காதல் காயங்களே 1 – 2

“அம்மா!” அவனின் அதட்டலுக்கு அசராமல் திரும்பி முறைத்தார் புஸ்பவதி.

 

“என்னடா அம்மா? காலாகாலத்துக்கு கட்டியிருக்க கட்டினவளோட ஏறுப்பட்டிருப்பாய். அதைவிட்டுட்டு என்னோட துள்ளாத! பிள்ளையை பள்ளிக்கூடம் கூட்டிக்கொண்டு போற வயசில இன்னும் அம்மாவாம் அம்மா!” அவனுக்கே அன்னையல்லவா அவர். அதை நிரூபித்துவிட்டுப் போனார்.

 

முகம் கல்லாக இறுகிப்போயிற்று அவனுக்கு. ஒருகணம் விழிகளை இறுக்கி மூடித்திறந்தும் ஆத்திரம் அடங்க மறுக்க, விருட்டென்று எழுந்து சென்றான்.

 

அதுவரை கோபத்துடன் நின்றவருக்கு முகமெல்லாம் சிவந்து கண்ணீர் பெருகிற்று!

 

‘இதுக்கா உடம்புக்கு ஏலாம இருந்தும் எழும்பி சமைச்சனான்..’ மனம் நொந்துவிட, “அப்படி என்ன பிழையா கேட்டுடன் எண்டு சாப்பிடாம போறாய் தம்பி? பின்னேரம் நீ வாற வரைக்கும், ‘ஐயோ என்ர பிள்ளை சாப்பிடாம போய்ட்டானே..’ எண்டு நினைச்சு நினைச்சு கவலைப்படவேணும் எண்டுதான் இப்படிச் செய்றியா? இல்ல சாப்பிடாம போனா இனி அம்மா இதைப்பற்றிக் கதைக்கமாட்டா எண்டு மறைமுகமா மிரட்டிப் பாக்கிறியா?” அழுகையோடு அவர் கேட்டபோது, அதிலிருந்த உண்மை நெஞ்சைச் சுட அப்படியே நின்றுவிட்டான் பிரதீபன்.

 

“பெத்துவளத்த மகனுக்கு ஒரு கலியாணம் கட்டிப் பாக்கவேணும் எண்டு ஆசைப்படுறது பிழையா தம்பி?”

 

“அங்க அஞ்சனாக்கு வேற கல்யாணம் பொருந்தி வந்திட்டாம். எவ்வளவு நம்பினான். எப்பிடியாவது உனக்கு கட்டி வைக்கோணும் எண்டு நினைச்சன்..” என்றவருக்கு, அடக்கமுடியாமல் கண்ணீர் வழிந்தது. அதுவரையிருந்த கோபம் அனைத்தும் பஞ்சாகப் பறந்துவிட அவரை அணைத்துக்கொண்டான் அவன்.

 

“ப்ச் அம்மா! இப்ப என்னத்துக்கு அழறீங்க?” மகனின் கனிவு அவரின் கண்ணீரைப் பெருக்கி விட்டிருந்தது.

 

“புஸ்பா! என்ன இது புதுசா?” என்றபடி எழுந்துவந்தார் திருநாவுக்கரசு. அவர் முகமும் இறுக்கமாயிருந்தது.

 

“இனியும் அவளின்ர பொறுமையை சோதிக்கிறது நல்லதுக்கு இல்ல தம்பி. போதுமான அளவையும் தாண்டி பொறுத்துப்போயிட்டா. இன்னும் வயசும் காலமும் இருக்குதானே எண்டு சொல்லுற இடத்தில நீயும் இல்ல. உனக்கே அது தெரியும். முடிவை நீதான் சொல்லவேணும்!” என்றவரின் அழுத்தமான குரலில், முகம் கருக்க நின்ற மகனின் தோற்றம் வேறு புஸ்பவதியை வருத்தியது.

 

இவ்வளவு நேரமாக அவனிடம் ஒரு வார்த்தை சொல்கிறார் இல்லையே என்று மல்லுக்கட்டிய மனம், அவர் அவனிடம் அழுத்தமாகப் பேசியதும் வார்த்தைகள் தடித்துவிடுமோ என்று பயந்தது. நடுவில் தான் புகுந்தார்.

 

“இந்தக் குடும்பத்தை எழுப்பி நிறுத்தின பொறுப்பான என்ர ஆம்பிளைப் பிள்ளை சந்தோசமா வாழுறத பாக்க ஆசைப்பட கூடாதா சொல்லு?” மன்றாடும் குரலில் கெஞ்சிய அன்னையின் பேச்சைத் தட்டிக்கொண்டு அவனால் நகர முடியவில்லை.

