கலிங்கனின் காவியம் 38.1

அத்தியாயம் 38

கடந்த ஒரு வாரமாக வேட்டையாடக் காத்திருக்கும் அடிபட்ட மிருகமாக தன் அறைக்குள்ளேயே குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தான் வரதன். இப்போதும் அவன் முகம் அவமானத்திலும் ஆத்திரத்திலும் இறுகியிருந்தது.

அவனால் அந்த நாளை மறக்கவே முடியவிலை. நினைக்கிற பொழுதுகளில் எல்லாம் முகம் கோரமாக மாறிவிட, வெறிகொண்ட மிருகமாக எதையாவது போட்டு உடைத்துக்கொண்டிருந்தான்.

அவனுக்கான வைத்தியர் மட்டுமே அவனைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார்.

அன்றைக்குப் பட்டதெல்லாம் போதாது என்று, அவனைத் துச்சமாய் நோக்கி, “சீ போ!” என்று ஆதி கடைசியாக விரட்டியடித்ததை நினைக்க நினைக்க ஆதி வயிற்றிலிருந்து அகோரமாகக் கத்தினான்.

விஜயராஜன் பலமுறை அவனுக்கு அழைத்துவிட்டார். ஏற்கவேயில்லை. அவர்களின் முகம் பார்க்க வெட்கி ஓடி ஒளிய வைத்துவிட்டவன் மீதுதான் ஆத்திரம் உண்டாயிற்று.

சூர்யாவுக்கு அவனுடைய இந்தத் திடீர் மாற்றத்துக்கான காரணம் புரியவில்லை. பல முக்கியமான விடயங்கள் குறித்து அவனிடம் பேச வேண்டியிருந்தது.

யாராவது ஒட்டுக்கேட்பதற்குச் சாத்தியங்கள் உண்டு என்று அப்படியானவற்றைக் கைப்பேசியில் பேசுவதை முடிந்தவரையில் இருவருமே தவிர்த்துக்கொள்வார்கள்.

ஆனால் இப்போது, இவன் அழைப்பை அவன் ஏற்கவில்லை. நேரில் சந்திக்கலாம் என்றால் அதற்கும் மறுத்துக்கொண்டிருந்தான்.

அண்ணனும் தங்கையும் பெரும்பாலும் முடிந்தவரையில் வரதனைப் பற்றிய பேச்சைத் தமக்குள் எடுக்க மாட்டார்கள். அவர்களால் மற்றவரின் முகத்தைப் பார்த்து அதைக் குறித்து பேச முடிவதேயில்லை. அவர்களாகத் தேடிக் கொண்டது என்றாலும் அது தம்முடைய அசிங்கமான பக்கம் என்று அண்ணன் தங்கை இருவருக்குமே தெரிந்துதான் இருந்தது.

இன்றைக்கு அதையும் மீறி, “வரதன் உனக்கு எதும் மெசேஜ் பண்ணினவனா, உன்னோட கதைச்சவனா?” என்று நிலாவினியிடம் கேட்டான் சூர்யா.

அவனைப் பாராமல், ஏதோ வேலையைச் செய்வதுபோல் காட்டிக்கொண்டு, “இல்லை அண்ணா, போட்ட மெசேஜுக்கும் பதில் இல்ல.” என்றாள்.

“ஓ!” என்றவனுக்கு மேலே என்ன கேட்பது என்றும் தெரியவில்லை. என்னாயிற்றோ என்று யோசித்தான்.

“ஏதாவது பிரச்சினையா இருக்குமோ?” மெல்லிய தயக்கத்துடன் கேட்டாள் நிலாவினி.

அவளுக்குமே வாரத்தில் குறைந்தது மூன்று நான்கு நாட்களாவது தன்னை அழைக்கும் வரதனின் இந்தத் திடீர் மாற்றம் மித்தியாசமாகத்தான் இருந்தது.

“தெரியா, ஆனா பிரச்சனை போலதான் இருக்கு.” என்றான் அவன் யோசனையோடு.

அதற்குமேல் நிலாவினி தயங்கிக்கொண்டு இருக்கவில்லை. அது ஒரு அசிங்கமான உறவு என்று உள்ளே குடைந்தாலும் இடைப்பட்ட நாட்களில் வரதனோடான அந்த வாழ்க்கைக்குப் பழகியிருந்தாள்.

