“என்ர ஃபோன்ல என்ன…” என்று கேட்டுக்கொண்டு வந்தவள் சட்டென்று பேச்சை நிறுத்தினாள். வைத்தியசாலை என்று சத்தத்தை நிறுத்தி வைத்தது அப்போதுதான் நினைவில் வந்தது. உண்டுகொண்டிருந்த கையோடே எழுந்துபோய் கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள்.
புதிய இலக்கத்திலிருந்து செய்தி வந்துதான் இருந்தது. அதைத் திறந்து பார்க்கப் பயந்து, கலவரத்துடன் கலிங்கராயனைப் பார்த்தாள் நிலாவினி.
அவளுடைய முகத்திலிருந்த பதற்றத்தைக் கவனித்தவன், வேகமாக எழுந்து சென்று கையைக் கழுவிக்கொண்டு வந்தான். அவளுடைய கையிலிருந்த கைப்பேசியை வாங்கி, வந்திருந்த செய்தியைத் திறந்தான்.
“ராயா! எல்லாமே உன்ர கட்டுப்பாட்டுக்குக் கீழ இருக்கு எண்டு நினைச்சிருப்பியே. அப்படி இல்ல எண்டு காட்டின சாம்பிள்தான் நடந்தது.
சோ, நானும் லேசுப்பட்டவன் இல்லை எண்டு இப்ப உனக்கு விளங்கியிருக்கும். இத உன்ன மிரட்டவோ, பயம் காட்டவோ செய்யேல்ல. என்னாலயும் எல்லாம் முடியுமெண்டு காட்டியிருக்கிறன். உனக்குச் சமமான பலத்தோடதான் நானும் இருக்கிறன் எண்டு சொல்லியிருக்கிறன்.
இப்ப நான் சொல்லுறது ஒண்டுதான். எல்லாத்தையும் பேசித் தீர்க்கலாம். ஒரு மேசையில நீயும் நானும் மட்டும் இருந்து ஒரு முடிவுக்கு வரலாம். இந்தச் சண்டை, ரத்தம், காயம், அழிவு எதுவும் வேண்டாம். நீயும் வாழோணும். நானும் வாழோணும். அதுக்கு என்ன செய்யலாமெண்டு நீயும் நானுமா மட்டும் பேசி முடிவெடுக்கலாம்.
நீ சொல்லுற இடத்துக்கே நான் வாறன். ஆனா, நீ மட்டும்தான் வரோணும்.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு நீ வராட்டி, இது தொடரும். இது மிரட்டல் இல்லை. எச்சரிக்கை!”
செய்தியை வாசித்து முடித்த கலிங்கராயனின் முகம் கோபத்தில் இறுகியது. அந்த நிமிடமே வரதன் இருக்கும் இடத்துக்குச் சென்று, அவனை மண்ணோடு மண்ணாகச் சாய்த்துவிட்டு வரலாமா என்கிற வெறி அவனுக்குள் தலைதூக்கியது.
அவனுடைய ஆணவத்தை அடக்காமல் விடக்கூடாது என்கிற ஆத்திரத்தில் கைப்பேசியைச் சூர்யாவின் கட்டிலில் தூக்கிப் போட்டுவிட்டுப் போய் நாற்காலியில் பொத்தென்று அமர்ந்தான்.
அவனுடைய முகத்தில் தெரிந்த இறுக்கத்தைக் கண்ட சூர்யா, எதுவும் பேசாமல் கைப்பேசியை எட்டியெடுத்தான். செய்தியைத் திறந்து வாசித்தவனின் முகமும் மெல்ல மாறியது.
அவ்வளவு நேரமும் கலிங்கராயனின் முகத்தையே பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருந்த நிலாவினி, சூர்யாவின் கையிலிருந்த கைப்பேசியை எட்டிப் பார்த்தாள். செய்தியை முழுவதுமாக வாசித்தவளின் முகம் வெளிறியது. மெல்லத் திரும்பிக் கலிங்கராயனைப் பார்த்தாள்.
இரண்டு கைகளையும் தொடைகளில் ஊன்றி, விரல்களைக் கோத்துக்கொண்டு தரையை வெறித்துப் பார்த்தபடி இருந்தான் கலிங்கன். அவனுடைய மார்பு ஆவேசத்திலும் ஆத்திரத்திலும் வேகவேகமாக ஏறி இறங்கியது.
அதுவே அவனுக்குள் கொந்தளித்துக்கொண்டிருந்த கோபத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.
அவளுக்கு இந்த வாழ்க்கை முறையில் விருப்பம் இல்லைதான். அதற்கென்று கலிங்கராயன் சென்று வரதனோடு பேசுவதிலும் உடன்பாடில்லை. இது ஏதோ ஒரு வகையில் அவளை அச்சுறுத்தியது.