 

“என்னய்யா உன்ர மனதுக்க கிடந்து அரிக்குது? அதையாவது சொல்லன்? உனக்குப் பிடிச்ச பெட்டை இருந்தாலும் கூட்டிக்கொண்டு வா என்றுதானே சொல்லுறன்.”

 

அவன் மனதுக்குள் கிடப்பதை அறிந்தால் கண்ணீர் வடிக்கும் அன்னையே அவனைக் கொன்றுவிடுவார். ஊமையாய் நின்றான் பிரதீபன்.

 

இவ்வளவு சொல்லியும் அசையாதவனைக் கண்டு, காலத்துக்கும் இப்படியே தனியாக நின்றுவிடுவானோ என்று அஞ்சினார் அன்னை. அந்த அச்சமே இதற்கு ஒரு முடிவைக் கட்டியே ஆகவேண்டும் என்கிற பிடிவாதத்தை அவருக்குள் விதைத்தது.

 

“அக்கா தங்கச்சியை கட்டிவச்சு, அம்மா அப்பாவை குறையில்லாம பாக்கிறவன் சந்தோசமா வாழவேணும் எண்டு நினைக்கிறது பிழையாப்பு? சொல்லு.. இண்டைக்கு நீ ஒரு முடிவை சொல்லாம நான் விடமாட்டன். எப்ப கட்டப்போறாய்? சொல்லு!” அழுகையும் பிடிவாதமுமாக நின்றவரை அதிர்வோடு பார்த்தான் பிரதீபன்.

 

இந்த ஆவேசமும் விடாத பிடிவாதமும் புதிதாயிருந்தது.

 

புஸ்பவதிக்கு மகனைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. பெண்ணின் மன ஆழத்தை அறியமுடியாது என்று சொன்ன முட்டாளின் மண்டையிலேயே குட்ட நினைத்தார். இதோ அவர் பெற்றெடுத்து வளர்த்த மகனின் மன ஆழத்துக்குள் என்ன கிடந்து அரிக்கிறது என்று அவரால் அறிய முடியவில்லையே. பிறகு என்ன? எவளையாவது கூட்டிக்கொண்டு வா என்று சொல்லியும் வாய் மூடி நிற்பவனை என்ன செய்வது? தன் கையறு நிலை கண்டு அவருக்கு மீண்டும் கண்ணீர் பெருகிற்று!

 

“இன்னும் எத்தனை வருசத்துக்கு இருப்பனோ தெரியாது. நான் சாகிறதுக்கு இடையில உன்ர பிள்ளையல ஒருக்கா எண்டாலும் கையில ஏந்தோணும் தம்பி..” அவர் சொல்லி முடிக்க முதலே, “அம்மா!” என்றும் “புஸ்பா!” என்றும் இரு குரல்களும் ஒருங்கே அதட்டின.

 

அந்த அதட்டலில் இருந்த பாசத்தைக்கூட நம்பமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார் புஸ்பவதி.

 

“நீ காட்டுற இந்தப் பாசம் உண்மையா இருந்தா ஓம் எண்டு சொல்லு! இல்லாட்டி என்னில உனக்கு அக்கறையும் இல்ல பாசமும் இல்லை எண்டுதான் நினைப்பன். விடடா என்னை! நீ பிடிக்கத்தேவையில்ல. என்ன நடந்தாலும் நடந்திட்டுப் போகட்டும். சும்மா நடிக்காத போ!” கண்ணீருடன் சொல்லிக்கொண்டிருந்தவர் திடீரென்று ஆவேசம் கொண்டு அவனை உதறி விடுபட்டுத் தடுமாறவும், “அம்மா!” என்று அதட்டியபடி பற்றிக்கொண்டு அவரையே பார்த்தான் பிரதீபன்.

 

இனியும் மறுப்பைத் தங்குவார் போலில்லை. அந்தளவில் இரத்தப் பசையிழந்து நம்பிக்கையிழந்து தளர்ந்துபோய் இன்னுமே வயதானவர் போலிருந்தார். அவரைத் தாங்கியபடி நின்ற அப்பாவைப் பார்த்தான். இப்படி அவளை வதைக்காதே என்று கண்டித்தது அவர் விழிகள். அவர் கூட அவரின் மனைவியைக் கண்ணீர் வடிக்க விட்டதில்லை. ஆனால் அவன்..

 

“சரியம்மா உங்களுக்குப் பிடிச்சமாதிரி என்னவோ செய்ங்க..” என்றவன், விளக்கைப் போட்டதும் ஒளிரும் அறையைப் போன்று மலர்ந்துவிட்ட அணையின் முகத்தை உள்வாங்கியபடிவேகமாக வீட்டை விட்டு வெளியேறி இருந்தான்.

 

 

error: Alert: Content selection is disabled!!