மெல்ல அவன் முகம் தாங்கி, அவன் விழிகளோடு தன் பார்வையைக் கலந்து, “என்ன?” என்றாள் குட்டிப் புன்னகையோடு
பனித்திருந்த விழிகளும் சிறு புன்னகையுமாக ஒன்றுமில்லை என்று தலையசைத்தான் அவன்.
“ம்?” அப்படியா என்பதுபோல் அவள் மீண்டும் கேட்க, அவன் புன்னகை விரிந்தது. அப்படித்தான் என்று இப்போது மேலும் கீழுமாகத் தலையசைத்தான். அவள் குறும்புச் சிரிப்புடன் தலையைச் சரித்து அவனை நம்பாமல் பார்க்க, தலையைப் பின்னா சாய்த்துச் சிரித்தவன், அவளை தன் மார்போடு சேர்த்து இறுக்கி அணைத்துக்கொண்டான்.
என்னவோ அவளை இன்னுமின்னும் தனக்குள் கொண்டுவரவேண்டும் போலொரு துடிப்பு அவனுக்குள். சிறு முறுவலோடு அவளையே பார்த்தான். அவள் உச்சியில் முத்தமிட்டான். பின் நெற்றியில் உதடுகளை பதித்தான். ஒருமுறை அவளை பார்த்துவிட்டு அவளின் கன்னத்தில் தன் உதடுகளை புதைத்தான்.
வருணாவுக்குப் பெரும் ஆச்சரியம். அவள் விழிகளை விரிக்க, “என்ன?” என்றான் அவன் சிரிப்புடன்.
“எப்பவும் நெத்திலதான் தருவீங்க.”
“இனியும் அப்பிடித்தான் தரோணுமா?” நெருக்கமான குரலில் கேட்டபடி தன் மூக்கைக் கொண்டுபோய் அவள் கன்னத்தில் உரசினான்.
என்ன சொல்வாள்? அவள் உதட்டைப் பற்றியபடி அவனைப் பார்க்க, அவன் பார்வை அவள் இதழ்களுக்குச் சென்று வந்தது.
அவள் படபடத்துப்போனாள். “கலிங்கா!” என்று அதட்டியபடி வேகமாய் அவனை விட்டு நகர்ந்திருந்தாள் அவள். அவன் உதட்டைப் பற்றியபடி அவளை பார்த்துச் சிரித்தாலும் அந்தப் பார்வை சொன்ன செய்தியில் அவள் முகம் செங்கொழுந்தாகிப்போயிற்று.
*****
அவர்கள் வீட்டுக்கு வந்து சேர இரவாகியிருந்தது. வருணா அவன் பார்வையைத் தவிர்த்தபடி தப்பித்துக்கொண்டிருந்தாள். பயணித்த களை தீர நன்றாகக் குளித்து, இலகுவான உடைக்கு மாறி, இராசம்மா சமைத்து வைத்திருந்த உணவை இருவரும் சேர்ந்து சாப்பிட்டு முடிந்ததும் அடித்துப் பிடித்துக்கொண்டு வந்து தன் அறைக்குள் அடைந்துகொண்டிருந்தாள்.
அவளுக்குள் பெரும் பதற்றமும் படபடப்பும். மனம் என்னவோ அன்று அவன் தன்னுடைய அறைக்கு வருவான் என்று சொல்லிக்கொண்டேயிருந்தது. அந்தளவில் பார்வையால் அவளையே தொடர்ந்தபடி கண்ணால் சிரித்துக்கொண்டிருந்தான் அவன்.
அவள் எதிர்பார்ப்புப் பொய்யாக்கவில்லை. சற்று நேரத்திலேயே வந்து அவள் அறையின் கதவைத் தட்டினான் அவன். எப்போதும் அப்படித் தட்டிவிட்டு அவள் திறப்பதற்காகக் காத்திருக்கிறவன் இன்று தானே திறந்தான்.
அது போதாதென்று கைகளைக் கட்டிக்கொண்டு கதவு நிலையில் சாய்ந்து நின்று அவளையே பார்த்தான். அன்று அவள் சம்மதத்துடனேயே அவளை மொத்தமாகத் தன்னுடையவளாக்கத் திட்டமிட்டிருக்கிறான் என்று புரியாமல் இல்லை. என்றாலும் அவன் வந்து நின்றதும் அவள் முகம் சூடாகிச் சிவப்து போயிற்று
அதுவே அவனுக்கான அழைப்பாகிவிட் உள்ளே வந்து கதவடைத்தான். வருணாவினால் தலையை நிமிர்த்தவே முடியாமல் போயிற்று.
