கலிங்கனின் காவியம் 53.3

அந்த வளயம்தான் வரதனுடைய உண்மையான பலம்.
அதைவிடவும் முக்கியமானது, அவன் இருப்பதே தங்களுக்குப் பலம் என்றும், அவன் செல்வாக்கின் கீழ் இருந்தால் யாராலும் தங்களைத் தொட முடியாது என்றும் அவனைச் சுற்றியிருப்பவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் அந்த நம்பிக்கையை உடைப்பது.

வரதனுடன் இருப்பதால் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு அவனுடைய ஆட்களுக்கும், அரசியல் தொடர்புகளுக்கும், வணிகக் கூட்டாளிகளுக்கும் ஏற்பட்டுவிட்டால் போதும். ஒவ்வொருவராக அவனை விட்டு விலகத் தொடங்குவார்கள்.

இத்தனை காலமும் அவனைச் சுற்றி அரணாக நின்றவர்கள், தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அவனிடமிருந்து விலகி ஓடுவார்கள். அப்போது வரதன் தனித்து விடப்படுவான். அப்படித் தனித்து நிற்கும் நேரத்தில் அவன் பலம் பாதியாகிவிடும்.

அதன் பிறகுதான் அவனை முழுமையாக வீழ்த்த வேண்டும்.
அவனுக்குப் பயத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊட்ட வேண்டும். அவனுடைய நம்பிக்கையை உடைக்க வேண்டும். இதுவரை எதற்கும் அஞ்சாதவனாகத் தன்னை நினைத்துக்கொண்டிருந்த அவனுடைய துணிச்சலைச் சிறிது சிறிதாக இல்லாமல் செய்ய வேண்டும். எல்லாமே இருந்தும் எதுவுமே இல்லாதவனைப் போல, தன்னுடைய அதிகாரத்தின் நடுவிலேயே கையறு நிலையில் நிற்க வைக்க வேண்டும்.

உடலில் ஏறும் அட்டை இரத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சுவதைப் போன்று, அவன் கட்டியெழுப்பிய ஒவ்வொரு பலத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி, இறுதியில் எதுவுமே எஞ்சாத நிலைக்கு அவனைக் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் அவனுடைய வெறி அடங்கும்.

இந்த எண்ணங்கள் ஒவ்வொன்றாக மனத்துக்குள் ஓடவும் கலிங்கராயனின் முகமே மாறத் தொடங்கியது. சற்று முன்னர் தொலைக்காட்சியைப் பார்த்தபடி ஏளனமாகச் சிரித்துக்கொண்டிருந்தவன், இப்போது ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்தான்.

நடந்த துரோகம் கண்முன்னே வந்து நின்றது. காட்சிகள் ஒவ்வொன்றாக நினைவில் வந்து போயின. அவன் கண்கள் சிவந்தன. தாடை இறுகியது. கைகளின் நரம்புகள் புடைத்தெழுந்தன. தோள்களும் புஜங்களும் இறுக்கமடைந்தன. அவனுக்குள் ஏதோவொரு நெருப்பு கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.

அந்த நேரத்தில் அங்கே எதேச்சையாக வந்த வருணா, அவன் நிலையைக் கண்டு பயந்துபோனாள். இந்த வீட்டுக்கு அவள் வந்த அன்று அவன் மிருகத்தனமாக மாறி, பொருட்களை எல்லாம் போட்டுடைத்துக் கத்தியது நினைவில் வரவும் பயந்துபோனாள்.

“கலிங்கா…”

அவள் குரல் அவனைச் சென்றடையவில்லை.

அவனை நெருங்கி அவன் தோளில் மெதுவாகத் தட்டினாள்.

“கலிங்கா என்ன?”

அந்தத் தொடுதலில் திடுக்கிட்டுத் திரும்பிய கலிங்கன், சில கணங்கள் அவளை வெறித்துப் பார்த்தான். இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு அவனுக்குச் சில நொடிகள் தேவைப்பட்டன. பின்னர்தான் அவனது பார்வை தெளிவடைந்தது.

“என்ன?” என்றான் தன் கனத்த குரலில்.

“என்ன என்ன? ஏன் இப்பிடி இருக்கிறீங்க?” என்று கேட்டாள் அவள்.

முகத்தைத் தன் இரு கைகளாலும் அழுத்தித் துடைத்தவன் ஒன்றுமில்லை என்று தலையை அசைத்தான்.

அவளுக்குப் பயம் காட்டிவிட்டு ஒன்றும் இல்லையாம். அவளுக்குக் கோபம் வந்தது. “ஒண்டும் சொல்ல மாட்டீங்க என்ன? எனக்கு வாற ஆத்திரத்துக்கு…” என்று பல்லைக் கடித்தவள் அவன் கழுத்தைத் தன் இரு கைகளாலும் நெறிக்க வந்தாள்.

அந்தக் கைகளை பற்றி இழுத்து அவளைத் தன் மார்பில் மாலையாக்கிக்கொண்டான் அவன். “என்ர மயக்கி இப்ப என்னத்துக்கு கோவப்படுறாள்?” அவள் கன்னத்தில் புதைந்தபடி முணுமுணுத்தான்.

