கலிங்கனின் காவியம் 48.2

அவளுடைய கலிங்கன்! அவளைத் தன் வாழ்வின் புதையலைப் போன்று பார்த்துக்கொண்டவன்.

இன்று அவளைத் துரோகி என்று சொல்லி, அவள் முகத்தைக் கூடப் பார்க்கப் பிடிக்காமல் விரட்டியடிக்கிறான்.

அவளுடைய கண்களில் கண்ணீர் திரண்டது. அவன் காயப்பட்டிருக்கிறான் என்று அறிந்து ஓடிவந்தவள் ஆழமாய்க் காயப்பட்டு நின்றாள்.

அலட்சியமும் அவமதிப்பும் மிகப்பெரிய ஆயுதங்கள். எத்தனை பெரிய மனிதனையும் வேரோடு சாய்த்துவிடக் கூடியவை. அப்படியிருக்க மென்மையே வடிவான வருணா?

யாரோ ஒருவர் அவற்றைச் செய்தாலே தாங்கிக்கொள்ள முடியாது. அப்படியிருக்க, உயிருக்கு உயிராக நேசித்தவன், அவன் உலகத்திலேயே அவளுக்குத்தான் முதலிடம் என்று உணர வைத்தவன், தன் அன்பால் அவளைத் திக்குமுக்காடச் செய்தவன் அப்படியொரு அவமதிப்பைச் செய்தால்?

வருணா மொத்தமாகவே நொறுங்கிப்போனாள்.

அவனிடம் அவள் தன்னை முழுமையாக ஒப்படைத்தது அவளுக்கு அவனைப் பிடித்துப்போனதால் மட்டுமல்ல. அவன் அன்பின் மீது வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையாலும்தான்.

அப்படிப்பட்டவன் இன்று, அதுவும் ஆதியின் முன்னிலையில், அவளை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் துச்சமாக வெளியேற்றியிருக்கிறான்.

ஆதி வந்து அவளை வெளியே அனுப்பிவிட்டுக் கதவைச் சாற்றிய அந்தக் கணம், யாரோ முகத்தில் அறைந்துவிட்டதைப் போன்றிருந்தது.

அதுவும் ஆதியின் முன்னிலையில், அவளை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் துச்சமாக வெளியேற்றிவிட்டானே. ஆதி வந்து அவளை வெளியே அனுப்பிவிட்டுக் கதவைச் சாற்றிய அந்தக் கணம், யாரோ முகத்தில் அறைந்துவிட்டதைப் போன்றிருந்தது.
அவளால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

இது இரண்டாவது முறை. முதல் முறை நடந்தபோதுகூட அவமானமாகத்தான் இருந்தது. ஆத்திரப்பட்டாள். குமுறினாள். கோபத்தில் கொந்தளித்தாள். அவனிடம் கேள்வி கேட்க வேண்டும், எதிர்த்து நிற்க வேண்டும் என்று மனம் துடித்தது. பிறகு அவனெல்லாம் தனக்கு யார் என்று அவன் செய்தவற்றைத் தூக்கிச் சுமக்கிறோம் என்றெண்ணி தூக்கி எறிந்திருந்தாள்.

ஆனால், இன்றைக்கு அப்படியில்லை.

அவமானமும் ஆத்திரமும் கண்ணீராக மாறிக் கன்னங்களில் வழிந்தன. அவனிடம் கோபப்படுவதற்குக் கூட அவளுக்குத் தெம்பில்லை. அவன் இப்படிச் செய்துவிட்டானே என்கிற வலிதான் அவளுக்குள் பெரிதாக எழுந்தது.

இத்தனை அன்பையும் நம்பிக்கையையும் தந்தவனிடமிருந்தே இப்படி ஒரு அவமதிப்பையும் பெற்றிருக்கிறாள். கூடவே துரோகித் பட்டத்தையும்.

காயத்தைக் கூடப் பார்க்க விடவில்லையே. வருணாவாம். கண்களைத் துடைத்துக்கொண்டு சென்று கணனியில் பதிவேற்றியிருந்த அவன் கோப்பை எடுத்து வாசித்தாள்.

