அத்தியாயம் 48
அதிகாலையில் வந்த தொலைபேசி அழைப்புதான் வருணாவின் உறக்கத்தைக் கலைத்தது. அவளுடைய தலைமை வைத்தியர் அழைத்துக்கொண்டிருந்தார்.
‘இந்த நேரத்தில் என்னவாக இருக்கும்?’ என்கிற எண்ணத்துடன் அழைப்பை ஏற்றாள்.
வெட்டுக்குத்துச் சம்பவம் ஒன்றில் காயமடைந்த இருவர் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், இன்றைக்கு அவள் வருவாள் என்று சொன்னதால் இப்போதே வருமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
சரி என்று அழைப்பைத் துண்டித்தவள், உடனே கணவன் அனுப்பியிருந்த குறுஞ்செய்தியைத் திறந்து பார்த்தாள். அவசர வேலை ஏதாவது இருந்தால், இப்படி ஒரு செய்தியை அனுப்பிவிட்டுச் செல்வது அவனுடைய வழக்கம்தான்.
ஆனால், அவன் செய்தியை அனுப்பியிருந்த நேரம்தான் அவளுடைய புருவங்களைச் சுருங்க வைத்தது. அந்த நேரத்தில் சென்றவன் இன்னும் திரும்பவில்லையா? நேரத்தைப் பார்த்தவள், உடனே அவனுக்கு அழைத்தாள். அவன் ஏற்கவில்லை.
எப்போதுமே அவள் அழைத்தால் உடனேயே ஏற்பான். இல்லையானாலும் உடனேயே திருப்பி அழைப்பான். இன்று இரண்டும் இல்லை என்றதும் ஏதோ முக்கியமான வேலையில் இருக்கிறான் என்று புரிந்துகொண்டாள்.
ஆனாலும் ஆதி நிற்கிறானா என்று எட்டிப்பார்த்தாள். அவன் அங்கே இன்னும் சிலருடன் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தான். அப்படி நிதானமாக நாளாந்த பயிற்சியில் அவன் ஈடுபட்டிருக்கிறார் என்றால் கலிங்கன் எந்த ஆபத்திலும் இல்லை என்று அவளாகவே பொருள் கொண்டாள்.
‘எல்லாம் ஓகேதானே கலிங்கா? ஃபிரீயானதும் கோல் இல்ல மெசேஜ் பண்ணுங்கோ. சீஃப் இப்பவே ஹொஸ்பிடலுக்கு வரச் சொல்லிச் சொன்னவர். ஆதியோட போறன்.” என்று அனைத்தையும் விவரமாக எழுதி அனுப்பிவிட்டு, வேகமாகத் தயாராகி, சொன்னதுபோலவே ஆதியோடு வைத்தியசாலை சென்று இறங்கினாள்.
அதன் பிறகான அவள் நேரம் முதல் நாளை போலவே நோயாளிகளைக் கவனிப்பதிலேயே போயிற்று. அவள் சத்திர சிகிச்சைப் பிரிவை விட்டு வெளியே வந்தபோது, அதற்காகவே காத்திருந்தாற்போல் தாதிப்பெண் ஒருத்தி ஓடிவந்து சொன்ன செய்தியில் அவள் தலையில் அவளுக்கு நெஞ்சமெல்லாம் பதறிப்போயிற்று.
கலைஞனுக்கு மீண்டும் காயமாம். அவன் இருக்கும் அறையைக் கேட்டுக்கொண்டு அங்கே ஓடினாள்.
*****
வவுனியாவுக்குச் சென்று சரக்குகளைப் பத்திரமாக இறக்கிவிட்டு, மீண்டும் திருகோணமலைக்குத் திரும்பும் வரையிலும் கலிங்கன் தன்னுடைய காயத்தைப் பற்றியோ, இழந்துகொண்டிருந்த இரத்தத்தைப் பற்றியோ சிந்திக்கவேயில்லை.
அவனுக்குள் ஒரு வெறி கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது.