அதே நேரத்தில் கலிங்கன் பேச்சுவார்த்தைக்குச் செல்ல மறுத்தால், இந்தப் பகை இன்னும் என்னவெல்லாம் செய்யுமோ என்கிற பயமும் அவளுக்குள் ஊடுருவிற்று.
அந்த அறைக்குள் கனத்த மௌனம். நிலாவினிக்கு அதைக் கலைக்கும் தைரியம் மருந்துக்கும் இல்லை. கலவரமும் கலக்கமுமாகத் தமையனை நோக்கினாள்.
“டேய் மச்சான்!” என்றான் சூர்யா.
கொஞ்ச நேரம் இருந்த நிலை மாறாமல் இருந்துவிட்டுத் தலையை மட்டும் உயர்த்தி அவனைப் பார்த்தான் ராயன்.
“என்ன முடிவெடுத்திருக்கிறாய்?”
“அவன் சொல்லி நாங்க ஒரு முடிவை எடுக்கிறதா?” என்று திருப்பிக் கேட்டான் கலிங்கன்
மீண்டும் ஒரு அமைதி. “பேசிப் பாத்தா என்ன?” சூர்யாவே மீண்டும் அதைக் கலைத்தான்.
“பயந்திட்டியா மச்சான்?” உதட்டோரம் வளைய வினவினான் காளிங்கன்.
“பயமா?” என்று கேட்டுத் சூர்யா மறுப்பாக தலையை அசைத்தான். “உன்னைத் தனியாவும் விடமாட்டன். அது எவ்வளவு பெரிய ரகசிய பேச்சு வார்த்தையா இருந்தாலும் உன்னோட நானும் இருப்பன்.” என்றான் உறுதியான குரலில்.
“அதுக்கு முதல் நான் போகோணும்.”
“போனாத்தான் என்ன?”
முகத்தை வேகமாகத் திருப்பி தன் மறுப்பை சொன்னான் கலிங்கன்.
“அண்ணா, என்ன கதைக்கிறாய்? அந்த ஆள் என்ன பிளான்ல கூப்பிடுது எண்டு உனக்குத் தெரியுமா? அவர் சொல்லுறதுதான் சரி. அப்பிடி தனியா எல்லாம் போய் சந்திக்க வேண்டாம். நானும் இதுக்கு ஓம் பட மாட்டன்.” பயத்தில் படபடத்தாள் நிலாவினி.
“நீ முதல் கொஞ்ச நேரம் வெளில போயிட்டு வா நிலா.”
“அண்ணா!”
“போ நிலா!”
தமையனின் கண்டிப்பில் அவனை முறைத்துவிட்டு கோபத்தோடு வெளியேறினாள் அவள்.
“மச்சான் எண்ணெய் பார்!”
அவன் நிமிர்ந்து அமர்ந்து பார்க்க, “ உன்னால இதுல இருந்து மொத்தமா வெளில போக ஏலுமா?” என்று கேட்டான் சூர்யா.
இத்தனை காலமும் இந்தக் கேள்வியை நிலாதான் கேட்பாள். இன்று சூர்யாவும் கேட்க, ராயன் பதில் சொல்லாமல் புருவங்களைச் சுருக்கிப் பார்த்தான்.
“போக ஏலாதுதானே? அது எங்கட கையில இல்லை. நாங்க நினைச்சாக்கூட இதிலிருந்த வெளியேற ஏலாது. அப்பிடியே நாங்க வெளியேறினாலும் இந்த உலகம் எங்களை விடாது. இதுதான் நிதர்சனம்.”
அவனே சொல்லி முடிக்கட்டும் என்று பார்த்திருந்தான் ராயன்.
“அதனால இது எல்லாம் சுமூகமாய் போனா எல்லாருக்கும் நல்லம் தானே? ஒருக்கா போயிட்டுத்தான் வருவோமே! நாங்க போறதால அவன் சொல்லுறதுக்கெல்லாம் தலையாட்டப் போறம் எண்டோ, அவனுக்குப் பணிஞ்சு போறோம் எண்டோ அர்த்தம் இல்லையே. அவன் என்ன பிளான்ல இருக்கிறான் எண்டு போனாதானே தெரிய வரும்? அதுக்கேத்த மாதிரி நாங்களும் பிளான் பண்ணலாமே! ஒரு முயற்சி செஞ்சு பார்க்கிறதுல தப்பில்லையே? நாங்களா அவனைத் தேடிப் போகலையே. அவன்தானே எங்களைக் கூப்பிடுறான்!”
