கலிங்கனின் காவியம் 5.2

“எனக்கு நீ சளைச்சவனில்ல. உனக்கு நானும் சளைச்சவனில்ல. அதால இனிமேல் துறைமுகத்தில நீ உன்ர தொழிலப் பார், நானும் என்ர தொழிலப் பார்க்கிறன். நான் உன்ர விசயத்துக்க நடுவுல வரமாட்டன், நீயும் வரக்கூடாது.” என்று முடித்தான்.

கையில் இருந்த சிகரெட்டை காலில் போட்டு மிதித்துவிட்டு, “அது நடக்காது!” என்றான் ராயன் சுருக்கமாக.

அவன் நசித்த சிகரெட் தானோ என்று தோன்றியதும், ‘அதச் சொல்ல நீ ஆரடா?’ என்று அவனது கழுத்தைப் பிடிக்கும் ஆவேசம் வந்தது. ஆனாலும், அவன் பலம் அறிந்தவன் என்பதால் நிதானம் முக்கியம் என்று தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.

“இல்லாட்டி இந்தச் சேதம் தொடரும்!” என்றான் அவனும் இலகுவாக.

ராயனின் உதட்டோரம் ஏளனமாய் ஒரு முறுவல் வந்து போயிற்று. “நடக்குறதச் சந்திக்கத் தயாராத்தான் இருக்கிறன்.” என்றான் சர்வசாதாரணமாக.

வரதனுக்கு அவனது போக்கு எரிச்சலைத் தந்தது. ஆனால், தான் நிதானம் இழக்கவே கூடாத நேரம் இதுவென்று உணர்ந்து, “ஏன் ராயா இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறாய்? ரெண்டு பேருமே தொழில்தானே செய்றம்? பிறகு எதுக்கு என்னோட போட்டி போட நிக்கிற? நான் உன்னத் தாக்குறதும், நீ என்ன தாக்குறதும் என்னத்துக்கு? இல்ல, நீ விடாட்டி நான் தொழில் செய்யாம இருக்கப்போறனா? நான் உன்னத் தொந்தரவு செய்ய நினைக்கேல்லையே. நீ உன்ர பாட்டுல இரு, நான் என் பாட்டுல இரு.” என்று அவன் என்ன சொல்லியும் ராயன் மாறவில்லை.

அது வரதனின் பொறுமையைச் சோதிக்க, “அந்தத் துறைமுகத்தில ராஜாவா வாழ்ந்தவன் நான். அங்க இருந்து என்னை நீ வெளில அனுப்பினதுக்கே நான் உன்னை உருத்தெரியாம அழிச்சிருக்கோணும். ஆனாலும் பொறுமையா சமாதானமா போக நினைக்கிறன். அதுக்காக நீ என்ன செய்தாலும் பேசாம இருப்பன் எண்டு நினைக்காத ராயா!” என்று எச்சரித்தான்.

ராயன் சிரித்தான். “இதுக்கு முதல் என்னை நீ அழிக்க நினைக்கவே இல்லையா வரதா?” என்றான் அந்தச் சிரிப்பினூடே.

வரதனாம். ஒரு காலம் இவனிடம் கை கட்டி வாய் பொத்தி நின்றவன். இன்றைக்குப் பெயர் சொல்லிப் பேசுகிறான். அவன் அகங்காரம் ஆணவம் கொண்டு நின்றது. ஆத்திரம் எல்லை மீற, “இதால நீ பெரிய இழப்பை எல்லாம் சந்திப்பாய் ராயா. உனக்கு என்னை பற்றி தெரியேல்ல.” என்றான் எச்சரிக்கும் விதமாக.

“பரவாயில்லை. தெரிஞ்சுகொண்டா போச்சு!” என்று அவன் நிமிர்ந்தபோது, அந்தக் கட்டடத்தின் பின்புறம் இருந்த இருண்ட இரும்புக் கதவு திறந்தது. அதற்குள்ளிருந்து வந்தவளைக் கண்ட ராயன் அப்படியே நின்றான்.

அது நிலாவினி. அவன் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே வரதனின் அருகில் வந்தவள், தயக்கமின்றித் தன் கையை அவனது இடையைச் சுற்றிப் போட்டாள்.

இவனைப் பார்த்து எள்ளலாகச் சிரித்துக்கொண்டே அவளது இடுப்பில் கை போட்டு, இழுத்தணைத்தான் வரதன். அந்த இருவரின் அணைப்பும், நிலாவின் உடல் வரதனின் மார்பில் எந்தத் தயக்கமும் இல்லாமல் மோதுண்டு நின்ற விதமும் இது புது நெருக்கமில்லை என்று சொல்லின.

ராயன் முற்றிலுமாக நிலைகுலைந்தான். “நிலா!” என்று பல்லைக் கடித்து உறுமினான். அவனால் கண் முன்னே நடப்பதை நம்பவோ ஜீரணிக்கவோ முடியவில்லை.

அந்த அதிர்ச்சியிலிருந்து அவன் வெளியே வருவதற்குள் அவன் பின்னால் வந்து நின்ற ஒருவன், தன் கையில் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்து, கொஞ்சமும் தயக்கமின்றி ராயனின் முதுகில் ஆழமாகப் பாய்ச்சினான்.

