கலிங்கனின் காவியம் 8.1

அத்தியாயம் 8

ஆள் நடமாட்டமற்ற ஒரு இடத்தில் கலிங்கராயனின் ரேஞ்ச் ரோவர் எரிந்துகொண்டிருப்பதாக அதிகாலையிலேயே வந்த செய்தியில் சூர்யா நிலைகுலைந்துபோனான். இனி என்னாகுமோ என்கிற பதற்றத்திலேயே இரவு முழுக்க அவன் உறங்கவில்லை. அப்படி இருக்கையில் இப்படி ஒரு செய்தி.

இணையத்தளங்களிலும் அந்த வீடியோ வெளியானது. அதற்குள் ஆட்கள் இல்லை என்றும், வாகனம் மட்டுமே எரிந்திருக்கிறது என்றும் சொன்னார்கள்.

ஆதிதான் கொளுத்தியிருக்கிறான். அதில் அவனுக்குச் சந்தேகமேயில்லை. எதற்காக அப்படிச் செய்தான்? இதன் பின்னணியில் என்ன திட்டத்தைச் செயற்படுத்த முயற்சிக்கிறான் என்பதை எவ்வளவு யோசித்தும் சூர்யாவால் ஊகிக்க முடியவில்லை.

ராயன் இறந்துவிட்டான் என்று நம்ப வைப்பதற்காகவா? அல்லது, அவன் உயிருடன் இருப்பதை மறைப்பதற்காகவா? அப்படியென்றால், அடுத்ததாக ஆதி என்ன செய்யப்போகிறான்?

யோசிக்க யோசிக்க ஆதியின் மீதான ஆத்திரம் அதிகரித்தது. அவன் மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால், ராயனின் கதையை மொத்தமாக முடித்திருப்பான். இப்போது ராயன் உயிருடன் இருக்கிறானா என்பதைக்கூட அறிய முடியாமல், தன்னுடைய திட்டங்கள் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை!

ராயனைக் கொன்ற பிறகு, வரதன்தான் ராயனை என்னவோ செய்துவிட்டான் என்று ஊருக்குள் செய்தியைப் பரப்பிவிட்டு, தாங்கள் இருவரும் பரம எதிரிகளைப் போன்று வெளியில் நடித்துக்கொண்டு, உள்ளுக்குள் ஒற்றுமையாக இருந்து காரியங்களைச் சாதிக்கத் திட்டமிட்டிருந்தார்கள்.

காவல்துறையால் வரும் பிரச்சனைகளை வரதன் தன் செல்வாக்கினால் பார்த்துக்கொள்வது என்றும் ஏற்பாடு.

ஆதி வந்து அத்தனையையும் கெடுத்துவிட்டான். அது போதாது என்று இப்போது ராயனின் காரை எரித்து, புதுக் குழப்பத்தை உண்டாக்கியிருக்கிறான்.

நடந்தவற்றை ஆதி அவர்களின் மற்ற ஆட்களுக்குச் சொல்லியிருப்பானா? அப்படிச் சொல்லியிருந்தால் ராயன் திரும்பி வர வேண்டிய அவசியமே இல்லை. அதற்குள் தங்களுடைய ஆட்களே வந்து அவனைத் தீர்த்துக் கட்டிவிடுவார்கள் என்று தெரியும்.

ஆனாலும் உறுதியாகத் தெரியாமல் அடுத்து எதையும் செய்யப் பயந்தான்.

ராயனின் கார் எரிந்த செய்தி இணையத்தில் பரவ பரவ அவர்களின் ஆட்களின் அத்தனை அழைப்புகளும் சூர்யாவை நோக்கிப் படையெடுத்தன. “அண்ணா, அண்ணான்ர கார் எரிஞ்சிருக்கு. அண்ணாவைக் காணேல்ல. நீங்களும் நிலாக்கவும் எங்க போயிட்டீங்க? ஆதியையும் காணேல்ல.” என்று பதற்றத்துடன் விசாரித்தார்கள்.

அதுவே முதல் நாள் இரவு நடந்த விடயம் வெளியில் போகவில்லை என்று சொல்லியதில் அவன் சுவாசம் சற்றே சீரானது. ஆனால், இனி இந்த விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டும். அது அடுத்த பிரச்சனை.

