அன்றைக்குப் பிறகு போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட அத்தகைய தொழில்களில் அவன் மீண்டும் ஈடுபடவே இல்லை.
உண்மையில், அந்த அதிகாரிக்கு மட்டுமல்ல, காவல்துறையில் இருக்கும் இன்னும் பல அதிகாரிகளுக்கும் இந்த இருண்ட உலகத்தின் அத்தனை பக்கங்களும் தெரியும்.
யார் என்ன செய்கிறார்கள், யார் எப்படிப்பட்டவர்கள், யார் வெளியில் நல்லவர்கள் போல வேடமிட்டு உள்ளுக்குள் வேறொரு முகத்துடன் வாழ்கிறார்கள், யார் தங்களை மாற்றிக்கொண்டு நேர்மையான பாதையில் பயணிக்கிறார்கள் என அத்தனையும் அவர்களுக்குத் தெரியும்.
ஆனால், தெரிந்திருப்பதற்கும் நிரூபிப்பதற்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி இருந்தது. சட்டத்துக்குச் சாட்சியங்கள் தேவை. அதுவும் நீதிமன்றத்தில் கடைசிவரை நிலைத்து நிற்கக்கூடிய சாட்சியங்கள் வேண்டும். அந்த இரண்டு விடயங்களிலும்தான் பல சந்தர்ப்பங்களில் அவர்கள் தோற்றுப்போய்விடுகிறார்கள்.
அதிகாரத்துக்கும் சட்டத்துக்கும் முன்னால் செல்வமும் செல்வாக்கும் வந்து நிற்கும்போது, உண்மைகள் பலவும் மூடிமறைக்கப்பட்டுவிடுகின்றன. எல்லாவற்றையும் தெரிந்திருந்தும் கண்ணிருந்தும் குருடர்களாகவும், வாயிருந்தும் ஊமைகளாகவும் இருக்க வேண்டிய கையறு நிலை அவர்களுடையது.
அப்படியானவர்களுக்குக் கலிங்கனையும் தெரியும். வரதனையும் தெரியும்.
அப்படிப்பட்ட ஒருவரைத்தான் இப்போது நேரில் சந்திக்க வந்திருந்தான் கலிங்கன்.
அவன் தன்னைத் தேடி வந்திருப்பதே அந்த அதிகாரிக்கு ஆச்சரியமாக இருந்தது. இருப்பினும், அவனை வரவேற்று உபசரித்துவிட்டு, வந்ததற்கான காரணத்தை விசாரித்தார்.
கலிங்கன் வரதனைப் பற்றியும், இதுவரை நடந்தவற்றைப் பற்றியும் சொன்னான்.
அவருமே நடந்த அனைத்தையும் அறிந்துதான் இருந்தார். அதில், “எப்பிடிக் கலிங்கா தப்பி வந்தனி?” என்று, கத்திக்குத்துகளில் இருந்து தப்பித்து வந்ததை வினவினார்.
சிறு முறுவல் ஒன்றுடன், “நான் செய்த ஏதோ ஒரு நல்லது என்னைக் காப்பாத்தியிருக்கு சேர்!” என்று சொன்னான்.
கலிங்கன் யாரையும் அவ்வளவு எளிதில் ‘சேர்’ என்று அழைக்க மாட்டான். சொல்லப்போனால், யாரிடமும் அப்படியொரு மரியாதையை வெளிப்படுத்திப் பேசும் வழக்கமே அவனுக்குக் கிடையாது. அவரைப் போன்ற வெகு சில மனிதர்களிடம் மட்டும் அவன் அணுகுமுறை வேறாக இருக்கும்.
அதிகாரியும் அதை உணர்ந்திருந்தார்.
அதற்குப் பிறகு வந்த காரியத்தைப் பற்றிப் பேசினார்கள். கலிங்கன் அவரிடம் கேட்க வந்ததைக் கேட்டுவிட்டு, சொல்ல வேண்டிய சில விடயங்களையும் தெளிவாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டிருந்தான்.
*****
இரண்டு நாள்கள் கடந்திருந்தன. திருகோணமலைத் துறைமுகத்தை ஒட்டியிருந்த வரதனின் சரக்குக் களஞ்சியம்தான் அவனது வியாபாரத்தின் முக்கியமான மையம். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மட்டுமன்றி, உள்ளூர் வியாபாரிகளின் சரக்குகளும் அங்கு சேமிக்கப்பட்டிருந்தன.
அன்று காலை வழக்கம்போலவே அவன் குடோனின் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. சரக்குகளை ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள் தத்தமது வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, எதுவித முன்னறிவிப்புமின்றிச் சுங்கத்துறையைச் சேர்ந்த அதிகாரிகளின் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் குடோனின் நுழைவாயிலை வந்தடைந்தன. அதிகாரிகளுடன் சோதனை நடவடிக்கைக்கான குழுவினரும் வந்திருந்தனர்.
அவர்களது வருகையைக் கண்டதும் குடோனில் இருந்தவர்கள் சற்றுத் தடுமாறினர். வழக்கமான கண் துடைப்பு ஆவணச் சரிபார்ப்புக்காக வந்தவர்களாக இருக்கலாம் என்றுதான் முதலில் நினைத்தார்கள். ஆனால், அந்த அதிகாரிகள் நேரடியாகக் களஞ்சியப் பகுதிக்குள் நுழைந்து, சரக்குகளைச் சரிபார்க்கத் தொடங்கியபோதுதான் நிலைமையின் தீவிரம் புரிந்தது.
