கலிங்கனின் காவியம் 36.1

அத்தியாயம் 36

வருணாவை இத்தனை நாட்களாகத் துரத்திக்கொண்டிருந்த கேள்விகள் ஏராளம். இந்தக் கத்திக்குத்துச் சம்பவத்துக்குப் பின்னால் இருப்பது யார்? எதற்காக அவளைத் தாக்க முயன்றார்கள்?

கலிங்கராயன் மீதான கோபத்தை அவள் மீது காட்ட முயன்றிருக்கிறார்கள் என்று புரியாமல் இல்லை. ஆனாலும், அவனோடு பகை என்றால் அதை அவனிடம்தானே காட்ட வேண்டும்? அவளைக் குறிவைப்பதற்கு என்ன காரணம்?

முதலில், இப்படி ஒருவர் கோபம் கொண்டு தாக்கும் அளவிற்கு அவருக்கு இவன் என்ன செய்தானா?

இதையெல்லாம் அவனிடம் எத்தனையோ முறை கேட்டுவிட்டாள். அவனோ எதற்கும் முறையான பதில் சொன்னதில்லை.

இன்றைக்கும் அவனுடைய காயத்தைக் கவனித்துக்கொண்டிருந்தவள், “ஆர் இதையெல்லாம் செய்தது எண்டு கண்டுபிடிச்சிட்டீங்களா?” என்று கேட்டாள்.

எப்போதும் அழுத்தமான அமைதியைக் கடைப்பிடிக்கிறவன் இன்றைக்குத் தான் உண்மையைச் சொன்னால் நம்புவாளா என்று அவளைப் பார்த்தான்.

அவன் பார்வையின் பொருள் புரியாமல், “என்ன கலிங்கா?” என்றாள் அவள்.

“நான் சொன்னா நம்புவியா?” என்றவனின் கவனம் முழுவதும் அவள் முகத்திலேயே இருந்தது.
அந்தக் கேள்வியே அவன் எங்கே வந்து நிற்கப்போகிறான் என்று சொல்லிவிட அவள் முகம் மாறிப்போயிற்று. “நீங்க முதல் சொல்லுங்க.” என்றாள் அவன் பார்வையைத் தவிர்த்தபடி.

“மாறன்.” என்றான் அவன் சுருக்கமாக.

வருணாவின் கைகள் ஒருகணம் தம் வேலையை நிறுத்தின. அதிர்ச்சியுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். வரதனின் பெயரைச் சொல்லப்போகிறான் என்றுதான் நினைத்திருந்தாள். அவன் மாறன் என்கிறான்.

அவளுக்குள் ஆதங்கமும் கோபமும் உண்டாயின.

“ஏன் கலிங்கா இப்பிடி இருக்கிறீங்க? இவ்வளவு காலமும் வரதன் அங்கிள். இப்ப மாறனா? என்ன என்னட்ட ட்ரை பண்றீங்க?” என்று மெல்லிய கோபத்துடன் கேட்டாள்.

அவன் ஒன்றும் சொல்லவில்லை. தோள்களைக் குலுக்கிவிட்டு பேசாமல் இருந்தான்.

அவளுக்குப் பொறுக்கவே இல்லை. இப்படி, நல்ல மனிதர்கள் மீது கொஞ்சம் கூட மனச்சாட்சியே இல்லாமல் பழி போடுவானா என்கிற ஆத்திரத்தோடு, “நீங்கதான் எனக்குப் புதுசு கலிங்கா. உங்களைப் பற்றி எனக்கு ஒண்டுமே தெரியாது. நீங்க எப்பிடியான ஆள், உங்கட குணம் என்ன, உங்கட பின்புலம் என்ன எண்டு எதுவுமே எனக்குத் தெரியாது. ஆனா அவே அப்பிடி இல்ல. அவேயப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும். நிறைய நாளா அவேய எனக்குத் தெரியும். அதுவும் மாறனை படிக்கிற காலத்தில இருந்து தெரியும். அவரைப் பற்றி என்னட்ட சொல்லாதீங்க!”

“அந்தளவு பழக்கமோ?” சட்டென்று எழுந்து நின்று சீற்றத்துடன் கேட்டான்.

தன்னை முட்டி மோதிவிடப்போகிறானோ என்று பயந்துபோனாள் வருணா. இரண்டடி தள்ளி நின்றவளை ஒருகணம் இதயத்தின் துடிப்பே நின்றுபோயிற்று. அத்தனை சீற்றம் அவனிடம்.

இந்தளவுக்கு அவளிடம் பாய்வானா என்கிற கோபத்தோடு, அந்தக் கேள்வியை என்ன அர்த்தத்தில் கேட்கிறான் என்பதும் புரிந்துவிட, “ஓம்! அந்தளவுக்குப் பழக்கம்தான். இப்ப அதுக்கு என்ன எண்டுறீங்க?” என்றாள் அவளும் சீற்றத்துடன்.

