சட்டென்று திரும்பியவள் விழிகளில் அனல் பறந்தது. அவன் கழுத்தைப் பிடித்து நெறிக்கலாமா என்கிற அளவுக்கு ஆத்திரம். “கழுத்தில ஒருத்தனையும் மனதில இன்னொருத்தனையும் சுமக்கிறவள் நான் இல்ல!” என்று சீறினாள். “அதுக்காக கழுத்தில சுமக்கிறவனை மனதில சுமக்கோணும் எண்டு கட்டாயமும் இல்ல!” என்றுவிட்டு போக போனவளை பற்றி நிறுத்தினான் அவன்.
“ஆரம்பத்துக்கு வேணுமெண்டா கழுத்தில சுமக்கிறவனை மனதில நீ சுமக்காம இருக்கலாம். ஆனா காலத்துக்கும் அவனை மட்டும்தான் நீ சுமக்கோணும்!” உத்தரவு போடுறவன் போன்று சொன்னான் அவன்.
ஒரு கணம் அவள் உள்ளம் கொந்தளித்தது. அதே நேரம் மனம் கடந்துவிட, “இதுதான் கலிங்கா நீங்க. இதுதான் உங்கட ஒரிஜினல் முகம். இந்த வாழ்க்கை கொடுமையா இருக்கா எண்டு கேட்டீங்களே, கொடுமையா இல்ல நரகமா இருக்கு. கொஞ்சமாவது நான் நிம்மதியா இருக்கிறன் எண்டா அதுக்கு நீங்க காரணம் இல்ல. நீங்க சொல்லுறதை எல்லாம் கேட்டுக்கொண்டு அடங்கி இந்த வீட்டில நான் இருக்கிறன் எல்லா. அதுதான் காரணம். இனி அப்பிடி ஒரு கேள்வியை எண்டைக்கும் என்னட்ட கேக்காதீங்க. எண்டைக்குமே உங்களோட என்னால சந்தோசமா இருக்கவே ஏலாது!” இருந்த கோபத்திற்கு கத்திவிட்டு வந்து அறைக்குள் புகுந்துகொண்டவளுக்கு மனம் அடங்கவேயில்லை.
அவனைத்தான் அவள் சுமக்க வேண்டுமாமே.எத்தனை அதிகமாய் உத்தரவிடுகிறான். அவள் என்ன உணர்வுகள் அற்ற ஜடமா, அவன் சொன்னதை எல்லாம் கேட்டுக்கொண்டிருக்க. ஏனோ ஆத்திரத்தோடு சேர்த்து தொண்டையும் அடைத்துக்கொண்டு வந்தது.
அவளை பற்றி என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறானாம் என்று மனம் அடங்காமல் குமுறிற்று. இன்னும் அவனிடம் காத்த வேண்டும் போல் ஒரு ஆவேசம். தலையைக் கைகளால் பற்றிக்கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டாள். எவ்வளவு நேரம் கடந்ததோ. பக்கத்து அறையிலும் எந்த சத்தமும் இல்லை என்பது அவள் கவனத்திற்கு வந்தது.
அவன் இன்னும் சாப்பிடவில்லை. அவன் வருவான் என்று அவளும் சாப்பிட்டிருக்கவில்லை. அவன் பேசிய பேச்சிற்கு சாப்பாடு ஒன்றுதான் குறை என்று மனம் பொருமினாலும் அப்படி விட்டுவிட்டு இருக்கவும் முடியவிலை.
அதற்கும் அவன் மீதுதான் ஆத்திரம் உண்டாயிற்று. எரிச்சலுடன் எழுந்து மடியில் இருந்த தலையணையைத் தூக்கி கட்டிலில் எறிந்துவிட்டு மறுபடியும் அவன் அறைக்குச் சென்றாள்.
அங்கே அவன் அவள் மருந்து கட்டும்போது இருந்தது போலவே கைகளைத் தொடைகளில் ஊன்றி கரங்களைக் கோர்த்துக்கொண்டு தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தான்.
சுருக்கென்று உள்ளே ஒரு வலி. நன்றாக அனுபவி என்று நினைக்க முடியவில்லை. சில கணங்கள் அவனையே பார்த்து நின்றுவிட்டு, “சாப்பிட வாங்க,” என்றாள்.
