காதல் காயங்களே 1 – 1

அத்தியாயம் 1

 

 

 

காலைப் பொழுதுக்கே உரித்தான பரபரப்புடன் சமையலறையில் உப்புமா கிளறிக்கொண்டிருந்தார் புஸ்பவதி. முகத்தில் மட்டும் இயலாமையுடன் கூடிய கவலை அப்பிக்கிடந்தது. வெளியில் இருந்து பார்க்கிற எவருமே அவருக்கென்ன, எந்தக் குறையுமே இல்லாமல் வாழ்கிறார் என்றுதான் சொல்வார்கள். அப்படித்தான் பார்வைக்குத் தெரியும்.

 

அது உண்மையும் கூட. இரண்டு மகள்களையும் ஒற்றை மகனையும் கொண்ட குடும்பம் அவரது. கணவர் அரசாங்க உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். பெரியவளையும் சின்னவளையும் கட்டிக்கொடுத்துப் பேரப் பிள்ளைகளையும் கண்டாயிற்று. நடுவில் பிறந்தவன்தான் அவரை மல்லுக்கட்ட வைத்துக்கொண்டிருக்கிறான். முப்பத்தைந்து வயதாகிறது. தனியாரின் சாப்ட்வேர் நிறுவனத்தில் நல்ல வேலை, நல்ல சம்பளத்தோடு, நல்ல குணம் வாட்ட சாட்டமான ஆண்பிள்ளை என்று எல்லாமே நன்றாக இருந்தும் பல வரன்கள் கேட்டு வந்துமே அவன் சம்மதிக்கிறான் இல்லை.

 

மூத்தவளைக் கட்டிக்கொடுத்த பக்கத்திலிருந்து அவர்களாகவே கேட்டு வந்திருந்தார்கள். பெண்ணையும் பெண் வீட்டாரினையும் அவருக்கு அவ்வளவு பிடித்திருந்தது. தலைகீழாக நின்றேனும் அவனைச் சம்மதிக்க வைத்துவிடவேண்டும் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், போராடியும் தட்டிக் கழித்துவிட்டிருந்தான் அவன். இப்போதானால், அவளுக்கு வேறிடத்தில் பொருந்திவிட்டதாம். மூத்த மகள் பிருந்தா அழைத்துச் சொன்னதில் இருந்து அவரால் அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

எவ்வளவு அருமையான வரன்.

 

அது கைவிட்டுப் போனதில் முழுமையாக உடைந்துபோயிருந்தார். நினைக்க நினைக்க அழுகை வரும்போலிருந்து. அழுகிற வயதா இது? அப்பாடா என்று பிள்ளைகளின் பிள்ளைகளோடு எதைப்பற்றிய யோசனையும் இல்லாமல் வாழ்ந்து மிகுதிக் காலத்தை முடிக்கவேண்டாமா?

 

“புஸ்பா! இன்னொரு டீ கிடைக்குமா?” முன் ஹாலில் இருந்து குரல் கொடுத்த கணவர் மீதும் சினம் பொங்கிற்று.

 

‘இந்த மனுசனுக்கு எதைப்பற்றியும் கவலை இல்ல. அவனோட ஒருக்கா கதைச்சா குறைஞ்சா போவார்! நான் சொல்லுறதை நிண்டு அவன் கேக்கிறதே இல்ல!’ புறுபுறுத்த மனதோடு கொண்டுபோய் டீயைக் கொடுத்தார்.

 

முகம் பார்க்காத மனைவியைக் கண்டு, “என்னப்பா? ஏன் ஒருமாதிரி இருக்கிறாய்?” என்று விசாரித்தார் திருநாவுக்கரசு.