அந்தளவுக்கு என்ற சொல்லுக்கு அவள் கொடுத்த அழுத்தத்தில் மொத்தமாய் அவன் கட்டுப்பாட்டை இழந்தான்.

அவள் மேல் கையைப் பற்றி தன்னிடம் இழுத்தவனின் விழிகள் நெருப்பை உமிழ்ந்த. “வருணா!” என்றவன் வார்த்தைகளை உதிர்காமல் ஆட்காட்டி விரலை ஆட்டிக்காட்டி அவளை எச்சரித்தான்.

வருணாவுக்கு நடுங்கிப்போயிற்று. ஆனாலும் அவனுக்கு அடங்கிப்போக முடியவில்லை. அந்தளவில் அவன் கேட்ட கேள்வி அவளையும் உசுப்பியிருந்தது. அதில் உன் மிரட்டலுக்கு அடங்கமாட்டேன் என்று மனம் கொதிக்க அவனை விழிக்கையற்றதஹு பார்த்து நின்றாள்.

இருவர் பார்வைகளும் பெரும் சீற்றத்துடன் மோதிக்கொண்டன. அவன் ஆத்திரத்தில் அவள் கையை உதறிவிட்டுப் போக முயல, “இன்னும் கட்டுப் போடேல்ல!” என்று தடுத்தாள் அவள்.

“தேவை இல்ல! நீ உன்ர வேலைய பார்!” என்றான் அவன் கடுப்புடன்.

“இது என்ர வேலைதான். வந்து இருங்க!” என்று அவனைப் பிடித்து இழுத்தி அமர்த்திவிட்டு, தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

ஆத்திரத்தில் சினத்திலும் அவன் முகம் கொடுத்திருந்தாலும் கவனம் முழுவதும் அவளில்தான். அவன் அவளை எப்போதும் உணர்வது அவளின் தொடுதல் வழிதான்.

மறுபடியும் அவளின் அந்தத் தொடுதலில் அவன் எதிர்பார்க்கும் அன்பு, அக்கறை, அனுசரணை எதுவும் இல்லை. தான் அவளை விடாமல் பார்க்கிறோம் என்று தெரிந்தும் கூட அவன் பார்வையை அவள் சந்திக்கவே இல்லை.

கடைசியாகக் கட்டுப் போட்டு முடித்ததும் பொருட்களை ஒதுக்கி வைத்தாள்.அவன் இன்னமும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவள் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.

எப்படிப் பார்ப்பாள்? இன்றைக்கு மாறன் அவளுக்கு யாரோவாகி இருந்தாலும் ஒரு காலத்தில் அவளுடைய வருங்காலக் கணவனாக இருந்தவன். அவனோடு நிறையப் பழகியிருக்கிறாள். பேசியிருக்கிறாள். அவனைப் பற்றிய ஒரு மதிப்பும் நம்பிக்கையும் அவளுக்குள் இருந்தது.
படித்தவன். பண்பானவன். நல்ல உத்தியோகத்தில் இருப்பவன். சமூகத்தில் மதிப்பும் மரியாதையுமாக வாழ்பவன்.

அப்படிப்பட்ட ஒருவனைக் கத்திக்குத்துச் சம்பவத்தோடு தொடர்புபடுத்துவதை அவளால் எப்படிக் கேட்டுக்கொண்டிருக்க முடியும்?

அவனோ அவளுடைய முகத்தையே வெறித்துப் பார்த்தான். அவள் தன்னை நம்பவில்லை என்பது அவனை ஆழமாகப் பாதித்தது. இதனால்தான் இத்தனை நாள்களும் இதைச் சொல்லாமல் இருந்தான்.

யார் அவனைப் பற்றி என்ன நினைத்தாலும் அவனுக்குக் கவலையில்லை. தேவையற்றவற்றைத் தூசியைத் தட்டுவதுபோலத் தட்டிவிட்டு போய்விட முடியும். ஆனால் அவள் மட்டும் அப்படி நினைப்பது அவனால் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது. அதில் விடாமல் அவளையே பார்த்தான்.

சத்தமே இல்லாமல் அவன் தன்னுடன் சண்டையிடுகிறான் என்று அவளுக்கு விளங்காமல் இல்லை. காட்டிக்கொள்ளாதபோதிலும் அவன் பார்வையும் கோபமும் அவளை பாதித்தன.

அதற்காக மனம் ஒப்பாத ஒன்றை, அவனுக்காக வேண்டி நம்புவதாக அவளால் சொல்ல முடியவில்லை. அவனைச் சமாதானப்படுத்துவதற்காகப் பொய் சொல்லவும் அவளுக்கு விருப்பமில்லை.

மருந்துகள் அடங்கிய பெட்டியை எடுத்துக்கொண்டு அவள் புறப்பட, “அவன் இனி உன்ர வாழ்க்கைல இல்ல எண்டு அண்டைக்கே சொல்லிட்டேன்!” என்றான் அவன்.

error: Alert: Content selection is disabled!!