அவனுக்குள் ஓடுவது தெரியாமல், “எவ்வளவு தைரியம் உங்களுக்கு? ஏன் அப்பிடிச் செய்தனீங்க கலிங்கா? அவர் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? இனி நான் எப்பிடி அங்க போவன்? அவரின்ர முகம் பாப்பன்?” என்று ஆதங்கப்பட்டவளுக்கு மனம் ஆறவேயில்லை.
அன்று வைத்தியசாலைக்குள் நுழைந்ததுமே ஏதோ ஒரு வித்தியாசத்தை வருணா உணர்ந்திருந்தாள். வழக்கமான பரபரப்புக்கு மத்தியிலும் அங்கு ஒருவித இறுக்கம் நிலவிக்கொண்டிருந்தது.
என்னவென்று புரியாமல் எதிர்ப்பட்ட தாதிப் பெண்ணிடம் விசாரித்தாள். வைத்தியசாலை நிர்வாகி மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவள் சொன்னதும் வருணா அதிர்ந்துபோனாள்.
யாரிடம் மேலாதிகத் தகவலைப் பெறலாம் என்று யோசித்தபடி நடந்தவளின் வழியில் தலைமை வைத்தியர் எதிர்ப்பட்டார். அவளைக் கண்டதும் அவர் முகம் மாறிப்போயிற்று. சுற்றிலும் ஒருமுறை பார்வையைச் செலுத்திவிட்டு அவளைத் தனியாக அழைத்துச் சென்றார்.
“இது வெளியில் ஆருக்கும் தெரியாது வருணா. ஆனா உங்கட ஹஸ்பண்ட்தான் நேற்று அவரைப் போட்டு அடிச்சிருக்கிறார். அதனாலதான் அவரின்ர காயத்தில இருந்து ரத்தம் கசிஞ்சிருக்கு. இதெல்லாம் என்ன வருணா?” என்றவரின் கேள்வியில் இருந்த அதிருப்தியில் இவள் முகம் கன்றிப்போயிற்று.
“ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, கடைசியா மனுஷனைக் கடிச்ச மாதிரி, இவ்வளவு காலமும் வெளியிலதான் பிரச்சினை பண்ணிக்கொண்டிருந்தார். இப்ப ஹொஸ்பிடலுக்கே வந்திட்டாரா? நான் இப்பிடி உங்களிட்ட கதைக்கிறது அவரின்ர காதுக்குப் போனா, எனக்கும் பிரச்சினை வரலாம். ஆனாலும் சொல்ல வேண்டியது என்ர கடமை எண்டுறதால மட்டும்தான் சொல்லுறன். பார்த்து நடவுங்க.” என்றுவிட்டு அவர் போய்விட
வருணாவினால் அவர் முகம் நிமிர்ந்து பார்க்கவே முடியாமல் போயிற்று.
நிர்வாகியைச் சென்று பார்க்க அவளுக்குத் தைரியம் இல்லை. ஆனால், அப்படிப் பார்க்காமல் இருக்க முடியாது என்று சென்று பார்த்தாள்.
அவளைக் கண்டதும் அவர் முகம் கறுத்துப்போனது. அவளை முறைத்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
தலைமை வைத்தியர் யாருக்கும் தெரியாது என்று சொல்லியிருந்தார். அவளுக்குத் தெரிந்தது போன்று காட்டிக்கொள்ள வேண்டாம் என்றுமிருந்தார். அதில் வருணாவுக்கு அவரிடம் என்ன பேசுவது என்றும் தெரியவில்லை.
ஒருவழியாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு அவர் உடல்நிலையை விசாரித்தாள். மருத்துவப் பரிசோதனைகளையும் கவனித்துவிட்டு, அங்கிருந்து வெளியேறினாள்.
இதற்கெல்லாம் காரணம் அவளின் அருமைக் கணவன். அன்றைய கடமைகளை வழக்கத்தைவிட வேகமாக முடித்துவிட்டு
இதோ நேராக அவன் முன்னால் வந்து நிற்கிறாள்.
“இப்பிடி எப்ப பாத்தாலும் ஏதாவது பிரச்சினை செய்துகொண்டே இருப்பீங்களா கலிங்கா? நாங்க நிம்மதியா வாழவே மாட்டமா? இப்பிடி அடிச்சு, காயப்படுத்தி என்ன கிடைக்கப் போகுது சொல்லுங்க. சொந்த ஹாஸ்பிடல்லயே பேஷண்டா படுத்துக் கிடக்கிறார். எனக்கு அவரோட முகத்தைப் பார்க்கவே ஏலாம இருந்தது. இனி எப்பிடி அங்க வேலை செய்வன்?”
அவள் ஆதங்கத்தை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவன்,
“நேற்று நடந்த அத்தனைக்கும் அவன்தான் காரணம்” என்றான் சுருக்கமாக.
இதை ஏதோ ஒரு வகையில் அவள் எதிர்பார்த்திருந்தாள். அவன் அடிதடிக்காரன்தான். என்றாலும் அவசியமற்று அப்படி நடக்கமாட்டான் என்று ஒரு நம்பிக்கை. அவன் இயல்புகள், குணம் எல்லாம் அதைத்தான் அவளிடம் சொல்லியிருக்கிற. ஆனாலும், “இருக்கட்டுமே! அதுக்காக ஏன் அடிக்கிறீங்க? ஏன் கையை நீட்டப் போறீங்க? கதைச்சுப் பேசி முடிக்க மாட்டீங்களா?” என்று நின்றாள் அவள்.
