அத்தியாயம் 40
துறைமுகத்திலிருந்து அரை மணி நேரப் பயணத் தூரத்தில் பெரும் பரப்பளவிலான நிலப்பகுதியில் கலிங்கராயனின் கோடவுன் அமைந்திருந்தது.
உயரமான இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்ட சுற்றுவேலி, நுழைவாயிலில் பொருத்தப்பட்டிருந்த கனமான இரும்புக் கதவுகள், அவற்றுக்கு அருகில் காவலுக்கென அமைக்கப்பட்டிருந்த சிறிய அறை என்று அந்த இடமே பெரும் கட்டுப்பாட்டுடன் காணப்பட்டது.
கலிங்கனின் ரேஞ்ச் ரோவரைக் கண்டதும் ஓடி வந்து இரும்புக் கதவினை வேகமாகத் திறந்துவிட்டான் காவலாளி.
உள்ளே நுழைந்ததும் பரந்த சிமெண்ட் தரையுடன் கூடிய திறந்த வெளி. ஒருபுறம் பெரிய கூரையுடன் அமைந்திருந்த கிடங்குக் கட்டடம். அதன் உயரமான நீண்ட கதவுகள் திறந்திருந்தன.
உள்ளே வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரப்பெட்டிகள், அட்டைப் பெட்டிகள், சாக்கு மூட்டைகள் எனப் பலவகையான சரக்குகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
சில ஆட்கள் சரக்குகளை எண்ணிப் பட்டியலிட்டுக்கொண்டிருக்க, வேறு சிலர் அவற்றைத் தேவைக்கேற்பப் பிரித்து வாகனங்களில் ஏற்றுவதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
ஒரு பக்கத்தில் கனரகப் பொருட்களைத் தூக்குவதற்கான இயந்திரம் இயங்கிக்கொண்டிருந்தது. அதன் சத்தத்தோடு ஆட்களின் குரல்களும் வாகனங்களின் இரைச்சலும் கலந்து, அந்தப் பகுதியே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.
முழுக் கிடங்கின் செயல்பாடுகளையும் கண்காணிக்கக் கூடிய வகையில் கிடங்கின் ஒரு முனையில் அலுவலகத்துக்கு என்று கண்ணாடிச் சுவர்களுடன் கூடிய தனியறை அமைந்திருந்தது.
கலிங்கராயனோடு காரிலிருந்து இறங்கிய வருணா, அந்தப் பரந்த இடத்தையும் அங்கே நடந்துகொண்டிருந்த வேலைகளையும் நாளா புறமும் பார்வையைச் சுழற்றிப் பார்த்தாள்.
அன்று அவனுடைய அலுவலகத்துக்குப் போனதன் விளைவாக அவன் தொழில் பற்றித் தெரிந்திருந்தாலும் அதன் செயல்பாடுகளை இவ்வளவு விரிவாக நேரில் பார்த்ததில்லை.
இத்தனை பெரிய இடம், இத்தனை ஆட்கள், ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான ஏற்பாடுகள் என்று அவளது பார்வை வியப்புடன் அங்குமிங்கும் நகர்ந்தது.
அவனைக் கண்டதும் சிலர் மரியாதையுடன் விலகி வழிவிட்டனர். இன்னும் சிலர் தங்களது வேலைகளைப் பற்றிய விவரங்களை அவனிடம் வந்து தெரிவித்தனர். அவன் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டு மீண்டும் தங்களது வேலையைத் தொடர்ந்தனர்.
அவனுடைய அந்த உலகத்தைப் பார்த்த வருணாவுக்கு அவன் இதற்குள் மிக மிக ஆழமாக வேரூன்றியிருக்கிறான் என்று புரிந்துபோயிற்று.
அவன் யாரிடமோ சில ஆவணங்களைக் கையில் வைத்துப் பேசிக்கொண்டிருந்தான். பிறகு அதைக் குறித்து யாருடனோ கைப்பேசியில் பேசினான். பின்னர் அங்கே இருந்த ஒரு லொறியின் பின் பகுதியைத் திறந்து, மிக இலாவகமாகத் துள்ளி அதனுள் ஏறி, அதற்குள் இருந்த பொருள்களையும் தன் கையில் இருந்த ஆவணத்தையும் வைத்துச் சரி பார்த்தான்.
அனைத்தையும் முடித்துக்கொண்டு வந்து, அவளை அழைத்துக்கொண்டு போய் அந்த லொறியின் கதவைத் திறந்து, “ஏறு!” என்றான்.
அவளால் நம்பவே முடியவில்லை. சற்று நேரத்திற்கு முன்பு வந்து, இரண்டு நாட்களுக்கு ஏற்ற உடைகளை எடுத்துக்கொண்டு புறப்படு என்று அவன் சொன்னபோது, எங்கே போகிறோம் என்று கூட அவள் கேட்கவில்லை. வெளி உலகத்தைப் பார்க்கப்போகிறோம் என்கிற உற்சாகத்திலேயே வேகமாகத் தயாராகி வந்திருந்தாள்.
