அத்தியாயம் 41
மெல்ல மெல்ல விடியத் துவங்கியிருந்தது. மலைகளின் மீது படர்ந்திருந்த பனிமூட்டம் இன்னும் விலகியிருக்கவில்லை. இரவு முழுவதும் பெய்த பனியின் குளிர் லொறியின் கண்ணாடிகளிலும் படிந்திருந்தது. வெளியே எங்கோ பறவைகளின் மெல்லிய ஒலிகள் கேட்கத் துவங்கியிருந்தன.
வருணாவுக்கு ஏற்கனவே விழிப்பு வந்துவிட்டது. ஆனால், எழுந்துகொள்ளத் தோன்றவில்லை. கனமான போர்வையைக் காட்டிலும் கதகதப்பான அவன் கைகளுக்குள் அடங்கி, அவன் மார்பில் முகம் புதைத்தபடி அத்தனை இதமாகப் படுத்திருந்தாள்.
என்னவோ காலம் காலமாகப் பழகிய அணைப்புப் போலிருந்தது அது. பல வருடங்களாக அவனுடைய மார்பில்தான் உறங்கிப் பழகியவள் போன்றதொரு நெருக்கம். அவனுடைய கரங்களுக்குள் கிடைத்த பாதுகாப்பும், உடல் முழுவதும் பரவியிருந்த கதகதப்பும் அவளுக்குப் புதிதாகவே தெரியவில்லை.
அதேநேரம், முந்தைய இரவின் நினைவுகள் ஒவ்வொன்றாக மனத்துக்குள் வந்து மோதின. அவன் பார்வை, தந்த முத்தங்கள், அவளைத் தாங்கிப் பிடித்த கைகள், அவை தந்த வருடல்கள், அவளை இன்னும் நெருக்கமாக அணைத்துக்கொண்ட விதம் என்று நினைக்க நினைக்க அவள் கன்னங்கள் சூடேறின. அதுவும் அவள் கையில் என்ன இருக்கிறதோ? அதற்கு அவன் பதித்த முத்தங்களை அவளால் எண்ணவே முடியாது.
என்னவோ குரங்கு குட்டியைக் காவுவது போன்று, திரும்பிப் படுத்தாலும் அவளையும் தன் அணைப்பில் வைத்துக்கொண்டேதான் திரும்பிப் படுத்தான். அதன் பிறகும் கூட, குழந்தை விழித்துவிடக் கூடாது என்று தட்டிக்கொடுக்கும் அன்னையைப் போன்று, அவள் முதுகையும் தலையையும் அவன் வருடிக்கொடுத்த பாங்கில் அவள் இதயம் பாகாகக் கரைந்தேபோயிற்று.
அவன் நினைத்திருந்தால் வேறு விதமாக நெருக்கத்தைக் காட்டியிருக்கலாம். அனால், நொடி கூட அப்படி உணர வைக்கவில்லை. அவளே அவனோடு இன்னும் ஒன்றிக்கொண்டு படுக்குமளவுக்கு மாற்றியிருந்தான். உண்மையிலேயே நேற்றைய இரவுக்குப் பிறகு அவனை இன்னுமின்னும் பிடித்தது.
சந்தர்ப்பங்கள் அமையாதவரை நல்லவர்களாக இருப்பதற்கும், சந்தர்ப்பம் அமைந்தும் நல்லவர்களாக இருப்பதற்கும் வித்தியாசம் உண்டே. அவன் இரண்டாம் வகை.
அவனுடைய முகத்தைப் பார்க்க ஆசைப்பட்டாள். அதேநேரம் அவனுடைய கண்களைச் சந்திக்க ஏனோ பெரும் தயக்கம். அவன் பார்வை எப்படி அவளைப் புரட்டிப் போடும் என்று அவளுக்குத் தெரியுமே. அது தந்த இதயத்தோடு அவன் மார்பில் முகத்தை இன்னும் கொஞ்சம் புதைத்துக்கொண்டாள்.
அந்தச் சிறிய அசைவிலேயே உறக்கத்திலிருந்து மெல்ல விழித்தான் கலிங்கன். அவள் விழித்திருப்பதும், எழுந்துகொள்ளாமல் தன் அணைப்புக்குள் அடங்கிக் கிடப்பதும் அவனுக்குப் புரிந்தன.
