வயது 29. MBBS மருத்துவப் பட்டம் பெற்று, உள்ளகப் பயிற்சியையும்(Internship) முடித்து, சத்திரசிகிச்சை சிறப்புப் பயிற்சியில் இருக்கும் மருத்துவர்.
நெஞ்சிலும் முதுகிலும் கத்திக்குத்துக் காயங்களுடன் உயிரற்றவனைப் போலக் கிடந்த அவனைப் பார்த்த வருணாவுக்குள்ளும் பெரும் பதற்றம் தொற்றிக்கொண்டது. இதுவரையில் இத்தனை மோசமான நிலையில் இருந்த நோயாளியை அவள் பார்த்ததில்லை.
உடனேயே மூத்த சத்திரசிகிச்சை நிபுணருக்குச் செய்தி பறந்தது. அவர் வந்ததும் காயங்களின் தன்மையை அவருடன் இணைந்து ஆராய்ந்தாள்.
காயங்கள் ஆழமானவையாக இருந்தன. இரத்தம் நில்லாமல் வெளியேறிக்கொண்டிருந்தது. அவசரமாக அவனுடைய இரத்த அழுத்தத்தையும் சுவாசத்தையும் சீராக்குவதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
வயிற்றுக்குள் ஏற்பட்டிருந்த காயத்தையும் இரத்தப்போக்கையும் பரிசோதித்த மூத்த மருத்துவர், அறுவைச் சிகிச்சையைத் தொடங்கினார்.
அவருடைய வழிகாட்டுதலின்படி வருணா காயமடைந்த பகுதிகளில் இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தவும், சேதமடைந்த திசுக்களைக் கவனிக்கவும் உதவினாள். முதுகில் ஏற்பட்டிருந்த ஆழமான காயமும் கவனமாகப் பரிசோதிக்கப்பட்டது.
பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு, இரத்தப்போக்குக் கட்டுப்படுத்தப்பட்டு, அவனுடைய உயிருக்கு ஏற்பட்டிருந்த உடனடி ஆபத்தை ஓரளவுக்குக் குறைத்தனர்.
அறுவைச் சிகிச்சை முடிந்ததும் அவனைத் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றினார்கள்.
முகத்தில் சோர்வு அப்பியிருக்க, முகக்கவசத்தைக் கழற்றிய வருணா, தன்னை நிதானப்படுத்திக்கொள்ள கண்களை ஒருமுறை மூடித் திறந்தாள். அவனுடைய உயிர் இன்னும் முழுமையாக ஆபத்திலிருந்து மீளவில்லை. ஆனாலும், காப்பாற்றிவிடலாம் என்கிற நம்பிக்கையோடு தன்னுடைய அறைக்குச் செல்ல வந்தாள்.
அப்போதுதான் வைத்தியசாலையின் முன்புற நிர்வாகப் பகுதியில் ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்த வருணா, ஒரு கணம் நின்று கூர்ந்து கவனித்தாள்.
“என்ன பிரச்சினை?” அவளுடைய குரலில் மெல்லிய அதட்டல் வெளிப்பட்டது.
“போலீசுக்குச் சொல்லக் கூடாது எண்டு சொல்லுறார் டொக்டர். ஆனா, இது கத்திக்குத்து கேஸ். கட்டாயம் சொல்லியே ஆகோணும்!” என்று ஆதியைக் காட்டி நிர்வாகப் பிரிவிலிருந்த ஊழியர் கூறினார்.
வருணா புருவங்களைச் சுருக்கி ஆதியைப் பார்த்தாள்.
“அண்ணா எழும்பி வாற வரைக்கும் அவர் இஞ்ச இருக்கிற விஷயம் வெளியில போகக்கூடாது டொக்டர்!” என்றான் ஆதி.
“அது உங்கட பிரச்சினை. இது ஹொஸ்பிட்டல் நடைமுறை. அதைத் தடுக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை.”
“விளங்குது டொக்டர். நானும் முழுசா மறைக்கச் சொல்லேல்ல. அண்ணா எழும்பிற வரைக்கும் வெளியில் சொல்லாதீங்க எண்டுதான் சொல்லுறன். அவரின்ர உயிருக்கு ஆபத்து இருக்கு.”
“அப்பா கட்டாயம் போலீசுக்குச் சொல்லோணும். அவே பாதுகாப்புத் தருவினம்.”
