கலிங்கனின் காவியம் 56.2

இந்தச் சில மாதங்களில் அவன் காட்டிய முழுமையான அன்பை அனுபவித்தவள் அவள். அந்த அன்பின் ஆழம் எத்தகையது என்பதும் அவளுக்குத் தெரியும்.

ஆனால், அதே அன்பு ஒரு காலத்தில் இன்னொரு பெண்ணுக்கும் சொந்தமாக இருந்திருக்கிறது என்பதை அவளால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று கிழிந்து தொங்குவது போன்ற ஒரு கூர்மையான வலி.

அவனுக்கு இப்படியொரு கடந்தகாலம் இருக்கும் என்று அவள் யோசித்ததே இல்லை. யோசிக்கும்படி அவன் நடந்ததேயில்லை. அந்தளவுக்கு அவளிடம் தன் அன்பை முழுமையாகக் காட்டியிருந்தான்.

ஆனால், இன்று அவனுடைய அதே அன்புதான் அவளைச் சுக்குநூறாக நொறுக்கிப்போட்டிருந்தது. தான் நம்பிய பூமி திடீரெனக் கால் கீழ் நழுவிப் போனது போன்ற தவிப்பு.

அவளுடைய கலிங்கன் இப்படிப் பொய்த்துப்போயிருக்க வேண்டாம். அவளிடம் ஒன்றை மறைத்திருக்க வேண்டாம். அவன் அவளை இந்த நிலையில் நிறுத்தியிருக்க வேண்டாம் என்று அவள் உள்ளம் துடியாய்த் துடித்தது. தொண்டையை அடைத்த விசும்பலை விழுங்க முடியாமல் மூச்சுத் திணறினாள்.

வருணா தனக்குள் இப்படிப் போராடிக்கொண்டிருக்கையில்தான் கலிங்கன் தன் வெளிவேலைகளை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தான்.

முதல் வேலையாக அவளைத்தான் தேடிக்கொண்டு வந்தான். மாடி ஹோலின் பால்கனியில் அமர்ந்திருந்தவளைக் கண்டு அவன் முகம் மலர்ந்துபோயிற்று.

திரும்பி அவனைப் பார்த்தாள் வருணா. அவள் பார்வையில் இருந்த வெறுமையில் அவன் நடை நின்றது. புருவங்கள் சுருங்க ஒரு நொடி அவளைக் கூர்ந்த கலிங்கன், “அழுதியா வரு?” என்றான் முதல் கேள்வியாக.

இப்படி அக்கறை காட்டுகிறவன்தான் அத்தனையையும் மறைத்தவன்! இந்தப் பாசம் கூடத் தன்னை ஏமாற்றத்தானா என்ற எண்ணம் அவளைச் சுட்டது. ஆத்திரமும் அழுகையும் தொண்டையைக் கவ்விக்கொண்டு பொங்கின.

“வரு என்ன?” ஒரு எட்டில் அவளை நெருங்க வந்தவனை கை நீட்டித் தடுத்தாள் வருணா.

உள்ளத்தில் கொந்தளித்துக்கொண்டிருந்த அத்தனையையும் கொட்டிவிட வேண்டும் போலொரு ஆவேசம் அவளுக்குள் பிறந்தது. ஆனால், வார்த்தைகளை முந்திக்கொண்டு கண்ணீர்தான் வழிந்தது.

“ஏன் கலிங்கா, எல்லாத்தையும் மறைச்சீங்க?” அந்தக் குரலில் இருந்த வலியும், நம்பிக்கை சிதைந்த அவலமும் அவன் உயிரையே அசைத்தன.

அப்படியே நின்றான் அவன். அவன் புருவங்கள் சற்றே சுருங்கின. அவசரப்பட்டு எந்தப் பதிலும் சொல்லாமல் அவளையே பார்த்தான்.

“நிலாவினி ஆரு கலிங்கா?”

அவன் முகத்தில் திடீர் மாற்றம். ஒரு கவனம் வந்து அமர்ந்தது.

அதைக் கவனித்துவிட்டு வருணா கண்ணில் நீர் சூழ அவனையே இமைக்காமல் பார்த்தாள் வருணா. ஒவ்வொரு நொடியும் அவளுக்குள் கத்தி சொருகுவது போலிருந்தது.

“ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே.” என்றாள் மிகுந்த வேதனையோடு. குரல் கம்மி, வார்த்தைகள் தத்தளித்தன.

“அண்டைக்கு நான் சின்னதா ஒரு விஷயத்தை மறைச்சதுக்கே என்னைத் துரோகி எண்டு சொன்னீங்க. ஆனா நீங்க எவ்வளவு பெரிய விஷயத்தை மறைச்சிருக்கிறீங்க!”

அவனுடைய தாடை இறுகியது. நெஞ்சில் ஏதோ பாரம் அழுத்துவது போலப் பெருமூச்சு விட்டவன், ஏதோ சொல்ல வாயெடுத்தான். ஆனால் வார்த்தைகள் தொண்டையிலேயே சிக்கிக்கொள்ள, மீண்டும் அமைதியாகிவிட்டான்.

“இன்னொருத்தியை ஆசைப்பட்டவர் எப்பிடி என்னோட இவ்வளவு நெருக்கமா இருந்தீங்க? ஒவ்வொரு நாளும் என்னைக் கொண்டாடினீங்களே, எப்பிடி?” அவளால் அதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவேயில்லை.