அவனுடைய இதழ்களில் சுகமான முறுவல் ஒன்று அரும்பிற்று. விடிந்ததும் விழுந்தடித்துக்கொண்டு விலகியிருந்தால் என்றால் அது வேறு. விழித்ததும் விலகாமல் இருக்கிறாள் என்றால், அது சொல்லும் செய்தி வேறாயிற்றே. அவன் உதட்டோர முறுவல் இன்னும் அழகாய் விரிந்துவிட, அவளுடைய தலைமுடியை மெதுவாகக் கோதினான்.
அவன் விழித்துவிட்டான்! அவளுக்குள் ஒரு மின்னல் ஓடியது.
அவளுடைய செல்லச் சோம்பல் மொத்தமாக ஓடிப்போயிற்று. அவனை நிமிர்ந்து பார்க்கத் துணிவில்லை.
அவள் தயக்கத்தை ரசித்த கலிங்கன், அவளோடு சேர்ந்து போர்வைக்குள்ளேயே சரிந்து படுத்து, சுகமாக அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டான்.
“குட் மோர்னிங் வரு!” உறக்கம் முற்றிலும் கரையாத அவனுடைய கரகரப்பான குரல், அவள் தேகம் எங்கும் புகுந்து என்னவோ செய்தது. அதற்குமேல் அப்படியே இருக்க முடியாமல் மெதுவாக அவனுடைய கைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டாள்.
எழுந்து அமர்ந்து அவன் பக்கம் திரும்பாமல் தன் ஆடையைச் சரிசெய்துகொண்டாள். கலைந்திருந்த கேசத்தை விரல்களால் ஒதுக்கி, மீண்டும் ஒழுங்குபடுத்தினாள். அவளின் ஒவ்வொரு அசைவையும் போர்வைக்குள் இருந்தபடியே பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.
அவள் இன்னுமே தன் பார்வையைச் சந்திக்காமல் தவிப்பதைப் பார்க்க அவனுக்குள் ஏதோ ஒரு குறும்பான மகிழ்ச்சி.
சிறிது நேரத்தில் இருவரும் கீழே இறங்கி, அருகிலிருந்த தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து, காலைக் கடன்களை முடித்து, குளித்து, வேறு உடைகளுக்கும் மாறிக்கொண்டனர். அருகிலிருந்த உணவகத்தில் காலை உணவையும் முடித்தார்கள்.
இத்தனைக்கு மத்தியிலும் அவசியம் தாண்டி இருவரும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால், பேசவே தேவையில்லாத இணக்கமும் நெருக்கமும் இருவருக்குமே வந்திருந்தன. ஒருவர் பார்வையில் மற்றவர் நடந்தார். அதைக் காட்டிலும் அவளையே மொய்க்கும் அவன் பார்வை அவளை நிமிரவே விடவில்லை. திடீரென்று தனக்கு என்னாயிற்று என்று குழம்பித் தவித்தாள் வருணா.
குளிருக்கு அணியவென்று அவள் கொண்டு வந்திருந்த மேலங்கி, அந்தக் காலை நேரத்துக் கண்டியின் குளிரைச் சமாளிக்க மாட்டேன் என்று நிற்க, தன்னுடையதைக் கழற்றி அன்று போலவே இன்றும் அவளுக்கு அணிவித்துவிட்டான் அவன்.
அவளுக்கு முகம் சூடாகிப்போயிற்று. அதுவும் கண்டியின் குளிர் அவள் முகத்தின் சிவப்பை இன்னுமே அப்பட்டமாகக் காட்டிவிட, கலிங்கனால் அவளிடமிருந்து பார்வையை அகற்றவே முடியவில்லை. தாங்க முடியாதவன் போல் ஒருமுறை அவளை இறுக்கமாக அணைத்து விடுவித்தான். வருணாவுக்கு முகத்தை நிமிர்த்தவே முடியாது போயிற்று.
“உங்…களுக்கு?” அவள் தட்டுத் தடுமாறிக் கேட்க, “வாங்குவம் வா!” என்று புதிதாக ஒன்றை வாங்கி அவன் அணிந்துகொண்டான். அவனுடையது அவளுக்கே சொந்தமாயிற்று.