ராயனின் தேகம் ஒருமுறை முன்னே சென்று வந்தது. அதனோடே திரும்பிப் பார்த்தான் ராயன். அங்கே நின்றது வேறு யாருமல்ல. சூர்யா! அவனது உயிர்த்தோழன்! ஒன்றாய் உறங்கி, ஒன்றாய் உண்டு, இத்தனை காலம் ஒன்றாய் வளர்ந்து, ஒருவருக்கு மற்றவர் தோள் கொடுத்து, உயிராய் வாழ்ந்த அவனுடைய உற்ற நண்பன்.

அந்த அதிர்ச்சியை உள்வாங்கி, உணர்ந்துகொள்வதற்குள் சூர்யா தன் கத்தியை உருவி, துளியும் இரக்கமின்றி, “சொறி மச்சான்!” என்றபடி மீண்டும் ராயனின் வயிற்றிலேயே இறக்கினான்.

வயிற்றைத் துளைத்த அந்தக் குத்தில் ராயனின் உடல் ஒருமுறை தள்ளாடி நின்றது. முகத்தசைகள் அத்தனையும் நடுங்கின. கண்கள் சிவந்து இரத்தக் கட்டிகளாகின. தலை சுற்றியது. பார்வை மங்களானது. சூர்யாவின் தோள்களையே பற்றிக்கொண்டு ஒருமுறை விழிகளை இறுக்கி மூடித் திறந்து பார்வையைத் தெளிவாக்கிக்கொண்டு நிமிர்ந்து, ‘நீயாடா?’ என்கிற கேள்வியைத் தாங்கி சூர்யாவைப் பார்த்தான்.

எத்தனை எதிரிகள் அவனுக்கு முன்னால் வந்து நின்றிருந்தாலும், தன் ஒற்றைக் கையால் அவர்களைத் தடுத்துத் துவம்சம் செய்திருப்பான். ஆனால் இங்கே, எதிரில் நிற்பது வெளி எதிரியல்ல. உற்ற நண்பன். தன் மொத்த நம்பிக்கையும் கண் இமைக்கும் நேரத்தில் துரோகமாய் மாறி நிற்பதைப் கண்டு, உடல் வலியைவிட மனத்தின் அதிர்ச்சி அவனது அத்தனை பலத்தையும் உறிஞ்சியிருந்தது.

எதிர்த்துப் போராட வேண்டும் என்ற எண்ணம் தோன்றாமல், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கூட முயற்சிக்காமல் சூர்யாவின் முகத்தையே பார்த்து நின்றான்.

அவனுடைய அந்த நிலையைக் கண்ட வரதன் கொக்கரித்தான்.

“பாத்தியா ராயா? உன்ர விரலை எடுத்து உன்ர கண்ணையே குத்திட்டன் பாத்தியா? இதுக்குத்தானேடா ஆடாத ஆடாத எண்டு சொன்னான். கேட்டியா?” என்றவனின் எக்களிப்பில் வரதனைப் பார்த்தான். அவன் அகங்காரத்தின் ஆடிக்கொண்டிருந்தான்.

அவன் பார்வை நிலாவினியிடம் தாயிற்று. அவள் முகத்தில் பெரும் துக்கம். கண்களில் கண்ணீர்.

அத்தனையும் அவர்களின் திட்டம்தான். என்றாலும் அவனோடு பழகியிருக்கிறாளே. உண்மையான நேசம் உள்ளே வேரோடிப்போயிருக்கிறதே. இன்னுமே வரதனின் கைக்குள் நின்றபடி அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள்.

நட்பு, காதல் இரண்டும் சேர்ந்து இழைத்த துரோகம் மொத்தமாய் அவனை நிலைகுலையச் செய்ய, வேரறுந்த மரமாக மண்ணில் சரிந்தான்.

அப்போதும் அவன் கண்களை மூடவே இல்லை. அவனுக்கு அந்த துரோகத்தை முழுமையாக உள்வாங்க வேண்டியிருந்தது. அவன் உள்ளம் ஆத்திரம் கொண்டு சீறுவதற்குப் பதிலாக, நடந்ததை இன்னுமே நம்ப முடியாமல் அல்லாடிக்கொண்டிருந்தது.

‘இது நிஜம்தானா? நான் நம்பியவர்களா இதைச் செய்தார்கள்?’ என்கிற பேரதிர்ச்சி அவனது நரம்புகளை உறையச் செய்திருந்தது. அவனது மூளை அந்தத் துரோகத்தின் வலியை ஏற்றுக்கொள்ள மறுத்துத் திகைத்து நின்றது.

அவன் பலமிழந்து வீழவில்லை. துரோகத்தால் வீழ்ந்தான். வேறு யாரும் அதை செய்திருந்தால் கூட இந்தளவில் அவனைப் பாதித்திராது. தனக்கு நிகராக நம்பியவர்கள் செய்த துரோகம் அவனை மொத்தமாக வீழ்த்திற்று.

உயிரின் துடிப்பு அடங்கும் தருவாயில், ஒருமுறை தன் விழிகளை மூடித் திறந்தான். அவனது கண்களின் ஓரத்தில் வழிந்தோடிய கண்ணீர்த் துளிகள், அவன் உடலில் இருந்து கசிந்த செவ்விரத்தத்தோடு சேர்ந்து மண்ணில் கலந்தன.

error: Alert: Content selection is disabled!!