வவுனியா நோக்கிச் செல்லும் அந்த நீண்ட நெடுஞ்சாலையை நள்ளிரவுப் பனி மெல்லிய போர்வையாக மூடியிருந்தது. அடர்ந்த காட்டுப் பகுதியைக் கிழித்துக்கொண்டு, முகப்பு விளக்குகளின் வெளிச்சத்தை இருளுக்குள் பாய்ச்சியபடி கலிங்கராயனின் லொறி நல்ல வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தது.
ஆபத்தான வளைவு ஒன்றில் கலிங்கனின் லொறி திரும்பிய அந்த நொடி, எதிர்த்திசையிலிருந்து அசுர வேகத்தில் சீறிப் பாய்ந்து வந்தது மற்றொரு லொறி.
நிதானிக்கவே நேரமில்லாத கணநொடி. முகப்பு விளக்குகளின் வெளிச்சம் கண்களைக் கூசச் செய்ய, நேருக்கு நேர் மோதும் மரண ஆபத்தைக் கடைசி நொடியில் உணர்ந்த கலிங்கன், முழு பலத்தையும் பிரயோகித்து ஸ்டியரிங்கை அடுத்த பக்கமாகத் திருப்பினான்.
அந்தச் சாதுரியமான முயற்சியால் நேருக்கு நேர் மோதும் பேரழிவு தவிர்க்கப்பட்ட போதிலும், இரண்டு லொறிகளின் பக்கவாட்டுப் பகுதிகள் பயங்கர சத்தத்துடன் உரசி மோதின.
இரும்புத் தகடுகள் நசுங்கும் ஓசையும், உராய்வில் கிளம்பிய நெருப்புப் பொரியும் அந்த நள்ளிரவின் அமைதியைக் கிழித்தன. பாரிய சேதம் ஏற்படவில்லை என்றாலும், கட்டுப்பாட்டை இழந்து பயணித்த கலிங்கனின் கலிங்கனின் லொறி சாலையோரமாகச் சரிந்து நின்றது.
மறுகணமே, எங்கிருந்தென்று தெரியாதவாறு இருளுக்குள்ளிருந்து கிடுகிடுவென்று பாய்ந்து வந்த வரதனின் ஆட்கள், கலிங்கனின் லொறியைச் சுற்றி வளைத்தனர்.
அவர்கள் கைகளில் கனமான மரக்கட்டைகள், உருட்டுக்கம்புகள், கொட்டான்கள் இருந்தன.
கண்ணிமைக்கும் நேரத்தில் உக்கிரமான தாக்குதல் தொடங்கியது. லொறியின் பாதுகாப்புக்கு வந்த கலிங்கனின் ஆட்கள் சுதாரிப்பதற்குள், வரதனின் ஆட்கள் மிருகத்தனமாகக் கட்டைகளால் தாக்கத் தொடங்கினர்.
லொறியின் கண்ணாடிகள் தடிகளால் அடித்து நொறுக்கப்பட்டன. மரக்கட்டைகள் மோதும் சத்தமும், வலியால் அலறும் ஓசையும் அந்தக் காட்டுப் பகுதியையே அதிர வைத்தன.
சரக்கை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும் என்ற வெறியில் அவர்கள் லொறியின் பக்கவாட்டுப் பலகைகளையும், சரக்குப் பெட்டியையும் சரமாரியாகத் தாக்கினர்.
சாய்ந்திருந்த லொறியின் கதவை எட்டி உதைத்துக்கொண்டு வெளியே குதித்தான் கலிங்கராயன். அவன் கண்களில் கட்டுக்கடங்காத ஆக்ரோஷம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது.
தன் மீது கம்பை ஓங்கிக்கொண்டு வந்தவனின் கையை லாவகமாக மடக்கி, அவனது கையிலிருந்த கனமான உருட்டுக்கட்டையைப் பறித்தான். அடுத்த நொடியே அதே கட்டையால் அவனது விலா எலும்பில் ஓங்கி அடித்தான்.
சுற்றி வளைத்துத் தாக்கிய வரதனின் ஆட்களுக்கு நடுவே, புயலாகச் சுழன்றடித்தான் கலிங்கன். அவனது கையிலிருந்த கட்டை காற்றைக் கிழித்துக்கொண்டு சுழன்ற வேகத்தில் எதிரிகளின் தலைகளும் தோள்களும் சிதறின. கட்டைகள் உடைந்து சிதறும் அளவிற்கு ஈவிரக்கமின்றி அவர்களைப் பந்தாடினான் கலிங்கன்.
அந்த ஆக்ரோஷமான மோதலுக்கு நடுவே, பின்புறமிருந்து பாய்ந்து வந்த ஒருவன், தன் கையிலிருந்த கூர்மையான முனை கொண்ட மரக்கொட்டானால் கலிங்கனின் இடது தோள்பட்டையில் ஓங்கி அடித்தான். அந்த பலமான அடியில் தோள்பட்டை சதை கிழிந்து, ரத்தம் பீறிட்டு அவனது சட்டையை நனைத்தது.
கடுமையான வலி உடல் முழுதும் பரவிய போதிலும் கலிங்கனின் வேகம் ஒரு துளிகூடக் குறையவில்லை. காயம்பட்ட வேங்கையாக மாறி, ரத்தம் சொட்டும் தோளுடன் திரும்பி, தன்னை அடித்தவனின் கழுத்தை ஒற்றைக் கையால் இறுக்கிப் பிடித்துத் தரையில் சாய்த்தான்.