“நானும் அவனைத்தான் தேடிக்கொண்டிருக்கிறன்.” என்றுவிட்டு ஊரை நம்ப வைப்பதற்காக ராயனின் கார் எறிந்த இடத்திற்கு நிலாவோடு விரைந்தான்.

“ராயன் தப்பியிருப்பாரா அண்ணா?” பயணத்தின்போது நடுங்கிக்கொண்டு கேட்டாள் நிலா.

பதில் சொல்லாமல் முகம் இறுக காரின் வேகத்தைக் கூட்டினான் சூர்யா.

“இதுக்குத்தான் இதெல்லாம் வேண்டாம் எண்டு சொன்னனான். இப்ப பாருங்க, எங்களுக்குத்தான் பிரச்சினை.” என்று முணுமுணுத்தாள் அவள்.

மனத்தின் வலிக்கு இணையாக வரதன் தருகிற உடலின் வலி இருந்தது. அதை அவளால் சூர்யாவிடம் கூடச் சொல்ல முடியவில்லை. ஆனால், தாம் பெரும் துரோகம் செய்துவிட்டோம் என்று மட்டும் நன்றாகப் புரிந்துகொண்டாள்.

சில நேரங்களில் நாம் எடுக்கிற தவறான முடிவுகள் நாமே நினைத்தால் கூட சரியாக்க முடியாத இடத்தில் நம்மைக் கொண்டுபோய் நிறுத்திவிடும். அதன் பிறகு நம் விருப்பம் இல்லாமலேயே, அலையில் அடித்துச் செல்லும் சருகாய், வாழ்க்கை போகிற பாதையில் பயணிக்கும் நிலை உண்டாகும். அந்த இடத்தில் இப்போது இருந்தாள் நிலாவினி.

அடுத்த சில நிமிடங்களில் ராயனின் கார் எறிந்த இடத்தில் நின்றிருந்தார்கள். பார்த்த நிலாவினிக்குத் துக்கம் தொண்டையை அடைக்க, கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது.

தீயணைப்புப் படை வந்து தீயை அனைத்திருந்தாலும் இன்னுமே மெல்லிய கரும்புகை வான் நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. காரின் முன்பகுதி தீயில் முழுமையாகச் சிக்கியிருக்க, ஜன்னல் கண்ணாடிகள் வெடித்துச் சிதறியிருந்தன. கார் முழுவதும் கருகிக் கிடந்தது.

அதில் எத்தனையோ நாட்கள் ஒரு ராணியைப் போன்று பயணித்திருக்கிறாள். அந்தக் காரைக் கண்டாலே அவர்களின் ஆட்கள் மிகுந்த பணிவுடன் ஒதுங்கி நிற்பார்கள். அதிலிருந்து இறங்குகிற அவளுக்கும் ராயனுக்கு ஒப்பான மரியாதையும் கவனிப்பும் கிடைக்கும். ஆனால் இன்றைக்கு…

சட்டென்று கண்களைச் சிமிட்டித் தம்மைச் சுற்றி நடப்பதைக் கவனித்தாள்.

இவர்களைக் கண்டுவிட்டு அவர்களின் ஆட்கள் ஓடி வந்தார்கள். அனைவர் முகத்திலும் ராயனுக்கு என்னாயிற்றோ, அவன் கார் இப்படி எரிந்துபோயிற்றே என்கிற கவலையும் பதற்றமும் அப்பிக் கிடந்தன.

இதற்குள் காவல்துறையும் சூர்யாவிடம் வந்து காவல்நிலையம் வரச் சொன்னது. உள்ளே அவனுக்கு நடுங்காமல் இல்லை. மற்றவர்கள் கவனத்தைக் கவராத வண்ணம் வரதனின் ஆட்கள் ரகசியமாக அவனோடு இருப்பது தெரியும். அந்தத் தைரியத்தோடு நிலாவினியையும் அழைத்துக்கொண்டு போனான்.

அவனறியாமல் ராயன் எங்கும் செல்லமாட்டான் என்று காவல்துறைக்கும் தெரியும். கூடவே, இவனையும் நிலாவினியையும் தேடிப் போனபோது ராயனின் மாளிகையில் இவர்கள் இல்லை. இவையெல்லாம் சேர்ந்து துரையின் சந்தேகப் பார்வையை இவன் புறம் திருப்பியிருந்தது.

error: Alert: Content selection is disabled!!