கலிங்கனின் காவியம் 39.2

கலிங்கன் எதிலும் கலந்துகொள்ளவில்லை. அவளுடைய ஒவ்வொரு செயலையும் கவனித்துக்கொண்டு மட்டும் இருந்தான். தனக்கு எந்த அசௌகரியம் நேர்ந்துவிடக் கூடாது என்றுதான் அவள் அத்தனையையும் செய்கிறாள் என்று புரிந்தது.

அவளுடைய அந்தக் கரிசனையில் அவனுக்குள் ஏதோவொன்று மென்மையாக நெகிழ்ந்தது. ஒரு கட்டத்தில் அவள் தந்தையிடம் ஏதோ உற்சாகமாகப் பேசிக்கொண்டிருக்க, கலிங்கராயனின் பார்வை அவளிடமே நிலைத்திருந்தது.

திடீரென்று அவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டதும், என்னவென்று விழிகளால் வினவினாள்.

அவன் பதிலுக்குச் சிறிய புன்னகையை மட்டும் கொடுத்தான்.
அவளும் புரிந்தவளாகப் புன்னகைத்துவிட்டுத் தன் பேச்சைத் தொடர்ந்தாள்.

ஆனால், இதைக் கவனித்திருந்த மதியழகனின் உள்ளத்தில் ஒரு வலி. மகள் மனம் அவன் புறமாகச் சாய ஆரம்பித்துவிட்டதோ என்கிற சந்தேகம் வைத்தியசாலையிலேயே வந்திருந்தது. அதன் பிறகு அவளோடு கைப்பேசியில் பேசுகிற பொழுதுகளில் எல்லாம் இயல்பாய் அவள் தன் பேச்சில் அவனைக் கொண்டுவருவதையும் அவர் கவனிக்காமல் இல்லை.

இன்று அதையெல்லாம் நேரில் பார்க்கும்போது அவர் மனம் இன்னும் கனத்தது. மகள் அவனருகில் அமர்ந்திருக்கும் விதம், அவனுடைய மௌனத்தைக் கூடப் புரிந்துகொண்டு நடப்பது, அவ்வப்போது அவனைத் திரும்பிப் பார்த்துக்கொள்ளும் விதம் என எதுவுமே அவருடைய பார்வையிலிருந்து தப்பவில்லை.

அவர் மகள் இயல்பாகவே அன்பானவள். தன்னைச் சுற்றியிருப்பவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்காக இறங்கிச் செயற்படுபவள். ஆனால் இப்போது, அவளுடைய அந்த அக்கறை முழுவதும் கலிங்கராயனைச் சுற்றியே இருப்பதைப் பார்க்கும்போது அவருக்குள் ஏதோவொன்று வலித்தது.

அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள். அதில் அவருக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அந்த மகிழ்ச்சிக்குக் காரணமாக இருப்பவன் யார் என்பதுதான் மனத்தை உறுத்தியது.

கலிங்கராயனைப் பற்றி அவருக்குத் தெரிந்தவை மிகக் குறைவு. அவனுடைய உலகம் என்ன, அவன் பார்க்கும் தொழில் என்ன, அவனைச் சுற்றியிருப்பவர்கள் யார், அவனுடைய வாழ்க்கையில் எத்தனை ஆபத்துகள் இருக்கின்றன என்பதெல்லாம் அவருக்குத் தெரியாது. தெரிந்த சில விஷயங்களே அச்சத்தை ஏற்படுத்தப் போதுமானதாக இருந்தன.

மகளின் முகத்தைப் பார்த்தார். அவள் விழிகளில் ஆரம்ப நாள்களில் இருந்த கலக்கமோ தவிப்போ இல்லை. மாறாக நிம்மதியும், அவன் மீதான உரிமையையும் கண்டார்.

