அத்தியாயம் 5
கொடவுனில் லொறிகள் எரிந்தபோது அதைக் காப்பாற்ற எடுத்த முயற்சியில் தீக்காயங்கள் உண்டானவர்களையும், அதை எரித்தவர்களோடு உண்டான மோதலில் காயப்பட்டவர்களையும் வைத்தியசாலையில் சேர்த்துவிட்டு, அவர்களுக்குத் துணையாக நின்ற ராயனின் ஆட்கள், அந்தத் தெரு முனையில் இருந்த தேநீர்க் கடையில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தார்கள்.
அப்போது பைக் ஒன்று வேகமாக வந்து நின்றது. அதில் அமர்ந்திருந்த இருவரும் கைக்குட்டையால் முகத்தை மூடி, ஹெல்மெட் அணிந்து இனம் காண முடியாத வகையில் இருந்தனர்.
அதைக் கண்டு முன்னாயத்தமாகத் தேநீர்க் கோப்பைகளை வைத்துவிட்டு, ஆயுதங்களைக் கையில் எடுக்க அவர்கள் முயற்சிக்கையில், “வரதன் அண்ணா மெசேஜ் பண்ணியிருக்கிறார். நிலாவினின்ர ஃபோனை செக் பண்ண சொல்லு!” என்று இவர்களில் ஒருவனைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் பறந்திருந்தார்கள் அவர்கள்.
ஒருகணம் திகைத்து நின்றுவிட்டாலும் அடுத்த கணமே ஓடி வந்து செய்தியை ராயனிடம் சேர்ப்பித்திருந்தான் ராயனின் ஆள்.
நிலாவினியின் இலக்கம் அவர்களின் ஆட்களிடம் மட்டுமல்லாமல், அந்த ஊரில் பலரிடமும் இருந்ததில் அது இலகுவாக வரதனுக்குக் கிடைத்திருந்தது.
அதை ஏன் அவளுக்கு அனுப்ப வேண்டும் என்கிற கேள்விதான் அவன் புருவங்களைச் சுருங்க வைத்தது. அதை விசாரிக்கச் சொல்லி ரகசியமாகத் தன் ஆட்களுக்குச் சொன்னான் ராயன்.
அவளுக்கான பாதுகாப்பையும் இன்னும் பலப்படுத்தினான். அன்று கோபத்தில் சொன்னது போன்று, ஆபத்து எதுவும் வந்தால் சொல்லாமல் இருக்கக் கூடாது என்று அவளுக்கும் கண்டிப்போடு உத்தரவிட்டான்.
நிலாவினியின் நெஞ்சில் கலவரம் சூழ்ந்தது. தன் கைப்பேசியைத் தொடவே பயந்தாள். அவளுக்குப் புதிய கைப்பேசியைப் புது இலக்கத்தோடு வாங்கிக் கொடுத்துவிட்டு, பழையதைத் தானே வைத்துக்கொண்டான் ராயன்.
ராயன் மட்டுமே வரதனைச் சந்திக்கச் செல்வது என்று முடிவானது சூர்யாவுக்குப் பிடிக்கவேயில்லை. நிலாவினியும் தன்னால் முடிந்தவரையில் தடுத்துப் பார்த்தாள்.
ஆனால், எடுத்த முடிவுகளில் உறுதியாக நிற்கிற ராயனை அவர்களால் அசைக்க முடியாமல் போயிற்று.
ராயன் வன்முறையை விரும்பாதவன் அல்லன். அதுவும் வரதனை அடக்கி ஒடுக்குகிற ஒவ்வொரு முறையும் அவனுக்குள் உறுமுகிற ஏதோ ஒரு மிருகத்திற்கு வயிறு நிறைய உணவு போட்டது போன்று நிறைவாக உணர்வான்.
ஆனால், தொடர்ந்து நடக்கும் சண்டைகளால் துறைமுகத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதையும், அது அவர்களின் வணிகத்திற்குத் தடையாக மாறுவதையும் அவன் விரும்பவில்லை.
கூடவே, சூர்யா சொன்னது போன்று ராயனின் ஆதிக்கம் அந்தப் பகுதியில் ஓங்கி நின்றாலும், இந்த நேரடியான மோதல்கள் இரு தரப்புக்கும் பெரிய இழப்புகளை ஏற்படுத்தின. அவனுடைய ஆட்களின், ஊர் மக்களினது நலனையும் கருதி, இந்த முயற்சியை எடுக்க நினைத்தான்.
ராயன்தான் இடத்தைத் தெரிவு செய்து அந்த இலக்கத்திற்கு அனுப்பிவைத்தான்.