“ஒரு நாள் உனக்கு எல்லாத்தையும் சொல்லுவன் எண்டு சொன்னனான் வருணா.” உணர்வுகளை அடக்கிய குரலில் சொன்னான் அவன்.

“அண்டைக்கே ஏன் சொல்லேல்ல? ஏன் மறைச்சீங்க? ஏன் என்னோட பொய்யான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தீங்க?” என்று சீறினாள் அவள்.

“உன்னோட வாழ்ந்த வாழ்க்கை பொய்யில்ல!”

“இதை நம்பச் சொல்றீங்களா?” என்று கேட்டவளை வெறித்துப் பார்த்தான் அவன்.

“அதுதான் அண்டைக்கு என்ன நடந்தாலும் கோபப்படக்கூடாது எண்டு சொல்லியிருக்கிறீங்க என்ன? எவ்வளவு வடிவா பிளான் பண்ணி கதைச்சிருக்கிறீங்க கலிங்கா.” என்றவளுக்குத் தாங்க வே முடியவில்லை.

“அது சரி! நான்தான் ஒரு அரை லூசாச்சே. ஒருத்தன் வலுக்கட்டாயமா தாலியைக் கட்டி இழுத்துக்கொண்டு வந்து, பெத்த தாய் தகப்பனை அவமானப்படுத்தி கேவலப்படுத்தினாலும் அதைப் பற்றி எல்லாம் யோசிக்காம அவனில மயங்கிக்கிடந்தனே. அதுக்கு எனக்கு இந்தத் தண்டனை தேவைதான்.” என்று சொன்னவளை வெறித்துப் பார்த்தான் கலிங்கன்.

அது எல்லாம் அவன் உணர்வுகள் பேசிய பொழுதுகளில் சொன்னவை. அதன் பின்னால் எந்த கணக்கும் இல்லை, எந்த கவனமும் இல்லை. அப்படி இருக்க அவள் அத்தனையையும் அவன் கணக்கு போட்டு பேசியதாக சொல்கிறாள். அதன் பிறகு அவன் எந்த விளக்கமும் கொடுக்கப் போகவில்லை.

அவளோ, அவனுடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஏதாவது சொல்வான், தன்னைச் சமாதானப்படுத்த முயற்சிப்பான், குறைந்தபட்சம் அவள் நினைப்பது தவறு என்றாவது மறுப்பான் என்று எதிர்பார்த்தாள். ஆனால், அவன் எதுவுமே சொல்லவில்லை. அவளுடைய பார்வையை எதிர்கொண்டபடியே அமைதியாக அமர்ந்திருந்தான்.

அந்த மௌனம் அவளை இன்னும் அதிகமாகக் காயப்படுத்தியது. அழுகையும் ஆத்திரமும் ஒருசேரப் பொங்க, அவனை ஒரு பார்வை பார்த்தவள் அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் திரும்பி அறைக்குள் சென்றாள். கதவைப் பலமாக அடைத்தாள்.

எவ்வளவு நேரம் கடந்ததோ! வருணாவின் அறையின் கதவு திறக்கப்படவேயில்லை. அந்த சோபாவிலேயே பின்னால் தலையைச் சாய்த்துக் கண்களை மூடியவன்தான். கலிங்கனும் அதன் பிறகு அசையவேயில்லை.

நிறைய நேரத்திற்குப் பிறகு அவன் கைப்பேசி அணுங்கிற்று. நிமிர்ந்து அமர்ந்து, கண்களை ஒருமுறை அலுத்தித் துடைத்துவிட்டு அதை எடுத்துக் பார்த்தான்.

அவன் பெரிதும் மதிக்கும் மூத்த காவல்துறை அதிகாரி.
அழைப்பை ஏற்றதும், மறுமுனையிலிருந்து நேரடியாகவே விசாரணை ஆரம்பமானது.

“என்ன ராயா, என்ன நடக்குது? வரதன்ர லொறியில போதைப்பொருள் பிடிபட்டிருக்காமே? அத நீதான் கடைசியா ஓட்டி இருக்கிறியாம்.”

கலிங்கன் எதையும் மறைக்கவோ, சுற்றி வளைத்துப் பேசவோ இல்லை.

“அத நான் செய்யவும் இல்ல, வரதன் செய்யவும் இல்ல.” என்றான் நேரடியாக.

அதிகாரி ஒருகணம் புருவங்களைச் சுருக்கினார். அடுத்த நொடியே அவருக்குப் புரிந்துவிட்டது.

“அப்ப சூர்யாவா?”

“ஓம்.”

“இப்ப என்ன செய்யலாம் எண்டு நினைக்கிறாய்?”

“ஒண்டும் செய்ய வேண்டாம். இந்தப் பிரச்சினையை வரதனே அடக்குவான்.”

“அப்ப சூர்யா?”

“அவனுக்கும் வரதனே முடிவு கட்டுவான்.”
அவன் பதிலில் இருந்த நிதானத்தையும் உறுதியையும் கவனித்த அதிகாரி, ஒருகணம் யோசித்தார்.

“நல்லா யோசிச்சுச் சொல்லுறியா?”

“ஓம் சேர்.”

அவன் குரலில் எந்தத் தடுமாற்றமும் இல்லை. அதுவே அவன் ஏற்கெனவே எல்லாவற்றையும் தீர்மானித்துவிட்டான் என்பதைப் புரிந்துகொண்ட அதிகாரி, அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை.

“சரி ராயா. என்ன உதவி தேவையெண்டாலும் என்னைக் கூப்பிட மறந்திடாதை.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தார் அவர்.

error: Alert: Content selection is disabled!!