அன்றுபோல் இன்றும் ஒரு கப்பல் பயணம் போலும் என்று அவள் எண்ணிக்கொண்டிருக்க, அவனானால் லொறியைக் காட்டுகிறான்.
நம்ப முடியாமல் லொறியையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தாள். “இதுலயா போகப்போறம்?” என்றாள் இன்னுமே விலகாத ஆச்சரியத்துடன்.
அவளின் ஆச்சர்யத்தை உள்ளூர ரசித்தபடி, “ஏறு வரு!” என்றான் மீண்டும்.
அவன் கையை இறுகப் பற்றிக்கொண்டு, படிகளை ஒவ்வொன்றாகக் கடந்து மேலே ஏறினாள். உயரமான கேபினுக்குள் நுழைந்ததும் அவள் விழிகள் மீண்டும் விரிந்தன.
ஓட்டுநர் இருக்கை, அதற்குப் பக்கத்தில் பயணிக்கான இருக்கை, முன்புறத்தின் பெரிய கண்ணாடி, அதன் வழி தெரிந்த காட்சிகள், பெரிய பக்கக் கண்ணாடிகள் என எல்லாவற்றையும் ஆர்வமாகப் பார்த்தாள்.
கேபினுக்குப் பின்னால் ஓட்டுநர் ஓய்வெடுப்பதற்கான தனி இடமும் இருந்தது.
அவள் பக்கக் கதவைச் சாற்றிவிட்டு வந்த காலிங்கராயன், மறுபக்கம் ஏறி அமர்ந்து அதன் இயந்திரத்தை இயக்கினான். லொறியின் எஞ்சின் ஆழமான உறுமலுடன் உயிர்பெற்றது. கேபின் லேசாக அதிர்ந்தது. அந்த அதிர்வில் வருணா தன்னையறியாமல் அவன் கையை இறுக்கிப் பற்றிக்கொண்டாள்.
அவளைப் பார்த்துச் முறுவலித்துவிட்டு, அவள் புறமாகச் சரிந்து, அவனே அவளின் இருக்கைப் பட்டியை அணிவித்துவிட்டான். வருணா இதை எதிர்பார்க்கவில்லை. எதிர்பாராமல் உண்டான அவன் நெருக்கத்தில் ஒருகணம் அவளுக்கு மூச்சடைத்துப்போயிற்று.
இருந்த பரபரப்பான மனநிலையில் இருக்கைப் பாட்டியை அணிய மறந்திருந்தாள். அதற்கென்று அவனே போடுவானா? இலேசாகச் சூடாகிவிட்ட முகத்தோடு அவனை முறைக்க முயன்றாள்.
உதட்டுக்குள் சிரிப்பை ஒளித்துக்கொண்டு, என்னவென்று புருவங்களை உயர்த்தினான் அவன்.
“எனக்கும் ஒண்டுக்கு ரெண்டு கை இருக்கு.”
“தேவைப்படும். பக்குவமா வச்சிரு.” என்றுவிட்டு லொறியை இலேசாக நகர்த்த ஆரம்பித்தான் கலிங்கன்.
கோடவுனின் பெரிய வாயிலைக் கடந்து லொறி பிரதான சாலையில் ஏறியது. அப்போதுதான் வருணாவுக்கு உண்மையாகவே தாங்கள் ஒரு நீண்ட பயணத்திற்குப் புறப்பட்டிருக்கிறோம் என்று புரிய, “எங்க போறம் கலிங்கா?” என்று அப்போதுதான் கேட்டாள்.
அது அவன் மீது அவள் கொண்ட நம்பிக்கையின் வெளிப்பாடாயிற்றே. பாதையில் கவனம் இருக்க, ஒரு கையால் அவள் தலையைப் பிடித்து ஆட்டிவிட்டு, “கண்டிக்கு.” என்றான் அவன்.
“கண்டிக்கா?” என்று அதற்கும் வாயைப் பிளந்தாள் அவள்.
இப்போது பொருள் கொண்டுபோகின்ற இதே வியாபாரியின் சரக்குகளை ஏற்றிச் செல்வதற்குத் தயாராக இருந்த லொறிகளைத்தான் வரதனின் ஆட்கள் அவனுடைய கிடங்குக்குள் புகுந்து தீக்கிரையாக்கியிருந்தார்கள். அந்தச் சம்பவத்தில் லொறி மட்டுமல்லாமல், ஏற்றிச் செல்லத் தயாராக இருந்த சரக்குகளும் அழிந்துபோயிருந்தன.
அதற்கான முழு நஷ்டத்தையும் கலிங்கராயன் ஈடுசெய்திருந்தான். ஆனாலும் அவர் இழந்த பணத்தைத் திரும்பக் கொடுத்துவிட்டதால் மட்டுமே எல்லாப் பிரச்சினைகளும் முடிந்துவிடாதே.
