“டைமாகுது தீபன்.”
தன்னிடம் சிறைப்பட்டிருந்த அந்த மென் விரல்களை விடுவிப்பதில் அவனுக்கு மனமேயில்லை. ஒருமுறை மெல்ல வருடிக்கொடுத்தான். மனதே இல்லாமல் விட்டுவிட்டு, “சரி ஏறு!” என்றவன், அவளைக் கொண்டுபோய் அவளின் அலுவலகத்தில் இறக்கிவிட்டான்.
அதுவே நிரந்தரமாகியும் போயிற்று!
அன்று தைப்பொங்கல். காலையில் எழுந்ததுமே அம்மா அப்பாவுக்கு அழைத்து வாழ்த்துச் சொன்னாள் மயூரி. “ஒருக்கா பக்கத்தில இருக்கிற கோயில் எதுக்காவது போ கண்ணம்மா!” என்று சொல்லியிருந்தார் செல்வேந்திரன். எனவே குளித்துத் தயாராகி, அன்று வாங்கிய சேலையை அணிந்துகொண்டு புறப்பட்டாள்.
கோயிலுக்குச் சென்று வணங்கிவிட்டு அம்மா அப்பாவின் பெயருக்கு ஒரு அர்ச்சனையும் செய்துவிட்டு வெளியே படி இறங்க பிரதீபன் பைக்கைக் கொண்டுவந்து நிறுத்துவது தெரிந்தது. அதுவும் அவள் வாங்கிக் கொடுத்திருந்த வேட்டி சட்டையில். ‘இவனுக்கு எதைப்போட்டாலும் நல்லாத்தான் இருக்கு!’ துள்ளலோடு அவனை ரசித்தமனது சான்றிதழ் வழங்கிற்று!
ஏனோ ஃபோனில் வாழ்த்தவோ வாழ்த்துச் செய்தி அனுப்பவோ மனமில்லாமல் அவனுக்கு வாழ்த்தாமலேயே விட்டிருந்தாள். இன்று எப்படியும் அவனைப் பார்ப்போம் என்று ஆழ்மனது வேறு சொன்னதில், அந்த நேரத்துக்காகக் காத்திருந்தவள் எதிர்பார்த்ததுபோலவே அவனைக் கண்டதும் முகம் மலர, “ஹாப்பி பொங்கல் தீபன்!” என்றாள் உற்சாகமாய்.
குரல் கேட்டுது திரும்பியவனின் விழிகள் சேலையில் நின்றவளைக் கண்டு ரசனையில் விரிந்தது. ‘மயக்கிறியேடி மய்யு’ சக்கரவள்ளிக் கிழங்கு நிறத்துச் சேலையில் அவனைக் கிறங்கடித்தவளிடம் இதயம் சிறைப்படுவது போலிருக்க, அவன் உதடுகள் உல்லாசச் சிரிப்பைச் சிந்தின.
“ஹாப்பி பொங்கல் மய்யு டார்லிங்!” உற்சாகமாய் வாழ்த்தினான்.
“தீபன்! இது கோயில்!” வம்பிழுத்தவனை கண்களை விரித்து அதட்டினாள் அவள். உடனேயே பணிந்தான் அவன்.
“ஓகே ஓகே! ஒரே ஒரு நிமிசம் பொறு! நானும் வந்தேன் ஐயா எண்டு சொல்லிப்போட்டு வாறன்!” என்றுவிட்டு உள்ளே ஓடினான் அவன்.
முறுவல் அரும்பிற்று அவளிடம்.
‘இந்த வேகத்தில் என்ன கும்பிடப்போறான்? இல்ல என்ன கேப்பான் கடவுளிட்ட?’ அவனுக்குக் கேட்பதற்கு எதுவும் இருப்பதாய் அவளுக்குத் தோன்றவில்லை. அப்படி எதுவும் வந்துவிட வேண்டாம் என்றும் அவள் உள்ளம் கேட்டுக்கொண்டது.
போன வேகத்திலேயே திரும்பி வந்தான் அவன்.
“உண்மையாவே சுவாமி கும்பிட்டிங்களா?” கண்களில் முறைப்புடன் கேட்டாள் அவள்.