சில நேரங்களில் கோபங்களைக் காட்டினாலும் மற்றும்படி அவன் இணக்கமாகவே இருப்பது அவளுக்கு நிம்மதியைத் தந்திருந்தது. அதில் அவன் அழைக்காதமலையே அவனைப் பார்ப்பதற்கு அவன் வீட்டிற்கு அன்று இரவு சென்றாள்.

அப்படி அவள் தான் அழைக்காமலேயே வந்ததைக் கண்டு, தன் மீதான மதிப்பு அவளிடமும் குறைந்துவிட்டதோ என்று ஒரு கணம் கோபம் கொண்டான் வரதன். அதேநேரம், அவள் வந்தது ஒருவிதத்தில் அவனுக்கு ஆறுதலாகவும் இருந்தது. அந்த முரண்பட்ட உணர்வுகளை வெளிக்காட்டாமல், அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவன் முகத்தில் இருந்த சிறு கன்றலைக் கண்டுவிட்டு அவள் பயந்துபோனாள். “என்ன இது?” என்றுகொண்டு அவனை நெருங்கியவளை அவன் ஒற்றைப் பார்வையே அடக்கிற்று. வாயை மூடிக்கொண்டு நின்றுவிட்டாள்.

அதன் பிறகுதான் வீட்டின் நிலையைக் கவனித்தாள். மிகுந்த அலங்கோலமாக இருந்தது. ஏதோ பெரிய பிரச்சனை நடந்திருக்கிறது என்று புரிந்துகொண்டாள் நிலாவினி.

எதையும் கேட்கவோ விசாரிக்கவோ இல்லை. அங்கிருந்த பணியாட்களையும் அழைத்துக்கொண்டு வீட்டை ஒழுங்குபடுத்த ஆரம்பித்தாள்.

சாய்ந்தாடும் நாற்காலியில் அமர்ந்திருந்த வரதன், அவளையேதான் பார்த்துக்கொண்டிருந்தான். அப்படி அவள் தனக்கு அடங்கி, எந்த விசாரணையும் இல்லாமல் வீட்டை ஒழுங்குபடுத்தியது, அவனுடைய நான் என்கிற அகங்காரத்துக்கு திருப்தியாகத் தீனி போட்டதில் தனக்குள் புன்னகைத்துக்கொண்டான்.

கலிங்கராயனை அழிக்க வேண்டும், அவனை விட்டுவைக்கவே கூடாது என்கிற வெறி கொழுந்துவிட்டெரிந்த நாட்களில் நிலாவினியின் மீதும் அவனுக்கு ஒரு வகையான ஈர்ப்பு உண்டாகியிருந்தது.

தன்னுடைய கட்டுப்பாட்டிலிருந்த துறைமுகத்தையும் இழந்து, நிலாவினியும் அவனிடம் இருப்பதை அவனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அந்தப் பொறாமையில்தான் சூர்யாவைத் தனது திட்டத்திற்குள் இழுத்திருந்தான்.

ஆரம்பத்தில் நிலாவினியை நெருங்க முயன்றபோதே அவளுக்குப் பின்னால் இருந்த வலுவான பாதுகாப்பை அறிந்துகொண்டான். அதுவும் அவனுக்கு எரிச்சலைத்தான் உண்டாக்கிற்று. அந்தளவுக்கு அவள் அவனுக்கு முக்கியமானவளா? அவளையும் சேர்த்து அபகரித்துக் காட்டுகிறேன் என்கிற அகங்காரம்.

நிலாவினியைத் தன்னிடம் வரவழைப்பதற்குச் சூர்யாவையே பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கினான். சூர்யாவுடன் நிலாவினி செல்லும்போது வேறு யாரும் பாதுகாப்புக்கு வருவதில்லை. சூர்யா இருக்கிறான் என்கிற நம்பிக்கையில் கலிங்கராயனும் அதைப் பெரிதாகக் கண்டுகொண்டதில்லை.

அது அண்ணன் தங்கைக்கு மட்டுமல்லாமல் வரதனுக்கும் சேர்த்து வசதியாகிப் போனது. அப்படித்தான் அவர்களுக்கிடையிலான பழக்கம் மெல்லத் தொடங்கி, இறுதியில் தனியறை வரை சென்றிருந்தது.

