கலிங்கனின் காவியம் 37.1

அத்தியாயம் 37

மாறனைப் பொறுத்தவரையில் வரதன் என்பவன் சாதாரண மனிதனல்லன். அவன் மதிக்கப்பட வேண்டியவன். போற்றுதலுக்குரியவன். பெருமைக்குரியவன்.

அவன் செல்லும் இடங்களிலெல்லாம் அவனுக்குக் கிடைக்கும் மதிப்பையும் மரியாதையையும் பார்த்துத்தான் மாறன் வளர்ந்திருந்தான். விஜயராஜனின் மகன் என்பதைவிட, அவனுடைய அறிமுகங்கள் பல இடங்களில் வரதராஜனின் பெறா மகன் என்றுதான் நடந்திருக்கின்றன.

அந்தளவுக்கு அவர்களது குடும்பத்தின் முகமாக, அடையாளமாக, பெருமையாக வரதனைப் பார்த்திருக்கிறான்.

அப்படிப்பட்ட ஒருவனை அடி வாங்கிய கோலத்தில் பார்த்ததே அவனுக்குப் பேரதிர்ச்சி. அதைவிடப் பெரிய அதிர்ச்சி, கலிங்கராயன் அவனை மிரட்டிக்கொண்டிருக்க, அதற்கு எதிர்த்துப் பேசக்கூட முடியாமல் வரதன் அடங்கிப்போய் நின்றிருந்த காட்சி.

வரதனுக்கெல்லாம் இந்த நிலைமை வரும் என்றோ, அவனை இப்படியெல்லாம் ஒருவன் அடித்து நொறுக்குவான் என்றோ மாறன் கனவிலும் எண்ணியதில்லை.

ஆனால், கப்பலில் அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்கள் அவனுக்குக் கொடுத்த அதிர்ச்சிகளுக்கு அளவேயில்லை. ஒன்றைச் சுதாரிப்பதற்குள் இன்னொன்று. ஒரு திகைப்பிலிருந்து மீள்வதற்குள் அடுத்தது என்று ஏராளம்.

அப்படியிருக்க, வரதன் வாயைத் திறக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு கலிங்கராயன் அங்கிருந்து சென்ற பிறகு, ஆதியும் மாறனைச் சும்மா இருக்கவிடவில்லை. அவன் ஒரு கணம் ஓய்ந்துபோய் நின்றால் கூடப் பட்டென்று அடித்தான்.

அந்த அடிகளின் வலியில், அதுவரை அவனுக்குள் தேங்கியிருந்த கோபத்தையெல்லாம் சேர்த்து, வரதனை அடித்து நொறுக்கியிருந்தான்.

கடைசியில், “சொல்றன்! நான் சொல்லுறன்! விடு! அடிக்காத! நான் சொல்லுறன்!” என்று வரதன் கைகளால் தடுத்தபோது, அதற்கு மேலும் முடியாமல் அப்படியே தொய்ந்து விழுந்தான்.

அவனுக்கு மனமெல்லாம் வலி. தான் அவ்வளவு நேரமாக அடி வாங்கியபோது வாயே திறக்காதவர் இப்போது சொல்கிறாராம். கையில் இருந்த கட்டையை இரண்டு கைகளாலும் பற்றி ஊன்றி, தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு குலுங்கி அழ ஆரம்பித்தான் மாறன்.

அப்போதுதான் வாயைத் திறந்தான் வரதன்.

கலிங்கராயனைப் பழிவாங்க எண்ணித் திட்டமிட்டு நிலாவினியோடு நெருங்கிப் பழகியதையும், கலிங்கராயனை தனியாக வரவைத்து அதைக் காட்டியே அவனை நிலைகுலைய செய்து கத்தியால் குத்தி கொல்ல முயன்றதையும், அதன் பிறகும் அவளைத் தான் வைத்திருப்பதையும் அவன் சொன்னபோது மாரனுக்குத் திகைப்பு, அதிர்ச்சி என்பதெல்லாம் சின்ன வார்த்தையாகிப்போயிற்று.

தன் சித்தப்பன் இந்தளவில் ஒரு சாக்கடையாக இருப்பான் என்று சத்தியமாக எதிர்பார்க்கவேயில்லை. தான் இத்தனை காலமும் உயர்வாகப் பார்த்த மனிதன், ‘சீ… நீ இவ்வளவுதானா?’ என்று அருவருத்து ஒதுக்குமிடத்தில் இருப்பதை அறிந்து அதிர்ந்துபோனான்.