அடுத்த நாள் காலையில்தான் அந்த லொறி புறப்படுவதாகத் திட்டமிட்டிருந்தான். வழக்கம்போலப் பல இடங்களுக்கும் வாகனங்களை அனுப்பி வரதனின் ஆட்களைக் குழப்பிவிட்டு, தனது சரக்கை எந்தவிதமான இடையூறுமின்றி அனுப்பி வைப்பதே அவனுடைய திட்டம்.
வருணா வைத்தியசாலைக்குச் சென்றதால் திட்டம் மாறியது. அவளுடைய பாதுகாப்பைக் கருதி அன்றைய பயணத்தை நள்ளிரவுக்கே மாற்றியிருந்தான். அப்படியிருக்க, வரதனுக்கு அது எப்படித் தெரிந்தது?
நடுச்சாமத்தில் அவன் இதற்குத்தான் போகிறான் என்று ஆதிக்குக் கூடத் தெரியாது. அப்படியிருக்க அவன் பயணம் வரதனுக்கு எப்படித் தெரிந்தது?
இது தற்செயலாக நடந்த தாக்குதல் அல்ல. லொறி புறப்பட்ட நேரம், செல்லும் வழி, சரக்கின் முக்கியத்துவம் அனைத்தையும் அறிந்து, இத்தனை துல்லியமாகத் தாக்குதலைத் திட்டமிட்டிருக்கிறான் வரதன். அப்படியானால் இதெல்லாம் அவனுக்கு எப்படித் தெரிய வந்தன?
சரக்குகள் துறைமுகத்தில் வந்து இறங்கியபோதும், இவனே நின்று அனைத்தையும் பார்த்ததை வைத்தும் ஏதோ முக்கியமான பொருள் வந்திருப்பதை அவன் ஊகித்திருக்கலாம். இல்லை யார் மூலமாவது அறிந்திருக்கலாம். இவன் பயணம், குறிப்பாக வவுனியா செல்கிறான் என்பதும், அந்த நேரத்தில் செல்கிறான் என்றும் அவனுக்கு எப்படித் தெரிந்தன?
அவன் முன்கூட்டியே யோசித்துத் தன் ஆட்களைப் பின்னால் வரச் சொன்னதால் சமாளித்திருந்தன. இல்லை என்றால்?
இரவு முழுவதும் அவனுக்குத் தூக்கமில்லை. கிழிந்த உடை, கலைந்த தலைமுடி, இரத்தம் படிந்த தோள்பட்டை என்று அவன் தோற்றமே அந்த இரவின் உக்கிரத்தைச் சொல்லியது. உறக்கமின்மையால் கண்கள் சிவந்திருந்தன. முகத்தில் படிந்திருந்த இறுக்கம் அவனைப் பார்ப்பவர்களுக்கே அச்சத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இருந்தது.
தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் ஆழமானது. இரவு முழுவதும் இரத்தம் கசிந்துகொண்டிருந்ததால் கணிசமான இரத்த இழப்பு ஏற்பட்டிருந்தது. அதற்கான முதலுதவியைக்கூட முறையாகச் செய்துகொள்ளாமல் பயணத்தைத் தொடர்ந்திருந்தான். இப்போது அதன் தாக்கம் மெல்ல மெல்ல உடலில் வெளிப்படத் தொடங்கியிருந்தது.
தலை கனத்தது. பார்வை அவ்வப்போது மங்கியது. உடலுக்குள் ஏதோவொரு வெப்பம் பரவுவதுபோலிருந்தது. காயமடைந்த தோளில் எழுந்த வலியும், இரத்த இழப்பால் ஏற்பட்ட பலவீனமும் அவனைச் சோர்வடையச் செய்தன.
ஆனாலும் அவன் வாகனத்தை நிறுத்தவில்லை.
ஸ்டியரிங்கின் மீது இறுகப் பதிந்திருந்த விரல்களும், முன்னால் நிலைத்திருந்த பார்வையும் மட்டும் அவனுடைய கட்டுப்பாட்டில் இருந்தன. உடல் தளர்ந்துகொண்டிருந்தாலும் மனம் மட்டும் அடங்க மறுத்தது.
அவன் மனத்தில் ஒரே கேள்வி மீண்டும் மீண்டும் எழுந்தது.
