“அப்ப அவாக்கு ஒரு நிம்மதியான, சந்தோஷமான வாழ்க்கையைக் குடுக்க வேண்டியது உங்கட பொறுப்புதானே? இப்பிடியே இருக்கேலாது. இதையெல்லாம் விட்டுட்டு நீங்க விலகி வரேலாதா?” என்று கேட்டார்.
முடியாது என்பதுபோல் தலையை அசைத்தான் அவன். அவர் முகம் மாறுகையிலேயே, “அப்பிடி நான் வந்தாலும் வரதன் என்னை விடமாட்டான்.” என்றான்.
“அப்ப இதுக்கு என்னதான் முடிவு?”
சில கணங்கள் அமைதியாக இருந்துவிட்டு, “ஒண்டு இப்பிடியே இது தொடரோணும். இல்லையா வரதனுக்கு மொத்தமா நான் ஒரு முடிவு கட்டோணும்.” என்றான்.
அந்த வார்த்தைகள் மதியழகனைத் திடுக்கிட வைத்தன. அந்த இரண்டு முடிவுகளையுமே அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “மொத்தமா முடிவு கட்டுறது எண்டா?” ஒரு பயத்துடனேயே கேட்டார்.
அதற்கு ஒன்றும் சொல்லாமல் இரண்டு கைகளையும் இலேசாக விரித்தான் அவன். சுர்ர் என்று வந்தது அவருக்கு. “இப்பிடி நீங்க சொல்லேலாது தம்பி. இந்த வாழ்க்கைக்க என்ர மகளை இழுத்தது நீங்கதான். நாளைக்கு உங்களுக்கு ஒண்டு நடந்தோ, இல்லை ஏதாவது பெரிய பிரச்சினைல நீங்க மாட்டியோ என்ர மகளை காலத்துக்கும் கண்ணீர் வெடிக்கிற மாதிரி மாத்திடாதீங்க.” என்றார் பட்டென்று.
சில கணங்கள் அவரது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த கலிங்கன், இறுதியில் சரியென்பதைப் போலத் தலையசைத்தான்.
மதியழகன் எழுந்து புறப்படத் தயாரானபோது, “வருணா… கவனம்!” என்றான் மீண்டும்.
அவர் திரும்பி அவனைப் பார்த்தார். ஏன் என்று தெரியவில்லை. தன் மகளுக்காகத் தவித்துக்கொண்டிருக்கும் அந்த மனிதனை ஒரு கணம் அமைதியாகப் பார்த்தார். பின்னர், சரியென்பதைப் போலத் தலையசைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
அவன் அமர்ந்திருந்த நாட்காலியிலேயே தலையைப் பின்னால் சாய்த்துக்கொண்டான். அப்படி அவன் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டால் போதும், கலிங்கா என்று அழைத்துக்கொண்டு அவனருகே வந்துவிடுவாள் வருணா.
அவனுக்குள் என்ன போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது என்று அவளுக்குத் தெரியாது. ஆனாலும், அவன் எதற்கோ உள்ளுக்குள் போராடிக்கொண்டிருக்கிறான் என்பது மட்டும் அவளுக்குப் புரிந்துவிடும். கேட்பாள். அவன் பதில் சொல்லாவிட்டால் பொய்யாக முறைத்துவிட்டு, அவனைத் தன்னுடைய அணைப்புக்குள் கொண்டுவந்துவிடுவாள்.
அவனைத் தன் கைகளுக்குள் ஏந்திக்கொண்டு, பிடரிக் கேசத்தைக் கோதிவிட்டு, நெற்றியிலும் கன்னத்திலும் முத்தமிட அவள் ஒருபோதும் தவறியதில்லை.
இந்தக் கணமும் அப்படியொரு அணைப்புக்காக, அவளுடைய கதகதப்புக்காக, தன் தலைமீது ஊர்ந்து செல்லும் அவளுடைய விரல்களுக்காக அவனுடைய உள்ளம் ஏங்கித் தவித்தது.
அவளுடைய முத்தங்களும், அவள் வாசனையும், அவள் அருகில் இருக்கிறாள் என்ற அந்தச் சின்ன நிம்மதியும்கூட அவனுக்கு இப்போது அத்தனை தேவையாக இருந்தன. ஆனால், அவளோ கோபித்துக்கொண்டு போய்விட்டாள்.
