கலிங்கனின் காவியம் 6.2

நிலா முதலில் இதற்கு உடன்படவே இலை. ராயன் மீது அவள் கொண்டுவிட்ட நேசம் முன்னால் நின்று சூர்யாவையும் தடுக்கப் பார்த்தது. ஆனால், வரதன் ஏற்றிய விச ஊசி, சூர்யாவின் மூளை முடுக்கெங்கும் நிறைந்துபோயிருந்ததில் அவனே வென்றான்.

வயதைப் பற்றி ஏன் யோசிக்கிறாய், ராயனை அழித்து வரதனை நீ மணந்துகொண்டால் இரண்டு பக்கச் சொத்து சுகங்களுக்கும் நீ மட்டுமே ராணி என்கிற வார்த்தைகள் அவளையும் வீழ்த்தின.

பல நாள்களாக ஒவ்வொரு விசயத்தையும் அலசி ஆராய்ந்து, யாருக்கும் சந்தேகம் வராதபடி, மூவருமாகச் சேர்ந்து உருவாக்கிய திட்டம்தான் இது.

ராயன் ஒன்றும் முட்டாள் அல்லன். தன்னைச் சுற்றியிருப்பவர்களின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாகக் கவனிப்பவன். யாரையும் அவ்வளவு எளிதில் நம்பிவிடாதவன்.

ஆனால், சூர்யாவும் நிலாவும் அவனின் அத்தனை கவனங்களுக்கும் அப்பாட்பட்டவர்கள். தன்னுடைய உயிருக்கு இணையாக நம்பினான். சூர்யாவுக்கு நிலாவினியும் நிலாவினிக்கு சூர்யாவும் இரத்த சொந்தமாக இருந்தார்கள். ராயனுக்கு அப்படி இல்லை. அவன் அநாதை. உறவென்று சொல்லவும் யாருமில்லை. நம்பிப் பாசம் வைக்கவும் எவரும் இல்லை. அதனாலேயே அவர்கள் மீது தன் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் வைத்தான்.

அந்த நம்பிக்கையைத்தான் சூர்யா ஆயுதமாகப் பயன்படுத்திக்கொண்டான். கொஞ்சம் கொஞ்சமாகக் காய்களை நகர்த்தி, சந்தேகத்துக்கு இடமில்லாமல் நடித்து, இன்று இந்த நிலைக்குக் கொண்டுவந்து நிறுத்தியிருந்தான்.

எல்லாமே திட்டமிட்டபடி நடந்திருந்தது. இதோ கத்தியால் குத்தி அவனை மண்ணில் சாய்த்திருந்தார்கள்.

அது மட்டுமே அவர்கள் திட்டமில்லை. யாருக்கும் சந்தேகம் வராதபடிக்கு மொத்தமாய் அவனை அழிக்க வேண்டும்.

ராயனின் ரேஞ்ச் ரோவர் காரிலேயே அவனைத் தூக்கிப் போட்டார்கள். ஆட்கள் நடமாட்டமில்லாத இடத்தில் அந்தக் காரைக் கொண்டுபோய் நிறுத்திவிட்டு, ராயனோடு சேர்த்து அதை எரிப்பதுதான் அவர்களின் திட்டம்.

*****

இரும்பை ஈர்க்கும் காந்தம் போன்று ஆதியை ஈர்ப்பவன் ராயன். அவன் எங்கு இருக்கிறானோ அங்கு தன் இருப்பை வைத்துக்கொள்ள முயன்றுகொண்டேயிருப்பான் அதி.

அப்படித்தான் அவனோடு வைத்தியசாலைக்கு அன்றும் வந்திருந்தான். அவர்கள் மூவரும் உணவு உண்டுகொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்து, அந்த அறையிலிருந்து தள்ளி நின்னிருந்தான்.

அப்போதுதான் அவர்களின் ஆட்களில் ஒருவன் ஓடி வந்து, வரதன் அனுப்பிய தகவல் குறித்துச் சொல்லிவிட்டுப் போனான்.

அதன் பிறகு அவர்கள் பேசிக்கொண்டவை, ராயன் தனியாக வரதனைச் சந்திக்க முடிவெடுத்தது எல்லாம் அவன் காதிலும் விழுந்திருந்தது.

அதிலிருந்து அவன் நிம்மதியே போயிற்று. அவன் தலைவன் அவர்களுக்காகத்தான் அந்த முடிவை எடுத்திருக்கிறான் என்று புரிந்தாலும் பிடிக்கவில்லை. அவனுக்குச் சமாதானமாகப் போவதில் பிடிப்பில்லை. அடிதடி, சண்டை, ராயன் வரதன் ஆட்களை அடக்கியாள்வதைப் பார்ப்பதில் அலாதிப் பிரியம் கொண்டவன். அப்படியிருக்க ராயன் எடுத்த அந்த முடிவு ஏதோ ஒரு ஆபத்து வரப் போவதாக அவனது உள்ளுணர்வுக்கு எச்சரித்துக்கொண்டே இருந்தது.

