அவனுக்கு மாறான நிதானத்தோடு அவன் கைப்பேசியை வாங்கி அந்த வீடியோவை இன்னொரு முறை நிதானமாகப் பார்த்தான் கலிங்கன்.
கைப்பேசியை அவனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு, கண்களை மூடி நெற்றியை ஒற்றை விரலினால் தேய்த்துவிட்டபடி அந்தச் செய்தியை மீண்டும் ஒருமுறை மனத்துக்குள் ஓட்டிப் பார்த்தான். பின் ஆதியின் புறம் திரும்பி, “இத வரதன் செய்யேல்ல!” என்றான்.
ஆதிக்குப் புரியவில்லை. “வேற ஆர் அண்…” என்று கேட்கப்போனவனின் விழிகள் விரிந்தன. நம்ப முடியாமல் கலிங்கனைப் பார்த்தான்.
ஆம் என்று தலையை அசைத்தான் கலிங்கன்.
“வரதன்ர பெயர்ல இருக்கிற லொறிய நான் கடைசியா ஓட்டியிருக்கிறன். இத நானும் செய்யப்போறேல்ல, வரதனும் செய்யப்போறேல்ல. எங்க ரெண்டு பேர்ல ஆர் செய்தாலும் பிரச்சினை ரெண்டு பேருக்கும் வரும் எண்டு ரெண்டு பேருக்குமே தெரியும். அப்பிடி இருந்தும் இப்பிடி ஒண்டு நடந்திருக்கு. சோ, நான் வரதனையும் வரதன் என்னையும் சந்தேகப்படுவான் எண்டு யோசிச்சு சூர்யா செய்திருக்கிறான்.”
ஆதிக்கு அதற்குமேல் கலிங்கன் விளக்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை. அப்படி இருவரும் ஒருவரையொருவர் சந்தேகப்படுவார்கள். அந்தச் சந்தேகத்தில் ஒருவரை ஒருவர் அழிக்க முயற்சிப்பார்கள். அதற்கு நடுவில் தன்னை யாரும் நினைத்துப் பார்க்க மாட்டார்கள் என்று சூர்யா நினைத்திருக்கிறேன்.
ஆதி கொதித்துப்போனான். “நீங்க விட்டு வச்சதுதான் அண்ணா இதுக்கு காரணம். அவனை நீங்க திரும்பி வந்த நேரமே முடிச்சிருக்கோணும்.”
உண்மைதான். அவன் எழுந்து வந்தபோதே அவனை அழித்திருக்க வேண்டும். ஆனால், மரணம் என்பது ஒரே கணத்தில் முடிந்துவிடும் தண்டனை. சூர்யா செய்த துரோகத்திற்கு அது தண்டனை அல்ல. இன்னும் சொல்லப்போனால் அவன் அனுபவிக்க வேண்டிய நரகத்திலிருந்து காப்பாற்றுவதாகிவிடும்.
உணர்ச்சிவசப்படுகிறவன் தலைவனாக முடியாது. கோபத்தை வெளிக்காட்டுகிறவன் தன் பலவீனத்தை வெளிப்படுத்துகிறான். அதை உள்ளுக்குள் புதைத்து, எதிரியின் பலவீனமான தருணத்திற்காகக் காத்திருந்து காயை நகர்த்துகிறவன்தான் உண்மையான தலைவன்.
கலிங்கராயன் வீரன். ஒவ்வொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுப்பவன் அல்ல. தனக்கு விழுந்த ஒவ்வொரு அடியையும் நினைவில் வைத்துக்கொண்டு, திருப்பிக் கொடுக்க வேண்டிய நேரத்தைத் தானே தீர்மானிப்பவன்.
அவன் ஆத்திரம் சத்தமிடுவதில்லை. அது அமைதியாகத் திட்டமிடுவது.
சூர்யாவைத் தண்டிக்க வேண்டும். அவனுக்கு நரகத்தைக் காட்ட வேண்டும். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அந்தத் தண்டனையை அவன் கொடுப்பதை விடவும் யாருடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு இவனை அளிக்க முயன்றானோ அவன் மூலமே கொடுக்க வைத்தால்?
கலிங்கனின் உதடுகளில் மெல்லியதொரு வக்கிரப் புன்னகை அரும்பிற்று.
தொடர்ச்சியான அவமானங்கள், சரக்குக் கிடங்கில் நடந்த சோதனை, ஊடகங்களில் பரவிய காணொளிகள், இப்போது அவனுடைய லொறியில் போதைப்பொருள் சிக்கியிருப்பது என அடுத்தடுத்த அடிகள் அத்தனையும் வரதனை நிலைகுலையச் செய்திருக்கும்.
அப்படி, இன்றைக்கு அவன் இருக்கும் நிலையில், அவனுடைய கோபத்துக்கு ஒரு இலக்கு கிடைத்தால், அதன் விளைவு எவ்வளவு கொடூரமாக இருக்கும் என்பதை கலிங்கனால் ஊகிக்க முடிந்தது.
