அவன் முகத்தில் அவள் கேலியை ரசிக்கும் முறுவல். அவளை இலேசாய் அணைத்து உச்சி முகர்ந்துவிட்டு, “முதல் படம்தான் இத்தனை காலமும் நான். ரெண்டாவது நீ வந்த பிறகான நான்.” என்றான் அவன்.
வருணாவுக்குப் பேச முடியாமல் போயிற்று. அவனைத் திரும்பித் தவிப்புடன் பார்த்தாள்.
அவனோ இரண்டு கண்களையும் சேர்த்துச் சிமிட்டிவிட்டு, ஒரு கையைத் தலைக்கு அணைப்பாகக் கொடுத்து, ஒரு காலை மடித்தபடி, வானத்தைப் பார்த்தவாறு மல்லாந்து படுத்தான்.
“வாழ்க்கைல நிறைய கஷடப்பட்டீங்களா கலிங்கா?” குரலடைக்க வினவினாள்.
“அது எல்லாத்தையும் நான் கடந்து வந்ததே உன்னை பாக்கிறதுக்குத்தான் போல.” என்று புன்னகைத்தான் அவன்.
அவளுக்குத் தொண்டையில் என்னவோ வந்து அடித்துக்கொண்டது. அவனையே பார்த்திருக்க, “வரும்மா, இவ்வளவு தூரம் வந்தது என்னைப் பாக்க இல்ல. அருவியை பாக்க.” என்றான் அவன்.
தான் அவனைக் குறித்துக் கவலை கொள்வதை அவன் விரும்பவில்லை என்று புரிந்தது. அதனால்தானே திடீர் பயணமாக இந்த அருவிக்கு அழைத்து வந்ததும். திரும்பி அந்த அருவியைப் பார்த்தாள்.
அவனுக்குள்ளும் இதைப்போன்ற இரைச்சல்கள் பல இருக்கும் என்று புரிந்ததில் அருவியின் புறமே பார்வையை வைத்திருந்தாள். அந்தளவில் அவள் முகம் மொத்தமும் கலங்கிப்போயிருந்தது.
அவளுக்கு அவளைக் கொஞ்சம் சமாளிக்க வேண்டியிருந்தது. மெல்ல எழுந்து அடுத்த பாறைக்குத் தாவினாள்.
“கவனம் வரு, வலுக்கும்.” என்று எச்சரித்தான் அவன்.
உயர்ந்து நின்ற மலைகள், பசுமை போர்த்திய மரங்கள், தூரத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்வீழ்ச்சி, அது பெரிய பெரிய பாறைக் கற்களில் முட்டி மோதி வழிந்தோடும் அழகு என்று பார்க்க பார்க்க அவள் உள்ளம் இலேசாகிற்று.
திரும்பிக் கலிங்கனைக் பார்த்தாள்.
உலகத்தையே மறந்துவிட்டவனைப் போலப் படுத்திருந்தான். அவன் விழிகள் மூடியிருந்தன. இதழ்களின் ஓரத்தில் அரும்பியிருந்த அந்த மெல்லிய புன்னகை, அவனும் அந்தச் சூழலை எந்தளவுக்கு அனுபவிக்கிறான் என்று உணர்த்தியது.
“என்னையே என்னத்துக்குப் பார்க்கிறாய்?”
கண்களைத் திறக்காமலேயே கேட்டான் கலிங்கன்.
“பின்ன, இவ்வளவு வடிவான இடத்துக்கு வந்திட்டு இப்பிடி படுத்திருந்தா? எழும்பி வாங்க! இந்தப் பக்கம் இன்னும் வடிவா இருக்குக் கலிங்கா.” அவனுக்கு ஆசைகாட்டி அவள் அழைக்கவும் விழிகளை திறந்து அவளைப் பார்த்தான்.
உதடுகளில் இளம்புன்னகை அரும்ப, அவளை நோக்கிக் கையை நீட்டினான்.
வருணா புருவங்களை உயர்த்தினாள். அவனைத் தூக்கிவிடச் சொல்கிறானா? அதற்கு அவள் திருகோணமலைத் துறைமுகத்தில் இருக்கிற கிரேனைத்தான் வரவழைக்க வேண்டும்.
ஆனாலும் அவனைத் தன்னால் தூக்க முடிகிறதா என்று பார்க்கும் ஆசையும் உண்டாயிற்று. மெல்லிய தடுமாற்றம் இல்லாமல் இல்லை. காட்டிக்கொள்ளாமல் வந்து அவன் கையைப் பற்றித் தூக்கிவிட முயன்றாள்.