ஒரு பெண்ணை வைத்திருக்கிறானாம். அதுவும் கலிங்கராயன் மணக்க இருந்த பெண்ணைத் தன் இச்சைக்குப் பயன்படுத்துகிறானாம். அந்த அருவருப்புத் தாங்காமல், “சீ… தூ!” என்று அவன் முன்னாலேயே துப்பியிருந்தான்.

அதற்குமேல் அங்கிருக்க அவனுக்கு நொடியும் பிடிக்கவில்லை. “நான் இனி போகலாம் தானே?” என்று ஆதியைக் கேட்டுவிட்டுப் புறப்பட்டுவிட்டான்.

எழுந்து நடப்பதற்குக் கூட அவனால் முடியவில்லை. உடலெல்லாம் அடிகளின் வலி. அதைவிட அவமானமும் அருவருப்பும் அவனை நிலைகுலையச் செய்திருந்தன. கூனிக் குறுகி அமர்ந்திருந்த வரதனை அவன் திரும்பியும் பார்க்கவில்லை. தட்டுத் தடுமாறி எழுந்து, விழுந்து விழுந்து நடந்து போனவனை யாரோ ஒருவர் அழைத்துச் சென்று கரையில் விட்டிருந்தார்கள்.

*****

திடீரென்று உடல் முழுவதும் அழுக்கும் கசங்கலும் படிந்து, ஆங்காங்கே கிழிந்த ஆடையுடன், தலை கலைந்து, முகமெல்லாம் கன்றிப்போய், கண்களில் நீர் வழிய, ஒரு பைத்தியக்காரனைப் போலத் தங்கள் முன்னால் வந்து நின்ற மகனைக் கண்டதும் விஜயராஜன் தம்பதி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு நின்றுவிட்டார்கள்.

அவன் திருமணம் தடைப்பட்டுப்போனதால் சந்தித்த அவமானங்களே அவர்களுக்குப் போதும் போதும் என்றிருந்தது. அவனை எப்படி மீட்கப்போகிறோம் என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் வேலை, அன்றாட வாழ்க்கை என்று மெல்ல மெல்ல அதிலிருந்து மீண்டு, வெளியே வர ஆரம்பித்திருந்தான் மாறன்.

அப்படியிருக்க இப்படி வந்து நிற்கிறான். அது போதாது என்று அவன் சொன்ன விஷயங்கள்? அதுவரை இருந்த அதிர்ச்சியெல்லாம் ஒன்றுமேயில்லை என்றளவுக்கு ஆயிற்று.

விஜயராஜனுக்கு வரதனைப் பற்றி முழுமையாகத் தெரியாதபோதிலும் அவன் தவறான பாதையில் பயணிப்பதும், செய்கிற தவறுகளை மறைப்பதற்காகவே நல்லவன் என்கிற முகமூடியை அணிந்துகொண்டு ஊருக்கு உதவுகிறான் என்று தெரியும்.

அதனால்தான் அவனை விட்டு விளக்கியிருந்தார். என்ன, பாரம்பரியம் மிக்க பரம்பரை பணக்காரர்கள், பலருக்குத் தெரிந்த குடும்பம் என்பதில் அவர்களின் உட்பூசல்களை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார். உள்ளுக்குள் அந்த விலகல் இருக்கும்.

ஆனால், பெண்கள் விடயத்திலும் அவன் இவ்வளவு கீழ்த்தரமானவனாக இருப்பான் என்று அவருமே எதிர்பார்க்கவேயில்லை.

அதுவும் கலிங்கனுக்குப் பேசிய பெண்ணைத் திட்டமிட்டே தனக்குப் பணிய வைத்து, அவளோடு அந்தரங்கமாகப் பழகி, அதைக் காட்டியே அவனை வீழ்த்தியிருக்கிறான் என்றால்… அவருக்கும் அருவருத்தது. இனியும் அவன் முகத்தை தன்னால் பார்க்க முடியும் போல் இல்லை. அந்தளவில் வெறுத்தார்.

கலிங்கனின் கோபத்தின் பின்னால் இருக்கிற நியாயம் கூட இப்போது அவருக்கு ஓரளவுக்குப் புரிந்தது.

