அத்தியாயம் 54
ஏற்கெனவே வரதனின் களஞ்சியத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையும், அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் பதிவாகாத சட்டவிரோதப் பொருட்கள் தொடர்பான காணொளிகளும் பெரும் பேசுபொருளாகியிருந்தன.
அதோடு சேர்த்து பழைய உப்புவெளி கடற்கரை ஹோட்டல் தொடர்பான காணொளியும் மீண்டும் மக்கள் மத்தியில் பரவி என்று அவன் பெயர் ஏற்கெனவே பல்வேறு சர்ச்சைகளில் அடிபட்டுக்கொண்டிருந்த நிலையில், அவன் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த லொறி ஒன்றில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருக்கிறதாம் என்கிற செய்தி வந்திருந்தது.
வரதன் மிருகமாகவே மாறிப்போனான். அவன் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு அழைத்து, இத்தனையும் நடக்கும் வரையில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என்று காதினால் கேட்க முடியாத வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.
தங்களின் கையை மீறித்தான் அத்தனையும் நடந்திருக்கிறது என்று அவர்கள் சொன்ன விளக்கத்தை அவன் ஏற்பதாக இல்லை.
அவனிடம் இருந்த சரக்குகளுக்குச் சொந்தக்காரர்கள் விடயம் அறிந்து அழைப்புக்கு மேல் அழைப்பு விடுத்து கேள்விக்கு மேல் கேள்விகளாகக் கேட்டு அவனை உண்டில்லை என்றாக்கினர்.
ஆரம்பத்தில் பொறுமையாகப் பதில் சொன்னவன் போகப்போக எரிச்சலடையத் தொடங்கினான்.
அவனோடு நீண்டகாலமாகத் தொடர்பில் இருந்த அதிகாரிகளும், அரசியல் செல்வாக்கு மிக்கவர்களும், வியாபாரத் தொடர்புகளைக் கொண்டவர்களும் கூட அழைத்தார்கள்.
என்ன நடந்துகொண்டிருக்கிறது, ஏன் தொடர்ந்து உன் பெயர் செய்திகளில் அடிபடுகிறது, அனைத்தும் உண்மையா, அந்தக் கலிங்கனை எதற்காக விட்டுவைத்திருக்கிறாய் என்று எல்லோரிடமிருந்தும் ஒரே மாதிரியான கேள்விகள்.
இனிமேலும் இது தொடர்ந்தால் தங்களால் உதவ முடியாது என்றும், பிறகு அவர்கள் பெயரும் கெட்டுப்போய்விடும் என்றும், ஏற்கெனவே சில இடங்களில் இருந்து தங்களுக்கு அழுத்தம் வரத்தொடங்கிவிட்டதாகவும் எச்சரித்துவிட்டு வைத்தார்கள்.
ஒரு காலத்தில் அவனின் ஒரு அழைப்புக்காகக் காத்திருந்தவர்கள் இப்போது அவனை எச்சரிக்கிறார்கள்.
அந்த மாற்றம் அவனுக்குப் பெரும் அவமானமாக இருந்தது.
தன்னுடைய பணமும் அதிகாரமும் செல்வாக்கும் எப்போதும் தனக்குக் கவசமாக இருக்கும் என்று நம்பியிருந்தவனுக்கு, முதன்முறையாக அவை அனைத்தும் கைகொடுக்க மறுப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.
ஒவ்வொரு அழைப்பும் அவன் இயலாமையை நினைவூட்டுவதாகவே இருக்க, ஆத்திரத்தில் கைப்பேசியை அணைத்து மேசையில் வீசியெறிந்தான்.
எல்லாவற்றுக்கும் காரணம் கலிங்கராயன்! அந்தப் பெயரை நினைத்த மாத்திரத்திலேயே அவன் நரம்புகள் புடைத்தன. அவன்தான் அத்தனையையும் திட்டமிட்டு ஒரு பொறிக்குள் இவனைத் தள்ளிக்கொண்டிருக்கிறான்
ஒருகணம் நிதானமாகச் சிந்தித்திருந்தால், பல கேள்விகள் அவனுக்குள் எழுந்திருக்கும். அதற்கான பதில்களையும் மிக இலகுவாகவே கண்டுகொண்டுமிருப்பான்.
ஆனால், இப்போது அவன் நிதானத்திலேயே இல்லை.
கலிங்கன் மீதான பழைய பகை, அண்மைக்காலத் தோல்விகள், தொடர்ந்து ஏற்பட்ட அவமானங்கள் என்று அத்தனையும் சேர்ந்து அவன் சிந்தனையை மழுங்கடித்திருந்தன. தோல்விகளும் அவமானங்களும் அவன் விவேகத்தை விழுங்கியிருந்தன.
