அத்தியாயம் 59
கலிங்கனோடு இருக்கிற வரையில் தன்னால் எதையும் நிதானமாக யோசிக்க முடியும் என்கிற நம்பிக்கை வருணாவுக்கு இல்லை. அதுவும் அந்தப் பெண்ணுடனான அவனது உறவு எத்தகையது என்று அவள் வாய்விட்டுக் கேட்டும், அவன் பதிலளிக்காமல் மௌனம் காத்ததுதான் அவளை வேதனையின் உச்சத்துக்கே கொண்டு சென்றிருந்தது.
அங்கேயே இருந்தால் நிச்சயம் அவனையும் காயப்படுத்தி, தானும் காயப்பட்டுப்போவோம் என்கிற பயத்தில்தான் புறப்பட்டு வந்திருந்தாள்.
வந்த பிறகும் அவளுக்கு நிம்மதி கிட்டவில்லை. எதையும் நினைக்கக் கூடாது, கற்பனை செய்து பார்க்கக் கூடாது என்று எவ்வளவோ முயன்றும் முடியாமல், கண்ட கண்ட காட்சிகள் எல்லாம் கண்ணுக்குள்ளே வந்து நின்று அவள் உயிரை வாட்டின.
அவன் பதில் சொல்லியிருக்கலாம். இந்த வேதனைகளிலிருந்து அவளை விடுவித்திருக்கலாம். அவன்தான் எதையும் செய்யவில்லையே. தனக்கு மனநிலை ஏதும் பாதிக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சும் அளவுக்கு அந்த எண்ணங்கள் அவளை வதைத்தன.
அது இறந்தகாலம். முடிந்துபோன விஷயம். எல்லாமே கடந்து போய்விட்டது. இப்போது அதைப் பற்றி நினைத்து என்ன பயன்
என்று எத்தனையோ முறை தனக்குத் தானே சொல்லிப் பார்த்தாள். ஆனாலும், அவளால் அதைக் கடந்துவர முடியவில்லை.
நாளாக நாளாக அவன் பற்றிய வேறுவிதமான சிந்தனைகளும் அவளுக்குள் முளைக்கத் தொடங்கின.
அவன் யாரையும் ஏமாற்றவில்லையே. யாருக்கும் துரோகம் செய்யவில்லையே. தான் மணக்கப் போகிற பெண் என்கிற நம்பிக்கையில்தானே பழகியிருப்பான்.
அந்தப் பெண்தானே துரோகம் செய்திருக்கிறாள்.
இவனோடு ஒரே வீட்டில் இருந்துவிட்டு இன்னொருவனிடம் அவளால் போக முடிந்திருக்கிறதென்றால் அந்தத் துரோகம் அவனை எப்படி வீழ்த்தியிருக்கும்? அதை எப்படிக் கடந்து வந்தான் என்று அவளால் யோசிக்கவே முடியவில்லை.
அதே நேரத்தில் அவனைப் பாராமல், அவனோடு கதைக்காமல் இப்படி வந்து இருப்பதும் அவளைப் போட்டு வருத்தியது. உண்மையில் தான் எந்தளவுக்கு அவனுக்கும் அவன் ஆண்மைக்கும் அவன் அன்புக்கும் பழகிப்போயிருக்கிறோம் என்பதும் அவளுக்கு இந்த நாள்களில்தான் புரிந்தன.
என்ன செய்கிறான்? எப்படி இருக்கிறான்? அன்றைக்கு அவனைப் போட்டு கன்னம் கன்னமாக அறைந்தோமே! அத்தனை அறைகளையும் வாங்கிக்கொண்டு அமைதியாக நின்றானே! செய்த தவறுக்குத் தண்டனை என்று நினைத்தானோ.
அப்படித்தான் இருக்க வேண்டும். இல்லாமல் சம்மந்தஹமே இல்லாமல் குழந்தையாய் வந்து அவளைப் பின்னிருந்து அணைத்தவன் அவள் உதறியதும் எதற்கு சிகரெட் எடுத்து வாயில் வைக்க வேண்டும்?