சரக்குகளுக்குரிய ஆவணங்கள் கோரப்பட்டன. சரக்குகளின் இருப்புப் பட்டியல் பெறப்பட்டது. ஒவ்வொரு பகுதியாகச் சோதனையிடத் தொடங்கிய அதிகாரிகளுக்கு ஆரம்பத்திலேயே பல முரண்பாடுகள் தென்பட்டன.
ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த பொருட்களின் அளவுக்கும் அங்கு உண்மையில் இருந்த பொருட்களின் அளவுக்கும் பாரிய வேறுபாடு இருந்தது. சில சரக்குகள் எந்தப் பதிவிலும் இடம்பெறவில்லை. அவற்றுக்கான இறக்குமதி ஆவணங்களைக் கேட்டபோது நிர்வாகத்தினரால் உடனடியாகச் சமர்ப்பிக்க முடியவில்லை.
அதிகாரிகள் அடுத்தடுத்த பகுதிகளுக்குச் செல்ல செல்ல நிலைமை மேலும் சிக்கலானது. வரதனுக்கு அறிவிக்க முயன்றவர்களை அதிகாரிகள் விடவில்லை. எந்த அழைப்பும் அங்கிருந்து போகவோ, வெளியிலிருந்து வருவதற்கோ அனுமதிக்கப்படவில்லை.
முறையான அனுமதி மற்றும் ஆவணங்கள் இல்லாத பொருட்கள் கண்டறியப்பட்டன. அறிவிக்கப்பட்ட சரக்குகளுக்கு அப்பால் மறைக்கப்பட்டிருந்த பொருட்களும் வெளிப்பட்டன.
இதற்கிடையில் செய்தி நிறுவனங்களின் வாகனங்களும் அங்கு வந்து சேர்ந்தன. தொலைக்காட்சி செய்தியாளர்கள், பத்திரிகை நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள் எனப் பலரும் குடோனின் நுழைவாயிலுக்கு முன்னால் குவிந்தனர். கமராக்கள் இயங்கத் தொடங்கின. ஒவ்வொரு நடவடிக்கையையும் பதிவு செய்வதற்காகச் செய்தியாளர்கள் முண்டியடித்தனர்.
ஊடகங்களின் முன்னிலையில் நடைபெற்ற அந்தச் சோதனையை இடையில் நிறுத்தவோ, திசை திருப்பவோ குடோன் நிர்வாகத்தினரால் முடியவில்லை.
வரதனின் பெயர் செய்தியாளர்களின் கேள்விகளில் இடம்பெறத் தொடங்கியது.
மக்களின் சேவகர், ஏழைகளுக்கு உதவுபவர், ஒழுக்கத்துக்குச் சான்றாக மேடைகளில் பேசுபவர் என்று இதுவரை உருவாக்கியிருந்த பிம்பத்துக்குப் பின்னால் இத்தகைய வணிக முறைகேடுகள் மறைந்திருந்தனவா என்ற கேள்வி செய்திகளில் எழத் தொடங்கியது.
சோதனையின் முடிவில், அறிவிக்கப்பட்ட சரக்குகளுக்கு அப்பால் பெருமளவிலான பொருட்கள் இருப்பதும், அவற்றில் சிலவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டது.
செய்தி நிறுவனங்கள் அந்தச் சம்பவத்தை உடனடியாகத் தலைப்புச் செய்தியாக்கின.
“திருகோணமலைத் துறைமுகத்தில் பிரபல தொழிலதிபரின் சரக்குக் களஞ்சியத்தில் அதிரடிச் சோதனை!”
“சுங்க ஆவணங்களில் இல்லாத பெருமளவிலான பொருட்கள் கண்டுபிடிப்பு!”
“மக்கள் சேவகர் என்ற முகமூடிக்குப் பின்னால் மறைந்திருந்த வணிக முறைகேடுகளா?”
“வரதனின் குடோனில் சுங்கத்துறை விசாரணை – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!”
“அப்படியானால் ஏற்கனவே வெளியான வீடியோவில் இருந்ததையும் உண்மைதானா?”
இதையெல்லாம் தன் அறையில் அமர்ந்திருந்து தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த கலிங்கராயன், உதட்டோரத்தில் ஏளனமான சிரிப்பு ஒன்றைச் சிதறவிட்டான்.
வரதன் மீதான ஆத்திரத்தில் அவனுடைய குடோனையே மொத்தமாகக் கொளுத்திவிடலாமா என்றுதான் முதலில் யோசித்தான். ஆனால், அப்படிச் செய்வதால் என்ன கிடைத்துவிடப் போகிறது? அது வெறும் சொத்து அழிப்போடு முடிந்துவிடும்.
அவனிடம் இருக்கும் கோடிக்கணக்கான சொத்துகளோடும், தலைமுறை தலைமுறையாகச் சேர்த்து வைத்திருந்த செல்வத்தோடும் ஒப்பிடுகையில் அந்தக் குடோன் ஒன்றுமே இல்லை. அது வரதனுக்குக் கோபத்தை ஏற்படுத்துமே தவிர, நிரந்தரமான பாதிப்பை உண்டாக்காது.
கலிங்கராயனுக்கு வேண்டியது அதுவல்ல. வரதனின் பலத்தை அழிக்க வேண்டும். அவனைச் சுற்றி அவன் உருவாக்கி வைத்திருக்கும் அதிகாரம், செல்வாக்கு, அரசியல் தொடர்புகள், பணபலம் என்று ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டதைப் போன்றிருக்கும் அந்த வளயத்தை உடைத்தெறிய வேண்டும்.