அந்தப் பார்வைக்குப் பொய் சொல்ல முடியாமல், “அம்மாட ஓடர்! அதுதான்.” என்று கண்ணைச் சிமிட்டினான் அவன். அந்தப் பொல்லாத கண்ணனே தான். உள்ளம் கள்ளத்தனமாக அவனைச் சீராட்டிக்கொண்டது.
“பாக்க பக்காவா சாமி கும்பிட்ட மாதிரி இருக்குதானே?” என்று அவன் கேட்க, நெற்றியில் தீட்டியிருந்த திருநீறும் சந்தனத்தையும் பார்த்து, “கள்ளச் சாமியார் மாதிரியே இருக்கிறீங்க..!” என்றாள் சிரிப்புடன்.
“அதுதான் அம்மாக்கு பிடிக்கும்.” என்றவன் “இக்கடச் சூடு!!” என்றவாறே, கோயில் விழும்படி ஒரு செல்பியை கிளிக்கி சுடச்சுட அன்னைக்கு அனுப்பி வைத்தான். “பொங்கல் முதல் காரியம் ஓவர்!” என்றான் அவளிடம்.
பார்த்திருந்தவளின் முகத்தில் முறுவல் மலர்ந்துபோயிற்று!
இவன் சேட்டைக்காரன் என்று அறிந்து அவனுடைய தாயார் கோயிலுக்குப் போகச்சொல்லி கட்டாயப்படுத்தியிருக்க வேண்டும். அவனும், மனதார வணங்காதபோதும் அன்னையின் பேச்சைத் தட்டவில்லை. அன்னையின் பேச்சைத் தட்டாதவனை அவளுக்கு இன்னுமே பிடித்தது.
வெளியே வந்து, “அடுத்த பிளான் என்ன?” என்றான் அவன்.
“எனக்கு பக்கத்துல இருக்கிற அறிவுச் சோலைக்கு போறது மட்டும் தான். பின்னேரம் நந்துவோட கார்னிவெல் போகப்போறேன். நீங்க வெளிக்கிடுங்கோ.” என்றவளின் பார்வையில் வீதியின் அடுத்த பக்கம் கற்பூரம், சாம்பிராணி குச்சி, மாலை போன்றவற்றை விற்றுக்கொண்டிருந்த சிறுமி பட்டாள். இந்தப் பொங்கல் நாளில் அவளிடம் ஏதாவது வாங்க வேண்டும் போலிருக்க, “அப்ப நான் வரட்டா..” என்றபடி வீதியைக் கடக்க முயன்றவளை வேகமாக வந்த பைக் ஒன்று கார்னை அழுத்த, “ஏய் பாத்து!” என்றபடி அவளின் கையைப் பிடித்து இழுத்திருந்தான் அவன்.
“ரோட்டைப் பாத்துக் கடக்கவே மாட்டியா நீ? கண்ணை எங்க வச்சுக்கொண்டு நடக்கிறாய்?” கோபத்தில் சீறினான் அவன்.
நேரடியாக அவளைத் தாக்கிய அவனுடைய முதல் கோபம். மளுக் என்று ஒரு துளிக் கண்ணீர் வெளியேறியது. அதோடு, அவளும் நன்றாகவே பயந்துதான் போயிருந்தாள். “சாரி..” என்று முணுமுணுக்க, “ப்ச்! நீ முதல் பைக்ல ஏறு. எங்க போகவேணுமோ அங்க கொண்டுபோய் இறக்கிவிடுறன்.” என்றான் அவன் கொஞ்சமும் குறையாத கோபத்தோடு.
“இல்ல.. நானே போவன்..”
“ஏறு மயூரி!” இத்தனை நாள் பழக்கத்தில் கோபம் வந்தால் மாத்திரமே அவன் வாயில் அவளது முழுப்பெயர் வரும் என்பதை அறிந்து வைத்திருந்தவளுக்குள் அந்தப் பெயரோடு சேர்த்து அவன் கோபமும் இறங்க வேகமாக ஏறி அமர்ந்துகொண்டிருந்தாள்.