மரக்கட்டையின் கூர்மையான முனை ஆழமாகக் கிழித்திருந்ததால், தோளின் சதைப்பகுதி கணிசமாகச் சேதமடைந்திருக்கிறது. நல்ல காலத்திற்கு காயத்தின் உள்ளே மரத்துண்டுகள் எதுவும் சிக்கியிருக்கவில்லை. தசைகள், நரம்புகள், ரத்தக்குழாய்களும் பாதிக்கப்பட்டிருக்கவிலை.

இருந்தாலும் கணிசமான ரத்த இழப்பு ஏற்பட்டிருந்ததால், அவன் இரத்த அழுத்தம் உயர்ந்து, மிகுந்த காய்ச்சலும் உடல்சோர்வும் அடுத்துவரும் நாட்களுக்கும் இருக்கும் என்று குறித்திருந்தார்கள். ஒரு விரல் நீலத்திற்குத் தையல்.

இதையெல்லாம் அவள் இப்படி அறியும் நிலையில் இருக்கிறாள். ஆனாலும் மனம் கேட்கவில்லை. தலைமை வைத்தியரைச் சந்தித்து அவன் காயம் பற்றி நேரிலும் கேட்டுத் தெரிந்துகொண்டாள்.

அவள் அங்கே அவன் கோப்பில் வாசித்தத்தையே இன்னும் விளக்கமாகச் சொல்லிவிட்டு, “அந்த உடம்பு இன்னும் எத்தின காயத்தை தாங்கும்மா? இது நல்லதில்ல. பின்னால வேற வேற வருத்தங்கள் வரப்பாக்கும். அவரைக் கொஞ்சம் கவனமா இருக்க சொல்லுங்கோ.” என்று அவர் சொன்னபோது அவளுக்கு விழிகள் மீண்டும் கரித்தன.

வார்த்தைகளை நம்ப முடியாமல் ஆம் என்று தலையசைத்துக் கேட்டுக்கொண்டாள்.

“என்னம்மா?” அவளின் கலங்கிச் சிவந்துவிட்ட முகத்தையும் விழிகளையும் பார்த்துவிட்டுக் கேட்டார். மிகவும் கெட்டிக்கார வைத்தியர் அவள். அவர் மெச்சும் ஒருத்தி. அவள் வாழ்க்கை இப்படி அமைந்துபோனதில் அவருக்கும் வருத்தமே. கலிங்கனுக்குப் பயந்து அதை பற்றியெல்லாம் அவர் பேசியதில்லை.

அவளுக்கு இன்னமும் கண்கள் கலங்கிக்கொண்டு வந்தன. “அது அவருக்கு இப்பிடியானது… அதான் டொக்டர்.” என்று சமாளித்தாள்.

புரிகிறது என்பதுபோல் தலையை ஆட்டிவிட்டு, “நீங்களே இனி அவரை டேக் ஓவர் பண்ணுறீங்களா?” என்று கேட்டார்.

அவசரமாக மறுத்தாள். அவளால் அவனை மீண்டும் எதிர்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை துளியும் இல்லை. அவன்பால் சரிந்துவிட்ட அவளுடைய மனம் அதற்கு இடம்கொடுக்காது. அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே விம்மி வெதும்பி அழுது, தன்னுடைய பலவீனத்தை அவனுக்குக் காட்டிக்கொடுத்துவிடும்.

ஆனால், தன்னை இப்படி நடத்தியவனின் முன்னால் தான் உடைந்து நிற்பதை அவள் விரும்பவில்லை.

அதனால், அன்றைய பணிநேரத்தை முடித்துக்கொண்டு வெளியேறப்போவதாக அறிவித்தாள்.

இப்போது அவள் ஒழுங்காகத் தினமும் பணிக்கு வராத காரணத்தால், அவளுடைய இடத்தில் இன்னொரு பயிற்சி வைத்தியர் ஏற்கெனவே நியமிக்கப்பட்டிருந்தார். அவரும் பணியில் இருந்ததால், தலைமை வைத்தியரும் அவளுடைய முடிவுக்கு மறுப்புச் சொல்லவில்லை.