அவர்களின் நோக்கம் அந்த லொறியை முற்றிலுமாக அழித்துவிடுவதில் இருந்தது என்றால், கலிங்கனின் நோக்கம் என்ன நடந்தாலும் அந்த லொறியில் இருந்த பொருட்களை அவர்கள் சேதப்படுத்திவிடக் கூடாது என்பதில் மட்டுமே இருந்தது.
அங்கிருந்து புறப்படும்போதே தனது ஆட்களுக்கு அதுகுறித்துத் தெளிவாக எச்சரித்திருந்தான். அவர்களும் லொறியைச் சுற்றி நின்று, எதிரிகள் அதை நெருங்கிவிடாதபடி போராடிக்கொண்டிருந்தனர்.
எவ்வளவோ முயன்றும் கலிங்கனின் லொறியை அவர்களால் நெருங்கக்கூட முடியவில்லை. நெருப்பை மூட்டி அதன் மீது எறிய முயன்றவனைக் கையில் இருந்த கட்டையைச் சரியாகப் குறிபார்த்து எரிந்து அவன் மண்டையை உடைத்தான் கலிங்கன்.
கடைசியில் தாக்குப்பிடிக்க முடியாமல், கலிங்கனின் நெஞ்சுறுதியின் முன்னாலும், அவனுக்காக உயிரைக் கொடுக்கவும் தயங்காத அவனது விசுவாசிகளின் முன்னாலும் தோல்வியுற்று, வரதனின் ஆட்கள் திசைக்கொருவராகத் தலைதெறிக்க அந்த இருளுக்குள் ஓடி மறைந்தார்கள்.
அந்தச் சண்டையின் அடையாளங்களையும் சேதங்களையும் சுமந்தபடி கலிங்கராயனின் லொறி தன் பலத்தை இழந்து ஒருபுறமாகச் சாய்ந்து நின்றது.
பக்கவாட்டுத் தகடுகள் நசுங்கி, டயர்கள் பஞ்சாராகி, இன்ஜின் பகுதியில் இருந்து மெல்லிய புகை எழுந்து, அந்த வாகனம் இனிமேலும் நகர முடியாது என்று சொல்லிற்று.
தோள்பட்டையிலிருந்து வழிந்த ரத்தம் சட்டையைத் தாண்டி அவனது வலது கையை நனைத்துக்கொண்டிருந்தது. மூச்சு வாங்கும் ஒவ்வொரு முறையும் அந்த இடது தோள் நரம்புகள் தெறிப்பது போன்ற கடுமையான வலி உடலை உலுக்கியது.
ஆனாலும், அவனது ஆத்திரமும் ஆவேசமும் அடங்கியபாடில்லை.
அவசரமாக ஓடிவந்த ஒருவன் துணியொன்றை எடுத்து காயத்தின் மீது அழுத்திப் பிடிக்க, மற்றொருவன் தனக்குத் தெரிந்த வகையில் அதைச் சுற்றிக் கட்டி, ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த முயன்றான்.
எதற்கும் அசைந்து கொடுக்காமல், மூச்சை கனமாக இழுத்துவிட்டபடி நின்றிருந்தான் கலிங்கன். பல நாட்களாக மறந்திருந்த சிகரெட்டை அன்று அவனது விரல்கள் தேடின.
அவனது எண்ணத்தைப் புரிந்துகொண்ட ஒருவன் உடனடியாகச் சிகரெட் பெட்டியையும் லைட்டரையும் கொண்டுவந்து கொடுத்தான்.
ஒன்றை உருவி உதட்டில் வைத்துப் பற்றவைத்தவனின் கண்களுக்குள் அத்தனை ஆத்திரம். அந்தச் சிகரெட்டின் நெருப்பில் வரதனையும் அவனது ஆட்களையும் சேர்த்துப் பொசுக்கிவிட வேண்டும் என்பதுபோன்ற கொதிப்பு அவனுக்குள் கனன்றுகொண்டிருந்தது.
காயத்துக்கு வைத்தியம் பார்ப்பதிலோ, வலியைக் குறைப்பதிலோ அவனது கவனம் இல்லை. எப்படியாவது அந்தப் பொருட்களைச் சேதமின்றி உரிய இடத்தில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட வேண்டும் என்பதிலேயே அவனது ஆவேசம் முழுவதும் குவிந்திருந்தது.
அதைச் செய்து முடித்தால் மட்டுமே அவனுக்குள் கொழுந்துவிட்டெரியும் அந்த ஆத்திரமும் ஆவேசமும் அடங்கும்.
காயப்பட்ட தனது ஆட்களை வைத்தியம் பார்க்கச் சொல்லி அனுப்பிவைத்தான். எஞ்சிய ஆட்களை உடனடியாகச் செயல்படப் பணித்தான்.
வரதனின் ஆட்கள் வந்த லொறியைச் சோதித்தான். அது இயங்கும் நிலையிலேயே இருந்தது. முக்கியமாக அதன் திறப்பு அதிலேயே இருந்தது. சீறலாக ஒரு சிரிப்பை உதறியவன் அடுத்த நொடியே சரக்குகளை அந்த லொறிக்கு மாற்ற உத்தரவிட்டான்.
கடகடவென்று வேலைகள் நடந்தன. சரக்குகள் மாற்றப்பட்டதும் ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்து இப்போதும் தானே இயக்கினான்.
நினைத்ததுபோலவே பொருட்களை உரியவரிடம் கொண்டுசென்று சேர்த்த பிறகே ஓய்ந்தான் கலிங்கன்.

