கலிங்கனின் காவியம் 40.2

அப்போது சாலையோரமாக இருந்த இளநீர்க் கடை ஒன்றைக் கண்டுவிட்டு, “கலிங்கா, இளநீ குடிப்பமா? இந்த வாகனச் சூட்டுக்கு அதுதான் பெஸ்ட் மருந்து!” என்றாள் உற்சாகமாக.

அவளைத் திரும்பிப் பார்த்தவன் மறுப்பேதும் சொல்லவில்லை. அடுத்து வந்த இளநீர்க் கடைக்கு அருகில் லொறியை மெதுவாகச் செலுத்தி, வீதியோரத்தில் மற்ற வாகனங்களின் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் நிறுத்தினான்.

இருவருமாகச் சென்று ஆளுக்கொரு இளநீரை வாங்கிப் பருகினர்.

அப்போது அங்கே ஒரு வேன் வந்து நின்றது. அதிலிருந்து நான்கைந்து இளைஞர்கள் இறங்கினார்கள். வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று அவர்களது உடைகளும் தோற்றமும் காட்டின. கூடவே, அவர்களது பேச்சிலும் நடத்தையிலும் ஒருவிதத் திமிர் தெரிந்தது.

இவர்கள் நிற்பதைப் பொருட்டிலேயே கொள்ளாமல், அந்தச் சிறிய கடையைத் தங்களுக்குச் சொந்தமான இடம்போல ஆக்கிரமித்துக்கொண்டார்கள்.

அந்த முதியவரிடம் இளநீர்களைக் கேட்டு வாங்கிப் பருகியபடியே இளநீர் இனிப்பாகவே இல்லையாம் என்று குறை சொன்னார்கள். முதியவர் ஏதோ சமாதானம் சொல்ல முயன்றார். அதைக் காதில் வாங்காமல் அவரை இன்னுமின்னும் வம்பிழுத்துவிட்டு, அவர் கேட்டதை விடவும் குறைவாகப் பணத்தைக் கொடுத்துவிட்டு, தங்களுக்குள் பேசிச் சிரித்தபடி புறப்பட்டார்கள்.

அதற்காகவே காத்திருந்தாற்போல், “என்னவோ பெரிய ரவுடீஸ் மாதிரி காட்டிப்போட்டுப் போகினம். ஆனா உண்மையான ரவுடி பக்கத்தில நிக்கிறார் எண்டு அவேக்குத் தெரியேல்ல.” என்று சிரித்தாள் அவள்.

அவனுக்கும் சிரிப்புத்தான். அதைத் தன் உதடுகளுக்குள்ளேயே ஒளித்துக்கொண்டு, அவள் தலையில் இலேசாகத் தட்டிவிட்டு, அந்த ஐயா கேட்ட பணத்திற்கும் மேலே கொடுத்தான்.

“ஆனா ஒண்டு கலிங்கா. உங்களைப் பார்த்தா ரவுடி மாதிரித் தெரியவே இல்ல. பாக்க நல்லாருக்கிறீங்க.” அவனுடைய நேர்த்தியான தோற்றத்தைப் பார்வையால் அளந்தபடி சொன்னாள் அவள்.

அவன் பார்வை ஒருமுறை தன்னை அளவிடும் அவளைத் தொட்டு வந்தது. அவ்வளவுதான். வேறு எதுவும் சொல்லவில்லை. லொறி மீண்டும் கண்டியை நோக்கித் தனது பயணத்தைத் தொடர்ந்தது.

சற்று நேரத்தில் சாலையின் மீது கவனத்தைப் பதித்தபடியே, “பிடிச்சிருக்குப் போல.” என்றான் அவன்.

அவள் திரும்பிப் பார்க்க, “நல்லாருக்கிறன் எண்டு சொன்னியே.” என்றான் அவன்.

ஆச்சரியத்தோடு திரும்பி அவனைப் பார்த்தாள் வருணா. அவள் உதட்டில் விரிந்த முறுவல்.

உண்மையில் அவன் அழகன்தான். கம்பீரமான தோற்றம், நேரான நாசி, கூர்மை நிறைந்த விழிகள், அடர்த்தியான புருவங்கள், கருமையான கேசம் எனக் கவர்ச்சிக்குக் குறைவில்லாத தோற்றம் அவனுடையது. கூடவே, அன்று அவள் கண்ட அவன் வெற்றுடம்பு வேறு நினைவில் வந்துவிடவும் உதட்டைப் பற்றியபடி பார்வையை அகற்றிக்கொண்டாள் வருணா.

திரும்பி பார்த்த கலிங்கன், அவள் முகத்திலேயே தன் பார்வையைச் சில கணங்களுக்குப் படியவிட்டான்.

அவள் கன்னக் கதுப்பு சூடேறுவது தெரிய, அவள் அவள் மடியில் கிடந்த கரத்தை எடுத்து, தன் உதடுகளை அதில் பதித்தான்.

