அவள் நடுக்கத்தையும் கண்ணீரையும் கவனித்த சிவசுந்தரி, அவளை நெருங்கி அரவணைத்துக்கொண்டார். ஆனால் வருணாவால் அந்த அரவணைப்புக்குள் கூட அமைதியடைய முடியவில்லை.
எப்படியாவது அவனைக் பார்த்துவிட வேண்டும். அவன் மார்போடு ஒட்டிக்கொண்டு, அவனைத் தன் கைகளுக்குள் இறுக்கமாகப் பொத்திக்கொண்டு, அவனுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று உணர்ந்தால் ஒழிய அவள் உள்ளம் அமைதியடையாது.
கடவுளே கடவுளே என்று பரிதவித்துக்கொண்டிருந்த நொடியில்தான் அவளுக்கு ஒரு உண்மை மிகத் தெளிவாகப் புரிந்தது.
அவனுடைய கடந்த காலத்தைப் பற்றிய கேள்விகளோ, கோபமோ, காயங்களோ எதுவுமே அந்தக் கணத்தில் அவளிடம் இல்லை.
அவன் வேண்டும். அவன் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவன் தன்னைவிட்டு எங்கும் போய்விடக்கூடாது. அவளால் நொடியும் பிரிந்து வாழ முடியாத உறவு அவன் என்பது அப்போதுதான் இன்னும் ஆழமாகப் புரிந்தது.
அவன் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்கக்கூட முடியாத அளவுக்கு அவன் தன்னுள் வேரூன்றியிருக்கிறான் என்பதை உணர்ந்தபோது, அவளது கண்ணீர் மேலும் பெருகியது.
கோபித்துக்கொண்டு வந்திருந்தாள். அவனிடம் பேசக்கூடாது என்று பிடிவாதமாக இருந்தாள். ஆனால் இப்போது அவனைப் பார்க்காமல் ஒரு நொடியைக் கூடக் கடக்க முடியாமல் தவித்தாள்.
தன்னுடைய கோபத்தையும் காயத்தையும் விட அவன் முக்கியமானவன் என்பதை உணர்ந்த அந்தக் கணத்தில், அவளுடைய மனம் அவனுக்காக மட்டுமே வேண்டிக்கொண்டிருந்தது.
வருணாவால் அதற்கு மேலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
“எல்லாம் ஓகேயா?” என்று ஆதிக்குக் குறுந்தகவல் அனுப்பினாள்.
அப்போதுதான் மொத்தமாக எல்லோரையும் விரட்டி அடித்துவிட்டு, தம் ஆட்களில் வைத்தியசாலைக்கு கொண்டு போகும் அளவில் யாராவது காயப்பட்டிருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு கலிங்கனும் ஆதியும் வந்தார்கள்.
முகம், கைகால்களைக் கழுவிக்கொண்டு வந்த கலிங்கன், அணிந்திருந்த சேர்ட்டை கழற்றிவிட்டு இன்னொன்றை எடுத்து அணிந்தபடி, “உன்னை ஆரடா இஞ்ச வர சொன்னது?” என்று அதட்டிக்கொண்டிருக்கையில்தான் வருணாவின் குறுந்தகவல் அவனுக்கு வந்தது.
அதை பார்த்தவன், “அண்ணா அண்ணி.” என்றான் வியப்புடன்.
“அவள் ஏன் இந்த நேரம் முழிச்சிருக்கிறாள்?”
“இஞ்ச என்னவோ பிரச்சினை எண்டு அன்னிக்குத் தெரிஞ்சிருக்கு.”
“நீ வெளிக்கிட்டு வந்ததை வச்சே பிடிச்சிருப்பாள்.” என்றவன் கண்டிப்பான பார்வையை ஆதியின் புறம் வீசினான்.
தான் புறப்பட்டு வந்ததற்காக கலிங்கன் அடித்தால் சிரித்துக்கொண்டு வாங்குவான் ஆதி. இதில் முறைப்பு அவனைப் பாதிக்குமா என்ன? சின்ன சிரிப்புடன், “என்ன அண்ணா சொல்ல?” என்று கேட்டான்.
“நீதானே அவளுக்கு காட்டிக்குடுத்தனி. நீயே சமாளி!” என்றான் அவன்.
“ஒரு பிரச்சினையும் இல்லை அண்ணி.” என்று அனுப்பிவிட்டான்.