 

“நான் எந்தமாதிரி எண்டாலும் இருந்திட்டுப் போறன். உங்களுக்கு எந்தத் தடங்கலும் இல்லாம மூண்டு நேரமும் சாப்பாடும் தண்ணியும் வெண்ணியும் வந்தா சரி எல்லோ. டீ தந்தாச்சு குடிச்சு குடிச்சு பேப்பரை இன்னும் நல்லா பாருங்கோ!” என்று சிடுசிடுத்துவிட்டுப் போனவரிடம் ஒன்றும் சொல்லவில்லை திருநாவுக்கரசு.

 

காரணத்தை அறிந்தவர் தானே. அடித்தோ அதட்டியோ ஒன்றைச் செய்ய வைக்க அவன் என்ன சின்னப்பிள்ளையா? ஒரு பெருமூச்சுடன் மனைவி சொன்னதுபோலவே பேப்பரில் கவனத்தைச் செலுத்தினார்.

 

அதுவேறு இன்னும் சினமேற்றியது புஸ்பவதிக்கு. ‘அச்சு இந்தாளை மாதிரியே வந்து வாச்சிருக்கிறான் அவனும். நீ சொல்லுறத்தைச் சொல்லு, நான் செய்றதைத் தான் செய்வன் எண்டு!’ பிரசர் சுகரில் ஆரம்பித்து முதுகுவலி தொடங்கி முழங்கால் வலி வரைக்கும் அத்தனை நோயும் இருந்தும் காலையில் ஆறுக்கே எழுந்து அவனுக்கு உணவு தயாரித்துக்கொண்டிருக்கிறார் அவர்.

 

அவன் போனபிறகு ஒன்றுக்கு இரண்டாக மாத்திரைகளை விழுங்கிவிட்டு வலியில் துடிப்பார். அப்போதும் காலடியில் வந்திருந்து மருந்து தேய்த்துவிடுவாரே தவிர அவனிடம் ஒருவார்த்தை பேசமாட்டார் திருநாவுக்கரசு. வேலைக்கு ஆள் இருந்தாலும் நான் இருக்கையில் யாரோ ஒருத்தி என் பிள்ளைக்குச் சமைப்பதா என்று எழுந்துபோய்விடுவார்.

 

இதற்கெல்லாம் முடிவு, ஒன்றில் அவர் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு ‘என்னவாவது செய்யட்டும்’ என்று இருக்கவேண்டும் இல்லையோ அவன் இறங்கிவர வேண்டும். இரண்டுமே நடக்காது போலிருக்கிறது.

 

‘எவ்வளவு அருமையான வரன். இவனுக்கு என்ன வரவர வயசு குறைஞ்சுகொண்டா போகுது..’ தாளித்த சிவப்பு வெங்காயத்துக்குள் மரக்கறிகளைக் கொட்டி வதக்கி முட்டையைப்போட்டு உப்பும் மிளகும் சேர்த்துப் பிரட்டினார்.

 

கழுவி, கொஞ்சமாய் ஊற விட்டிருந்த திணை அரிசியைப் போட்டு அளவாகத் தண்ணீரும் விட்டு மிதமான சூட்டில் மூடிவிட்டார்.

 

அவரால் இதுதான் முடியும். திணை கொழுப்பற்ற சிறுதானிய வகையைச் சேர்ந்த அருமையான சத்தான உணவுதான். ஆனால், இடியப்பம், புட்டு, அப்பம், வடை என்று வகை வகையாகச் சாப்பிடவேண்டிய வயதில் உப்புமா உண்கிறான் என்று அதுவேறு மனத்தைத் தின்றது.

 

அவரும் சமைத்துமுடித்து அடுப்பை அணைக்க, சொல்லிவைத்ததுபோன்று தன் அறையிலிருந்து வெளியே வந்தான் அவரின் அருமந்தப் புத்திரன் பிரதீபன். பார்த்ததுமே ஒரு கோபம் ஆட்கொள்ள முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றார்.

 

அவசரமாக வெளியே செல்ல வந்தவனுக்கு, அன்னையின் மனநிலை விளங்கவில்லை. மேசையில் இன்னும் உணவுத்தட்டு வரவில்லை என்றதும் அவனுக்கும் கோபம்.

