கலிங்கனின் காவியம் 58.1

அத்தியாயம் 58

சிவசுந்தரி அம்மா தான் அறிந்துகொண்ட உண்மைகளை அவசரப்பட்டு மகளிடம் சொல்ல நினைத்திருக்கவில்லை. எப்போதும் போன்று மாலை நேரத்தில் அழைத்த வருணாவிடம் எதுவும் நடக்காததுபோல் இயல்பாகப் பேசவே முயன்றார்.

ஆனால், தாயின் குரலில் தெரியும் சிறு மாற்றத்தைக் கூட உணர்ந்துகொள்ள முடியாதவளா வருணா? அவர் பேசத் தயங்குவதையும், இயல்பாகப் பேச முடியாமல் தடுமாறுவதையும், அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டு வார்த்தைகளை வெளிப்படுத்துவதையும் உடனேயே கண்டுகொண்டிருந்தாள்.

உடனேயே காணொளி அழைப்பில் அழைத்தாள். அழுது சிவந்திருந்த அவர் கண்களையும், கலங்கிய முகத்தையும் கண்டு என்னவென்று விடாமல் அவள் கேட்டபோது, அவரால் மறைக்க முடியாது போயிற்று. அத்தனையையும் சொல்லியிருந்தார்.

இதை அறிந்த மதியழகன், நேரில் வரட்டுமா என்று எத்தனையோ முறை கேட்டும் வருணா சம்மதிக்கவில்லை. அங்கே என்னாயிற்றோ, மகள் எப்படி இருக்கிறாளோ, அவள் பேச்சைக் கேளாமல் போய்ப் பார்த்துக்கொண்டு வரலாமா என்று விடிந்த பிறகும் அவர்கள் கலங்கிக்கொண்டிருந்தபோதுதான் வருணாவே வந்து நின்றாள். அதுவும் அழுது சிவந்த முகத்தோடு, இன்னுமே அழுதுகொண்டு.

“என்னம்மா, என்ன நடந்தது, ஏன் அழுறீங்க?” என்று எவ்வளவோ கேட்டுப்பார்த்தார் சிவசுந்தரி.

அவளால் வாயைத் திறந்து பேசவே முடியவில்லை. அவன் மீது கோபமும் ஆதங்கமும் இருந்தாலும், அவனைப் பற்றிய எதையும் அவர்களிடம் விட்டுக்கொடுக்கத் தோன்றவில்லை. அன்னையின் மடியில் சாய்ந்துகொண்டு கண்ணீரை மட்டும் உகுத்தாள்.

மதியழகன் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்தாலும் அவரது கவனம் முழுவதும் மகளிடமே இருந்தது. அவளிடம் என்ன கேட்பது, எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் அமைதியாகவே இருந்தார்.

இதுவரை வருணாவைக் கலிங்கன் தனியாக அனுப்பியதே இல்லை. அவனது வரவு அவர்களுக்குப் பிடிக்காத நாட்களில்கூட, கூடவே வந்து எவ்வளவு நேரமானாலும் பொறுமையாக அவளுடன் இருந்து, அவளை அழைத்துக்கொண்டுதான் போவான்.

அப்படியிருக்க, இன்றுதான் முதல்முறையாக அவளை மட்டும் தனியாக அனுப்பியிருக்கிறான். அதுவும், வாசல்வரை வந்தவன் காரைவிட்டு இறங்கவுமில்லை, இவர்கள் பக்கம் பார்வையைத் திருப்பவும் இல்லை.

அவனது முகத்தில் தெரிந்த இறுக்கமும், வந்ததிலிருந்தே அழுதுகொண்டிருந்த மகளின் நிலையுமாக, ஏதோ பெரிதாக நடந்திருக்கிறது என்று அவர்களுக்குத் தெளிவாக உணர்த்தின.

ஏற்கனவே அதிர்ச்சியிலும் கலக்கத்திலும் இருந்த பெற்றோரின் மனத்தில் இப்போது பயமும் சேர்ந்துகொண்டது.

அந்த நேரத்தில் மதியழகனின் கைப்பேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தார். திரையில் கலிங்கனின் பெயர் தெரிந்தது. மனைவியையும் மகளையும் ஒருமுறை பார்த்தவர், எதுவும் பேசாமல் எழுந்து வீட்டுக்கு வெளியே வந்து அழைப்பை ஏற்றார்.

“உங்களோட கொஞ்சம் கதைக்கோணும். என்ர ஒபீஸுக்கு ஒருக்கா வந்திட்டுப் போறீங்களா?” என்று கேட்டான் கலிங்கராயன்.