ஒன்றும் சொல்லாமல் அவளிடம் கையை நீட்டினான் அவன். அவனருகில் சென்றவளைப் பிடித்துத் தனக்கு அருகில் அமர்த்தி, தன் மார்பில் சாய்த்துக்கொண்டான்.
அவளுக்கும் அந்த ஆறுதல் தேவையாக இருந்ததில் அவன் மார்பில் ஒன்றிக்கொண்டாள்.
“உங்களுக்கு எப்பிடி இருக்கு?” அவன் இடுப்பைக் கட்டிக்கொண்டு வினவினாள்.
“பரவாயில்ல.” என்றான் அவன் அவள் முதுகை வருடிக்கொடுத்தபடி.
“ம்! சூடும் கொஞ்சம் குறைஞ்சிருக்கு என்ன?” அவன் தேகத்தின் சூட்டை உணர்ந்தபடி சொன்னாள். அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவள் முகத்தை நிமிர்த்தி உச்சியில் இதழ் பதித்தான்.
சில கணங்களுக்கு அவன் பார்வையையே சந்தித்தவள் நிமிர்ந்து அமர்ந்துகொண்டு, “உண்மையாவே வரதன் அங்கிள் கெட்டவரா கலிங்கா?” என்று வினவினாள்.
அவளுக்குள் இது குறித்த போராட்டம் நடந்துகொண்டே இருக்கிறது என்று புரிந்தாலும் பதில் சொல்லாமல் அவளையே பார்த்தான் அவன்.
“ப்ச் கலிங்கா! உங்களை நம்பாம இல்ல. எனக்கு இத எப்பிடிச் சொல்லுறது எண்டும் தெரியேல்ல. அப்பா எனக்குக் கல்யாணம் பேசின குடும்பம் அது. அவர் விசாரிக்காம இருந்திருக்க மாட்டார். நல்ல குடும்பம் எண்டு தெரியாம என்னை அங்க கட்டிவைக்க நினைச்சிருக்க மாட்டார். அவே நல்லவேதான் எண்டு உறுதியா நம்புறதுக்கு எனக்கு அது ஆண்டே போதுமா இருந்தது கலிங்கா. கூடாத குடும்பத்தில எந்த அப்பாவாவது தன்ர மகளைக் குடுக்க நினைப்பாரா சொல்லுங்க. ஆனா நீங்க இப்பிடிச் சொல்லுறீங்க.” என்றவள் விழிகளில் பெரும் குழப்பம்.
ஒரு நாள் இரண்டு நாள்கள் அல்ல. பல வருடங்களாக நல்லவன் என்று நம்பியிருந்த ஒருவனைப் பற்றிய அவள் நம்பிக்கை உடைந்துபோனதன் வலியும், அதை ஏற்றுக்கொள்ள முடியாத தவிப்பும் அவள் முகத்தில் தெரிந்தன.
அவள் தாடையைத் தாங்கி முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பினான்.
“எப்பவுமே ஒருத்தர் பேசுற வார்த்தைகளுக்கு மட்டும் அர்த்தம் எடுக்கக் கூடாது வரு. அதுக்குப் பின்னால என்ன இருக்கு எண்டு யோசிக்கப் பழகு. மற்ற ஆக்கள் உன்னட்ட காட்டுற முகம் மட்டுமே உண்மையான முகமில்லை. ஒவ்வொருத்தருக்குள்ளயும் நிறைய முகங்கள் இருக்கும்.”
“அப்ப எனக்குமா?” அவள் உடனடியாகக் கேட்ட கேள்வியில் அவன் விழிகளில் மெல்லிய குறும்பு மின்னியது.
அவளை இன்னும் நெருக்கமாகத் தன்னிடம் இழுத்துக் கொண்டவன், அவள் இரு கண்களிலும் மாறி மாறி முத்தமிட்டான்.
“உனக்கு அப்பிடி எந்த முகமும் வேணாம். இந்த ஒரு முகமே போதும். ஆர் என்ன பிழை செஞ்சாலும் அவேய வெறுக்காம, அவேக்குள்ள இருக்கிற நல்லதைப் பார்த்து, அக்கறையா கவனிச்சு, அன்பா நடக்கிற இந்த முகம் மட்டுமே உனக்குப் போதும்.”
அவன் வார்த்தைகளைக் கேட்டவள் உதடுகளைக் ஒரு பக்கமாய்ச் சுளித்தாள். “இனி அதெல்லாம் நடக்காது. நானும் வில்லியா மாறப் போறன். அப்பதான் உங்களோட சரிக்குச் சரியா சண்டை பிடிக்கலாம்.” என்று அவள் கண்ணைப் போட்டு உருட்ட, அடக்க முடியாமல் பக்கென்று சிரித்தான்.
அவள் கோபத்தையும் சேட்டையையும் ரசித்தபடி, அவளின் தலைக்குள் விரல்களை நுழைத்துக் கூந்தலைக் கோதிவிட்டான். அவளோ அவன் மார்பில் சாய்ந்தபடியே இன்னும் அவள் எப்படியெல்லாம் ரவுடியாக மாறப்போவதாகச் சொல்லிக்கொண்டிருந்தாள்.
அத்தனையையும் புன்னகையோடு கேட்டுக் கொண்டிருந்தான் கலிங்கராயன். அவனுக்கு அவள் இப்படியே இருந்தால் போதும்.
தன் மார்பில் சாய்ந்து கைகளுக்குள் அடங்கியிருந்தவளைக் கொண்டவனின் உள்ளம் கனிந்திருந்தது.