அவள் தன்னிடமிருந்து விலகிச் சென்றுவிட்டாள் என்ற வெறுமை அவனை அழுத்தியது. அவள் வலிக்கு அவன்தான் காரணம் என்கிற குற்றவுணர்வு நெஞ்சை உறுத்தியது.
அவளைத் தேடி ஓட வேண்டும் போலிருந்தது. அதேநேரம், அவளுடைய கோபத்தையும் காயத்தையும் புரிந்துகொண்டு அவளுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணமும் அவனைத் தடுத்தது.
அந்தத் தவிப்பையும் அழுத்தத்தையும் தாங்க முடியாமல் விழிகளை இறுக மூடிக்கொண்டான்.
*****
சூர்யா அன்றைக்கு, ‘நிலாவினி கழுத்தில எப்ப தாலி கட்டுவாய் எண்டு சொல்லு. அதுக்குப் பிறகு கலிங்கனை அழிக்கலாம்’ என்று சொல்லிவிட்டுப் போனதிலிருந்து, அவன் மீதிருந்த கோபம், வரதனைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு சம்பவத்தாலும் அவனுக்குள் பெருகிக்கொண்டிருந்த ஆத்திரம், ஆவேசம், அகங்காரம் என அத்தனைக்கும் வடிகாலாக நிலாவினிதான் மாறியிருந்தாள்.
இப்போதெல்லாம் தன் வீட்டில்கூட அவர்களுடைய உறவு தெரிந்துவிட்டதால், தினமும் அவளைத் தன்னிடம் வரும்படி அழைத்தான். அவன் கோபத்தையும் ஆவேசத்தையும் சுமந்துகொண்டு, ஒவ்வொரு பொழுதையும் நரகமாகக் கழித்துக்கொண்டிருந்தாள் நிலாவினி. வெளியே யாரிடமும் சொல்ல முடியாமல் உள்ளுக்குள் துடித்தாள்.
இப்போதெல்லாம் தானும் தன் அண்ணனும் எடுத்த முடிவு தவறானதோ என்கிற எண்ணம் அவளுக்குள் அடிக்கடி எழ ஆரம்பித்திருந்தது.
அன்றொரு நாள் தற்செயலாக வெளியே சென்றிருந்தபோது கலிங்கனின் ரேஞ்ச் ரோவரைக் கண்டாள். அதில் கலிங்கன் இருக்கவில்லை. ஆதிதான் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தான்.
பின்னால் ஒரு பெண். அவள் முகத்தில் இருந்த அமைதியும், அந்தச் சாந்தமான அழகும் அவளை மொத்தமாக நிலைகுலைய வைத்திருந்தன.
ஒரு காலத்தில் அவளும் இப்படித்தான் இருந்தாள். அந்த ஒரு கார் போதும், அவளுக்கான மரியாதையையும் பாதுகாப்பையும் வழங்க. ஆனால் இன்றைக்கு இரவுகளின் நாயகியாகிப்போனாள்.
அன்றைய நாள் முழுவதும் கண்களின் ஓரத்தில் திரண்ட கண்ணீரைத் துடைத்தபடியே கழித்தாள். பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பதுபோல, திருத்தவே முடியாத ஒரு தவறைச் செய்துவிட்டதை மீண்டும் மீண்டும் நினைத்துத் தனக்குள்ளேயே அழுதுகொண்டிருந்தாள்.
அன்று ஆரம்பித்த அந்த எண்ணம் இப்போதெல்லாம் அவளை அடிக்கடி வாட்டியது. சூர்யாவும் மகிழ்ச்சியாக இல்லை. அவனும் ஏதோ ஒன்றின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தான்.
முன்பிருந்த நிதானமில்லை; முகத்தில் சிரிப்பில்லை; பேச்சிலும் பழைய உற்சாகமில்லை. இருவரும் ஒன்றாக அமர்ந்து நிம்மதியாக உணவருந்திய நாட்கள்கூட இல்லாமல் போயிருந்தன. ஒரு பொழுதைக்கூட மனநிறைவுடன் கழிக்க முடியவில்லை.
எதற்காக இந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தோம் என்கிற அலுப்பும் சலிப்பும் மெல்ல மெல்ல அவளை ஆட்கொண்டன.