அவன் தலையை மட்டும் நிமிர்த்தி அவளைப் பார்த்தான். அவள் முகத்தில் இருந்த இறுக்கம், விலகல், கடமைக்கு அழைப்பது போன்ற அந்தப் பாங்கு அவனுக்குப் பிடிக்கவில்லை. சுருக்கென்று உள்ளே எதுவோ பாய. அவன் தாடை இறுகீற்று. என்னிடம் இந்த முகத்தைக் காட்டாதே என்பதுபோல் அவளையே விடாமல் உறுத்துப் பார்த்தான்.
வருணாவால் அந்தப் பார்வையை எதிர்கொள்ள இயலவில்லை. அதைச் சமாளிக்கும் பொருட்டு, “சாப்பிட வாங்க எண்டு சொன்னனான்!” என்றாள் கொஞ்சம் அழுத்தி.
அவன் முகத்தைத் திருப்பினான். போடி என்கிறானா? அவளுக்குக் கொதித்துப் போயிற்று. “வாங்க எண்டு சொன்னா வரமாட்டீங்களா!” என்று அவனிடம் வந்து அவன் கை பற்றி இழுத்தாள். அடுத்த கணமே அவள் இடையில் கையைப் போட்டுத் தன்னிடம் இழுத்து, வயிற்றில் முகம் புதைத்தான் அவன்.
இப்படி ஒரு எதிர்வினையை வருணா சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. அவன் தோள்களைப் பற்றித் தன்னைச் சமாளித்தவள் ஒரு கணம் அப்படியே நின்றுபோனாள்.
“கலிங்கா, என்ன இது?” அவன் தொடுகையை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அவனை உதறித் தள்ளவும் வரவில்லை. “விடுங்க ப்ளீஸ்!” என்றாள் கெஞ்சலாக.
அணைப்பை விலக்காமல் முகத்தை மட்டும் நிமிர்த்தி அவளை பார்த்தான். அந்த விழிகள் உணர்வுகளின் குவியலில் பொங்கித் தளும்பியது. வருணா தவித்துப்போனாள்.
அவனது நெருக்கம் அவளை ஒருபுறம் பதற்றப்படுத்த, மறுபுறம் அந்த விழிகளில் தெரிந்த ஏதோவொன்று அவளது மனதைப் பிசைந்தது.
அவனை விலக்க வேண்டும் என்ற எண்ணம் மெல்ல வலுவிழக்க, அப்படியே நின்றிருந்தாள். அதற்கென்று அவனை அரவணைத்துக்கொள்ளவில்லை. அது வரவில்லை அவளுக்கு.
அதை அவனும் உணர்ந்தான். அது அவனுக்குள் வலியை ஏற்படுத்தியது. அதேநேரம், தன்னுள் கொந்தளிக்கும் உணர்வுகளை அவளிடம் வெளிப்படுத்தவும் முடியவில்லை. அவளிடம் எதையும் கேட்காமல், எதையும் சொல்லாமல், மீண்டும் அவள் வயிற்றில் முகம் புதைத்தான்.
இருவரும் கீழே வந்து அமைதியாகவே உணவை முடித்தார்கள். அவனாகச் சொன்னதில்லையே தவிர அவள் பரிமாறினாள் அவனுக்குப் பிடிக்கும் என்று அவளுக்குத் தெரியும். ராசம்மாவைக் கூட வர அனுமதிக்க மாட்டான்.
இன்றும் அவளே பார்த்து பார்த்துப் பரிமாறினாள். அவன் போதும் என்றபோதும் விடவில்லை. அதைத் தாண்டிய பேச்சு இருவருக்கிடையில் இல்லாதபோதும் இருவர் நினைப்பிலும் நிறைந்திருந்தனர் மற்றவரே.
அவன் தன் வழமையான இருக்கத்திற்குள் புகுந்திருந்தான். அவளோடு கைப்பேசியில் உரையாடிய கலிங்கன் காணாமல் போயிருந்தான்.
காரணம் தெரியாமல் இல்லை. அவளுக்கு அதற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. உறங்க என்று அறைக்குள் வந்த பின்பும் யோசித்துப் பார்த்தாள். மாறனை நடந்த நிகழ்வோடு இணைத்துப் பார்க்கவே அவளால் முடியவில்லை.
அவன் தன்னிடம் பொய் உரைக்கிறான் என்பதும் வலித்தது. இவற்றின் பின்னால் என்னதான் இருக்கிறது? அவளை சுற்றி என்ன நடக்கிறது? கலிங்கன் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறான்? பதிலற்ற கேள்விகள் அவளை சுழற்றி அடித்தன.
ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் கட்டிலில் விழுந்து கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்.

