*****
மாறனை அந்தக் கோலத்தில் பார்த்ததிலிருந்து விஜயராஜனின் மனம் ஒருநிலைப்படவே இல்லை. அவன் செய்த காரியம் பெரும் தப்புத்தான். அதில் அவருக்கு எந்த மாற்றுக் கருத்தும் இருக்கவில்லை.
இன்னும் சொல்லப்போனால் தன் மகனா இந்தளவு தூரத்துக்குத் துணிந்தான் என்கிற அதிர்ச்சியும் வேதனையும் மிக ஆழமாய் அவரைத் தாக்கியிருந்தன.
ஆனால், அதிலேயே கிடந்தது உலலாமல் அந்தத் தவறைச் செய்யும் அளவுக்கு அவனுடைய மனநிலையை மாற்றியது எது என்றுதான் யோசித்தார். இனியும் அவன் அப்படி நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்றும் யோசித்தார்.
அவன் செய்த தவறை திரும்ப திரும்ப குத்திக்காட்டி, மேலும் மேலும் குற்றவாளியாக உணரச் செய்வதில் அவருக்கு விருப்பமில்லை.
அவனை தவறான கோணத்தில் ஒன்றை அணுகும் பழக்கத்திலிருந்து வெளியே கொண்டுவர வேண்டும். நடந்த தவறை உணர்ந்து திருந்துவதற்கான வாய்ப்பைக் கொடுக்க வேண்டும். அதற்கு முதலில் அவனைச் சூழ்ந்திருக்கும் தவறான தாக்கத்தை அகற்ற நினைத்தார்.
முள்ளில் சிக்கிய சேலையை அவசரப்பட்டு இழுத்தால் சேலைதான் கிழியும். முள்ளைச் சேதமில்லாமல் கவனமாகப் பிரித்தெடுக்க வேண்டும். அதுபோலத்தான் வரதன் என்ற மனிதனிடமிருந்து தன்னுடைய மகனைப் பிரித்தெடுக்க வேண்டும் என்று எண்ணினார்.
அதற்கு ஒரே வழி இரு குடும்பங்களும் முற்றாகப் பிரிந்துவிடுவதுதான். இதுவரை குடும்பம், பாரம்பரியம், சகோதர உறவு, சொத்து, கௌரவம் என்று எத்தனையோ விஷயங்களை மனத்தில் வைத்துக்கொண்டு பொறுத்துக்கொண்டிருந்தார்கள்.
இனி முடியாது. ஊர் உலகம் பேசும் என்று பார்த்தால் அவர் மகனின் வாழ்க்கை முற்றாக நாசமாகிவிடும்.
வருணாவை நினைக்கும்போது அவருக்குள் ஒருவிதமான உறுத்தல் உண்டாயிற்று. அவர்களாவது வரதனின் உறவு. அந்தப் பெண்ணும் அவள் குடும்பமும் எந்தப் பாவமும் செய்யாதவர்கள். அதுவும் வருணா.
மிகவும் குற்றவுணர்ச்சியில் இருந்தார். மகனை வெளியே கொண்டுவந்துவிட்டு அவர்களோடும் பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டார்.
இனி சொத்துகளைப் பிரித்துக்கொண்டு தனித்தனியாக வாழ்வோம் என்று சொல்லும் முடிவோடு வரதனைச் சந்திக்கப் புறப்பட்டார் விஜயராஜன்.
அங்கே வரதனோடு நிலாவினியும் இருப்பாள் என்று விஜயராஜன் எதிர்பார்க்கவில்லை. வரதனை சந்திப்பதையே வெறித்தபடி வந்தவர் அவர்.அப்படியிருக்க நிலாவினியையும் சேர்த்து பார்த்தால்?
தன்னை மீறி அவளை மிகுந்த வெறுப்புடன் நோக்கி முகத்தைச் சுழித்திருந்தார்.
இப்படித் திடீரென்று வந்து நிற்பார் என்று வரதனே எதிர்பார்க்கவில்லை என்கையில் நிலாவினி? பயந்துபோய் சட்டென்று எழுந்து நின்றவள், அவரின் கேவலமான பார்வையிலும் அவமதிப்பிலும் கூனிக்குறுகிப்போனாள்.
அடுத்து என்ன செய்வது என்று தெரியாது தடுமாறி, எழுந்து நின்றிருந்தாள் நிலாவினி.
“உன்னோட கதைக்கோணும்!” என்றார் விஜயராஜன் வரதனை வெறுப்புடன் நோக்கி.
வரதனுக்குமே விஜயராஜனின் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. மாறன் மூலம் தன்னுடைய இந்த வாழ்க்கை முறையை பற்றி அறிந்திருப்பார் என்று தெரியும். அதற்கே அவரை எதிர்கொள்ள முடியாமல் ஒளிந்துகொண்டிருந்தவன் அவன். அப்படியிருக்க இன்றைக்கு நேரிலும் பார்த்துவிட்டார்.
“வா…ங்க அண்ணா!” என்று தடுமாறினான்.
“சி மூடு வாய! நீயும் உன்ர சாக்கடை வாழ்க்கையும். உன்ர மூஞ்சில முழிக்கக் கூட எனக்கு விருப்பம் இல்ல. வேற வழி இல்லையே எண்டுதான் வந்தனான். கண்ட அசிங்கத்தை எல்லாம் எங்கயாவது அனுப்பிப்போட்டு வா. தனியா கதைக்கோணும்!” என்று சீறினார் அவர்.