அவர் பல இடங்களிலிருந்து ஆர்டர்களைப் பெற்று, அதற்கான பொருள்களைத்தான் கப்பலில் வரவழைத்திருந்தார். அது எரிந்துபோனதில் அவரும் அவருடைய வாடிக்கையாளர்களிடம் அதுவரை பெற்றிருந்த நம்பிக்கையையும் நற்பெயரையும் இழந்திருந்தார்.
கலிங்கனிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டாலும், உரிய நேரத்தில் சரக்குகள் கிடைக்காததால் ஏற்பட்ட அதிருப்தியை அவரால் அவ்வளவு எளிதில் சரிசெய்ய முடியவில்லை.
மீண்டும் அதே போன்றதொரு சம்பவம் நடந்துவிட்டால், கலிங்கராயன் கொடுக்கும் நஷ்டஈட்டை வைத்துக்கொண்டு கூட அவரால் வியாபாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது.
அதனால் இந்த முறை ஆர்டரை அவனிடம் ஒப்படைக்க மிகவுமே தயங்கினார். ஆனால், கலிங்கராயன் விடவில்லை. எக்காரணம் கொண்டும் எந்த வியாபாரத்தையும் இழந்துவிட அவன் தயாராயில்லை.
பலமுறை அவரோடு பேசினான். இத்தனை வருட காலத்தில் இதற்கு முதல் இப்படி நேர்ந்திருக்கிறதா என்று கேட்டான். இதைத் தவிர்த்து அவன் வேலையில் அதிருப்தி இருந்திருக்கிறதா என்று யோசிக்க வைத்தான்.
அப்படிப் பலமுறை பேசிய பிறகே, அப்போதும் மிகுந்த தயக்கத்துக்கு மத்தியில்தான் மீண்டும் சம்மதித்திருந்தார்.
கலிங்கராயனும் இந்த முறை எந்தவிதமான இடர்பாடும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். அதில் எந்தப் பொறுப்பையும் பிறர் கையில் ஒப்படைக்காமல் அவனே புறப்பட்டிருந்தான்.
லொறி நகரத்தைத் தாண்டி நெடுஞ்சாலையில் பயணிக்கத் தொடங்கியது. காரில் பயணிப்பதற்கும் லொறியில் பயணிப்பதற்கும் உண்டான வித்தியாசத்தை உள்வாங்கி ஆச்சரியப்பட்டாள் வருணா.
உயரமான இருக்கையில் அமர்ந்திருந்ததால் தொலைவு வரையிலான சாலை, அதில் முன்னால் செல்லும் வாகனங்கள் என்று எல்லாம் தெளிவாகத் தெரிந்தன. தொலைவில் விரிந்திருந்த மலைத்தொடர்கள், சாலையோர மரங்கள், சிறிய கடைகள், பேருந்து நிலையங்கள் என ஒவ்வொன்றாகப் பின்னோக்கி நகர்ந்தன.
“எப்பிடி இருக்கு?” என்று பேச்சுக் கொடுத்தான் அவன்.
“வித்தியாசமா, என்னவோ நாங்க மேலயும் மற்ற வாகனங்கள் எல்லாம் கீழ மாதிரியும் இருக்கு.” என்றவள், “நீங்களும் நல்ல வடிவா ஓடுறீங்க!” என்று அவனையும் பாராட்டினாள்.
அவன் உதடுகள் மெல்லிய முறுவலில் விரிந்தன.
உண்மையிலேயே அவ்வளவு பெரிய லொறியை அவன் செலுத்தும் விதம் அவளுக்குள் வியப்பை ஏற்படுத்தியது. சாதார வாகனங்களை ஓட்டுவது வேறு. இது வேறாயிற்றே.
வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதிலும், வளைவுகளில் திருப்புவதிலும், முன்னால் செல்லும் வாகனங்களுக்கேற்ப இடைவெளியைப் பேணுவதிலும் அவனிடம் அத்தனை நேர்த்தி.
இத்தனை நேர்த்தியும் ஒழுங்கும் கொண்டவன் எப்படி இப்படியொரு ஆபத்துகள் நிறைந்த பாதைக்குள் நுழைந்தான் என்கிற கேள்வி அவளுக்கு உண்டாயிற்று.
அவனுடைய சிறு வயது அதற்குக் காரணமாகிப்போனாலும் எப்படி அவனால் அந்த உலகத்தினுள்ளேயே இருக்க முடிகிறது?
அவள் அறிந்த வரையில் அவன் நேர்மையானவன். உண்மையான அன்பு செலுத்துகிறவன். தன்னோடு இருக்கிறவர்களைத் தனக்கு நிகராகப் பார்த்துக்கொள்கிறவன். எப்போதுமே எதையும் அரைகுறையாகச் செய்ய மாட்டான். நிதானம், பொறுமை, கூடவே ஒரு லயத்தில் இயங்கும் வேகம் அவனிடம் நிரந்தரமாகவே இருக்கும்.
பிறகு எப்படி ஆபத்து நிறைந்த, அநியாயங்கள் நிறைந்த உலகில் அவனால் இருக்க முடிகிறது?
அவனைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மெல்ல அவளுக்குள் முளைத்தது.