அவனுடைய ரகசியப் பயணத்தை வரதனுக்குத் தெரியப்படுத்தியது யார்? அந்தப் பதிலைக் கண்டுபிடிக்காமல் அவனுடைய ஆத்திரம் அடங்கப்போவதில்லை.
இவனை அந்தக் கோலத்தில் கண்டா ஆதி பயந்துபோனான். தான் பயந்தது போலவே நடந்துவிட்டது என்று பதறி ஓடிவந்தான்.
நடந்ததைச் சுருக்கமாகச் சொன்ன கலிங்கன், “ஆள் ஆர் எண்டு எனக்கு இண்டைக்கே தெரிஞ்சாகோணும் ஆதி!” தாழ்ந்த குரலில் சொல்லிவிட்டு வைத்தியரிடம் போனான் கலிங்கன்.
வருணாவின் தலைமை வைத்தியர்தான் அவனுக்கு வைத்தியம் பார்த்தார்.
உள்ளே மரத்துண்டுகள் ஏதேனும் சிக்கியிருக்கின்றனவா, தசை அல்லது நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்று பார்த்து, காயத்தை நன்றாகச் சுத்தப்படுத்தி, தையலிட்டு, ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தி, மருந்துகளையும் செலுத்தினார்.
ஆனாலும் நேரமாக நேரமாக அவன் உடல் கொதிக்க ஆரம்பித்திருந்தது. அதைக் காட்டிலும் அதிகமான கொதிப்பு அவன் உள்ளத்தில். காரணம் ஆதி வந்து சொன்ன செய்தி. வருணா! அவனுடைய வருணா இத்தனைக்கும் காரணமாகிப்போனாள் என்கிற செய்தி அவன் மனத்தைப் புரட்டிப் போட்டது.
அதை ஜீரணிக்க அவன் முயன்றுகொண்டிருக்கையில்தான் அடித்துப்பிடித்து ஓடிவந்து அந்த அறையின் கதவைத் திறந்தாள் வருணா.
“கலிங்கா, என்ன நடந்தது?” என்று பதறிக்கொண்டு ஓடி
வந்தவளைப் பார்த்ததும் அவன் முகம் மேலும் இருகிற்று. அவள் அருகில் வருவதற்கு முன்னரே கையை உயர்த்தித் தடுத்தான்.
“துரோகம் எனக்குப் பழக்கமானதுதான் வருணா. ஆனா உன்னட்ட இருந்து அதை எதிர்பாக்கேல்ல.” என்றான் கசப்புடன்.
அப்படியே நின்றுவிட்டாள் வருணா. அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. துரோகமா? அவளா? “என்ன சொல்லுறீங்க? என்ன துரோகம்?” என்று தடுமாறினாள்.
“முதல் காயத்தக் காட்டுங்க!” என்று அவள் இன்னும் அவனை நெருங்க முயன்றபோது, இரண்டு விரல்களை காட்டி வெளியே போ என்றான் அவன்.
அவமானமும் அதிர்ச்சியும் ஒரே நேரத்தில் தாக்க அப்படியே நின்றுவிட்டாள் வருணா.
அவளுடைய கலிங்கனா இது? அவனா அவளை அவமதிக்கிறான்? அவனால் அது முடிகிறதா என்ன? கண்கள் சட்டென்று குளம் கட்டிவிட, “என்ன நடக்குது கலிங்கா இஞ்ச? ஏன் இப்பிடி எல்லாம் நடக்கிறீங்க? நான் எந்தப் பிழையும் செய்யேல்லையே.” என்று தவித்தாள்.
கலிங்கன் ஆதியைப் பார்த்தான். அவ்வளவுதான்.
ஆதி வருணாவை நோக்கி வந்தான். வருணாவினால் அதையும் நம்ப முடியவில்லை. நொடியில் நிலைகுலைந்து போனாள். கன்னத்தில் கண்ணீர் இறங்க கலிங்கனையே பார்த்து நின்றாள்.
ஆனாலும் ஆதி அவளை நெருங்க நெருங்க அவளின் கால்கள் தன்னாலே பின்னால் நகர்ந்தன. அவள் அறைக்கு வெளியே வந்ததும் அறையின் கதவைச் சாற்றினான் ஆதி.