கொலை செய்கிற அளவுக்குக் கூடத் துணிந்திருக்கிறானே. தேவை என்று வந்தால் தம்மைக் கொல்லவும் யோசிக்க மாட்டான் என்று வேறு அவருக்கு ஓடிற்று.

மாறனின் தாய்க்கு வாந்தியே வந்துவிட்டது. இத்தனை அசிங்கமானவனா வரதன், இவனையா இவ்வளவு காலமும் வீட்டுக்குள் அனுமதித்தோம், இவனையா குடும்பத்து மனிதனாக மதித்து நடத்தினோம் என்ற நினைத்தார்.

இப்படியானவன் தன்னைக்கூடத் தவறான பார்வை பார்த்திருக்கக் கூடும் என்று நினைத்ததும் உடலெல்லாம் கூசியது.

அதையெல்லாம் விட, அவன் செய்த பாவங்களுக்கான தண்டனை அவர்கள் மகனுக்கு. அதுவும் காலம் முழுக்க அவமானத்தைச் சுமக்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறான்.

கூடவே மகன் செய்த காரியத்தையும் அறிந்து அதிர்ந்துபோனார்கள். “அவன்ர ரெத்தம் உனக்குள்ளயும் ஓடுது எண்டு காட்டுறியா தம்பி?” என்று சீறியிருந்தார் விஜயராஜன்.

மாரனால் அவர்கள் முகத்தை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை.

இன்னும் எத்தனை அதிர்ச்சிகளைத்தான் தங்குவது என்று நினைக்கிற அளவுக்கு அவன் பெற்றோருக்கு மனம் விட்டுப்போயிற்று. உடனடியாக அவனை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார்கள்.

மாறன் ஓரளவுக்குத் தேறி வருவதற்கே ஒரு வாரம் பிடித்தது.

*****

வருணாவுக்கு மனதே சரியில்லை. கலிங்கனிடம் கோபப்பட்டிருந்தாலும், மாறன் அப்படிப்பட்டவன் இல்லை என்று உறுதியாக நம்பினாலும், கலிங்கன் பொய் சொல்கிறான் என்பதையும், தன் பார்வையில் தாழ்ந்து போகிறான் என்பதையும் அவளால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

மிகவுமே வலித்தது. அவன் அப்படித் தன் பார்வையில் தெரிய வேண்டாம் என்று நினைத்தாள்.

அடுத்த இரண்டு நாட்களும் அவனுக்கான உணவு, மருந்து என்று எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டாலும், முடிந்தவரையில் அவனை விட்டு விலகியே இருந்தாள்.
இணையத்தளம், சமூகவலைத்தளம் எங்கும் மாறனைப் பற்றிக் கலிங்கன் சொன்னது போன்று ஏதாவது தவறான விடயங்கள் கிடைக்கின்றனவா என்று தேடினாள்.

மதியழகனுக்கு அழைத்து இதுதான் என்று சொல்லாமல் மாறனைப் பற்றி விசாரித்தாள். அவர்களுக்கும் அப்படி எதுவுமே தெரிந்திருக்கவில்லை.

“இதையெல்லாம் செய்தது ஆர் எண்டு தெரிய வந்ததா பிள்ளை?” என்று மதியழகன் அவளிடம் கேட்டார்.

மாறனைப் பற்றி கலிங்கன் சொன்னதைத் தகப்பனிடம் சொல்ல வருணாவுக்கு விருப்பமில்லை. அதைச் சொன்னால் அவளைப் போலவே அவரும் அவனை நம்பமாட்டார். கூடவே, அவரும் அவனைக் குறைவாக நினைப்பார்.

அதில், “இல்லையப்பா. இன்னும் விசாரிச்சுக்கொண்டு இருக்கிறதா சொன்னவர்.” என்று சொன்னாள்.

அதற்கே, “அவன்ர கதையை எல்லாம் நீ நம்புறியா பிள்ளை? அவனுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கும். ஒருத்தருக்கு ஒருத்தர் அடிக்கிறதும், பழி வாங்கிறதும் தானே இவங்களின்ர வாழ்க்கை! தெரியாத்தனமா நாங்க மாட்டி நிக்கிறான். இப்பிடி எல்லாம் நடக்குமெண்டு தெரிஞ்சிருந்தா, மாறனோட உனக்குக் கலியாணம் பேசாமலேயே இருந்திருக்கலாம்.” என்றார் அவர் கசப்பும் வெறுப்புமாக.

error: Alert: Content selection is disabled!!