வருணாவின் உடலெங்கும் மெல்லிய சிலிர்ப்புப் பரவியது. எதிர்பாராத அந்த நெருக்கத்தில் முகம் சிவந்தவளால் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாது போயிற்று.

விரல்களை மெல்ல அசைத்து அவனது பிடியிலிருந்து கையை விடுவிக்க நினைத்தாள். அவன் விடுவதாக இல்லை. அவனது ஆண்மையும் அந்தக் கையணைப்பும் அவளுக்குள் இனம்புரியாத ஒரு இனிய தடுமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தன.

அதன் பிறகும் முடிந்தபோதெல்லாம் அவள் கையைத் தன்னிடமே வைத்துக்கொண்டான் அவன். அவளும் அதை விலக்கிக்கொள்ள முயலவில்லை. இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால், அவனது கரத்திற்குள் அடங்கியிருந்த அவளது விரல்களும், அவற்றை விடாமல் பற்றியிருந்த அவனது விரல்களும், வார்த்தைகளால் சொல்ல முடியாத நெருக்கத்தை மெல்ல மெல்ல அவர்களுக்குள் விதைத்துக்கொண்டிருந்தன.

அவளின் தேவைகளைக் கவனிக்க அவன் மறக்கவேயில்லை. அவனே பாதுகாப்பாக அழைத்துச் சென்று அழைத்து வந்தான். வயிற்றையும் வாட விடவில்லை. வாகனம் ஓட்ட வேண்டுமென்பதில் தான் அளவாகச் சாபபிட்டாலும் அவளை நன்றாகக் கவனித்துக்கொண்டான்.

இரவு மெல்லக் கவியத் தொடங்கியது. கண்டியை நோக்கிய சாலையில் இருள் படர்ந்திருந்தது. சில பகுதிகளில் மலைகள் இருபுறமும் உயர்ந்து நின்றன. சாலையோர விளக்குகள் ஆங்காங்கே மட்டும் தென்பட்டன.

இதில் பனிமூட்டம் சூழ்ந்த மலைகளின் விளிம்புகள், செங்குத்தான வளைவுகள் எல்லாம் அவளுக்கு ஒருவித அச்சத்துடன் கூடிய சிலிர்ப்பைத் தந்தன. அதுவும் அந்த ஒடுக்கமான வீதியில் எதிரிலும் வாகனம் வருவதைக் கண்டால் அவளுக்கு இதயம் வந்து தொண்டைக் குழிக்குள் நின்று துடித்தது.

ராயன் வாகனத்தை மிகுந்த கவனத்துடன்தான் செலுத்தினான். ஆனாலும் அவளுக்கு நடுங்கியது. தன்னை மீறிய பயத்தில் அவன் புறமாக ஒண்டி அமர்ந்தாள். ஒருமுறை அவளைத் திரும்பி பார்த்தவன் ஒன்றும் சொல்லவில்லை.

இன்னும் இரண்டு மணி நேரப் பயணம் இருந்தது. அதை அவள் தாங்குவாள் என்கிற நம்பிக்கை அவனுக்கு இல்லை.

வேறு வழியற்று பாதுகாப்பான நிறுத்துமிடம் ஒன்றில் லொறியை நிறுத்தியதும் வருணா நிம்மதியாக மூச்சுவிட்டாள்.

“இருட்டு எண்டபடியா உனக்கு அப்பிடி இருக்கு. மற்றும்படி பயமில்லை.” என்று அவளைத் தன் கைவளைவுக்குள் கொண்டு வந்து, நெற்றி முத்தம் பதித்தபோது, அவள் விலகவில்லை.

இரவு உணவுக்காக முன்பே வாங்கி வைத்திருந்த எளிய உணவை இருவரும் பகிர்ந்துகொண்டனர். பின்னால் இருந்த ஓய்வுப் பகுதியில் இரவைக் கழிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.

“இஞ்சதான் படுக்கப்போறமா?” மெல்லிய அதிர்ச்சியுடன் கேட்டாள்.

“நீ அதில படு.” என்றான் அவன்.

“நீங்க?”

“எனக்கு இதே போதும்!” என்று பின்னால் நன்றாகச் சரித்துத் திரும்பியிருந்த இருக்கையைக் காட்டினான்.

அவன் மட்டுமாக வந்தால் நேரே போக வேண்டிய இடத்துக்குப் போய், சரக்குகளை இறக்கிவிட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பான். இப்போது அவனைச் சுற்றி எதிரிகள் அதிகரித்திருக்கும் இந்த நேரத்தில் லொறியை இங்கே விட்டுவிட்டு, அறை எடுத்துத் தங்க அவன் தயாராயில்லை.

அதே நேரத்தில் அவள் பயத்தையும் அவனால் அலட்சியப்படுத்த முடியாது. அதில் அவளை அங்கே படுக்கச் சொல்லிவிட்டு, அணிந்திருந்த பெனியனைக் கழற்றிவிட்டு, இலகுவாய் அந்த இருக்கையில் சரிந்துகொண்டான்.