அந்த எண்ணமே அவனுக்குள் மிகுந்த திருப்தியை உண்டாக்கிற்று.
அதில், சூர்யா யாரைச் சந்தித்தான், யாருடன் தொடர்பில் இருந்தான், லொறி கைப்பற்றப்படுவதற்கு முன்னர் அவனுடைய நடமாட்டம் என்னவாக இருந்தது என்பதையெல்லாம் சத்தமே இல்லாமல் திரட்டச் சொன்னான். அத்தனையும் கிடைத்ததும் அவற்றை வரதனுக்கு அனுப்பப் சொன்னான்.
நொடியில் அவன் திட்டத்தை ஊகித்துவிட்ட ஆதி, “அண்ணா!” என்றான் ஆச்சரியம் தாங்காமல்.
அவன் தோளில் தட்டி அவனை அனுப்பிவைத்த கலிங்கனின் பார்வை வான்வெளியில் நிலைத்தது. முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. இங்கே தன்னோடு இளைந்துகொண்டு அங்கே இன்னொருவனோடு உறவில் இருந்தவளின் நினைவு அவனுக்குள் கசந்தது.
அந்த நினைவையே வெறுத்தவன், அதிலிருந்து மனத்தைத் திசைதிருப்பும் விதமாகக் கைப்பேசியை எடுத்தான். அவன் விரல்கள் தன்னிச்சையாகப் புகைப்படத் தொகுப்பைத் திறந்து, கண்டிக்குச் சென்றிருந்தபோது எடுத்த புகைப்படங்களைத் தேடின.
அவன் வாழ் நாளில் என்றைக்குமே மறக்க முடியாத இனிய பயணம் அந்தக் கண்டிப் பயணம். வீட்டிலேயே அடைந்து கிடக்கிறாள் என்றுதான் அழைத்துப்போனான்.
ஆனால், அவன் உலகம் அழகாக மாறியது அங்கேதான். அங்கே வைத்துத்தான் அவர்களின் நேசம் பற்றிக்கொண்டது. அந்த விருப்பம் மெல்ல மெல்ல ஆழமான ஈர்ப்பாகவும், நெருக்கமாகவும் மாறிய நாட்கள் அவை.
ஒவ்வொரு புகைப்படத்திலும் அந்த நெருக்கம் அப்பட்டமாகத் தெரிந்தது. அவள் அவன் தோளோடு ஒட்டிக்கொண்டு நின்றிருந்தாள். அவள் விழிகளில் அவன் மீதான மயக்கமும் விருப்பமும் அப்பட்டமாகத் தெரிந்தன.
சில புகைப்படங்களில் அவன் அவளை அணைத்தபடி இருந்தான். வேறு சிலவற்றில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்த விதமே அவர்களுக்கிடையிலான ஈர்ப்பைச் சொல்லியது.
புகைப்படம் எடுக்கப்படும் ஒவ்வொரு கணத்திலும் ஒருவரை ஒருவர் நெருங்கிக்கொண்டே இருந்தவர்கள், அந்த நெருக்கத்திலிருந்து விலக மனமில்லாதவர்களாகவே தெரிந்தார்கள்.
அந்தப் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்த கலிங்கனின் முகத்தில் மெல்லிய புன்னகை படர்ந்தது.
கள்ளம் கபடமில்லாத உள்ளத்துக்குச் சொந்தக்காரி அவள்.
இருபத்தொன்பது வயதை நிறைவு செய்திருந்தாலும், அவளுடைய உலகம் அதுவரை மிகவும் பாதுகாப்பானதாகவும் அழகானதாகவும் மட்டுமே இருந்திருக்கிறது. ஆபத்துகளும் வஞ்சகங்களும் நெருங்காத சிறிய உலகம்.
அதனாலேயே வயதில் வளர்ந்திருந்தாலும், உள்ளத்தால் இன்னமும் குழந்தையாகவே இருந்தாள்.
அவளுக்கு இப்போது ரவுடியாக வேண்டும் என்கிற ஆசை வேறு!
அந்த நினைப்பு வந்ததும் அவன் உதடுகளில் புன்னகை இன்னும் விரிந்தது. சற்று முன்னர் வரை மனத்துக்குள் கொந்தளித்துக்கொண்டிருந்த வெறுப்பும் கசப்பும் இப்போது இருந்த இடம் தெரியாமல் மறைந்திருந்தன.
அவள் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தவனின் மனம் மெல்ல அமைதிக்குத் திரும்பியது. அவனுக்குள் எத்தனை புயல்கள் வீசினாலும், அவற்றையெல்லாம் அடக்கிவிடும் அமைதி அவளிடம் மட்டுமே இருந்தது.
