ஆனால், அவன் நினைத்ததற்கு நேர்மாறாக அத்தனையும் நடந்துவிட்டிருந்தது. கண்ணில் நீரும் நம்ப முடியாத பார்வையாக அவள் போன அந்தக் காட்சி அவனுடைய நெஞ்சை வாளால் அறுத்தது போலிருந்தது.
இதற்குப் பேசாமல் அவளோடு சண்டை போட்டிருக்கலாம். கோபப்பட்டிருக்கலாம். அவளிடம் தன்னுடைய ஆதங்கத்தைக் கொட்டியிருக்கலாம். நெஞ்சுக்குள் ஏதோவொன்று இறுகியது.
ஆனால், அதையே நினைத்துக்கொண்டு நிற்பதற்கு அவனுக்கு அவகாசம் இல்லை. ஆதி கண்காணிப்புக்கு கேமராக்களை ஆராய்ந்தது நிர்வாகிக்குத் தெரியும். கலிங்கனின் எச்சரிக்கையையும் மீறி இந்தளவுக்குத் துணிந்த நிர்வாகி தப்பிப்பதற்கு முதல் பிடிக்க வேண்டும்.
உடனேயே நிர்வாகியைத் தேடிச் சென்றான். அவனை எதிர்கொண்ட அடுத்த நொடி, எந்த விசாரணைக்கும் விளக்கத்துக்கு இடமளிக்காமல் அவனைப் பிடித்து அடித்து நொறுக்கத் தொடங்கினான்.
அந்த ஆவேசத்தில் தன்னுடைய உடல்நிலையைக்கூட அவன் கவனத்தில் கொள்ளவில்லை. காயமடைந்திருந்த தோள்பட்டையில் அழுத்தம் ஏற்பட்டு, காயத்திலிருந்து கசிய ஆரம்பித்ததைக் கூட அவன் கவனிக்கவில்லை.
அத்தனை ஆத்திரம். அத்தனை ஆவேசம். இறுதியில் நிர்வாகி காலில் விழுந்து கெஞ்சும் நிலைக்குச் சென்ற பிறகுதான் அவனுடைய ஆவேசம் ஓரளவு தணிந்தது.
வரதன் நிர்வாகியைத்தான் இதைச் செய்யச் சொல்லித் தூண்டியிருக்கிறான். பெரும் பணமும் கைமாறியிருக்கிறது. நிர்வாகிக்கு கலிங்கனை எண்ணிப் பயம். பணத்தின் மீதும் ஆசை. அதில் அப்பாவி தாதி பெண்ணிடம் யாருக்கும் தெரியாமல் கைப்பேசியைக் கொண்டுபோய் வருணாவிடம் கொடுக்கச் சொல்லியிருக்கிறான்.
அவனிடமிருந்து தேவையான உண்மைகளைப் பெற்றுக்கொண்டு அறைக்குத் திரும்பியபோதும் கலிங்கனின் மனம் அமைதியடையவில்லை.
வரதனோடு பேசியதை வருணா ஏன் மறைத்தாள்? ஒரு வார்த்தை யொல்லியிருக்கலாமே என்பதுதான் அவனுக்குள் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டிருந்தது.
அப்போதுதான் அந்தக் காட்சி அவன் கண்ணில் பட்டது. வருணா கண்டீனில் அமர்ந்து தேநீர் பருகிக்கொண்டிருந்தாள். இடையிடையே கண்களில் திரண்ட கண்ணீரையும் துடைத்துக்கொண்டிருந்தாள். அவன் பார்வை அவளிடமே நிலைத்துவிட்டது. அதற்குக் காரணம் அவன்தான். அவன் உதடுகள் கோடாய் அழுந்தின.
ஆனால் இன்னுமே வரதனுடன் பேசியதை அவள் மறைத்ததை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவனுக்குக் காயம் ஏற்பட்டதைக்கூட அவன் பொருட்டு கொள்ளவில்லை. வலியைத் தாங்கிப் பழகிய உடலும், எத்தகைய வேதனையையும் மனத்துக்குள் புதைத்துக்கொண்டு கடந்து செல்லும் வலிமையும் அவனிடம் இருந்தன.
ஆனால் அவனுக்காக, அவன் மீது கொண்ட விசுவாசத்துக்காகக் களத்தில் இறங்கி இன்று காயங்களுடன் கிடப்பவர்களின் நிலைதான் அவனை அதிகம் உறுத்தியது. அவர்களில் யாருக்காவது உயிருக்கு ஆபத்தான பாதிப்பு ஏற்பட்டிருந்தால் என்ற எண்ணமே அவனுக்குள் கனத்தது.
அதைவிட, இத்தனை பேரின் உயிரைப் பணயம் வைத்து அனுப்பிய சரக்குக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டிருந்தால்? இழப்பு எவ்வளவு பெரியதாக இருந்திருக்கும்!