 

“எங்கம்மா சாப்பாடு? இண்டைக்கு நேரத்துக்கே போகோணும் எண்டு சொன்னனான் தானே?” என்றபடி சாப்பாட்டு மேசையின் முன் அமர்ந்து ஃபோனில் கவனமாயிருந்தான் அவன்.

 

அவருக்கோ பற்றிக்கொண்டு வந்தது.

 

“வயசான கிழவி ஸ்ப்ரிங் மாதிரி நீ கேக்கமுதல் கொண்டுவந்து நீட்டேலாது(நீட்ட இயலாது). கொஞ்சம் பொறு. போட்டுக்கொண்டு வாறன்!” சினத்துடன் மொழிந்துவிட்டு நடந்தவரை அவன் மட்டுமல்ல முன் ஹாலில் அமர்ந்திருந்த திருநாவுக்கரசு கூடத் திரும்பிப் பார்த்தார்.

 

இரவிரவாக மனைவி கவலைப்பட்டது அவருக்கும் தெரியும். கோபத்தை வெளியே கொட்டிவிட்டால் அமைதியாகிவிடுவார் என்று தெரிந்து மீண்டும் பத்திரிகையில் கவனத்தைச் செலுத்தினார்.

 

“கட்டின மனுசியோட மல்லுக்கட்டவேண்டிய வயசில பெத்த தாயிட்ட அதட்டலும் உருட்டலும்! எனக்கு இப்பதானே பதினெட்டு ஆகுது. நீ சொல்லமுதல் கொண்டுவந்து நீட்ட.” என்று உள்ளிருந்து அவர் புறுபுறுப்பது கேட்டது.

 

“நான் என்ன கேட்டனான் நீங்க என்ன கதைக்கிறீங்க?” என்று குரலை உயர்த்தினான் அவன்.

 

“ஓமடா! நான் தேவையில்லாமத்தான் கதைக்கிறன். சாப்பிடுறதுக்கும் குடிக்கிறதுக்கும் உடுப்புத் தோய்க்கிறதுக்கும் தான் உனக்கு அம்மா. மற்றும்படி வாயை மூடிக்கொண்டு இருக்கோணும். நீ நீ நினைச்சபடிதான் நடப்பாய். நான் ஒண்டும் சொல்லக்கூடாது!” அவனுக்கு மேலால் அவர் குரலை உயர்த்த, குழம்பியே போனான் அவன்.

 

“என்னம்மா? இப்ப என்ன வேணும் உங்களுக்கு?” பொறுமையை இழுத்துப் பிடித்தபடி கேட்டான்.

 

“உனக்கு ஒரு மனுசி வேணும். கொண்டு வாறியா?”

 

அன்னையை முறைத்தான் பிரதீபன்.

 

“இப்ப சாப்பாட்டை தரப்போறீங்களா இல்ல நான் போகவா?”

 

மகனைப் பட்டினியாக வேலைக்கு அனுப்பிவிட்டு ஒரு தாயால் நிம்மதியாக இருக்கமுடியுமா? தன் பலகீனத்தை அறிந்து அவன் மிரட்டியதால் அவர் கொதிநிலைக்கே சென்றுவிட்டிருந்தார்.

 

“இப்பிடி இன்னும் எத்தனை நாளைக்கு என்ர வாயை அடக்கிறாய் எண்டு நானும் பாக்கிறன். விடியக்காலம எழும்ப முடியேல்ல. நடந்தா கால் மூட்டுக்க வலி உயிர் போகுது. கண்டபாட்டுக்கு பிரஷர் ஏறிப்போய் நிக்குது. இந்த உயிர் மட்டும் போய்த் துலையுது இல்ல.” உப்புமா கோப்பையை டொங் என்று அவன் முன்னால் வைத்துவிட்டுச் சென்றார் அவர்.

 

error: Alert: Content selection is disabled!!