அதை நேரடியாக சொல்கிற அளவுக்கெல்லாம் அவன் பெரிய ஆள் இல்லை. அதனாலேயே அன்றிலிருந்து இன்னும் கவனமாக ராயனை அவனறியாமலேயே பார்த்துக்கொள்ள ஆரம்பித்தான்.

அப்படி இருக்க, அன்று நடு நிசியில் ராயன் தனியாகப் புறப்பட்டதை வைத்து, அவன் எங்கே செல்கிறான் என்று ஊகித்துக்கொண்டான். ஆனால், அவன் புறப்பட்ட பிறகு அண்ணனும் தங்கையுமாகப் புறப்பட்டது சந்தேகத்தை விதைத்தது.

முன்னரும் சூர்யாவுக்குத் தன்னைப் பிடிக்காதோ என்றொரு எண்ணம் அவனுக்குள் உண்டு. அதோடு கூடவே இதுவும் சேர்ந்துவிட, தன் நண்பர்கள் நாள்வரை அழைத்துக்கொண்டு சூர்யாவை பைக்கில் பின்தொடர்ந்தான்.

சூர்யா அவன் வாகனத்தைக் கொண்டுபோய் அந்த இருளிலும் மரங்களுக்கிடையே மறைவாக நிறுத்தினான். அதிலிருந்து இறங்கிய அவர்களின் உடல் மொழி சரியாக இல்லை. அதுவும் சூர்யா கண்களைக் கூர்மையாக்கித் தம்மை யாராவது பின் தொடர்கிறார்களா என்று கவனித்தபோது மரங்களின் பின்னே மறைந்துகொண்டார்கள்

முதலில் நிலாவினியோடு சேர்ந்து போன சூர்யா, அவளை அனுப்பிவிட்டுத் தனியாகத் திரும்பி வந்து இன்னொரு பக்கத்தால் நடக்க ஆரம்பித்தது பெரும் சந்தேகத்தை கிளம்பிற்று.

நிலாவினியை அவர்கள் இருவரும் எப்படி பாதுகாப்பார்கள் என்று தெரியும். அதோடு, இங்கே சற்றுத் தள்ளி பாழடைந்த தொழிற்சாலை கட்டடம் இருப்பதும் தெரியும்.

இருளின் உதவியோடு சூர்யாவைப் பின் தொடர்ந்தான். ராயனின் ரேஞ்ச் ரோவரைக் கண்டதும் என்னவோ ராயனையே கண்டதுபோல் மகிழ்ந்துபோனான். சூர்யா அந்தக் கட்டடத்தை நோக்கி இருளின் மறைவில் பதுங்கிப் பதுங்கி நடந்தான். பிறகு அந்தக் கட்டடத்தினுள் மறைந்துபோனான். அங்கே மங்கலான லைட் எரிவது தெரிந்ததே தவிர்த்து, என்ன நடக்கிறது என்று தூர இருந்து பார்த்தவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

ஆனால், சற்று நேரத்தில் சூர்யாவும் வரதனும் ராயனின் ரத்தம் தோய்ந்த உடலை இழுத்துக்கொண்டு வந்து, அவனது ரேஞ்ச் ரோவர் காரில் தூக்கிப் போடுவதைக் கண்ட ஆதியின் இதயம் ஒரு கணம் தன் துடிப்பையே நிறுத்தியிருந்தது. நரம்புகள் புடைத்தன. அவர்கள் இருவர் கழுத்தையும் அறுத்தெறியும் வெறி உண்டாயிற்று. அவனால் சிந்திக்கவே முடியவில்லை.

அதே நேரத்தில் தான் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ராயன் உயிருக்கு ஆபத்தாய் முடியும் என்பதை அறிவு சொல்லிற்று. அவர்களைக் கருவருப்பதைக் காட்டிலும் அவன் நாயகனைக் காப்பாற்ற வேண்டும். என்ன செய்வான்? அடுத்த நொடியே தன் உயிரைப் பணயம் வைத்து அவனைக் காக்க முடிவு செய்தான். அவர்களோடு சண்டையிட்டு வெல்ல முடியாது என்று அவனுக்குத் தெரியும். அவனும் வீரன்தான் என்றாலும் அவர்கள் அவனை விடவும் பலமானவர்கள்.