அவன் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டதாலும், சரியான நேரத்தில் சுதாரித்துக்கொண்டதாலும் பொருட்களுக்கோ சரக்குகளுக்கோ எந்தச் சேதமும் ஏற்படவில்லை.
இதெல்லாம் அவளால்தானே. அவள் ஒரே ஒரு முறை உண்மையைச் சொல்லியிருந்தாலே போதும். இத்தனை சிக்கல்களையும் தவிர்த்திருக்க முடியும். அந்த ஆதங்கம் அவனை விட்டு அகலவில்லை.
அதற்கென்று அவளை அப்படி அழவிட்டுவிட்டு அவனால் பார்த்துக்கொண்டு நிற்க முடியவில்லை.
பின்புறக் காயத்திலிருந்து கசிய ஆரம்பித்திருந்த இரத்தமும், கையை அளவுக்கதிகமாகப் பயன்படுத்தியதன் விளைவாக உண்டாகியிருந்த வலியையும் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு அவளை வரச் சொன்னான்.
அதைத்தான் கண்டீனுக்கு வந்த தாதிப்பெண் அவளிடம் சொல்லிவிட்டுச் சென்றாள்.
தேநீர் அருந்தியதில் ஓரளவுக்குத் தெளிந்திருந்த மனம் மீண்டும் கலங்கிப்போனது வருணாவுக்கு.
அவனுக்கு காயம் என்றதும் துடித்துப் பதைத்து ஓடியபோது அனுமதிக்காதவன் இப்போது எதற்கு வரச் சொல்லியிருக்கிறான்? அவளை இன்னும் துன்புருத்திப் பார்க்க ஆசையாமா அவனுக்கு? துரோகி என்றானே.
பார்வையை மறைத்த கண்ணீரை துடைத்துக்கொண்டாள். இத்தனை கோபமும் குமுறலும் அவனில் அவளுக்கு இருந்தபோதும் அவனை எதிர்கொள்ளும் தைரியம் இப்போதும் அவளுக்கு இல்லை. அப்படியே சில நொடிகள் அமர்ந்திருந்தாள்.
அங்கே தன்னுடைய அறையில் இருந்த கலிங்கனின் பார்வை மொத்தமும் அவளிலேயே குவிந்திருந்தது. தாதிப்பெண் சொல்லிவிட்டுச் சென்றதும், இரு கைகளாலும் தலையைத் தாங்கியபடி அப்படியே அமர்ந்திருந்த வருணாவைக் கண்டதும் அவனுக்குள் ஏதோவொரு அழுத்தம் உருவானது. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு நெடிய மூச்சுடன் எழுந்து அவள் வருவது தெரிந்தது.
அவன் அறைக்கு வெளியே சில நொடிகள் நின்று ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றினாள் வருணா. கண்களை அழுத்தமாக மூடித் திறந்து, மனத்தை நிலைப்படுத்த முயன்றாள்.
உணர்வுகளுக்கு இடமளிக்காமல் நோயாளியைக் கவனிக்க வேண்டும் என்பதுதானே அவளுடைய மருத்துவத் துறையின் பாலபாடமே!
அந்த எண்ணத்தையே தனக்கான பிடிப்பாகக் கொண்டு உள்ளே நுழைந்தாள். ஆதி அங்கிருக்கவில்லை.
நேராகக் கலிங்கனின் முன்னால் வந்து நின்றாள்.
“வரச் சொன்னனீங்களாம்.” என்றாள் அவனைப் பாராமல்.
அவளின் அழுது சிவந்த விழிகளையும் வீங்கியிருந்த முகத்தையும் பார்த்த கலிங்கனுக்குள் ஏதோ ஒரு உணர்வு மேலெழுந்து வந்து அழுத்தியது.
“வரு…”
சட்டென்று அவனை நோக்கித் தன் பார்வையைத் திரும்பியவள் உள்ளத்தில் பெரும் குமுறல்.
“வரு இல்ல வருணா. வருணாதான் என்ர பெயர்!” என்றாள் உள்ளம் துடிக்க,
குற்ற உணர்வு தாக்கியதில் உதட்டை மடித்துக் கடித்தான் அவன். வரும்மா என்றான் மீண்டும்.
இந்த ஒற்றை அழைப்பில்தானே அவளை வீழ்த்தினான். அவள் உதடுகள் அழுகையில் துடித்தன. நொடியில் முகம் சிவந்து, கண்களில் கண்ணீர் பளபளத்தது. வேண்டாம் என்பதுபோல் தலையை அசைத்து, “தயவுசெய்து இனி அப்பிடிக் கூப்பிடாதீங்க!” என்றாள் உடைந்து கரகரத்த குரலில்.
அவளை நோக்கி ஒரு அடி எடுத்துவைத்தவன் நேராகப் போய்க் கதவைச் சாற்றிவிட்டு வந்தான்.