வேண்டுமென்றே அவள் கையால் அடிகளை வாங்கியிருக்கிறான். இல்லாமல் அவள் அறைவதை நிறுத்திய பொழுதுகளில் எல்லாம் எதற்கு மீண்டும் வாயில் வைத்தான்? தன் கைகளை விரித்துப் பார்த்தாள். இன்னுமே விரல்களை எதற்காவது இறுக்கி மூடினால் வலித்தது. அப்படியானால் அவனுக்கு?
அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் ஒரு பக்கம். அவனைப் பார்த்துவிட்டால் மீண்டும் அதே நினைவுகள் தன்னை ஆட்கொண்டுவிடுமோ என்ற பயம் இன்னொரு பக்கம் என்று இரண்டுக்கும் நடுவே சிக்கிக்கொண்டு அவளால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.
அழுகையிலேயே தன்னுடைய நாட்களைக் கரைத்துக்கொண்டிருந்தாள். எப்படி இதிலிருந்து வெளியே வருவது? எப்படி இந்த நினைவுகளைக் கடப்பது? எப்படி பழையபடி இருப்பது என்று எதுவுமே அவளுக்குப் புரியவில்லை.
ஏதோ ஒரு கொடிய நரகத்துக்குள் யாரோ தன்னைப் பிடித்துத் தள்ளிவிட்டதைப்போல, அந்த வேதனையிலிருந்து வெளியேற வழி தெரியாமல் தவித்தாள் வருணா.
ஆனால், அவளுக்காவது மனம் வெறுத்துப்போய் ஓடி வந்து தஞ்சம் புகுவதற்கு ஒரு இடம் இருந்தது. அவள் மனநிலையைப் புரிந்துகொண்டு இதமாக நடக்கவும் ஆறுதலாகப் பார்த்துக்கொள்ளவும் பெற்றோர் இருந்தார்கள்.
அவனுக்கு?
மனம் திறந்து எதையும் சொல்லி அழுவதற்கு அவனுக்கு யார் இருக்கிறார்கள்? தன் வேதனைகளைப் பகிர்ந்துகொள்ள யாரிடம் போவான்?
இத்தனை நாள்களும் அவள் இருந்தாள். வாய்விட்டு எதையும் அவளிடம் சொல்லாதபோதும் அவள் இருந்தால் போதும். அவள் அணைப்புக்குள் புகுந்துகொண்டு ஆறுதல் அடைந்துவிடுவான். இன்று அவளே அவனை உதறிவிட்டு வந்துவிட்டாளே. என்ன செய்வான்?
வேகமாகக் கைப்பேசியை எடுத்து அவனுக்கு அழைத்தாள். அவன் அழைப்பை ஏற்கவில்லை. ஆனால் அடுத்த நொடியே மதியழகனுக்கு அவனிடமிருந்து அழைப்பு வந்தது.
நம்ப முடியாமல் வருணா பார்த்துக்கொண்டிருக்கையிலேயே அவன் அவரிடம் என்னவோ கேட்பதும், மதியழகனின் பார்வை இவளிடம் நிற்க அவர் பதில் சொல்வதும் அறைக்குள் இருந்த இவளுக்குத் தெரிந்தது.
அதிர்ந்துதான் போனாள் வருணா. கூடவே இவனுக்கு எவ்வளவு திமிர் என்று மனம் வெகுண்டது. அவனுக்குப் பாவம் பார்த்த அவளுக்கு இது தேவைதான். “போடா டேய்!” என்று புலனத்தில் அவனுக்குச் செய்தி அனுப்பிவிட்டுப் பேசாமல் இருந்துகொண்டாள்.
*****
வரதனுக்கு இரண்டு வகையான அட்ச்த்திரம். ஒன்று, தான் உதவி கேட்டும் செய்ய மறுத்த சூர்யாவுக்கு அவன் இல்லாமலும் தன்னால் முடியும் என்று காட்ட வேண்டும்.