தன் நண்பர்களுக்குச் செய்ய வேண்டியதைச் சொல்லிவிட்டு வரதன் மீது பாய்ந்தவன் அவனைத் தன் இரு நண்பர்களோடு வளைத்துப் பிடித்து, அவன் கழுத்தில் கத்தியை வைத்தான்.

“எனக்கு அண்ணாதான் முக்கியம். இந்த நேரம் எவனாவது உங்கட வீரத்தை காட்ட நினைச்சீங்க, ஒரே அறுவையா அறுத்திட்டு நானும் செத்திடுவன்!” என்றவனின் ஆக்ரோஷத்தில் வரணும் சூர்யாவும் அதிர்ந்து நின்றுவிட்டார்.

ராயனை சாட்சியே இல்லாமல் அழித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் அவர்கள். அப்படியிருக்க ஆதி என்கிற ஒருவன் அங்கே வருவான் என்பதையே எதிர்பாராதவர்கள், ராயனைக் கூட விட்டுவிட்டு அவன் முதல் வேலையாக வரதனைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவான் என்று கனவிலும் எண்ணியிருக்கவில்லை.

அவர்கள் அதிர்ந்து நின்ற அந்த நொடியைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஆதி, தன் நண்பனை ராயனின் காரை எடுக்கச் சொல்லிவிட்டு, வரதனைத் தன் கட்டுப்பாட்டில் வைத்தபடியே அதற்குள் ஏறினான்.

“எடு மச்சான்!” என்றவனின் ஒற்றைச் சொல்லில் ஓட்டுநர் இருக்கையில் இருந்தவன் காரை சீற விட, வரதனைப் பிடித்து தள்ளிவிட்டுவிட்டு கதவை அறைந்து சாற்றியிருந்தான் ஆதி.

சூர்யா உச்சபட்ச அதிர்ச்சியில் உறைந்து நின்றான். அடுத்த நொடியே தன் கார் நிறுத்திவைத்திருந்த இடம் நோக்கி மின்னலாக ஓடினான். இங்கே வரதனோ ஆதி தள்ளிவிட்டதில் தரையில் விழுந்தது போலவே அமர்ந்திருந்தான். அவன் உடல் அடக்க முடியாத ஆத்திரத்தில் அவமானத்தில் நடுங்கிக்கொண்டிருந்தன. இப்போதும் ஏதோ ஒரு வகையில் ராயனிடம் தோற்றுவிட்டோம் என்பதை அவனால் ஏற்கவே முடியவில்லை.

மின்னல் விரைவில் ராயனின் ரேஞ்ச் ரோவரில் பறந்துகொண்டிருந்த ஆதிக்கு அவனை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று உயிர் துடித்துக்கொண்டிருந்தது.

அவன் கன்னத்தில் தட்டி எழுப்ப முயன்றான். ஆனால், ராயனின் உடலிலிருந்து இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவன் சுவாசம் குறைந்துகொண்டிருப்பதைக் கண்டு அவனுக்கு கண்கள் கலங்கின. சூர்யாவின் துரோகத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவன் உள்ளம் வெந்தது.

பெரு மலையாக, பிரமாண்டவனாக அவன் பார்த்து ரசித்த ஒருவன், இன்று இப்படிக் கிடப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தன் உயிரைக் கொடுத்தாவது அவனைக் காப்பாற்றிவிட துடித்தான்.

ராயனின் காரை வைத்துத் தன்னைப் பின்தொடர்வார்கள் என்று தெரியும். உடனே இன்னொரு நண்பனுக்கு அழைத்து வேறு ஒரு காரை அவன் போய்க்கொண்டிருக்கும் திசையில் கொண்டுவரச் சொன்னான். அவன் வந்ததும் அதில் ராயனை மாற்றிக்கொண்டு பறந்தான்.

ராயனின் கார் மின்னல் விரைவில் வேறொரு திசையில் போய்க்கொண்டே இருந்தது. சூர்யா துரத்திக்கொண்டு வந்தபோது ராயன் கார் போன சுவடே இல்லை. சூர்யா திகைத்து நின்றுவிட்டான்.

ராயனைக் கொண்டு சென்ற காரும் இரவின் இருளைக் கிழித்துக்கொண்டு அதிவேகத்தில் பறந்துகொண்டிருந்தது.

ஆதிக்கி ராயனை எங்கே சேர்ப்பது என்று தெரியவில்லை. அவர்கள் எப்போதும் போகும் வைத்தியசாலை சூர்யாவுக்கும் தெரியும்.

கடைசியில் இரண்டு ஊர்கள் கடந்த இடத்தில் அமைந்திருந்த தனியார் மருத்துவமனை ஒன்றில் கொண்டுபோய் ராயனைச் சேர்த்தான் ஆதி.

error: Alert: Content selection is disabled!!