கலிங்கனின் காவியம் 43.1

அத்தியாயம் 43

அவர்களின் பயணம் திருகோணமலையை நோக்கி நகர ஆரம்பித்திருந்தது. இருவரும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. பேசிக்கொள்ளத் தோன்றவில்லை.

சற்று முன்னர் வரை இருவருமாக அந்த நீர்வீழ்ச்சியில் சேர்ந்து களித்த பொழுதுகளும், பரிமாறிக்கொண்ட உள்ளத்து உணர்வுகளும், மனம் திறந்து பேசிக்கொண்டதும், அதனால் அவர்களுக்குள் உருவாகியிருந்த நெருக்கமும் இருவருக்குள்ளும் மிக மிக இனிமையானதொரு மனநிலையை உருவாக்கியிருந்தன.

அதுவும் அவனுடைய பார்வையும், குறும்புச் சிரிப்பும், அவ்வப்போது அவன் காட்டிய சின்ன சின்ன நெருக்கங்களும், அணைப்புகளும் அவளுக்குள் ஏதோவொரு இனம்புரியாத படபடப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தன.

அவன் பார்வையில் வழக்கத்தை விடக் கூடுதலான ஒரு தேடல் இருந்தது. பேசிக்கொண்டிருக்கும்போதே அவளை நெருங்கி நிற்பதும், காரணமே இல்லாமல் அவளது விரல்களைப் பற்றிக் கொள்வதும், தனக்குள் இழுத்து அணைத்துக் கொள்வதும், காதோரம் குனிந்து ஏதாவது சொல்லிவிட்டு அவளது முகத்தில் தோன்றும் வெட்கத்தை ரசிப்பதுமாக அன்றைய பொழுதை நகர்த்தியிருந்தான்.

அன்றைய இரவு அவன் தன்னிடம் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக வரப்போகிறானோ என்கிற பதற்றத்தையும், தடுமாற்றத்தையும், சொல்ல முடியாத வெட்கத்தையும் அவளுள் விதைத்திருந்தான்.

இப்படி அவனைப் பற்றிய இனிய நினைவுகளில் திளைத்திருந்தவளின் கண்கள் கொஞ்ச நேரத்திலேயே சொக்க ஆரம்பித்தன.

நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்காக அவ்வளவு தூரம் நடந்ததால் ஏற்பட்ட களைப்பா? அவனைப் பற்றிய இதமான நினைவுகளா? அல்லது, அவன் லொறியைச் செலுத்திய சீரான வேகமா தெரியவில்லை. இருக்கையிலேயே தலை அவ்வப்போது தூங்கி விழுந்தது வருணாவுக்கு.

அதைக் கவனித்த கலிங்கன், வீதியோரமாக லொறியைக் கொண்டு சென்று நிறுத்தினான். அப்போதும் எதுவும் அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளைப் பார்த்தவனின் முகத்தில் மெல்லிய முறுவல் அரும்பியது.

அவள் அவனுக்குள் உருவாக்கிக்கொண்டிருக்கும் மாற்றங்கள் அளப்பரியவை. அவன் கடந்துவந்த பெரும் துரகத்துக்குப் பிறகும் தன் வாழ்க்கை இப்படி மாறும் என்று அவன் எண்ணியிருக்கவேயில்லை.

இரும்பாய் இறுகிப்போயிருந்த தன் உள்ளத்துக்குள் அவள் எப்படி இவ்வளவு மென்மையாக நுழைந்தாள் என்று அவனுக்கே புரியவில்லை. ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. அவனை அறியாமலேயே அவன் மனம் அவளிடம் தோற்றுக்கொண்டிருக்கிறது. அந்தத் தோல்வியில்தான் அவன் இதுவரை அறிந்திராத பேரின்பமும் ஒளிந்திருந்தது.

அவளுடைய இருக்கைப் பட்டியைக் கழற்றிவிட்டு மெதுவாகத் தட்டியெழுப்பினான்.

சட்டென்று விழித்தவள், “என்ன கலிங்கா? நித்திரையாகிட்டனா?” என்று கேட்டபடி எழுந்து அமர முயன்றாள்.

“போய் பின்னால படு” என்றான் கனிவுடன்.

“இல்ல இல்ல. நான் உங்களோடயே இருக்கிறன்.” அவளுக்கு இருக்கிற களைப்பும் சோர்வும் அவனுக்கும்தானே. அப்படி இருக்க அவள் உறங்க அவன் லொறியை ஓட்டுவானா என்று எண்ணிச் சொன்னாள் அவள்.