ராயனுக்கு எல்லாம் புரிந்தாலும், தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி, சேதங்களை ஏற்படுத்தி, தங்களை நெருக்கடிக்குள் தள்ளிவிட்டு, கடைசியில் பேச்சுவார்த்தைக்கு ஏன் அழைக்கிறான் என்கிற கேள்வி, இன்னுமே அவனுக்குள் முள்ளாக நின்று உறுத்திக்கொண்டே நின்றது.
“எங்கள விடு, மச்சான்! எங்கள நம்பியிருக்கிற இந்த மக்களைப் பற்றியாவது யோசிச்சுப் பாரு. இவ்வளவு காயங்கள், இவ்வளவு சண்டைகள், இவ்வளவு சச்சரவுகள் எண்டு அவேக்கு நிம்மதி எண்டு ஒண்டு இருக்காடா? அவேய பாக்கிறம், பாதுகாப்பா வச்சிருக்கிறம், அவேக்குப் பாதுகாப்பா இருக்கிறம் எண்டு நினைச்சுக்கொண்டு உண்மையாவே அவேய எந்த நேரமும் ஆபத்திலதான் வச்சிருக்கோம். இதை நீ யோசிச்சுப் பார்த்திருக்கியா?”
அவன் கேட்டதும் ராயனின் முகம் இறுகியது.
“எங்களை நம்பி இருக்கிறவேய, எங்களுக்காக உயிரைக் குடுக்க கூட தயாரா இருக்கிறவேய, நாங்க நினைச்ச நேரத்தில எல்லாம் ஆபத்துக்குக்க தள்ளுறது எந்த வகையில நியாயம்?” என்றவனின் கேள்வியில் இருந்த இருக்கையில் இருந்து சட்டென்று எழுந்துவிட்டான் ராயன்.
“நாங்க அவேய பாதுகாக்கிறம் எண்டு சொல்லிப்போட்டு, எங்கட பகைக்கும் பழிவாங்குற வெறிக்கும் நடுவில அவங்களையும் இழுத்துவிட்டு, ஆபத்தில வச்சிருக்கிறமடா. அதைக் கொஞ்சம் யோசி.”
“யோசி யோசி எண்டா இத்திணை வருசமா இல்லாம இப்ப என்னடா புதுசா?” எண்டு சீறினான் கலிங்கன்.
அவனால் அவன் சொன்னவற்றிலிருந்த உண்மை குத்திய குத்தை பொறுக்க முடியாமல் போயிற்று.
“இத்தின காலமும் உன்னை மாதிரி இதுக்கு இப்பிடி ஒரு வழி எண்டு நான் யோசிச்சதே இல்ல. அவனா கேட்ட பிறகுதான் யோசிக்கிறன். நாங்க என்ன நொடிஞ்சுபோயா அவனிட்ட போறுமா? உள்ளதை சொல்லப்போனா வெளில பெரிய இவன் மாதிரி கதைச்சாலும் அவன்தான் பயந்துபோய் பேச்சு வார்த்தைக்கு வாறான்.”
உண்மைதான். இத்தனை காலத்தில் வரதனோடு பேச்சு வார்த்தை, சமாதானம் என்றெல்லாம் கலிங்கனுமே யோசித்ததில்லைதான். ஆனால் இன்றைக்கு…
“உனக்கு விருப்பமில்லாட்டி சொல்லு நான் மட்டும் போறன்.”
சடாரென்று திரும்பி முறைத்தவன், “நானே போறன்!” என்றான்.
“மச்சான்!” என்று ஆனந்தமாய் அதிர்ந்தவன், “நீ மட்டுமில்ல. நானும் நீயும் போறம்!” என்றான் வேகமாய்.
“ஏன், நான் மட்டும் போனா என்ன? அவன் என்னை ஏதும் செய்திடுவான் எண்டு நினைக்கிறியா?”
“லூசா நீ? நீ அவனை ஏதும் செய்து, அது பெரிய பிரச்சினை ஆகக்கூடாது எண்டு பாக்கிறன்.”
“அதெல்லாம் ஆகாது. நான் போறன்.” கலிங்கனுமே வரதனின் என்ன திட்டத்தில் இருக்கிறான் என்று அறிந்துகொண்டால் ஆயிற்று எனும் முடிவுக்கு வந்திருந்தான்.
“இல்ல மச்சான். இதுக்கு நான் கடைசி வந்தாலும் ஓம் பட மாட்டன்.” சூர்யாவின் பிடிவாதமான மறுப்பு கலிங்கனிடம் ஈடுபடவேயில்லை.
“நான் மட்டும்தான் போவன். பேச்சு முடிஞ்சுது!” என்றுவிட்டு அங்கிருந்து வெளியேறினான் கலிங்கன்.