அந்தப் பதிலைப் பார்த்ததும் அவளுக்கு ஆத்திரம் வந்தது. இத்தனை நேரமும் தாங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தவித்துக்கொண்டிருக்க, ஒன்றுமில்லையாம்.
“கோல் பண்ணவா?” என்று மீண்டும் அனுப்பினாள்.
ஆதி அந்தக் குறுந்தகவலைக் கலிங்கனிடம் காட்டினான். அதைப் படித்த கலிங்கனுக்குமே அவள் குரலையாவது கேட்க வேண்டும் போலிருக்க, சரி என்பதுபோல் தலையசைத்துவிட்டு அங்கேயே அமர்ந்துகொண்டான்.
உடனே ஆதியே அவளுக்கு அழைத்தான். அழைப்பு ஏற்கப்பட்ட அடுத்த நொடியே, “இவர் எங்க?” என்றுதான் பதற்றத்துடன் கேட்டாள் வருணா.
கலிங்கன் ஒருமுறை விழிகளை மூடி அந்தக் குரலை உள்வாங்கினான். இத்தனை நாள்களாக அவனிடமிருந்து தள்ளியிருந்த அந்தக் குரல் இன்று மறுபடியும் அவனைத் தேடி வந்ததில் அவனுக்குள் ஒரு ஆறுதல்.
இத்தனை நேரமும் இறுகியிருந்த ஏதோ ஒன்று மெல்லத் தளர்ந்தது. தன் மீதான கோபத்தையும் வருத்தத்தையும் கடந்து, இப்போதும் அவள் தனக்காகப் பதறுகிறாள், தவிக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்குள் ஒரு விசித்திரமான ஆறுதலைக் கொடுக்க அப்படியே அமர்ந்திருந்தான்.
பார்வை அவன் மீதே இருக்க, “அண்ணா இஞ்சதான் இருக்கிறார். ஒருத்தருக்கும் ஒரு பிரச்சினையும் இல்ல. பயப்பிடாதீங்க.” என்று பதில் சொன்னான் ஆதி.
“ஓமோம். நீ இந்த நேரம் இஞ்ச இருந்து வெளிக்கிட்டுப் போன வேகத்திலேயே தெரிஞ்சது, ஒருத்தருக்கும் ஒண்டும் இல்லை எண்டு. அப்பிடியே உன்ர அண்ணா மாதிரி ஒரு உண்மையையும் வாயத் திறந்து சொல்லிடாதீங்க!” என்றவள் சீற்றத்தில் ஆதி சிரித்துவிடப் பார்த்தான்.
அவனுக்கு அவர்களுக்குள் நடப்பது ஓரளவுக்குத் தெரியும். அவன் கலிங்கனைப் பார்க்க, அவன் இவனை நன்றாக முறைத்தான்.
“எங்க அவர்? அவரிட்டக் குடு!” என்றாள் கடுப்புடன். அவளுக்கு அவன் குரலைக் கேட்டேயாகவேண்டும். அவனுக்கு ஒன்றுமில்லை என்று அவன் வாயாலேயே அறிய வேண்டும். முடிந்தால் இங்கே வரச் சொல்ல வேண்டும். இப்படி ஆயிரம் தவிப்புடன் அவள் கேட்க, ஆதி பதில் சொல்லாமல் கலிங்கனைப் பார்த்தான்.
கலிங்கனின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவன் கை கைப்பேசியை வாங்க இவன் புறம் நீளவும் இல்லை.
அந்த நீண்ட மௌனமே வருணாவுக்குப் பதிலாகிப் போனது.
தொண்டைக்குள் ஏதோ ஒன்று அடைத்துக்கொள்ள, “உன்ர அண்ணாட்டச் சொல்லு, அவருக்கு ஏதும் நடக்குதோ இல்லையோ, அப்பிடி ஏதும் நடந்திடுமோ எண்டு பயந்து பயந்து கட்டாயம் எனக்கு ஏதாவது நடக்கும் எண்டு. அதுக்குப் பிறகு அவரை சந்தோசமா இருக்கட்டாம் எண்டு சொல்லிவிடு!” என்று சீறிவிட்டு வைத்தவளுக்கு அழுகையும் ஆத்திரமும் குறைந்தபாடாக இல்லை.

