*****
அன்று வைத்தியசாலையில் பணியிலிருந்த வருணாவிடம், விளையாடும்போது உடைந்த கண்ணாடியில் கையைக் கிழித்துக்கொண்ட சிறுவன் ஒருவனைப் பெற்றோர் பதற்றத்துடன் அழைத்து வந்திருந்தார்கள்.
காயம் ஆழமாக இருந்ததால் தையல் போட வேண்டியிருந்தது. ஆனால், காயத்தைச் சுத்தப்படுத்தி ஊசி போட முயன்றபோதெல்லாம் அவன் அடம்பிடித்து மறுத்துவிட்டான்.
வேறு வழியின்றி, அவனோடு சமாதானம் பேசத் தொடங்கிய வருணா, அவனுக்கு என்ன வேண்டும் என்று கேட்டாள்.
தான் விரும்புவதைக் கொடுப்பதாகவும், அதற்குப் பதிலாகத் தனக்குச் சிகிச்சை செய்ய ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் போட்டாள்.
அவனோ, தன்னுடைய தமையன் பொல்லாதவன் என்றும், தனக்கு ஊசி போடுவதற்கு முன்பாக அவனுக்கும் அதேபோல் ஊசி போட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தான். வேறு வழியின்றி அவனுடைய தமையனுக்கு ஊசி போடுவது போன்று அவள் நடித்து, அதற்கு மேலே அவன் தமையன் வலியில் அலறுவது போன்று நாடகமாடிய பிறகே அந்தச் சிறுவன் சிகிச்சைக்கு ஒத்துழைக்கச் சம்மதித்தான்.
அந்த வேடிக்கையான சம்பவத்தை கலிங்கனிடம் சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்துடன், “கலிங்கா…” என்று அழைத்துக்கொண்டே படிகளில் வேகமாக ஏறி வந்தாள் வருணா.
அங்கே அவன் தன் அலுவலக அறையில் ஏதோ பணம் அருந்தியபடியே கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தான். இவள் உள்ளே வந்ததும் அழைப்பைத் துண்டித்துக் கைப்பேசியை பாக்கெட்டில் போட்டுவிட்டு, கையிலிருந்த பானக் கோப்பையை மேசைமீது வைத்துவிட்டு, அதில் சாய்ந்து நின்றபடி கைகளைக் கட்டிக்கொண்டான்.
அவள் பேசுவதை முழுக் கவனத்துடன் கேட்பதற்குத் தயாரானவனைப் போன்று அவன் பார்வையும் கவனமும் அவள் மீது மட்டுமே குவிந்தன.
முதலில் அதைக் கவனிக்காமல், “கலிங்கா, இண்டைக்கு ஒரு குட்டித் தம்பி கையில காயத்தோட வந்தவர் சரியா? தையல் போடுறதுக்கு விறைப்பூசி போடப்போனா ஆள் விடவே இல்ல. அழுது ஆர்ப்பாட்டம்…” என்று கண்களில் நடந்த சம்பவம் உண்டாக்கிய சிரிப்பையும் பளபளப்பையும் தேக்கியபடி சொல்லிக்கொண்டு வந்தவள் சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தாள்.
அவளுக்கு அவனிடம் மிகவும் பிடித்தமான விஷயங்களில் இதுவும் ஒன்று.
அவள் ஏதாவது பேச வந்தாலோ, ஏதாவது சொல்ல வேண்டும் என்று வந்தாலோ, அவன் அப்போது என்ன செய்துகொண்டிருந்தாலும் அதை அப்படியே ஒதுக்கிவிடுவான்.
கையிலிருக்கும் வேலையாக இருந்தாலும் சரி, பார்த்துக்கொண்டிருக்கும் கோப்பாக இருந்தாலும் சரி, யாருடனாவது பேசிக்கொண்டிருந்தாலும் சரி, அவள் பேசத் தொடங்கியதும் அவனுடைய முழுக் கவனமும் அவளிடம் வந்துவிடும்.
அவள் முகத்தைப் பார்த்துப் பேசுவான். ஒற்றைச் சின்ன முறுவலோடு அவள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் இடையில் குறுக்கிடாமல் பொறுமையாகக் கேட்பான். அவள் பேசும்போது அவன் பார்வை வேறெங்கும் அலைபாயாது. அவள் சொல்லி முடிக்கும் வரை அவளிடமிருந்து அந்தக் கவனம் விலகாது.
வருணா இதைப் பலமுறை கவனித்துவிட்டாள். பிரத்தியேகமாகவோ, கவனமெடுத்தோ அவன் அதைச் செய்வதே இல்லை. இயல்பாய் வந்தது. அவனுக்கு அது ஒரு சாதாரணச் செயல்.
ஆனால் அவளுக்கு அப்படியல்ல.