*****
சிவசுந்தரி அம்மாவால் இன்னமும் மகளின் வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மகள் கணவனாகிப் போனவனோடு மனமொத்து வாழத் தொடங்கிவிட்டால் என்று ஊகித்ததிலிருந்து அவர் கலக்கம் அதிகரித்துப்போனதேயொழிய அகலவில்லை.
பிரச்சனைக்கு மேல் பிரச்சனை, காயத்துக்கு மேல் காயம் என்று ஆபத்துகளுக்கு மத்தியிலேயே வாழ்க்கையை நடத்திக்கொண்டிருப்பவனோடு அவள் வாழ்க்கை பிணைக்கப்பட்டுவிட்டதே என்ற கவலை அவரை உள்ளுக்குள் அரித்துக்கொண்டிருந்தது.
அவருக்கிருந்த ஒரே ஆறுதல் கோயில் குளங்கள்தான். அவள் வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும். மருமகனாகிப் போனவன் மனம் திருந்த வேண்டும். அவன் மனத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டு, இந்த ஆபத்தான வாழ்க்கையிலிருந்து விலகி அமைதியானதொரு வாழ்க்கையை வாழ வேண்டும். இப்படித்தான் ஒவ்வொரு நாளும் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்.
அன்றைக்கும் அப்படித்தான் வீட்டிலிருந்து சற்றுத் தொலைவிலிருந்த அம்மன் கோயிலுக்கு வந்திருந்தார். மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் என்று பெயர்பெற்ற அந்தக் கோயிலில், தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமைகள் விரதமிருந்து வழிபட்டால் வேண்டியது கைகூடும் என்று யாரோ சொல்லியிருந்தார்கள்.
அதைக் கேள்விப்பட்டதிலிருந்து தொடர்ந்து கோயிலுக்கு வந்துகொண்டிருந்தார். இன்றுடன் மூன்றாவது வெள்ளிக்கிழமை.
அதேபோன்றதொரு மனக்குறையோடுதான் மாறனின் அன்னை சாந்தகுமாரியும் அந்தக் கோயிலுக்கு வந்திருந்தார்.
ஆசைக்கு ஒரே மகனாகப் பெற்றவனைச் சீரும் சிறப்புமாக வளர்த்து, நன்றாகப் படிக்க வைத்து, நல்லதொரு வேலையில் அமர்த்தி, அவனுக்குத் திருமணம் செய்து வைத்து, அவனுடைய வாழ்க்கை இனி இன்னும் சிறப்பாக அமையப்போகிறது என்று கனவுகள் கண்டுகொண்டிருந்த நேரத்தில், அத்தனையுமே தலைகீழாக மாறிப்போயிருந்தன.
மனத்திலிருந்த வேதனைகளைச் சொல்லி அழுவதற்குக்கூட அவருக்கு வேறு யாருமில்லை. அந்த அம்மனின் சந்நிதி மட்டுமே ஆறுதலாக இருந்தது.
அன்றும் வழிபாடுகளை முடித்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தவரின் பார்வையில் எதிரே வந்த சிவசுந்தரி அம்மா பட்டதும் அப்படியே நின்றுவிட்டார்.
அந்தப் பெண்மணியைக் கடந்து போக அவரால் முடியவில்லை. தன் குடும்பத்தினராலும், குறிப்பாகத் தன் மகனாலும் அந்த வீட்டுப் பெண் அனுபவித்துக்கொண்டிருக்கும் துன்பங்கள் ஒவ்வொன்றும் நினைவுக்கு வந்தன. சட்டென்று அவருடைய விழிகள் கலங்கின.
அவர்களுக்கும் ஒரே ஒரு பெண் குழந்தைதானே! ஆசையாகப் பெற்றுப் பாசத்தோடு வளர்த்த மகள். அவளுடைய வாழ்க்கை இப்படியொரு ஆபத்துக்குள் சிக்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கும் அந்தத் தாயின் மனம் எப்படித் துடிக்கும்?
ஆண் பிள்ளைக்கே இப்படியொரு நிலை வந்துவிட்டதே என்று தான் கலங்கிக்கொண்டிருக்கும்போது, பெண் பிள்ளையைப் பெற்ற அந்தத் தாயின் வேதனை எத்தனை ஆழமானதாக இருக்கும்!
அந்த எண்ணம் சாந்தகுமாரியின் மனத்தை இன்னும் கனக்கச் செய்தது. சிவசுந்தரி அம்மாவிடமிருந்து அவரால் பார்வையை அகற்றவே முடியவில்லை.
சிவசுந்தரி அம்மாவும் அங்கே சாந்தகுமாரி அம்மாவை எதிர்பார்க்கவில்லை. அவர் கால்களும் அப்படியே நின்றுவிட்டன. பேசுவதா, வேண்டாமா? முகத்தைத் திருப்பிக்கொண்டு கடந்துபோய்விடுவதா என்று எதுவுமே புரியாமல் நின்றார்.