அடுத்ததாய் இத்தனை காலமாய் இல்லாதது போன்று கலிங்கனை ஒரு கை பார்க்க வேண்டும்.
இந்தமுறை அவனுடைய இலக்கு கலிங்கனின் புதுக் கொடவுன்.
அதற்காக வழக்கமாகத் தன் வேலைகளுக்குப் பயன்படுத்தும் ஆட்களோடு சேர்த்து, இந்தமுறை வெளியிடங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட பயிற்சி பெற்ற கூலிப்படையினரையும் இணைத்திருந்தான்.
கணிசமான எண்ணிக்கையில் ஆயுதங்களோடு தயாராக இருந்தவர்கள், அந்த இரவுக்காகவே காத்திருந்தார்கள். இது வெறுமனே கலிங்கனுடைய கொடவுனைச் சேதப்படுத்தும் முயற்சி மட்டுமல்ல. அவன் பலத்தையும் செல்வாக்கையும் ஒரே அடியில் சிதைத்துவிட வேண்டும் என்ற வெறி வரதனிடம் இருந்தது.
ஆனால், அவனுடைய இந்த நகர்வை கலிங்கன் எதிர்பார்த்திருந்தான்.
சூர்யாவின் நடமாட்டத்தைக் கண்காணிக்கக் கலிங்கன் ஏற்பாடு செய்திருந்தான். அவன் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருப்பதை வைத்தே வரதனுக்கு உண்மை இன்னும் பிடிபடவில்லை என்று கண்டுகொண்டான்.
எனவே, வரதனுடைய இலக்கு தான்தான் என்பதையும், அவன் இருக்கும் மனநிலைக்கு நிறைய நாட்கள் தள்ளிப்போடமாட்டான் என்றும் கணித்து, அதற்கான முன்னேற்பாடுகளையும் செய்திருந்தான்.
ஆதியும் இவனோடு கைகோர்க்க முயல கலிங்கன் மறுத்துவிட்டான். வருணாவுக்கும் அவள் வீட்டினருக்கும் எந்த ஆபத்தும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் அவனை மதியழகன் வீட்டிலேயே நிற்கச் சொல்லியிருந்தான்.
தான் கொடவுனிலேயே தங்கிக்கொண்டான். துறைமுகக் கோடவுனுக்கும் பாதுகாப்புப் போட்டிருந்தாலும் அது அரசாங்கத்துக்கு உட்பட்ட இடம். அதைவிடவும் அவனின் மொத்தத் சரக்குகளை இங்கே மாற்றப்பட்டுவிட்டதால் வரதனின் இலக்கு இதுவாகத்தான் இருக்கும் என்று கணித்திருந்தான்.
அங்கே அவனுடைய ஆட்கள் ஏற்கனவே தயாராக இருந்தார்கள். வெளிப்புறக் காவல் பலப்படுத்தப்பட்டிருந்தது. கொடவுனின் வெவ்வேறு பகுதிகளிலும் ஆட்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். வழக்கமாகப் பொருட்களை ஏற்றியிறக்கும் இடங்கள் கூடுதல் கண்காணிப்பில் இருந்தன.
நிச்சயம் அன்றைய இரவு ஏதோ ஒன்று நடக்கும் என்று அவன் ஆழ்மனம் சொல்லிக்கொண்டிருந்தது. அதை மெய்ப்பிக்கும் வண்ணம் புறச்சத்தங்கள் அடங்கிய அந்த நடுநிசியில் தொலைவில் வாகனங்களின் சத்தம் கேட்டது.
ஒன்றல்ல, அடுத்தடுத்து பல வாகனங்கள் கொடவுனை நோக்கி வந்துகொண்டிருந்தன. கலிங்கனின் பார்வை நுழைவாயிலை நோக்கித் திரும்பியது.