இன்றுவரையிலும் அவளுடனான அந்த உறவு அவனுக்குக் கசந்ததில்லை. அவளுடைய நெருக்கம் இன்னுமே பிடித்துத்தான் இருந்தது.

அவனுடைய இடைவிடாத பார்வையை உணர்ந்தவள் திரும்பிப் பார்த்தாள். அவன் பார்வையில் என்ன கண்டாளோ, வேலைகளை விரைவாக முடித்துவிட்டு, பணியாட்களை அனுப்பிவிட்டு அவனிடம் சென்றாள்.

*****

இளையவர்கள் பெரியவர்களைப் பார்த்துத்தான் வளர்கிறார்கள். பெரியவர்கள் ஒவ்வொரு சூழ்நிலையையும் எப்படிக் கையாளுகிறார்கள், எப்படிப் பேசுகிறார்கள், எத்தகைய முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதையெல்லாம் அவர்களை அறியாமலேயே உள்வாங்கிக்கொள்கிறார்கள்.

அதுதான் மாறனுக்கு நடந்திருந்தது.

தன்னுடைய சித்தப்பா என்று சொல்லிக்கொள்ளும் மனிதன் ஒவ்வொரு விஷயத்தையும் எப்படிக் கையாளுவான், தனக்குப் பிடிக்காதவர்களை எப்படிப் பழிவாங்குவான், அவமானத்தையும் துரோகத்தையும் எப்படிப் பார்க்கிறான் என்பதையெல்லாம் சிறுவயதிலிருந்தே பார்த்து வளர்ந்திருந்தான்.

அப்போது அவற்றின் பின்னால் இருந்த தவறுகள் அவனுக்குப் புரியவில்லை. எதையும் அமைதியாகவும் நிதானமாகவும் அணுகும் தகப்பனை விடவும் எல்லோராலும் கவனிக்கப்பட்ட, மரியாதை செலுத்தப்பட்ட மாறனின் செயல்கள்தான் அவனுக்குள் அதிகமாய் ஆதிக்கம் செலுத்தியிருந்தன.

ஒருத்தி தனக்குத் துரோகம் செய்துவிட்டாள், ஊரறியத் தன்னை அவமானப்படுத்திவிட்டாள் என்று நினைத்த மாத்திரத்தில், அவனும் அதே வழியில் பழிவாங்கத் துணிந்திருந்தான்.

அந்த முடிவை எடுத்தபோது, தான் எத்தனை மோசமான செயலைச் செய்யத் துணிந்திருக்கிறோம் என்று அவனுக்குத் தெரியவில்லை.

ஆனால் இன்றைக்கு, அவன் தந்தை கேட்டதுபோல, வரதனின் ரத்தம் தனக்குள்ளும் ஓடுவதால்தான் இப்படியெல்லாம் நடந்துகொண்டோமா என்கிற எண்ணம் எழுந்ததும் மனம் மேலும் கசந்தது. அதுவும் இன்றைய நிலையில் சாக்கடைக்கு ஒப்பான ஒருவனின் குணம் தனக்குள்ளும் இருந்திருக்கிறது என்பதை அறவே வெறுத்தான்.

கப்பலில் நடந்த சம்பவங்களிலிருந்து அவனால் இன்னமும் வெளியே வர முடியவில்லை.

தன்னுடைய திருமண நாளை வாழ்க்கையின் மிக மோசமான, அவமானகரமான நாளாக நினைத்திருந்தான். ஆனால், அந்த நாளைவிடவும் மோசமானதொரு நாளாக அது மாறிப்போயிருந்தது.

ஒருவித வெறுப்பும் கசப்பும் அவனை ஆட்கொண்டிருந்தன. சே… இப்படி நடந்துகொண்டோம்மே, இந்தளவுக்கு இறங்கிப்போனோமே என்றெல்லாம் தன்னைத்தானே நொந்துகொண்டான்.

வெளியே யாருக்கும் தெரியாதுதான். ஆனால், அவனைக் கொல்லவும், கூனிக் குறுக வைக்கவும், மற்றவர்களை நிமிர்ந்து பார்க்க விடாமல் செய்யவும் குத்தும் அவன் மனச்சாட்ச்சி ஒன்றே போதுமாயிற்று.

error: Alert: Content selection is disabled!!