அவள் அவனுக்கு மிகவும் முக்கியமானவள் என்று அவன் சொல்லாமலேயே உணர்த்தும் தருணங்கள் அவை. பெரிய பெரிய வார்த்தைகளில் அன்பைச் சொல்லத் தெரியாதவன், இப்படியான சின்ன சின்னச் செயல்களில் தன் அக்கறையையும் நேசத்தையும் வெளிப்படுத்துவான்.
அவனுடைய இந்தச் சிறு செய்கைகள் அவளை எந்தளவுக்கு உருகச் செய்கின்றன என்று அவனுக்குத் தெரியுமோ தெரியாதோ! ஆனால் அவளுக்குத் தெரியும். இப்படி அவன் அவளை இத்தனை முக்கியமாக உணரச் செய்யும் ஒவ்வொரு முறையும், அவள் உள்ளம் அவனுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து போகும்.
இன்றைக்கும் அதுவே நடக்க அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவன் முகம் முழுக்கத் தன் முத்திரைகளை ஒரு வேகத்துடன் பதித்து மீட்டவள் அவன் உதட்டிலும் அழுத்தி முத்தமிட்டுவிட்டு அவன் மார்பில் முகம் புதைத்து அவனை இறுக அணைத்துக்கொண்டாள்.
அவளின் அந்தத் திடீர் நெருக்கத்தில் ஒரு கணம் இனிமையாக அதிர்ந்து, அவளைத் தன் கரங்களுக்குள் சிறைபிடித்தான். அவள் பதித்த முத்தங்களின் ஈரம் இன்னும் முகத்தில் தங்கியிருக்க, உதட்டில் பதிந்த இறுதி முத்தம் அவனுக்குள் மெல்லியதொரு சிலிர்ப்பை ஏற்படுத்திற்று.
அவனது இறுக்கமான முகமும் இளகி, இதழ்களில் புன்னகை அரும்பிற்று. அவளை இன்னும் நெருக்கமாகத் தன்னோடு சேர்த்துக்கொண்டு, அவளுடைய தலையில் இதழ் பதித்தான்.
நொடிகள் கழிந்தும் அவள் விலகாமல் இருக்க, விரிந்த முறுவலோடு, “வரும்மா என்னடா?” என்று கொஞ்சியது அவன் குரல்.
அவன் மார்பிலிருந்து மெல்ல விலகி முகம் நிமிர்த்தி, “நீங்க நல்லவரா, கெட்டவரா?” என்று கேட்டாள் அவள்.
எதிர்பாராத அவள் கேள்வியில் அவன் புருவங்கள் சற்றே உயர்ந்தன. இதழ்களில் இருந்த புன்னகை மட்டும் மறையவில்லை. “உனக்கு எப்…ப்பவும் நல்லவன் மட்டும்தான்.” என்று அவள் நெற்றி முட்டினான்.
“அப்ப மற்றவேக்கு?”
உதட்டை பிதுக்கித் தோள்களைக் குலுக்கினான் அவன்.
அவள் முறைத்தாள். அவன் முகத்தில் அந்தச் செல்ல முறைப்படி ரசிக்கும் முறுவல். அவள் மூக்கோடு தன் மூக்கை உரசிவிட்டு, “அவே எனக்கு என்ன முகம் காட்டினமோ அதே முகத்தை ரெண்டு மடங்கா திருப்பிக் காட்டுவன்.” என்றான் அவன்.
“அப்ப நான் கோவ முகம் காட்டினா?” என்று கேட்டுவிட்டுத் தன் புருவங்களை நான்கைந்து தடவைகள் மேலெழுப்பி, அவனைத் தன் கேள்வியின் சவாலுக்கு அழைத்தாள் அவள்.
முறுவல் நன்றாக விரிய, “அப்பிடி நீ என்னட்டக் கோவப்படக் கூடாது!” என்றான் அவன்.
“பட்டா?”
“படக்கூடாது!”
“பட்டாஆ?”
அவனும் விடாமல், “படக் கூடாது!” என்றான்.
“டேய்! உங்களுக்கு விளங்குதா இல்லையா? நான்தான் ரவுடியா மாறப்போறனே. அப்ப கோவப்படுவன்தானே?”
அவளுடைய கன்னத்தை விரல்களால் வருடியவன், அவளுடைய கண்களுக்குள் ஆழமாகப் பார்த்தான். அந்தப் பார்வையில் என்ன இருக்கிறது என்று அவள் புரிந்துகொள்வதற்கும், “அப்பிடி நீ கோவப்பட்டா சில்லு சில்லா சிதைஞ்சிடுவன்மா!” என்று அவளுக்குள் புதைந்துகொண்டான் அவன்.
வருணா ஒரு கணம் திகைத்துப்போனாள். காரணமேயில்லாமல் அவள் தொண்டை அடித்துக்கொள்ள கண்கள் கலங்கிப்போயின.
குழந்தையாய் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தவனை அனைத்து, அவன் கேசம் கோதியவள், “உங்களிட்ட கோவப்படுற அளவுக்குத் தைரியம் எனக்கும் இல்ல கலிங்கா!” என்றாள் முணுமுணுப்பாய்.