நாள் முழுக்க அந்தப் பெரிய வாகனத்தைச் செலுத்தி வந்தவனுக்கு அது முறையான ஓய்வு இல்லையே. அதே நேரத்தில் தன்னோடு வந்து படு என்றா சொல்ல முடியும்?

“நான் அங்க…” என்று ஆரம்பித்தவளிடம் ஒன்றும் சொல்லாமல் எழுந்து வந்து, அவள் இரண்டு தோள்களையும் பற்றிச் சரித்து, அந்தப் படுக்கையில் படுக்க வைத்தான்.

“குட்நைட்!” அவள் கன்னம் தட்டி சொல்லிவிட்டு, போர்வையையும் அவளுக்குப் போர்த்திவிட்டான்.

அந்த மலைநாட்டின் குளிர் கேபினுக்குள் மெல்ல மெல்லப் பரவியது. வருணா போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தாள். ஆனால், புதிய இடம் என்பதாலும், வெளியிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த வாகனங்களின் சத்தத்தாலும் அவளுக்கு உறக்கம் வரவில்லை.

கைகளை தலைக்கு மேலே கோர்த்து, அந்தக் கைகளில் முகத்தைச் சாய்த்து கண்களை மூடியிருந்தன ராயன். புடைத்திருந்த புஜங்களையும் அதன் இறுக்கத்தையும் தன்னை மீறிக் கவனித்துக்கொண்டிருந்தாள் வருணா.

குளிர் இன்னும் அதிகரித்தது. அவளுக்கு அந்தப் போர்வை போதவில்லை. அவன் மட்டும் எப்படி மேலாடை கூட இல்லாமல் இருக்கிறான் என்று யோசித்தாள். அவள் நடுங்குவதை உணர்ந்த ராயன், அவளையே பார்த்துவிட்டு அவள் போர்வைக்குள் தானும் நுழைந்தான்.

அவள் அதிர்ந்து பார்க்க, “உனக்குக் குளிருது எல்லா?” என்று காரணம் சொன்னான்.

‘அதுக்கு?’ என்ற எண்ணம் அவள் தொண்டைக்குழிக்குள் வந்து நின்றது. போர்வையை அவர்கள் இருவருக்குமாகப் போர்த்திக்கொண்டு, அவளை அணைக்கப்போனவன், “தொடலாமா? இல்ல, இன்னுமே தொட்டா கொல்லுவியா?” என்றான் கண்கள் சிரிப்பில் சுருங்க.

“கொல்லுவன்.” அவனைப் பாராமல் முணுமுணுத்தாள் அவள்.

அவன் இலேசாகத் தலையைப் பின்னால் சரித்துச் சிரித்தான். “வரும்மா, தாராளமா கொல்லு. கொல்லுறது நீயா இருந்தா சாகிறதுக்கு நான் ரெடி!” என்று அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டான் அவன்.

அவள் உள்ளம் ஒரு கணம் அதிர்ந்துபோயிற்று. அது அவன் அணைப்பினாலா, இல்லை, சொன்ன வார்த்தைகளாலா என்று தெரியவில்லை. அதிர்ந்து அவள் அவனையே பார்க்க, “படுடா!” என்றான் அவள் நெற்றியில் முத்தமிட்டு.

பார்வையை தழைத்தபோது அவன் மார்பின் அடர் சுருள் முடிகள் முகத்தில் உரசின. அவளுக்குச் சுவாசம் தடைப்பட்டுப்போயிற்று.

கடலலைகள் பிரட்டிப்போடுவதை போன்று அவளுள் என்னவோ பெரிதாகப் புரண்டன. அவன் முடிகள் அடர்ந்த மார்பு, அது தரும் கதகதப்பு, லயத்தோடு கேட்ட இதயத்தின் துடிப்பு, அவன் வருடல் அத்தனையும் என்னவோ செய்தன.

“ஹீட்டர் இருக்கு. போடலாம். என்ன, இது சின்ன இடம். நாளைக்குக் கண்ணத் திறக்கவே ஏலாத அளவுக்குக் கண் எரியும்.” என்று விளக்கம் சொன்னான் அவன்.

அதே பரவாயில்லையே என்றிருந்தது அவளுக்கு. அந்தளவில் அவன் அண்மை அவளுக்குள் பெரும் பிரளயங்களை நிகழ்த்தின.

ராயன் அவளுடைய தலையைத் தன் மார்பில் சாய்த்துக்கொண்டு, போர்வையை இருவருக்கும் சேர்த்து இன்னும் நன்றாக இழுத்துவிட்டான்.

அவளுடைய கூந்தலை மெதுவாக வருடிக்கொடுத்தான். அந்தத் தொடுதலில் இருந்த மென்மை அவளுடைய கண்களை மூடச் செய்தது. அவன் தேகத்தின் கதகதப்பும் சேர, ஆழ்ந்த உறக்கத்துக்குப் போனாள் வருணா.

error: Alert: Content selection is disabled!!