அது சாதாரணமானவர்களுக்கு! கலிங்கராயனுக்கு அல்லவே! அவனுடைய எதிரிகள் அவன் இருக்கும் இடத்தைத் தெரிந்துகொண்டால், வைத்தியசாலைக்கே வந்து ஏதாவது செய்துவிடுவார்களே.
அதை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல், “இப்போதைக்கு அண்ணா இந்த ஹொஸ்பிட்டல்ல இருக்கிற விஷயம் வெளியில போகவே கூடாது டொக்டர்! நீங்க சொல்லக்கூடாது!” என்று அழுத்தமாகச் சொன்னான் ஆதி.
அவனுடைய உத்தரவிடும் தொனி வருணாவைக் கோபப்படுத்தியது. அந்தளவுக்கு அவளிடம் அதிகாரம் செலுத்த இவன் யார் என்கிற சினத்துடன் கைப்பேசியை எடுத்தாள்.
அவள் போலீசுக்கு அழைக்கப்போகிறாள் என்பதை நொடியில் ஊகித்த ஆதி, அருகிலிருந்த ஊழியர் ஒருவரைப் பிடித்துத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அவருடைய கழுத்தில் கத்தியை வைத்தான்.
“ஐயோ, டொக்டர்! என்னை விடச் சொல்லுங்க!” என்று அந்த ஊழியர் பயத்தில் நடுங்கினார்.
வருணா இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“ஏய்! என்ன செய்றாய்? மரியாதையா அவர விடு!” என்று அவர்களை நோக்கி நகர்ந்தாள்.
“அங்கேயே நில்லுங்க டொக்டர்!” கத்தியைக் கழுத்தில் இன்னும் அழுத்தமாகப் பிடித்தபடி எச்சரித்தான் ஆதி.
அந்த ஊழியர் பயத்தில் உறைந்துபோயிருந்தார். அவருடைய முகம் வெளிறிப்போயிற்று. கொஞ்சம் அசைந்தாலும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்கிற அச்சத்தில் மூச்சைக்கூட ஒழுங்காக விட முடியாமல் தவித்தார்.
வருணா அப்படியே நின்றுவிட்டாள். அவள் முகம் கோபத்தில் சிவந்தது.
“நீ இப்பிடி நடந்தபிறகும் உன்ர ஆளுக்கு நான் வைத்தியம் பாப்பன் எண்டு நினைக்கிறியா?” அவள் ஒரு மருத்துவர். உயிர் காப்பதையே தன் வாழ்க்கையாகக் கொண்டவள். அவளால் அப்படி இருக்க முடியாது. ஆனால், அவன் மிரட்டலுக்கு அடங்க முடியாமல் சொன்னாள்.
“நீங்க அப்பிடிச் செய்ய மாட்டீங்க எண்டு நம்புறேன் டொக்டர். அதையும் மீறி அண்ணாக்கு ஒண்டு நடந்தா இஞ்ச இருக்கிற ஒருத்தரைக் கூட விடமாட்டன்.” அவன் பேச்சில் இருந்த உறுதியும் அவன் பார்வையில் இருந்த தீவிரமும் அவன் சும்மா சொல்லவில்லை என்று சொல்லின.
அதற்குமேல் என்ன செய்வது என்று தெரியாது அவர்களின் வைத்தியசாலையின் தலைமைக்கு செய்தி பறந்தது. அவரும் விரைந்தோடி வந்தார். அவரும் ஆதியும் தனியாகச் சென்று நிறைய நேரமாகக் கதைத்தார்கள். வெளியில் வந்தபோது அவர் முகம் சரியில்லை. இறுகிக் கறுத்திருந்தது.
“இந்த கேஸ் பற்றின நியூஸ் வெளில போகக்கூடாது டொக்டர்!” என்று அவளைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போனார் அவர்.
அவள் திகைத்து நின்றுவிட்டாள். அவளால் நடப்பதை நம்பவே முடியவில்லை. “சொறி டொக்டர்.” என்றான் ஆதி. அவனை வெறுப்புடன் நோக்கிவிட்டு அங்கிருந்து அகன்றாள் வருணா.
அவள் வீட்டில் கூட இதைப் பற்றி வாயைத் திறக்க கூடாது என்கிற அறிவுறுத்தல் வேறு வந்ததில் நெஞ்சமெல்லாம் புகைந்து தள்ளியது.