“கவனமா பிடிச்சுக்கொள்!” அவன் சொல்லி முடிக்க முதலே அவன் தோளை வலுவாகப் பற்றிக்கொண்டிருந்தாள் அவள்.
சற்றுத் தூரம் சென்றபோதும் தொடர்ந்த அவளின் அமைதி அவனை இம்சித்தது. தன் கோபம் அவளை அதிகமாகப் பாதித்துவிட்டதை உணர்ந்து மெல்லிய சிரிப்பொன்று அவன் உதட்டுக்குள் முளைத்தது. தன் கோபத்துக்கு அடங்கும் அந்தப் பெண்மையிடம் அவன் மனம் மயங்கிற்று! கண்ணாடி வழியே அவளைப் பார்த்தான். உம் என்று முகத்தை நீட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
“எங்க போறது எண்டு தெரிஞ்சா கொஞ்சம் நல்லாருக்கும்!” நகைக்கும் குரலில் சொன்னான் அவன்.
‘பொங்கல் அதுவுமா சீறிப் பாய்ஞ்சுபோட்டு இப்ப நல்லபிள்ளைக்கு நடிக்கிறான்.’அவனைப் பார்வையால் வெட்டிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள் மயூரி.
“மய்யு கதைக்கமாட்டியா?”
‘வாற விசருக்கு இவன்ர மண்டைய உடைக்கப்போறன்!’ பல்கலைக் கடித்தவள், அறிவுச்சோலை என்கிற பெயர் பலகையைக் கண்டதும், “இங்க நிப்பாட்டுங்க!” என்றாள் முறைப்புடன்.
அவனும் நிறுத்த இறங்கி, “நன்றி!” என்றுவிட்டு நகர்ந்தவளை எட்டிப் பிடித்தான் அவன். இப்போதெல்லாம் அவளின் விரல்களைப் பற்றுவது அவனுக்கு வெகு இயல்பாகவே வந்தது.
அவள் பார்க்க, “அப்போது ஒருநிமிசம் நான் பயந்தே போனன். உனக்கு ஏதும் நடந்திடுமோ எண்டு. அந்தக் கோபத்தில தான் கத்திட்டன். அதுக்கு கோவிக்கிறதா?” என்றான் அவன்.
‘மன்னிப்பு கேக்காம சமாதானம் தான் சொல்லுறான். பொல்லாதவன்!’ விரல்களைப் பிரித்துக்கொள்ள முனைய, “ஒருக்கா சிரியனடி மய்யு!” என்றான் கெஞ்சலாக.
“சிரிப்பு தானா வரோணும்.” கோபம் எப்போதோ போய்விட்டிருந்தது. ஆனாலும் சும்மா முறுக்கிக்கொண்டாள்.
“வர வைக்கவா..” அவளின் விரல்களோடு தன் விரல்களை விளையாடவிட்டு அவளை என்னவோ செய்துகொண்டிருந்தான் அவன். போதாக்குறைக்கு பார்வையில் ஓராயிரம் சேதி சொன்னவனிடம், “தீபன் பிளீஸ்!” என்றாள் நடுங்கிய குரலில்.
“பிடிக்கேல்லையா மய்யு?” மெல்ல மற்றக் கரத்தையும் பற்றி அவளைத் தன்னருகில் கொண்டுவந்தான். மந்திரத்துக்கு கட்டுண்டவள் போன்று விழிகள் அவனிடமே இருக்க, தன்னை மறந்து அவனின் இழுவைக்கு இசைந்தாள் மயூரி.
“உன்னோட நிறையக் கதைக்கவேணும் மயூ! ஈவ்னிங் சந்திக்கலாமா?” ஆசையாகக் கேட்டான்.
“நந்துவோட கார்னிவெலுக்கு வாறன் எண்டு சொல்லிட்டன்.” அவளின் உதடுகள் மெல்ல முணுமுணுத்தது.
“ஓ.. அப்ப இன்னொருநாள் பாப்பம்!” என்றுவிட்டு, விடைபெற்றுச் சென்றவனை ஏமாற்றமாகப் பார்த்திருந்தாள் மயூரி.