அவளிடம் எதையும் கேட்டு அவள் மகிழ்ச்சியைக் கலைக்கவும் அவருக்குத் தைரியம் இல்லை. ஆனால், அவள் விரும்பும் மனிதன் அவளுக்குப் பாதுகாப்பானவனாக இருக்க வேண்டும் என்றுதான் ஒரு தந்தையாக ஆசைப்பட்டார்.

கலிங்கராயன் மீது நம்பிக்கை வைக்க முடியுமா என்று தெரியவில்லை. அதே நேரம் அவனை வெறுத்து ஒதுக்கிவிடவும் முடியவில்லை. மகளின் பார்வையில் அவனுக்கென்று தனியிடம் உருவாகிவிட்டதை உணர்ந்தபோது, அவனிடம் தான் காட்டும் எதிர்ப்பு மகளைக் காயப்படுத்திவிடுமோ என்று பயந்தார்.

அதில் அவள் முகத்தில் தெரியும் மலர்ச்சியையே பார்த்திருந்தார். அவருக்கு அவள் முகத்தில் இருக்கும் அந்தப் புன்னகை என்றைக்கும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே விருப்பம்.

வருணாவினால் தந்தையையும் அவனையும் இயல்பாகப் பேச வைக்க முடியவில்லை. யாராவது ஒருவர் அவளுக்கு உதவிக்கு வந்தால் கூட வேறு. இது ருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்தாள் அவளும் என்ன செய்ய?

கடைசியில் அப்படி அவன் தன் வீட்டில் அந்நியனாக அமர்ந்திருப்பது பிடிக்காமல், “வாங்க, வீட்டைச் சுத்திக் காட்டுறன்.” என்று அழைத்தாள்.

அவன் எதுவும் பேசாமல் எழுந்துகொண்டான்.

கலிங்கனுக்கு அவளை விளங்காமல் இல்லை. என்ன, அவனுக்கு இதெல்லாம் பழக்கமில்லாதவை. ஆனால், அவளின் சிறிதான கவனிப்போ, அக்கறையோ அவனுக்குள் ஆழமாகப் பதிந்துகொண்டிருந்தன.

தன்னுடைய பொல்லாத உலகத்துக்குள் அவளை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு வந்தவன் அவன். இப்போது அவளுடைய உலகத்துக்குள் அவனையும் அழைத்து வந்து, அங்கே அவனுக்கான இடத்தைச் சங்கடமின்றி உருவாக்க முயன்றுகொண்டிருந்தாள் அவள்.

அவனை அழைத்துச் சென்று முதலில் வீட்டைச் சுற்றியிருந்த காணியைக் காட்டினாள். நல்ல விசாலமான காணி. அதில் தென்னை, மா, பலா என்று பயனுள்ள மரங்களும், பலவகையான செடிகளும் நிறைந்திருந்தன.

ஒவ்வொன்றையும் பற்றிச் சொல்லிக்கொண்டே நடந்தவளின் முகத்தில் அத்தனை பெருமை. அந்த மரங்களில் சிலவற்றைத் தானே நட்டதாகவும், சிலவற்றை அவள் சிறுமியாக இருந்தபோது தந்தை நட்டதாகவும் உற்சாகமாகச் சொல்லிக்கொண்டிருந்தாள்.

அவன் அதிகம் பேசவில்லை. அவள் காட்டியவற்றைப் பார்த்துக்கொண்டே அவளையும் கவனித்துக்கொண்டிருந்தான்.

வீட்டின் உள்ளே வரும் முன்னே முற்றத்தில் நின்று சுற்றுவட்டாரத்தைப் பார்வையால் அளந்தான். அந்த வீட்டையும், அதன் பாதுகாப்பைக் குறித்தும் அவன் ஆராய, “என்ன பார்வை?” என்றாள் அவள் முறைப்புடன்.

திரும்பி அவள் முகம் பார்த்தவன் முகத்தில் மெல்லிய முறுவல். விழிகள் இரண்டையும் சேர்த்துச் சிமிட்டிவிட்டு உள்ளே வந்தான்.