நள்ளிரவைத் தாண்டிய நேரம். நகருக்கு ஒதுக்குப்புறமாக, யாருமற்ற பாழடைந்த தொழிற்சாலை வளாகத்தின் பின்புறம், அந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சொன்னது போலவே தனியாக வந்து இறங்கினான் ராயன். அவனது காரின் முகப்பு வெளிச்சம் அந்த இருண்ட வளாகத்தைக் கீறிக்கொண்டு நின்றது.
அந்தப் பாழடைந்த கட்டடத்தின் மையத்தில், ஒரு பெரிய இரும்பு மேசையின் அருகில், கைகளைக் கட்டியபடி நின்றுகொண்டிருந்தான் வரதன்.
அவனது முகத்தில் எந்தவிதப் பயமும் இல்லை என்றாலும், ராயனை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் அந்தத் தருணம் ஒருவிதக் கனமான அமைதியை உருவாக்கியிருந்தது.
இருவருக்கும் மற்றவர்தான் பரம எதிரி. ஒருவரை அழிப்பதையே குறியாகக் கொண்டுதான் அவர்களின் அத்தனை நகர்வுகளும் இருக்கும். அவர்களின் பெரும்பான்மை சிந்தனையைச் சிறை செய்வது மற்றவர்தான். அப்படியிருந்தும் ராயன் தலையெடுத்த பிறகு இதுவரையில் இருவரும் நேரில் சந்தித்துக்கொண்டதில்லை.
ஆனால் இன்று காலமும் நேரமும் அதற்கான சூழ்நிலையை உருவாக்கியிருந்தது.
காரிலிருந்து இறங்கிய ராயன், தன் பொக்கெட்டிலிருந்து சிகரட்டை எடுத்து, வாயில் வைத்துத் தீயை மூட்டினான். தகதகவென்று நெருப்பில் மின்னிய அதன் நுனிக்கு ஒத்ததாக இருந்தது அவன் விழிகளில் இருந்த கூர்மையும் அழுத்தமும்.
தன் நிதானமான நடையில் நடந்து வந்தவனைக் கண்டு, பத்து வருடங்களின் முன்னே தான் பொருட்படுத்தாமல் கடந்துபோன அந்தப் பெடிப்பயலா இன்று தனக்கு நிகராக நிற்கிறான் என்று வரதன் ஒருகணம் திகைத்துத்தான் போனான்.
அவன் நெருங்கியதும் மெல்லிய புன்னகையுடன், “எதையுமே முளைல கிள்ளோணும் எண்டுறதத் திரும்ப திரும்பச் சொல்லுறாய் ராயன்!” என்றபடி அவன் தோளில் தட்டி வரவேற்றான்.
மேசையில் இருந்த ஆஸ்ட்ரேயில் சிகரட்டின் சாம்பலைத் தட்டியபடி, “என்ன கதைக்கோணும்?” என்றான் ராயன் சுருக்கமாக.
வரதனுக்கு ஒரு நொடி முகம் மாறியது. உள்ளே சீற்றம் பெருகியது. ஆனாலும் வேகமாகத் தன் கபடப் புன்னகையால் அதையெல்லாம் மறைத்துக்கொண்டு அவனுக்கு இருக்கையைக் காட்டினான்.
ராயன் அமரவில்லை. அந்த மேசையிலேயே சாய்ந்து நின்றுகொண்டு, நிதானமாகப் புகையை இழுத்துவிட்டபடி வரதனைப் பார்த்தான்.
அதுவே எதற்காகவும் இசைந்துகொடுக்கவோ இறங்கி வரவோ அவன் தயாராக இல்லை என்று சொல்ல, “ஓகே! விசயத்துக்கே வாறன்.” என்று வரதனே இறங்கி வந்தான்.
“நான் உன்னை அடிச்சாலும் நீ என்னை அடிச்சாலும் இழப்பு ரெண்டு பேருக்கும்தான். தொழில், ஆள்பலம் எல்லாமே பாதிக்குது. இதில போலீஸ் இன்னொரு பக்கம். சோ நானும் நீயும் சமாதானமா போறது எங்க ரெண்டு பேருக்குமே நல்லது.” என்றுவிட்டு அவனைப் பார்த்தான்.
சொல்லி முடி என்பதுபோல் அவனையே பார்த்திருந்தான் ராயன். வரதனுக்கு தன் உண்மை முகம் வெளிப்பட்டுவிடுமோ என்று பயப்படுகிற அளவிற்கு இரத்த அழுத்தம் எகிறியது. அந்தளவில் அமைதியாக நின்றே அவன் நிதானத்தைக் குலைத்துக்கொண்டிருந்தான் கலிங்கராயன்.

