அத்தியாயம் 42
அதற்குப் பிறகும் பயணத்தின்போது அவ்வப்போது அவள் தன் கண்களைத் துடைத்துக்கொள்வதை லொறியைச் செலுத்திக்கொண்டிருந்தாலும் கவனித்துக்கொண்டுதான் இருந்தான் கலிங்கன்.
அவளுடைய மனம் இன்னமும் தன்னுடைய கடந்த காலத்திலேயே சிக்கிக்கொண்டிருப்பது அவனுக்குப் புரிந்தது.
அவள் மடியில் கிடந்த கரத்தைப் பற்றித் தன் கரத்துக்குள் அடக்கிக்கொண்டான்.
அதுவரை கொஞ்சமாவது தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தவள் இன்னும் உடைந்தாள். அவன் விரல்களைக் கோத்துக்கொண்ட விதமும், அவ்வப்போது அவள் கையில் பதித்த முத்தங்களும் அவளைத் தேற்றுவதற்குப் பதிலாக இன்னுமின்னும் உடைத்தன.
என்னவோ அவன் மார்பில் சாய்ந்து, ஒரு மூச்சு அழுது தீர்த்துவிட்டால் பரவாயில்லையோ என்கிற அளவில் இருந்தாள்.
லொறி ஓரிடத்தில் வந்து நிற்கவும் சுற்றுப்புறத்தைக் கவனித்துவிட்டுக் கேள்வியாக அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“இறங்கு.” என்று சொல்லிவிட்டு அவன் இறங்கி வந்து அவள் பக்கத்துக் கதவைத் திறந்து பிடித்துக்கொண்டு நின்றான்.
“இது என்ன இடம் கலிங்கா?” என்று கேட்டுக்கொண்டே இறங்கினாள் வருணா.
அவளுடைய பார்வை அங்கே சுற்றிச் சுழன்றது. முன்னால் விரிந்திருந்த இடத்தையும், அதைச் சுற்றியிருந்த மலைத்தொடர்களையும், அங்கிருந்த சூழலையும் வியப்புடன் பார்த்தாள். அங்கிருந்த பெரிய பதாகை ஒன்றில் அந்த அருவியின் பெயர் போடப்பட்டிருப்பதைக் கண்டதும் அவள் விழிகள் விரிந்துபோயின.
“நீர்வீழ்ச்சி பாக்கப்போறமா?” என்றாள் துள்ளல் குரலில்.
அவள் முகத்தைப் பார்த்தான் கலிங்கன். அந்த விழிகளில் சற்று முன்பு வரை தென்பட்ட கலக்கமோ கண்ணீரோ இல்லை. அப்போதுதான் அவன் உள்ளம் ஆசுவாசமாயிற்று. “வா!” என்று அவளை அழைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
அந்த மலைப்பாதை எளிதானதாக இல்லை. கரடுமுரடான மேடு பள்ளங்கள் நிறைந்த பாதையில் ஏறுவதும் இறங்குவதுமாகவே அவர்களின் பயணம் தொடர்ந்தது.
போகப்போகப் பாதை ஒடுங்கி, கருங்கற்கள் நிறைந்த ஏற்றமாக மாறியது. சில இடங்களில் மண் பாதை, வேறு சில இடங்களில் மண்ணும் கற்களும் கலந்த கரடுமுரடான வழி என மாறி மாறி வந்தது.
ஏற ஏற ஒருபுறம் ஆழமான பள்ளத்தாக்கும், அதன் அடர்ந்த பசுமையும், மறுபுறம் உயர்ந்து நின்ற மலைத்தொடர்களும் கண்களுக்கு விருந்தளித்தன.
பெரிதாக மக்கள் நடமாட்டம் இருக்கவில்லை. எப்போதாவது ஓரிருவர் எதிரில் இறங்கி வந்தார்கள். வேறு சிலர் இவர்களைக் கடந்து முன்னால் சென்றுகொண்டிருந்தார்கள்.