அவள் தடுமாற்றத்தை ரசித்தபடியே அவளருகில் வந்தான். அவளது முகத்தை நிமிர்த்தி, வெட்கத்தில் சிவந்திருந்த கன்னங்களைப் பார்த்துப் புன்னகைத்தான்.
அவளுடைய நெற்றியில் விழுந்திருந்த முடிக்கற்றைகளை ஒதுக்கிவிட்டு, முகம் முழுவதையும் தன் பார்வையால் வருடினான். அவளோ அவனுடைய கண்களைச் சந்திக்க முடியாமல் மீண்டும் பார்வையைத் தாழ்த்திக்கொண்டாள்.
அவன் அவளைத் தன்னருகே இழுத்து அணைத்துக்கொண்டபோது, அவளுடைய உடல் மெல்லியதொரு நடுக்கத்துக்கு ஆளானது.
அவனுடைய மார்பில் முகம் புதைத்துக்கொண்டவளை அவசரப்படுத்தாமல், அவளது தலையை வருடியபடி அணைத்திருந்தான். அவனுடைய அணைப்பில் இருந்த கதகதப்பும், அவன் காட்டிய மென்மையும் அவளுக்குள் இருந்த பதற்றத்தை மெல்ல மெல்லக் குறைத்தன.
எப்போதும் போன்று அவள் நெற்றியில் உதடுகளைப் பதித்தவன், கன்னங்களில் புதைந்து, முகம் முழுவதிலும் முத்திரைகளைப் பதித்து அவளைச் சிவக்கச் செய்தான். அவள் முகத்தைத் தன் கரங்களுக்குள் ஏந்தி, “இப்பவும் கழுத்தில மட்டும்தான் என்னைச் சுமக்கிரியா?” என்றான் தன் ஆழ்ந்த குரலில்.
வருணா இந்த நேரத்தில் இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்கவேயில்லை. ஆச்சரியமும் வியப்புமாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் தன் பதிலுக்காகக் காத்திருப்பது புரிந்தது. சிலகானங்களுக்கு அவனையே விழியாகற்றாது பார்த்தவள் எம்பி அவன் தாடையில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தாள்.
அவன் முகம் மலர்ந்துபோயிற்று. அவள் முகத்தை ஏந்தி, இதழ்களில் நீண்ட முத்தம் பதித்துவிட்டு விலகி, அவள் முகம் பார்த்துப் புன்னகைத்தான். அந்தப் புன்னகையில் இருந்த திருப்தியும் நேசமும் அவளுக்குப் புரிந்தன. அவள் வெட்கத்துடன் சிரித்தாள்.
அவளோடு கட்டிலில் சரிந்து அவள் மனம், உடல் இரண்டையும் அவசரமின்றி நேசத்தால் வருடியவன், அவளுடைய ஒவ்வொரு உணர்வையும் ரசித்தபடியே அவளைத் தன்னுள் ஐக்கியப்படுத்திக்கொண்டான்.
அவன் விரல்கள் அவள் விரல்களோடு கோர்த்துக்கொண்டன. அவன் வருடல்கள் அவளுக்குள் புதிதான உணர்வுகளை விதைத்தன. அவன் முத்தங்களில் இருந்த காதலும், அணைப்பில் இருந்த உரிமையும் அவளுடைய தயக்கங்களை ஒவ்வொன்றாகக் கரைத்தன.
வெட்கத்திலும் கூச்சத்திலும் அவனிடமிருந்து விலக முயன்றவள் மெல்ல மெல்ல அவன் நெருக்கத்தைத் தேடத் தொடங்கினாள். அவள் வெட்கம் மெல்லிய புன்னகையாக மாறியது. தயக்கம் காதலாக மாறியது. அவனுடைய ஒவ்வொரு முத்தத்திலும் தன்னையே கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைத்துக்கொண்டிருந்தாள்.
பூவின் மென்மை குலையாமல் தேனருந்தும் வண்டைப் போல, அவளுடைய உணர்வுகளுக்கு வலிக்காமல், அவளுக்குள் மெல்லக் கலந்து கரைந்துபோனான் கலிங்கராயன். அவனுடைய அணைப்பின் கதகதப்பிலும், காதலின் ஆழத்திலும் அவளும் தன்னை மறந்து அவனுக்குள் கரைந்தாள் வருணா.