அவன் முகம் கோபத்தில் விகாரமடைந்திருந்தது. கண்கள் சிவந்து, தாடை இறுகியிருந்தது. அவனுக்கு இப்போது வேறெதுவும் முக்கியமில்லை. தன்னைச் சுற்றியிருந்தவர்கள் ஒவ்வொருவராக விலகினாலும் பரவாயில்லை. செல்வாக்கு மிக்கவர்கள் உதவ மறுத்தாலும் பரவாயில்லை. அதிகாரிகள் கைவிட்டாலும் பரவாயில்லை. முதலில் கலிங்கராயனை முடித்துவிட வேண்டும்.
அவனை முடித்துவிட்டால் மற்ற அனைத்தையும் நொடியில் பெற்றுவிடுவான். அவன் அழிவைப் பார்த்த பிறகுதான் தனக்கு நிம்மதி கிடைக்கும் என்ற வெறி அவனுக்குள் வளர்ந்துகொண்டிருந்தது.
அடுத்தது என்ன செய்வது? யாரை அணுகுவது? எப்படி இந்தப் பிரச்சினையிலிருந்து வெளியேறுவது? எதற்கும் அவனிடம் தெளிவான பதில் இருக்கவில்லை.
ஆனால், கலிங்கனை அழிக்க வேண்டும் என்ற ஒரேயொரு முடிவு மட்டும் அவனுக்குள் தெளிவாக இருந்தது.
அவனை உயிரோடு விட்டுவைக்கும் ஒவ்வொரு நாளும் தனக்கான இன்னொரு அவமானம் உருவாகிக்கொண்டிருப்பதாகவே உணர்ந்தான்.
அவன் ஆத்திரம் இப்போது வெறும் பகையல்ல. தன்னுடைய அதிகாரமும் செல்வாக்கும் தன்னைப் பாதுகாக்கத் தவறிவிட்டன என்ற இயலாமையிலிருந்து பிறந்த கொலைவெறியாக மாறிக்கொண்டிருந்தது.
கலிங்கனின் பலம் எங்கே இருக்கிறது என்று தேட ஆரம்பித்தான். அவன் ஆட்கள், அவன் தொழில், அவனுடன் நெருக்கமாக இருப்பவர்கள் என ஒவ்வொன்றாக அவன் நினைவுக்குள் வந்தன.
*****
வரதனுடைய ஆட்களால் தாக்கப்பட்டுக் கடுமையாகச் சேதமடைந்திருந்த கலிங்கனின் லொறி, பழுதுபார்ப்பதற்காக கனரக வாகனங்கள் பழுதுபார்க்கும் கராஜிற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
அங்கே ஒரு பக்கமாக நிறுத்தப்பட்டிருந்த லொறியின் முன்பக்கப் பகுதி திறக்கப்பட்டு, சேதமடைந்த உதிரிப்பாகங்கள் கழற்றப்பட்டிருந்தன.
சில மெக்கானிக்குகள் வாகனத்தின் அடிப்பகுதியில் வேலை செய்துகொண்டிருக்க, மற்றவர்கள் கழற்றப்பட்ட பாகங்களைப் பரிசோதித்துக்கொண்டிருந்தார்கள்.
லொறியின் வெளிப்புறத்திலும் தாக்குதலால் ஏற்பட்டிருந்த சேதங்களைச் சரிசெய்யும் பணிகள் ஆரம்பமாகியிருந்தன.
கலிங்கன் லொறியின் அருகில் நின்று பழுதுபார்க்கும் வேலைகளைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தான்.
அவ்வப்போது மெக்கானிக்குகள் சுட்டிக்காட்டிய பகுதிகளை உற்றுப் பார்த்து, வேலைகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதைக் கவனித்தான். அப்போது அங்கே வந்தான் ஆதி.
கலிங்கன் தன் பார்வையை லொறியிலிருந்து விலக்கி ஆதியின் பக்கம் திருப்பினான். ஆதியின் முகத்தில் ஏதோ முக்கியமான தகவலைக் கொண்டுவந்திருந்ததற்கான தீவிரம் தெரிந்தது. அதைக் கண்டு தன் புருவங்களைச் சுருக்கினான் கலிங்கன்.
“ஒரு நியூஸ் அண்ணா.”
முக்கியமல்லாதவற்றுக்கு அவன் இப்படிப் பதற்றமாக இருக்க மாட்டான் என்று தெரியுமாதலால் தனியாக அழைத்து வந்து விசாரித்தான் கலிங்கன்.
தன் கைப்பேசியை எடுத்து, போதைப்பொருளோடு பிடிபட்ட லொறி பற்றிய காணொளியை அவனுக்கு காட்டினான் ஆதி.
“கடைசியா நீங்கதான் அண்ணா அந்த லொறி ஓட்டி வந்தனீங்க. அத வச்சு உங்கள மாட்டிவிடுற ஐடியாவில வரதன் செய்திருக்கிறான். அவனை என்ன அண்ணா செய்யலாம்? மொத்தமா முடிச்சு விடுவமா? ஒரு வார்த்த ஓம் எண்டு சொல்லுங்க, நானே இறங்கி முடிச்சிட்டு வாறன்.” என்று கொந்தளித்தான் ஆதி.