சுற்றிலும் அமைதி. இதமான காற்று முகத்தில் மோத, மரங்களுக்கிடையே பறவைகளின் மெல்லிய கீச்சொலி கேட்டுக்கொண்டிருந்தது. ஆங்காங்கே மரக்கிளைகளில் தாவி விளையாடும் குரங்குகளையும் பார்க்க முடிந்தது.
திடீரெனத் திட்டமிட்ட பயணம் என்பதால், இருவருமே மலையேற்றத்திற்குத் தேவையான எந்தவொரு தயாரிப்புடனும் வரவில்லை. வழியிலிருந்த ஒரு சிறிய தேநீர்க்கடையில் கலிங்கன் ஒரு முதுகுப்பையை வாங்கினான்.
அதற்குள் சில தண்ணீர் பொட்டில்களையும் பிஸ்கட் பாக்கெட்டுகளையும் வாங்கிக் போட்டுக்கொண்டு, மீண்டும் நடக்க ஆரம்பித்தார்கள்.
பாதையின் சிரமம் காரணமாக அவள் ஏற முடியாமல் தடுமாறிய தருணங்களிலெல்லாம், கலிங்கன் மிகக் கவனமாக அவளை அழைத்துச் சென்றான்.
அவள் சற்று இளைப்பாறும் வரை, இடுப்பில் கைகளைக் கட்டிக்கொண்டு, சுற்றிலும் பரந்து விரிந்திருந்த அந்தப் பசுமை அடர்ந்த காடையும் மலையையும் ரசித்தபடி நின்றான்.
ஆரம்பத்தில் ஆர்வத்துடன் நடந்தவள், நேரம் செல்ல செல்ல நடையின் வேகத்தைக் குறைக்க ஆரம்பித்தாள். பாதை ஏறிக்கொண்டே போனதே தவிர, நீர்வீழ்ச்சி வந்தபாடில்லை.
கடைசியில் முடியாமல், “இன்னும் எவ்வளவு தூரம் நடக்கோணும் கலிங்கா?” என்று கேட்டுக்கொண்டு கருங்கற் பாதியிலேயே அமர்ந்துவிட்டாள் வருணா.
அவளுடைய முகம் சிவந்து போயிருந்தது. மூச்சு வேறு நன்றாக வாங்கியது. கால்களும் சோர்ந்து போயிருந்தன.
அவளுடைய நிலையைப் பார்த்தவன் முதுகுப்பையைக் கழற்றிக் கீழே வைத்துவிட்டு வந்து, அவளருகில் அமர்ந்தான். கையில் இருந்த தண்ணீர் போத்தலின் மூடியைக் கழற்றிவிட்டு அவளிடம் கொடுத்தான். அவள் பருகிவிட்டுத் தந்ததை வாங்கித் தான் பருகினான். காற்றுக்குத் தலைமுடியெல்லாம் கலைந்து, களைத்துப்போயிருந்தவளைக் கண்டு பாவமாயிற்று.
“ஏலாம இருக்கா?” என்றான் கலைந்திருந்த முடிகளை அவள் காதோரம் ஒதுக்கி விட்டபடி.
“நடிக்காதீங்க கள்ளன்! இவள் சும்மாவே இருந்து வர, நான் மட்டும் லொறி ஓடிக்கொண்டிருக்கிறன் எண்டுற கடுப்பிலதானே கூட்டிக்கொண்டு வந்தனீங்க?” என்று பொய்யாக முறைத்தாள் அவள்.
அந்தப் படிகளில் கால்களை நீட்டி, பின்னால் கைகளை ஊன்றிக்கொண்டு அமர்ந்திருந்த அவன், அப்படித்தான் என்று சொல்வது போன்று, ஒற்றைக் கண்ணைச் சிமிட்டிவிட்டுச் சிரித்தான்.
“அடப்பாவி! அப்பிடி இல்லை எண்டு சொல்லுவீங்க எண்டு பாத்தா, என்ன செய்றீங்க நீங்க!” என்று அவன் தோளில் ஒரு அடியைப் போட்டாள் அவள்.
அவன் நிமிர்ந்து அமர்ந்துகொண்டு அந்தக் கரம் பற்றி உதடுகளில் ஒற்றி எடுத்தான் அவன்.