அவன் அசைந்துகொடுக்கவே இல்லை!
பாறையின் மீது இன்னொரு பாறையைப் போல அசையாமல் படுத்துக் கிடந்தான். அவளுக்குக் கோபம் வந்தது. அவன் சிரிப்பை அடக்கிக்கொண்டு அவளைப் பார்த்தான். அது அவளைச் சீண்டியது. இன்றைக்கு விடுவதில்லை என்கிற வைராக்கியத்துடன், ஜீன்ஸ் அணிந்திருக்கும் தைரியத்தில் அவனுடைய இருபுறமும் கால்களை ஊன்றி நின்றுகொண்டு, மீண்டும் கையை நீட்டினாள்.
கலிங்கனுக்கு வெடித்துக் கிளம்பிய சிரிப்பை அடக்குவது பெரும் பாடாயிற்று. அடுத்த நொடியே அவளை இழுத்துத் தன் மீது போட்டிருந்தான்.
“அம்மா!” என்று அலறிக்கொண்டு விழுந்தவள் ஒரு கணம் பயந்துதான் போனாள். அது பெரிய உயரமான பாறை. தப்பித்தவறி கால் சறுக்கி அதிலிருந்து விழுந்திருந்தால்? “கொஞ்சம் தப்பியிருந்தாலும் செத்தே போயிருப்பன். ” என்று அவனை முறைத்தாள்.
சிரித்தபடி அவள் நெற்றி முட்டியவன், “நான் இருக்கேக்க உனக்கு ஒண்டு நடக்குது எண்டா, அதுக்கு முதல் அந்த இடத்தில என்ர உயிர் போயிற்றுது எண்டு அர்த்தம்.” என்றான் அவன் நிறுத்தி நிதானமாக அவள் விழிகளையே பார்த்து.
விழுக்கென்று எழுந்து அமர்ந்துவிட்ட வருணாவினால் அடுத்த சில கணங்களுக்கு அசையவே முடியாமல் போயிற்று. என்ன பேசுகிறான் இவன் என்று கோபமும் அழுகையும் சேர்ந்து வந்தன.
தன் உயிருக்கும் மேலாக அவளை பேண நினைக்கிறானா? “என்ன கலிங்கா இது கத பேச்சு?” என்றாள் ஆற்றாமையோடு.
“நான் என்ன உணந்தேனோ அத…” என்றவனை மேலே பேச விடாமல், அவன் உதட்டின் மீது விரல்களை வைத்துப் பேச்சை நிறுத்தி, எதுவும் சொல்லாதே என்று சொல்வது போன்று தலையை குறுக்காக அசைத்தாள்.
ஒரு கணம் ஒன்றுமே சொல்லாமல் அவளையே பார்த்த கலிங்கன் அவள் இரண்டு தோள்களிலும் இருந்த அவளின் மேல் சட்டையைப் பற்றிப் பின்னால் இழுத்துவிட்டான்.
அப்போதுதான் தன்னைக் குனிந்து பார்த்தவள் பதறிப்போனாள். “ஐயோ சொறி. விழுந்ததில கவனிக்கேல்ல நான்.” என்றவளுக்குத் தன்னைத் தவறாக நினைத்துவிடுவானோ என்று முகம் கன்றிப்போயிற்று.
“பப்லிக் பிளேஸ் வரும்மா. அதான்.” என்று அவள் பதற்றம் தனிதான் அவன்.
இல்லை என்றால் அவன் பார்க்கலாம் என்கிறானா?
அதிர்ச்சியோடு அவள் பார்க்க, ஒரு கையைத் தலைக்குக் கொடுத்துப் படுத்திருந்தவன், ஆம் என்று சொல்வதுபோல் ஒற்றைக் கண்ணைக் குறும்புடன் சிமிட்டினான.
அவளுக்கு காத்து மடல்கள் எல்லாம் சூடாகிப் போயின. இவன் பொல்லாதவன் என்று மனம் சொல்லிற்று. அவள் பார்வையை விலக்க, அவள் கரம் பற்றி முத்தமிட்டான் அவன்.
“இந்தக் கைல அப்பிடி என்ன இருக்கு?” என்று இளம் புன்னகையுடன் வினவினாள் வருணா.