அவளுக்கு உள்ளம் படபடக்க ஆரம்பித்தது. அவனுடைய எந்த சமாதானத்தையும் ஏற்றுக்கொள்ள கூடாது என்கிற பிடிவாதம் உண்டாயிற்று.
அவள் முன்னே வந்து நின்றான் அவன். அவள் இரண்டடி நகர போக, அவள் இடையை ஒற்றைக் கையால் வளைத்துத் தன்னிடம் கொண்டுவந்தான் அவன்.
“இது ஹொஸ்பிடல்.” என்று விலக முயன்றாள் அவள்.
“நேற்றும் இது ஹாஸ்பிடல்தான்”
நேற்றைய நாளை நினைத்ததுமே அவளுடைய உள்ளம் இன்னும் அதிகமாகத் துடித்தது. விளையாட்டாக அவள் சொன்ன ஒரு வார்த்தைக்காகத் தேடி வந்தானே. அவள் மனத்துடிப்பை புரிந்துகொண்டு அவளை அள்ளி அணைத்து, மார்போடு சேர்த்து ஆறுதல்படுத்தி, முத்தமிட்டு, அவளுடைய சிறு கலக்கத்தைக்கூட இல்லாமல் செய்தானே!
ஆனால் இன்று அதே அவன்தான் அவளை அளவைத்திருக்கிறான்.
அவளுடைய இதழ்கள் துடித்தன. நாசி மேலும் சிவந்தது. அந்த முகத்தைப் பார்க்க முடியாமல் அவளுடைய தாடையைப் பற்றித் தன்னைப் பார்க்கச் செய்தான்.
“ஐயோ கை !” என்று பதறினாள் அவள்.
“அப்ப என்னைப் பார் என்றான் அவன்.
அவளும் பார்த்தான். கலங்கிச் சிவந்திருந்த அந்த விழிகள் சுமந்திருந்த துக்கத்தைக் கண்டு அவன் நொறுங்கிப்போனான்.
அவள் நெற்றி முட்டி விழிகளை மூடிக்கொண்டவனின் உள்ளமும் ஒரு நிலையில் இல்லை.
பழைய நினைவுகள் எல்லாம் கிளறுப்பட்டுவிட்டதாலோ என்னவோ எதையெதையோ நினைத்து அலைபாய்ந்துகொண்டிருந்தான்.
அவன் உள்ளத்துக்கு ஒரு அமைதி வேண்டும். அதைத் தரக்கூடியவள் அவள் மட்டுமே. அவன் தலைகோதி, நெற்றி முத்தம் பதித்து, தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டாள் என்றாலே போதும். அவன் உள்ளம் அமைதியடைந்துவிடும்.
இன்னுமே போகாமல் இருந்த அவள் மீதான ஆதங்கமும், அவளை இப்படிக்கு காயப்படுத்திவிட்டோமே என்கிற குற்றவுணர்ச்சியும் அவனைக் கொன்றன.
அவனிடமிருந்து இப்படியொரு செய்கையை வருணா எதிர்பார்க்கவில்லை. ஒரு கணம் அப்படியே உறைந்து நின்றவள், மெல்ல அவனுடைய கையைத் தன் இடையிலிருந்து விலக்கிவிட்டு அவனைவிட்டு விலகி நின்றாள்.
“ஏன் கூப்பிட்டீங்க?” இப்போது அவனை நிமிர்ந்து பார்த்துக் கேட்டாள்.
அவளையே ஒரு கணம் பார்த்தவன் பதில் சொல்லாமல் தனது தோள்பட்டையைக் காட்டினான்.
அங்கே போடப்பட்டிருந்த கட்டின் மீது ரத்தம் கசிந்து பரவியிருந்தது. அதைக் கண்ட வருணாவுக்கு அதிர்ச்சி.
“என்ன செய்தனீங்க நீங்க? எப்பிடி இப்படி ரத்தம் வருது?”
அவளுடைய குரலில் கோபம் வெளிப்பட்டாலும், கண்களில் அவனுக்கான பதற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது.
அதைக் கவனித்த கலிங்கன் எதுவும் சொல்லாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அவளுக்கு கோபம்தான் வந்தது. ஆனாலும் வாயை இறுக்கி மூடிக்கொண்டு அவன் காயத்தைக் கவனிக்கத் தொடங்கினாள்.
அவன் பார்வை அவள் முகத்திலேயே நிலைத்திருந்தது. அவள் விரல்கள் காயத்தைத் தொடும்போதெல்லாம் அவனுக்குள் ஏதோ ஓர் உணர்வு அலைமோதியது.
அவளும் இயல்பாய் இல்லை. அவன் சட்டையைப் பிடித்து உலுக்கும் அளவுக்கு கோபம் நிறைந்து கிடந்தது. குமுறல்கள் உள்ளத்தில் முட்டி மோதின. ஆனாலும் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் வேலையை மட்டும் பார்த்தாள்.