அவளுக்கு இப்போதெல்லாம் அவனின் அந்தச் செய்கை பழகிப்போயிருந்தது. அவனையும் அவன் தன் கையில் முத்தமிட்டதையும் பார்த்துவிட்டுப் பேசாமல் இருந்தாள்.
வீசிய காற்றும், அதற்கு அசைந்தாடிய மரங்களிலும் மனத்திற்கு இதம் சேர்க்க, “இன்னும் கொஞ்ச நேரம் இருந்திட்டு ஏறுவம் கலிங்கா!” என்ற வருணா, அவன் புஜத்திலேயே சாய்ந்துகொண்டாள்.
அவன் தடுக்கவில்லை. அவள் தோள்களைச் சுற்றிக் கையைப் போட்டு, அவளைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டான்.
ஒருவழியாக இருவரும் மலையின் உச்சியை அடைந்தனர்.
அங்கே காட்சியளித்த அருவி, பிரமாண்டத்தின் உச்சமாக இருந்தது.
மலையின் உயரத்தில் உருவாகி, பாறைகளில் மோதி, சீறிப்பாய்ந்து கீழே விழும் அந்த அருவியும், அது மோதி நிற்கும் பிரமாண்டக் கற்களும், அதன்பின் சலசலவென ஓடும் தெளிந்த நீரும் பார்க்க பார்க்கத் தெவிட்டாத அழகைக் கொண்டிருந்தன.
சத்தமாக வீசிய காற்றும், நீர்வீழ்ச்சியின் தூறலும் அவளுக்குள் ஒருவிதப் பரவசத்தைத் தந்தன. அவள் அங்கிருந்த ஒரு பெரிய பாறையின் மீது அமர்ந்து, நீர்வீழ்ச்சியின் அந்த நீளமான பயணத்தை மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
கலிங்கனும் வந்து அவள் அருகில் அமர்ந்தான்.
“சூப்பரா இருக்கு என்ன?” என்றவள் புகைப்படம் எடுக்க எண்ணித் தன் கைப்பேசியைத் தேடினாள். அப்போதுதான் அதை லொறியிலேயே விட்டுவிட்டது புரிந்தது.
“கலிங்கா, ஃபோன் கொண்டுவந்தனீங்களா?”
அவன் தன் ஜீன்ஸ் பொக்கெட்டில் இருந்து எடுத்துக் கொடுத்தான். அவன் புறமாய்ச் சரிந்து, அவனையும் திரையில் அடக்கி, சுயமியைக் கிளுக்கிவிட்டு, அதை எடுத்துப் பார்த்தாள். அவன் சிரிக்கவே இல்லை. அதைக் கண்டு கடுப்பானவள், “என்ன இது முறைச்சுக்கொண்டு பாக்கிறீங்க? சிரிக்கோணும்.” என்று திரும்பவும் எடுக்கப்போனவள் திரும்பி அவனைப் பார்த்தாள்.
அவனுக்கு அப்படிப் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த அனுபவங்கள் மிக்க குறைவு. அவன் அவளைப் பார்க்க, “சிரிங்க கலிங்கா!” என்றாள் அதட்டலாய். “வரு!” என்றவனுக்கு அப்படி எப்படிச் சும்மா சிரிப்பது என்று தெரியவில்லை. அவள் இன்னும் நன்றாகத் திரும்பி அமர்ந்து அவனை குறைக்கவும், “வரும்மா, வரேல்லையடா!” என்று சிரித்தான் அவன். அவசரமாக அந்த முகத்தோடு அடுத்த சுயமியைக் கிளுக்கியிருந்தாள் வருணா.
அதை எடுத்துப் பார்த்தவள் முகத்தில் மிகுந்த திருப்தி. அவன் முகத்தை மட்டும் திரையில் கொண்டுவந்து பார்த்துவிட்டு, அதை அவனிடமும் காட்டி, “எவ்வளவு நல்லாருக்குப் பாருங்க. இது இருக்கே, நாங்க வரேக்க மரத்தில பாத்தமே, அந்த முகம். இதுதான் ஒழுங்கான மனுச முகம்.” என்றாள் முதல் படத்தையும் அடுத்த படத்தையும் காட்டி.