அந்தக் கையை எடுத்துத் தன் கன்னத்தில் அழுத்திக்கொண்டு, “இந்தக் கை என்னோட நிறையக் கதைச்சிருக்கு வரு. நான் மொத்தமா நொருங்கிப் போயிருந்த நேரம் என்னைத் தட்டிக்கொடுத்திருக்கு. ஆறுதல் தந்திருக்கு. தைரியம் தந்திருக்கு. இன்னும் சொல்லப்போனா இந்தக் கையப் பிடிச்சுக்கொண்டுதான் நான் எழும்பியே வந்தனான்.” என்றான் அவன்.
குளம் கட்டிவிட்ட விழிகளோடு, “அத நான் உங்களுக்கு மட்டும் செய்றேல்ல கலிங்கா. எல்லாரையுமே அப்பிடித்தான் கவனிப்பன். அதுவும் எமெர்ஜென்சி ஏரியாலதான் எனக்கு டியூட்டி. அங்க வாறது எல்லாம் எதிர்பாரா நேரத்தில திடீரெண்டு நடந்த சீரியஸான விபத்து கேஸுகள்தான். கொஞ்சம் கூட எதிர்பாராத நேரத்தில நடந்ததால நல்லா பயந்திருப்பினம். செத்திடுவமோ எண்டு கூட நினைப்பினம். அதாலேயே அப்பிடி இல்ல, நீ நல்லாருக்கிறாய், சுகமாகிக்கொண்டு வாறாய் எண்டு சொல்லுறது ஒரு டொக்டரா என்ர டியூட்டி. மேலதிகமா நான் எதையுமே செய்யேல்ல கலிங்கா.” என்றாள் கண்ணீர் கன்னத்தில் வழிய.
“இருக்கலாம் வரும்மா. தண்ணீர் பந்தலக் கண்டா எல்லோரும்தான் வந்து குடிப்பினம். அதுவே தாகத்தில தவிச்சுப்போய் இருக்கிறவனுக்கு அது தேவாமிருதம். எனக்கு அப்பிடித்தான் நீயும் இந்தக் கையும்.”
அவளுக்கு அக்கண்ணீர் பொலபொலவென்று கொட்டிற்று. அது பிடிக்காதவள் போன்று கன்னத்தையும் கன்னங்களையும் துடைத்துக்கொண்டு, “இப்ப எல்லாம் நீங்க என்னை அடிக்கடி அழ வைக்கிறீங்க.” என்று அவனை அவனிடமே முறையிட்டாள் அவள்.
அவன் பற்கள் தெரிய முறுவலித்தான். என்னவோ இந்தக் கண்ணீர் அவனுக்காக என்பதில் அவனுக்குப் பிடித்திருந்தது.
அப்போதுதான் சட்டென்று அது பிடிபட, “மாறனுக்கு ஆர் பொம்பிளையா இருந்திருந்தாலும் அவவின்ர கழுத்திலதானே தாலி கட்டி இருப்பீங்க. நான் எண்டுறதால இது நடக்கேல்லையே?” என்று சொன்னாள் அவள் வேகமாக.
அவன் முகத்தில் மெல்லிய சங்கடம். “வரும்மா, அண்டைக்கு இருந்த என்ர மனநிலை வேற. இண்டைக்கு வேற.” என்றான் அவன்.
அவள் முகம் திருப்பினாள். என்னவோ அந்த இடத்தில் யார் இருந்திருந்தாலும் தாலி கட்டியிருப்பான் என்பது அவளுக்குப் பிடிக்கவில்லை.
அவன் அவள் கரம் பற்றி இலேசாக இழுத்து அவளைத் தன்னைப் பார்க்க வைத்து, “எங்கட கலியாணம் நடந்த அண்டைக்கு உன்ர மனநிலை என்ன?” என்று கேட்டான் அவன்.
உண்மைதான். ஆனாலும்… அவள் முகம் திருப்ப, “நான் தாலி கட்டினத்துக்கு நீ எண்டுறதும் ஒரு காரணமா இருக்கலாம்.” என்று சொன்னான் அவன்.
“நான் என்ன அந்தளவுக்கு கிள்ளுக்கீரையா போய்ட்டானா உங்களுக்கு?” என்று முறைத்தாள் அவள்.
கண்ணீரில் நனைந்த இமைகள் சூழ்ந்திருக்க, அவனை முறைத்த அந்த விழிகளையே பார்த்தான் அவன். அவள் தடுமாறி பார்வையை தளைத்துக்கொள்ள, அவன் உதட்டில் அழகான முறுவல். “மயக்கி!” என்றான் மெல்லிய முணுமுணுப்பாய். அவள் விழிகள் வியப்பில் விரிந்துபோயின.

