்ப என்ன வேணும் உனக்கு?” என்கிற கேள்வி அவளை இடைவெட்டியது.
அவளுக்கு முகம் கன்றியது. இப்படியான அவமதிப்புகள் எல்லாம் அவளுக்குப் பழக்கமில்லாதவை. ‘போடா! நீயும் உன் காயமும்!’ என்று எல்லாவற்றையும் சுழற்றி எறிந்துவிட்டுப் போகலாமா என்று வந்தது. ஆனாலும் மனம் கேட்கவில்லை.
“என்ன நடந்தது? காயம் ஏன் இப்பிடியாகி இருக்கு?”
“ஒண்டும் நடக்கேல்ல.”
சட்டென்று வந்த பதிலில் அவளுக்கு முகம் கடுகடுத்தது.
அங்கிருந்த அவன் கைப்பேசியை எடுத்து, காயத்தைப் புகைப்படம் எடுத்து அவனிடம் காட்டினாள்.
“எவ்வளவு வடிவா ஆறி வந்த காயம்! இப்பிடி ஆக்கி வச்சிருக்கிறீங்க. நீங்க ஒண்டும் செய்யாமத்தான் இது நடந்திருக்கா?”
அவன் அந்தப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்தான்.
அவனைப் பிடித்து உலுக்கிக் கேட்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு. அவள் கேட்கிற எதற்கும் பதில் வராது. அவளிடம் உண்மையாக இருக்க மாட்டான். இதில் அவள் எல்லாவற்றையும் மறந்துவிட வேண்டுமாம்.
பேசாமல் போய் தன் கடமையைச் செய்கிறவளாக அவன் காயத்தைக் கவனிக்க ஆரம்பித்தாள். அதில் வழமையாக இருக்கிற கனிவும் இல்லை, அக்கறையும் இல்லை, அவனுக்கான துடிப்பும் இல்லை. தன் கடமையைச் செய்வது போன்று இயந்திரத் தனம்தான் இருந்தது.
சில கணங்களுக்கு முகம் இறுக அதை பொறுத்துக்கொள்ள முயன்றான் கலிங்கன். ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் போக, அவள் கையைத் தட்டிவிட்டு எழுந்து விடுவிடுவென்று மாடியேறினான்.
வருணா திகைத்துப்போனாள். அவளைப் பற்றி இவன் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறான் என்று ஆத்திரம் வந்தது.
போனால் போகட்டும் என்று அப்படியே இருந்தாள். கொஞ்ச நேரம்தான். மனம் கேட்க மாட்டேன் என்றது. பார்த்த காயம் கண்ணுக்குள்ளேயே நின்றது.
அவன் யாரோவாக இருந்தபோதே அவளால் அவனைக் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. இன்றைக்கு ஏதோ ஒரு வகையில் அவளுக்கு நெருக்கமானவன். எப்படி விட்டுவிட்டு இருப்பாள்? அது அவளால் இயலாத ஒன்றும்.
ஆத்திரத்துடன் எழுந்து, அவன் கழற்றி எறிந்திருந்த சட்டையையும் எடுத்துக்கொண்டு மாடியேறி, அவன் அறைக்குச் சென்றாள்.
அங்கே அவன் குளித்துவிட்டு, இடுப்பில் ஒரு டவலை மட்டும் கட்டிக்கொண்டு, முதுகைக் காட்டியபடி நின்றிருந்தான்.
இதை எதிர்பாராத வருணா திகைத்துப்போனாள். ஒருகணம் என்ன செய்வதென்றே தெரியாமல் அசையாது நின்றுவிட்டாள்.
அடுத்த கணமே, “உடுப்பை மாத்திப்போட்டுச் சொல்லுங்க!” எண்றுவிட்டுக் கதவைச் சாத்திக்கொண்டு வந்துவிட்டாள்.
ஆனால் உள்ளம் படபடத்துப் போயிற்று. அவன் தேகம் அவளுக்குப் புதிதே இல்லை. பலமுறை பார்த்திருக்கிறாள். என்ன, என்றைக்குமே அந்தத் தேகத்தைக் கவனித்ததில்லை. அதிலிருக்கும் காலங்களில்தான் அவள் கவனம் இருக்கும். ஆனால் இன்றைக்கு?
அவள் உள்ளத்தின் படபடப்பு இன்னுமே அடங்கிய பாடாக இல்லை. அந்தளவில் அவன் முதுகு முழுவதும் அவள் பார்வையில் விழுந்திருந்தது.
அகன்ற தோள்கள், அவற்றிலிருந்து கீழிறங்கிச் செல்லும் தசைகளின் இறுக்கம், உழைப்பால் செதுக்கப்பட்டது போன்ற கட்டுக்கோப்பான உடல்வாகு. உடற்பயிற்சிக்காக மெனக்கெட்டு வளர்த்த உடலாகத் தெரியவில்லை. பல வருடங்களாகக் கடினமான வாழ்க்கையையும், ஓய்வின்றிய உழைப்பையும் சுமந்து வந்த ஒருவனின் தேகம் அது.
இடை நோக்கிக் குறுகிச் செல்லும் உடலமைப்பும், நீண்ட கைகளும், அவற்றில் தெரிந்த உறுதியும் அவனை இன்னும் கம்பீரமாகக் காட்டின.
சற்று நேரத்தில் அவன் வந்து அறையின் கதவைத் திறந்துவிட்டான். வரலாமாம். இவனுக்கு இருக்கிற செருக்கு இருக்கிறதே. என்னவோ மனநிலை மாறிவிட்டதால் முன்பிருந்த கோபம் இப்போது அவளுக்கு இல்லை.
மெல்லிய தயக்கத்துடன் அவன் அறைக்குள் சென்றாள். பெல்ட் அணிந்த ஜீன்ஸ் மட்டும் அவன் உடலில் இருந்தது. அவள் வந்ததும் வந்து கட்டிலில் அமர்ந்து, அவளுக்கு முதுகைக் காட்டினான். குளித்ததன் பயன் போலும், அவன் முகத்திலும் இறுக்கம் குறைந்திருந்தது.
அவள் காயத்தைக் கவனிக்க, முகத்தைத் திருப்பி இப்போது வெளிப்படையாகவே அவளையே பார்த்தான். வருணாவினால் பார்க்கும் வேலையில் கவனம் செலுத்தவே முடியவில்லை. “கலிங்கா!” என்றாள் அதட்டலாய்.
அவள் கையைப் பற்றித் தன் முன்னே கொண்டு வந்து, “என்னட்ட கோவப்படாத எண்டு உன்னட்டச் சொன்னனானா இல்லையா?” என்று அதட்டினான் அவன்.
இதற்குத்தானா இத்தனையும். அவளுக்குச் சிரிப்பு வந்துவிடும் போலாயிற்று.
“இப்ப நீங்க என்ன செய்றீங்க?”
“எல்லாம் உன்னாலதான்!” என்றான் அவன் அதற்கும்.
இதற்கும் அவள்தான் காரணமா? “நல்லா சொல்லுறீங்க விளக்கம்!” என்றுவிட்டு அவன் முதுகில் இருந்த நீரை ஒற்றி எடுக்க ஆரம்பித்தாள்.
அவளை மீறியே அவன் மீதான அக்கறையும் கனிவும் வெளியில் வந்திருந்தன.