மூன்று அறைகள், விசாலமானதொரு வரவேற்பறை, சமையலறை, இரண்டு குளியலறைகள் எனச் சகல வசதிகளும் கொண்ட அழகானதொரு வீடு. ஆடம்பரங்கள் எதுவுமில்லாதபோதும், நேர்த்தியாகப் பராமரிக்கிறார்கள் என்று பார்க்கவே தெரிந்தது.

கடைசியாக அவனைத் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றாள்.

அறை அவள் விட்டுச் சென்றது போலவே இருந்தது. படுக்கை, மேசை, புத்தகங்கள், அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அவளுடைய பொருட்கள் என்று எதுவுமே மாறியிருக்கவில்லை.

ஒவ்வொன்றாகத் தொட்டுப் பார்த்தாள். அது பற்றின ஒரு கதையை அவனிடம் சொன்னாள். மேசையிலிருந்த ஒரு பேனையை எடுத்துப் பார்த்துப் புன்னகைத்தாள். அலமாரியைத் திறந்து தனக்குப் பிடித்தமான பொருட்களை வருடினாள்.

கலிங்கராயன் அவளைத் தொந்தரவு செய்யாமல், கைகளைக் கட்டிக்கொண்டு, அறையின் சுவரில் புஜத்தால் மட்டும் சாய்ந்து நின்று அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“இதுதான் என்ர அறை. எப்பிடி இருக்கு?” என்று ஆர்வமாய் வினவினாள்.

நன்றாக இருக்கிறது என்று சொல்வது போன்று தலையை அசைத்துவிட்டு, “இரவுக்கு நீயும் நானும் இஞ்சதான் தங்கப் போறோமா?” என்று கேட்டான் அவன்.

இதை அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவனும் அவளும் ஒரு அறையிலா? அவள் விழிகள் இரண்டும் வெளியே வந்துவிடும் போன்று விரிந்துபோயின.

அவன் சிரிப்பைக் கொடுப்புக்குள் மறைத்தபடி புருவங்களை உயர்த்தினான்.

அவள் கன்னங்கள் சட்டென்று சூடேறின. “இல்ல… இரவுக்கு நாங்க அங்கேயே போவம்” என்றாள் அவசரமாக.

அவனுடைய புருவங்கள் இன்னும் நன்றாக மேலே உயர்ந்தன. கூடவே, “உன்ர விருப்பம்!” என்று தோள்களைக் குலுக்கிவிட்டு, அவள் வாங்கி வைத்திருந்த பரிசுக் கோப்பைகளை எடுத்து ஆராய்ந்தான்.

ஆனால், அவன் உதட்டோரத்தில் ஒளிந்துகொண்டிருந்த புன்னகையும், அப்படிச் சிரிப்பை அடக்கியதால் உண்டான கண்ணோரச் சுருக்கங்களும் அவன் திட்டம் என்னவென்று சொல்லிவிட்டதில் அவன் கையில் ஒரு அடியைப் போட்டாள் வருணா.

அவ்வளவுதான். அதற்கு மேல் அடக்க முடியாமல் அவன் சிரித்துவிட்டான். அவன் சிரிப்பது அவளுக்குப் புதிதல்ல. ஆனால் இப்படி அவளை வம்பிழுத்து, அவளுடைய தடுமாற்றத்தை ரசித்து, எவ்விதத் தயக்கமுமின்றிச் சிரிக்கும் கலிங்கராயன் அவளுக்கு இன்னும் புதிதாகவே இருந்தான்.

ஒரு நொடி அவனை ரசித்துவிட்டு, “என்ன சிரிப்பு?” என்று பொய்யாக முறைத்தாள்.

அவன் பதில் சொல்லவில்லை. அவளுடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். அந்தச் சில நொடிகளில் அவளுடைய முகத்தில் மாறிமாறித் தோன்றிய வெட்கம், கோபம், சிரிப்பு என ஒவ்வொன்றையும் கண்களால் பருகிக்கொண்டிருந்தான்.

error: Alert: Content selection is disabled!!