அங்கிருந்து புறப்பட நினைத்தவளுக்கு மீண்டும் கண்ணீர் பொங்கியது. எங்கே போவது?

அவளின் தாய் தந்தையர் வீட்டுக்குச் செல்ல அவளுக்கு அனுமதி உண்டா என்று அவளுக்குத் தெரியவில்லை. இந்தக் கொஞ்ச நாள்களாகத் தன் வீடு என்று உணர ஆரம்பித்தருந்த அவன் மாளிகையில் அவளுக்கு இடம் உண்டா என்கிற கேள்வி இப்போது வந்துவிட்டதால் சத்தமாகவே விம்மிவிடப் பார்த்தாள் வருணா.

போக்கிடம் தெரியாதவளாகச் சிறிது நேரம் நின்றவள், இறுதியில் மருத்துவமனைக் கேண்டீனுக்குச் சென்று ஒரு தேநீரைச் சொல்லிவிட்டு அமர்ந்தாள்.

அழக்கூடாது என்றுதான் நினைத்தாள். ஆனால், அவளுடைய கட்டுப்பாட்டையும் மீறிக் கண்ணீர் கன்னங்களில் வழிந்துகொண்டே இருந்தது.

அவனுடைய முகத்தில் தெரிந்த வெறுப்பும், அதிலிருந்த அந்நியத்தன்மையும், இரண்டு விரல்களால் வெளியே போ என்று சைகை காட்டிய விதமும் அவள் கண்முன்னால் மீண்டும் மீண்டும் வந்து நின்றன.

அவள் அப்படியே உறைந்து நின்றபோது அவன் ஆதியைப் பார்த்த ஒற்றைப் பார்வை, அதற்குப் பின்னர் அவளை நோக்கி வந்த ஆதி, அவளை வெளியே தள்ளி முகத்தின் முன்னே மூடப்பட்ட கதவு என்று ஒவ்வொன்றும் அவள் மனத்திரையில் மீண்டும் மீண்டும் விரிந்தன. ஒவ்வொரு முறையும் அவளுக்குள் ஏதோ ஒன்று சிதறி விழுந்தது.

அவனா? அவனா இப்படிச் செய்தான்? தன்னை இந்தளவுக்கு நோகடிக்க அவனால் எப்படி முடிந்தது? இந்த உலகத்திலேயே தனக்குத்தான் உயர்ந்த இடம் என்பதுபோல அவளை ஆராதித்தவன்தானே அவன்!

அவளுடைய மதிப்பையும் இடத்தையும் அவ்வளவு உயரத்தில் கொண்டுபோய் வைத்தவனும் அவன்தானே! இன்று அதே இடத்திலிருந்து எவ்விதத் தயக்கமுமின்றி அவளைத் தூக்கி எறிந்துவிட்டானே!

தான் அளவுக்கு அதிகமாக உடைந்து போகிறோமோ என்ற எண்ணம்கூட ஒரு கணம் தோன்றியது. ஆனால், அவளை அந்த உயரத்துக்கு அழைத்துச் சென்றதே அவன்தானே! அவ்வளவு அன்பையும் நம்பிக்கையையும் கொடுத்து அவளைத் தன்னில் கரைய வைத்தவனும் அவன்தானே!

அப்படியிருக்க, அவனிடமிருந்து விழுந்த இந்த அடி மட்டும் எப்படி வலிக்காமல் போகும்?

தேநீர் வந்தது. கோப்பையை எடுத்தவள் மெல்ல மெல்லப் பருகினாள். தொண்டையில் அடைத்திருந்த துயரம் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கியதும், அவளுக்குள்ளும் சிறிது தெளிவு பிறந்தது.

தேநீரைப் பருகி முடித்துவிட்டு எழ முயன்றபோது, ஒரு தாதிப் பெண் அவசரமாக அவளை நோக்கி வந்தாள்.

“டொக்டர்! ரூம் நம்பர் 27ல இருக்கிற பேஷண்ட் உங்கள வரச் சொல்கிறார்.” என்று சொன்னாள் அவள்.

அது கலிங்கனின் அறை.

error: Alert: Content selection is disabled!!