மீண்டும் அவர்களின் பயணம் ஆரம்பித்தது. மலைப்பாதையில் லொறி மெதுவாக நகர்ந்தது. இரவில் அவளைப் பயமுறுத்திய அதே வளைவுகள் இப்போது பகல் வெளிச்சத்தில் வேறொரு அழகுடன் காட்சியளித்தன.
பனித்துளிகள் படிந்த மரங்களும், மலைச்சரிவுகளில் விரிந்திருந்த தேயிலைத் தோட்டங்களும், தொலைவில் மேகங்களுக்குள் மறைந்து நின்ற மலைத்தொடர்களும் அவளுடைய பார்வையை ஈர்த்தன.
வெளிப்புறக் காட்சிகள் அத்தனை அழகாக இருந்தபோதிலும், அவளுடைய எண்ணங்கள் முழுவதும் அருகில் அமர்ந்து, மிக லாவகமாக லொறியைச் செலுத்திக்கொண்டிருந்தவனிடமே நிலைத்திருந்தன.
முந்தைய நாள் இரவில் அவர்களுக்குள் எந்த எல்லையும் கடந்திருக்கவில்லை. ஏன், நெற்றி முத்தம் தாண்டி அவன் கன்னத்தில் கூட இதழ் பாதிக்கவில்லை. ஆனாலுமே அதுவரை அவர்களுக்கிடையில் இருந்த நெருக்கத்தின் எல்லை தலைகீழாக மாறியிருந்தது.
அது அவன் பார்வையில், சிறு அணைப்பில், மெல்லிய விரல் பற்றலில் என்று அத்தனையிலும் தெரிந்தது. இதுவரையில் அவளிடம் காட்டிய அக்கறையோடு இப்போது உரிமையும் மென்மையும் சேர்ந்து கொண்டதைப்போலத் தோன்றியது.
அவனைப் பார்க்கக் கூடாது என்று தனக்குள் சொல்லிக்கொண்டாலும், பார்வை மீண்டும் மீண்டும் அவனிடமே ஓடிற்று. உள்ளத்தால் அவளை மீறி அவனைத் தேடினாள். அவன் விரல் பற்றல் தருகிற அந்தக் கதகதப்பும் நெருக்கமும் இன்னும் வேண்டுமாயிற்று.
அவன் ஏதாவது பேசினால் அதில் ஒரு மகிழ்ச்சி. அவளைத் திரும்பிப் பார்த்தால் அதில் ஒரு தடுமாற்றம். அவனுக்கு அருகில் இருப்பதே ஒருவிதமான இனிய போதையைத் தந்தது.
ஒரு வழியாகக் சரக்குகளை இறக்க வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அந்த மனிதர் நேரிலேயே வந்து அவனை அணைத்து வரவேற்றார்.
அவனுக்கு விழுந்த கத்திக்குத்துகள் பற்றி அவரும் அறிந்திருந்தார். அதில் அவன் நலனை விசாரித்துக்கொண்டவரின் பார்வை வருணா புறம் சென்று வருவதைக் கண்டு, “என்ர வைஃப்.” என்று அறிமுகம் செய்தான்.
அவனின் அந்த அறிமுகம் அவளுக்குள் சில்லென்று இறங்கிற்று.
மிகுந்த ஆச்சரியமாகப் பார்த்து அவளோடும் இரண்டு வார்த்தை நல்லபடியாகப் பேசினார் மனிதர். பகல் உணவுக்கு வீட்டுக்கு வரும்படி உண்மையான அன்புடன் அழைத்தார்.
மரியாதையாக மறுத்துவிட்டுப் புறப்பட்டார்கள். அவருக்கு அவர் பொருட்கள் எந்தச் சேதமும் இல்லாமல் வந்து சேர்ந்துவிட்டதில் மிகுந்த மகிழ்ச்சி. இனிக் காலத்துக்கும் அவனோடே தன் வியாபாரத்தை வைத்துக்கொள்வதில் ஆர்வமாக இருப்பதாகவும் சொன்னார்.