ஏற்கெனவே அவரது பார்வையிலேயே கூனிக்குறுகிப் போயிருந்தவள், இப்போது அவர் சொன்னதைக் கேட்டுச் சபை நடுவே ஆடை கழன்றதை போன்று அசிங்கப்பட்டுப் போனாள். அவரை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அந்த வீட்டை விட்டே வெளியே ஓடி வந்திருந்தாள்.
விஜயராஜனுக்கு வரதனுடன் அமர்ந்து நிதானமாகப் பேசுவதற்குக்கூட விருப்பமில்லை. அவனைப் பார்க்க பார்க்க அவருக்குள் அருவருப்பும் ஆத்திரமும் அதிகரித்துக்கொண்டே இருந்தன.
அதில், “இவ்வளவு காலமும் வெளியில காட்டிக்கொள்ளாட்டியும், உள்ளுக்குள்ள நான் உன்னை விட்டு விலகித்தான் இருந்தனான். ஆனா, இண்டைக்கு என்ர மகனும் நீ போற பாதையில போகப் பாத்திருக்கிறான். இதுக்கு மேலயும் உன்னோட உறவு கொண்டாடுறதில எனக்கு விருப்பம் இல்ல. சொத்து பத்து எல்லாத்தையும் ரெண்டா பிரிக்கிறதுக்கு ஏற்பாடு செய். இனிமேல் எங்கட பேர்லயோ, இல்ல மாறன்ர பேர்லயோ உன்ர எந்தத் தொழிலும் இருக்கக் கூடாது. இருக்கிற சொத்தெல்லாத்தையும் சரிசமமாப் பிரிக்கோணும்.
“அப்படி இல்லையெண்டா, எங்கட பேர்ல இருக்கிற சொத்தெல்லாம் எங்களுக்குச் சொந்தம் எண்டு சொல்லிப்போட்டு நான் விலகிடுவன். சட்டப்படி மட்டுமல்ல, எங்கட பேர்ல இருக்கிற சொத்தெல்லாத்தையும் எங்கட கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்திடுவன். அதுக்குப் பிறகு அதில உன்னை கைவைக்க விடமாட்டன். விளங்குதோ? அதுக்குப் பிறகு உனக்கும் எனக்கும் ஓட்டும் இல்ல உறவும் இல்ல.” என்று வரதன் பேசுவதற்குக் கூட வாய்ப்பளிக்காமல் சொல்லி முடித்தவர், வந்த வேகத்திலேயே புறப்பட்டிருந்தார்.
வரதன் இதைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. தன்னைத் திட்டுவார், கேவலமாகப் பேசுவார், இனித் தன் முகத்திலேயே விழிக்க விரும்பாமல் ஒதுங்கிக்கொள்வார் என்றுதான் நினைத்திருந்தான்.
இது அவரின் மானப்பிரச்சனை. கூடப் பிறந்த சகோதரன் சொத்துப்பத்துக்கள், தொழில் எல்லாவற்றையும் பிரித்துக்கொண்டு ஒதுங்கிவிட்டார் என்றால் இவனின் என்னவோ இருக்கிறது என்றுதானே எல்லோரும் நினைப்பார்கள். அதுவும் அடுத்தடுத்து அவன் பெயரில் கறுப்புப் புள்ளிகள் விழுந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில்.
அதைவிட, அவனுடைய பல சொத்துகள் விஜயராஜன் குடும்பத்தினரின் பெயர்களில்தான் இருந்தன. தமையன் நேர்மையானவர். நியாயம் தவறாதவர். தன்னை ஒருபோதும் ஏமாற்ற மாட்டார் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை அவனுக்கு இருந்தது.
அதனால்தான் எந்தத் தயக்கமுமின்றி அவர்களுடைய பெயர்களில் சொத்துகளையும் தொழில்களையும் வைத்திருந்தான். அந்த நம்பிக்கையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அவற்றின் ஊடாகப் பல திருகுதாளங்களையும் அரங்கேற்றிக்கொண்டிருந்தான்.
ஆனால், இன்றைக்கு அதுவே தனக்குப் பெரும் சிக்கலாக வந்து நிற்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
சொத்துக்களைச் சரிபாதியாகப் பிரிப்பது என்பது வெறுமனே உறவை முறித்துக்கொள்வதோடு முடிந்துவிடும் விஷயமல்ல. அவனுடைய பலமான பிடிகளையே தளர்த்திவிடக்கூடிய ஒன்று.
இப்போதுதான் கலிங்கன் நகர்த்திய ஒவ்வொரு காயினதும் ஆழமும், அதன் பின்னால் ஒளிந்திருந்த பாரதூரமான விளைவுகளும் மெல்ல அவனுக்குப் புரியத் தொடங்கின.
தான் இத்தனை காலமும் பாதுகாப்பாக இருப்பதாக நம்பியிருந்த இடங்களிலெல்லாம் கலிங்கன் எப்படியெல்லாம் காய்களை நகர்த்தியிருக்கிறான் என்பதை உணர்ந்தபோது அவனுக்குள் ஆத்திரம் கொழுந்துவிட்டு எரிந்தது.