இத்தனை காலமும் அவர் பேசப்போனாலே பேச்சைக் கத்தரித்தவன் இன்றைக்குப் பேச அழைக்கிறான். கூடவே,
அவன் ஏற்கனவே இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்ய இருந்ததும், அவளை வரதன் அபகரித்துக்கொண்ட ஆத்திரத்தில் திருமண மண்டபம் வரை வந்து மகள் கழுத்தில் தாலி கட்டியிருக்கிறான் என்பதும் மதியழகனையும் உறுத்தாமல் இல்லை.

மகளின் இன்றைய நிலைக்குப் பின்னால் அவனுடைய அந்தக் கடந்தகாலம் ஏதோ ஒரு வகையில் இருக்கிறது என்ற எண்ணம் அவருக்குள் கனத்தது.

அதேநேரம், இப்போது நடந்துகொண்டிருக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் ஏதோவொரு முடிவோ, தெளிவோ கலிங்கனிடம்தான் கிடைக்கும் என்று தெரிந்ததால், “எங்க வரோணும்?” என்று கேட்டார்.

“ஆதி அங்கதான் நிக்கிறான். வரு… வருணா அங்க இருக்கிறவரைக்கும் அவனும் அங்கதான் நிப்பான். அவனோட வாங்க.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான் அவன்.

மனைவியிடமும் மகளிடமும் வெளியே ஒரு வேலையாகச் சென்றுவிட்டு வருவதாக மட்டும் கூறிவிட்டுப் புறப்பட்டார் அவர்.

அவனுடைய சரக்கு நிறுவனத்தைப் பார்த்த மதியழகனுக்குப் பெருத்த ஆச்சரியம். நிச்சயமாக இதை அவர் எதிர்பார்க்கவில்லை.

பிரம்மாண்டமான கட்டிடமும், அதைச் சுற்றியிருந்த பரபரப்பான செயற்பாடுகளும், ஒழுங்காக இயங்கிக்கொண்டிருந்த நிறுவனத்தின் ஒவ்வொரு பிரிவும் அவரது கவனத்தை ஈர்த்தன.

ஒரு முறையான சரக்கு நிறுவனத்துக்குரிய அத்தனை கட்டமைப்புகளுடனும், நேர்த்தியுடனும் அது இயங்கிக்கொண்டிருந்தது.

அவர் வருவார் என்று கலிங்கன் ஏற்கனவே சொல்லி வைத்திருக்க வேண்டும். அங்கிருந்த ஒருவன் விரைந்து வந்து அவரை மரியாதையுடன் வரவேற்று, அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றான். கதவைத் திறந்து அவரை உள்ளே செல்லுமாறு பணிவுடன் வழிவிட்டான்.

அங்கே முதலாளிக்குரிய அத்தனை கம்பீரத்துடனும் அமர்ந்திருந்தான் கலிங்கராயன். மதியழகனைக் கண்டதும் எழுந்து வந்து அவரை வரவேற்று, மூங்கில் கூடை நாற்காலிகள் இருந்த பகுதியில் அவரை அமர வைத்தான்.

அங்கிருந்த கோப்பி இயந்திரத்தில் இருவருக்குமான கோப்பியைத் தயாரித்துக் கொண்டுவந்து, ஒன்றை அவரிடம் கொடுத்துவிட்டுத் தானும் எடுத்துக்கொண்டு எதிரே அமர்ந்தான்.

இருவருக்குமே அந்தச் சூழ்நிலை இலகுவாய் இல்லை. இருவரிடத்திலும் ஒருவித இறுக்கம் நிலவியது. எதுவும் பேசாமல் கோப்பியை அருந்திக்கொண்டிருந்தனர். அந்த மௌனத்தை உடைக்க வேண்டிய பொறுப்புத் தன்னுடையதே என்பதை உணர்ந்த கலிங்கன், கோப்பிக் கோப்பையை முன்னிருந்த டீப்பாயில் வைத்துவிட்டு நிமிர்ந்து அமர்ந்தான்.

“என்னைப் பற்றி எல்லா விஷயமும் கேள்விப்பட்டிருப்பீங்க.” என்றான்.

மதியழகன் அதற்கு ஆம் என்றோ இல்லை என்றோ பதிலளிக்கவில்லை. அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அவரது பார்வையைச் சில கணங்கள் எதிர்கொண்ட கலிங்கன், “நீங்க கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதான். வரு… ம்க்கும் அது வருணா கொஞ்சம் அதிர்ச்சியில இருக்கிறா. அவாவைக் கவனமாப் பாத்துக்கொள்ளுங்க. வெளியில எங்கேயும் தனியாப் போக விடாதீங்க. உங்க எல்லாரையும் சுத்திப் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருக்கிறன்தான். எண்டாலும் கவனமா இருங்க. அவாட்ட எதையும் தூண்டித் துருவிக் கேக்க வேண்டாம்.” என்று, அதைச் சொல்லும்போதே அவன் குரலில் இலேசான கரகரப்பு.

என் மகளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி என்னிடமே சொல்வானா என்று உள்ளே ஓடினாலும் சரி என்பதுபோல் தலையசைத்துவிட்டு, “வரதனைப் பற்றி நாங்க கேள்விப்படுறதெல்லாம் உண்மைதானா?” என்று கேட்டார்.

அதற்குப் பதிலாக ஆம் என்று சொல்வதுபோல் தலையை அசைத்தான் கலிங்கராயன்.

“உங்களுக்கும் அப்பிடி எங்களுக்கு தெரியாத கேவலமான, மோசமான கறுப்புப் பக்கம் ஏதாவது இருக்கா?” இதைக் கேட்கவே அவருக்குப் பிடிக்கவில்லை. இப்படியெல்லாம் ஒருவரிடம் பேசுகிறவரும் இல்லை அவர். ஆனால் இங்கே அவன் யாரோ இல்லையே. அவர் மகளின் கணவனாகிப்போனானே.

“இல்லை. நீங்க கேள்விப்பட்டதைத் தாண்டி வேற எதுவும் இல்ல.” அவர் கண்களை பார்த்து நேராகவே சொன்னான்.

“அப்ப அது?”

ஒரு நெடிய மூச்சை இழுத்து விட்டுவிட்டு, “கடந்துபோன அந்தக் காலத்தின்ர சின்ன நிழல் கூட இண்டைக்கு என்னட்ட இல்ல.” என்றான் அவன் இப்போதும் தெளிவாக.

பிறகு எதற்கு அவர் மகள் அங்கே அந்தக் கோலத்தில் வந்து நிற்கிறாள் என்று பார்த்தார்.

அவன் அதற்குப் பதில் சொல்லவில்லை. சொல்ல இயலவில்லை. அவள் கண்ணீரும் கோபமும் அவனுள் இப்போதும் மெல்லிய இறுக்கத்தைப் பரப்பின.

அவரும் அதற்குமேல் அவனிடம் எதையும் தூண்டித் துருவவில்லை. கூடவே, அவர் ஆழ்மனம் அவனை நம்பச் சொல்லிற்று. எப்போதுமே அவன் தன்னை நல்லவனாகக் காட்டிக்கொள்ள முயன்றதேயில்லை. தன் இறுக்கத்தையும் கடின முகத்தையும் இயல்பாகவே காட்டுகிறவன். இதோ இப்போதுகூட அவனாகத்தான் அழைத்தான். அதற்கென்று தன் இயல்பாய் விட்டு வரவுமில்லை.

“இந்தப் பிரச்சினை எல்லாம் எப்ப முடியும்?” என்று கேட்டார் மதியழகன்.

கலிங்கன் பதில் சொல்லாமல் இருக்க,
“உங்களுக்கு இந்த வாழ்க்கை பழக்கமானதா இருக்கலாம். எங்களுக்கு அப்பிடி இல்லை. இண்டைக்கு என்ன நடந்ததெண்டே தெரியல. ஆனா அவா அழுதுகொண்டே இருக்கிறா. இத எங்களால பாக்கேலாது. இந்த வாழ்க்கையை மாத்துற அதிகாரத்தை எங்களுக்கு நீங்க தரேல்ல. இப்ப…. மகளும் உங்களை ஏற்றுக்கொள்ள ஆரம்பிச்சிட்டா எண்டு நினைக்கிறன்.” என்றுவிட்டு அவர் அவனைப் பார்க்க அவன் உதட்டோரத்தில் உணர்வுகளை அடக்கும் ஒரு அழுத்தம்.

ஏற்றுக்கொளவது என்பதெல்லாம் சாதாரண வார்த்தை. அவள் அவனை ஏற்றுக்கொள்ளவில்லை. தன் உள்ளத்தில் ஏந்திக்கொண்டவள். அவன் எப்படி இருந்தானோ அப்படியே எந்தக் கேள்விகளும் இல்லாமல் தன்னில் தாங்கிக்கொண்டவள். ஆனால் இன்றைக்கு… அவனை முற்றாக நிலைகுலையச் செய்யப்பார்த்த அந்த உணர்வுகளில் இருந்து, ஒருமுறை அழுத்தமாய் விழிகளை மூடித் திறந்துவிட்டு அவரைப் பார்த்தான்.

error: Alert: Content selection is disabled!!