“இல்லடாம்மா. நீ இப்பிடித் தூங்கிவழியிறதுதான் என்னை டிரைவ் பண்ண விடாது. உன்னையே கவனிச்சுக்கொண்டிருப்பன்.”

“விழ மாட்டானா?” பின்னால் திரும்பிப் பார்த்துவிட்டு அவன் முகம் பார்த்து வினவினான்.

“நீ விழுற மாதிரி நான் ஓட்ட மாட்டன்.”

அந்த உறக்கக் கலக்கத்திலும் அவனையே விழியாகற்றாது பார்த்தாள் வருணா. இவன் ஏன் தன்னில் இத்தனை அன்பைப் பொழிகிறான் என்று அவளால் புரிந்துகொள்ளவே முடியவிலை.

“என்ன?” என்றபடி முதல் நாள் போலவே அவனே அவளை அழைத்துச் சென்று, அந்த படுக்கையில் சரித்து, போர்வையையும் போர்த்திவிட்டான்.

“நிம்மதியா நித்திரையைக் கொள்ளு!” என்று அவள் கன்னம் தட்டிவிட்டு அவன் போக, “கலிங்கா!” என்றாள் வருணா. அவன் திரும்பிப் பார்த்தான். அவள் கைகளை விரித்து அவனைத் தன்னிடம் அழைத்தாள்.

கலிங்கனுக்குப் பெரும் ஆச்சரியமாயிற்று. முகம் வெளிச்சம் போட்டதுபோல் மலர, உண்மையில் அவள் தன்னை அணைக்க அழைக்கிறாளா என்று பார்த்தான்.

அதற்குப் பதில் போன்று, “என்ன பாக்கிறீங்க? வாங்க!” என்று இப்போது வார்த்தைகளாலேயே அழைத்தாள் அவள்.

அவன் முற்றிலுமாக நெகிழ்ந்துபோனான். விரைந்து வந்து அவள் கைகளுக்குள் அடங்கினான்.

தன் இரு கைகளாலும் அவனை இறுக்கி அணைத்து, அன்று அவன் வைத்தியசாலையில் செய்தது போன்று தன் தலையை மாத்திரம் உயர்த்தி, அவன் நெற்றியில் தன் இதழ்களை ஒற்றினாள் வருணா.

கலிங்கன் இதை எதிர்பார்க்கவேயில்லை. அவனுக்குள் மொத்தமாக ஏதோ ஒன்று உடைந்து நெகிழ்ந்தது. நொடியில் உணர்வுகளின் பிழம்பானவன் கண்கள் பனிக்க, அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான். அவன் கைகளில் மெல்லிய நடுக்கம். இதயத்தில் பெரும் பிரளயம். மலை வந்து மோதினாலும் கலங்காதவன் மலரிதழ் முத்தத்தில் மொத்தமாய் உடைந்திருந்தான்.

அவன் உணர்ச்சிவசப்பட்டிருப்பது வருணாவுக்குப் புரிந்தது. அவனைத் தன் அணைப்பில் வைத்திருந்தபடி அவன் பிடறிக் கேசத்தினுள் விரல்களை வீட்டுக் கோதிக்கொடுத்தாள்.

அவன் கடினமானவன், பொல்லாதவன், மற்றவர்களிடம் காட்டும் முகமே வேறு என்று அவளுக்கு தெரியும். அவளிடம் மட்டும் ஆரம்ப நாள்களைத் தவிர்த்து கரைந்துருகும் மெழுகாய் மட்டும்தான் இருந்திருக்கிறான். அந்த அவனை அவளுக்கு ஏனோ நினைக்க நினைக்க பிடித்துக்கொண்டேயிருந்தது.

இப்போது அவன் தன்னிடம் உடையவும் தாயாய் தாங்கிக்கொள்ள உள்ளம் உந்த, “கலிங்கா!” என்றாள் அவளும் கரகரத்துவிட்ட குரலில்.

அவனால் முடியவேயில்லை. அவளை அப்படியே அள்ளி அனைத்துத் தூக்கித் தன் மடியில் அமர்த்திக்கொண்டு அவன் அந்தப் படுக்கையில் அமர்ந்தான்.

error: Alert: Content selection is disabled!!