“என்ன பிரச்சினை கலிங்கா?” பார்வையைத் தொலைக்காட்சி புறம் திருப்ப முயன்றபடி வினவினாள்.

அதற்கு விடாமல் அவளைத் தன்னையே பார்க்க வைத்து, “நீதான் பிரச்சினை. கை கை எண்டு சொல்லியே என்னைக் கிட்டவும் விடேல்ல நீ!” என்று குறை படித்தான் அவன்.

“ஓ! அப்ப நீங்க கிட்ட வரேல்ல?” அவள் அவனை முறைத்துக்கொண்டு வினவினாள்.

“ம்ஹூம்!”

“ஒண்டும் நடக்கேல்ல?”

அவன் உதட்டைப் பிதுக்கினான்.

“இந்த வாய் இருக்கே வாய்! பொய் பொய்யா சொல்லுது!” என்று அவன் வாயிலேயே அடி போட்டாள் அவள்.

அந்தக் கையையே பற்றி இதழ் பதித்துவிட்டு, “அப்ப என்ன நடந்தது எண்டு நீதான் சொல்லன்?” என்றான் அவன்.

சொல்கிற வேலைகளையா அவன் பார்த்தான். அவள் முகத்தில் செம்மை படர்ந்தது. கலிங்கன் உதட்டில் முறுவல்.
அவளைத் தன்னுடன் சேர்த்தணைத்தவன் மெதுவாக அவள் இதழ்களில் முத்தமிட்டான். அவசரமற்ற, அழுத்தமற்ற அந்த முத்தத்தில் அவன் மனம் முழுவதும் அவள் மட்டுமே நிறைந்திருந்தாள்.

சற்றுமுன்னர் அவனுக்குள் கொந்தளித்த எந்தக் கொதிப்புணர்வுகளும் இல்லை. மெல்ல விலகி அவள் முகம் பார்த்தான்.

கன்னங்களில் படர்ந்திருந்த செம்மையும், அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் மூடிக்கொண்ட விழிகளும், முத்தத்தின் ஈரம் இன்னும் தங்கியிருந்த இதழ்களும் அவன் நிதானத்தைச் சோதித்தன.

அவன் அணைப்பு இறுகியது. மீண்டும் அவள் இதழ்களைத் தனதாக்கிக் கொண்டான். இம்முறை முத்தத்தில் ஆழம் கூடியிருந்தது. அவள் நாணம் மெல்லக் கரைந்து, அவளும் அவன் அணைப்புக்குள் தன்னை ஒப்படைத்தாள். அந்த நெருக்கம் அவனுக்குள் அடக்கி வைத்திருந்த நேசத்தையும் வேட்கையையும் ஒருசேரத் தூண்டியது.

“கலிங்கா… கை!” அவளின் மெல்லிய நினைவூட்டலில் அவன் உடல் சிரிப்பில் குலுங்கிற்று. இந்தச் சில நாள்களாக அவன் நெருங்கினால் அவள் வாயில் வரும் வார்த்தைகள் இவைதான்.

நிதானத்துக்கு வந்து, அவளிடமிருந்து மெதுவாக விலகினான். ஆனால் அவளை விட்டு முழுமையாக விலக முடியவில்லை.

அவள் முகத்தில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டு ஆழமாக மூச்செடுத்தான். அவள் நறுமணமும் அண்மையும் அவன் கட்டுப்பாட்டை மீண்டும் சோதித்தன.

அவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டு, காயமடைந்த கையை அசைக்காமல் அவள் முதுகை மெதுவாக வருடினான்.

அவளுக்கு ஏதோ பிரச்சனை ஓடுகிறது என்று புரியாமல் இல்லை. அதைச் சொல்லி அவளைக் கலக்கத்தில் ஆழ்த்த விரும்பாமல் பேச்சையே மாற்றிவிட்டான் என்றும் தெரியாமல் இல்லை.

என்னவோ அவனாகச் சொல்லப் பிரியப்படாதது அவளுக்குத் தெரியாமலேயே இருக்கட்டும் என்று எண்ணினாள் வருணா. என்ன நடந்தாலும் அவன் பார்த்துக்கொள்வான் என்கிற நம்பிக்கை வேறு. அதில் அவன் முகத்தைத் தன் கரங்களில் தாங்கிப் பார்த்தவள், அவன் உதட்டில் அழுத்தமாய் முத்தமிட்டு விலகினாள்.

அதே நேரத்தில் கலிங்கராயன் கடைசியாக ஓட்டிச் சென்றிருந்த வரதனின் லொறியில் போதைப்பொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அந்த வாகனத்தைக் கைப்பற்றியிருந்தனர்.

அந்தச் செய்தியும் அடுத்த பரபரப்புச் செய்தியாக சமூகவலைத்தளங்கள், தொலைக்காட்ச்சிகள் என்று வெளியாகத் தொடங்க, வரதன் மொத்தமாக நிலைகுலைந்துபோனான்.

error: Alert: Content selection is disabled!!