அன்றும் யாரிடமோ பேசிக்கொண்டே வந்த சூர்யா, உணவருந்த அமர்ந்தான். அவனுக்கு உணவைப் பரிமாறியபடியே, நீண்ட நேரமாக மனத்துக்குள் அழுத்திக்கொண்டிருந்த கேள்வியை வெளியேற்றினாள் நிலாவினி.
“எதுக்கண்ணா இத்தனையும் செய்தோம்?” அவள் கேள்வியில் இருந்த ஏதோவொரு வலி அவனை நிமிர்ந்து பார்க்க வைத்தது.
“இப்ப எல்லாம் நாங்க செய்தது மகா முட்டாள்தனமெண்டு அடிக்கடி நினைக்கிறன் அண்ணா…” என்றாள் அவள்.
சூர்யா அவளை உற்றுப் பார்த்தான். “ஏன்? ஏதும் பிரச்சினையோ?” என்று கேட்டான்.
அவள் அனுபவிக்கும் அவமானங்களையும், ஒவ்வொரு நாளும் சிதைந்துகொண்டிருக்கும் மனநிலையையும் வார்த்தைகளில் சொல்லிவிட முடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை.
“அதெல்லாம் ஒண்டும் இல்லையண்ணா.” என்று மெல்லிய குரலில் பதிலளித்தாள்.
சில கணங்கள் அவள் முகத்தையே ஆழமாகப் பார்த்துக்கொண்டிருந்த சூர்யா, அவள் எதையோ மறைக்கிறாள் என்பதை உணர்ந்தானோ என்னவோ, அதற்கு மேல் எதுவும் கேட்காமல் மீண்டும் உணவில் கவனம் செலுத்தினான்.
*****
வரதனின் ஆத்திரம் ஒருபுறம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தாலும், இன்னொருபுறம் அவன் லொறியில் போதைப்பொருள்கள் பிடிபட்ட பிரச்சனையை எப்படியாவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டிய கட்டாயத்திலும் இருந்தான்.
அது அவன் வியாபாரம், செல்வாக்கு, அதிகாரத் தொடர்புகள் என்று அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கும் அளவுக்குப் பெரிதாகியிருந்தது.
அதை அப்படியே வளர விட்டால், இதுவரை அவன் மறைத்து வைத்திருந்த பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்துவிடும். அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. உடனடியாகக் களத்தில் இறங்கினான்.
அவனோடு நீண்டகாலமாகக் கைகோர்த்திருந்த அதிகாரிகள், அரசியல்வாதிகள், செல்வாக்கு மிக்கவர்கள் இப்போது தயக்கத்துடன் விலகி நிற்க முயன்றாலும், அவர்களால் அவ்வளவு எளிதாக அவனைப் புறக்கணிக்க முடியவில்லை.
பரஸ்பரம் செய்துகொண்ட உதவிகளும், ஒருவருக்கொருவர் மறைத்துக்கொடுத்த தவறுகளும், அவர்களின் தவறுகள் அவனிடம் மாட்டுப்பட்டுக் கிடைப்பதுமாகச் சேர்ந்து இன்னுமே அவனுக்கு அவர்களை அடங்கிப்போகவே வைத்தன.
அதன் விளைவாக, லொறியில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தைப் பெரிதாக வளர விடாமல் அடக்குவதற்கான முயற்சிகள் வேகமெடுத்தன.
ஊடகங்களில் பரவிய செய்திகளின் தாக்கத்தைக் குறைப்பது முதல், விசாரணையின் போக்கைத் தமக்குச் சாதகமாக மாற்றுவதற்கான வழிகளைத் தேடுவது வரை பல முனைகளில் ஒரே நேரத்தில் வேலைகள் நடந்தன.
வரதன் எதிர்பார்த்தபடியே அவன் தொடர்புகளும் பணமும் மீண்டும் வேலை செய்யத் தொடங்கின. சில நாட்களுக்குள் அந்த விவகாரத்தின் பரபரப்பு மெல்லக் குறைய ஆரம்பித்தது. அவனைச் சுற்றியிருந்த அழுத்தங்கள் ஓரளவுக்குத் தணிந்தன. அவன் பெயரைத் தொடர்ந்து முன்னிறுத்திய செய்திகள் வேறு விவகாரங்களை நோக்கித் திரும்பின.
ஆனால், இதற்குப் பின்னால் கலிங்கராயனின் கை இருக்கிறது என்கிற அவன் நம்பிக்கை மட்டும் சிறிதும் மாறவில்லை.

