அத்தியாயம் 12
அலுவலக நண்பர்களோடுதான் கார்னிவலுக்கு வந்திருந்தாள் மயூரி. இரண்டு ஆண்கள், அவள், நந்தினி, இன்னொருத்தி. எல்லா இடமும் நன்றாகச் சுற்றிவிட்டு, கார் ஸ்கூட்டர் ஆசை தீரும்வரை ஓடி, துவக்கினால் சுட்டு வெற்றிபெற்ற ஒரு டெடியையும் பிடித்துக்கொண்டு ஐஸ் வாங்கி அருந்தியவர்களின் பார்வை, அங்கே உயரமாகச் சுற்றிக்கொண்டிருந்த இராட்டினத்தின் பக்கம் திரும்பியது. இராட்சதத் தோற்றத்தில் எழும்பி நின்று மிகப்பெரிய வட்டப்பாதையில் ஒவ்வொரு கண்ணாடிக் குடுவைகளும் மனிதர்களை நிறைத்துக்கொண்டு வேகமாகச் சுற்றிக்கொண்டிருந்தது. பாக்கவே அடிவயிற்றில் ஒரு பயமும் அதை மீறிய ஆவலும் எல்லோரிடமும்.
“போவமா?” துள்ளிக்கொண்டு நந்தினிதான் கேட்டாள்.
“பயமடி!” ஆவலும் பீதியுமாகச் சொன்னாள் மயூரி.
“என்னடி பயம்? எப்படியும் விழமாட்டோம். ஃபுல்லா கிளாஸ் மூடி இருக்கு. பிறகென்ன? பயமா இருந்தா என்னை பிடிச்சுக்கொள்.” கையோடு இழுத்துக்கொண்டு போனாள் நந்தினி.
மயூரிக்கோ நந்தினியில் நம்பிக்கையே இல்லை. உச்சிக்குப் போனதும் அவளும் சேர்ந்து பயத்தில் கத்தக்கூடியவள். இருந்தாலும் இந்த விபரீதத்தை அனுபவித்துப் பார்ப்போமே என்கிற ஆசை உந்த அவளோடு இசைந்துபோனாள்.
சுழன்றுகொண்டிருந்த அந்தச் சுற்று முடிந்து ஆட்கள் இறங்கத் தொடங்க, அங்கிருந்தவன் அடுத்த சுற்றுக்கு ஏறுகிறவர்களின் சிப்பினை வாங்கியபடி இருவர் இருவராக ஒவ்வொரு குடுவைக்குள்ளும் அனுப்பிக்கொண்டிருந்தான்.
“நந்து என்னோட வாடி!” என்று அவளின் கையைப்பற்றி இழுத்துக்கொண்டு அவர்களுக்காக இறங்கிவந்து நின்ற குடுவைக்குள் மயூரி ஏறிய கணத்தில், “நீங்க உங்கட மற்ற பிரென்ட்டோட போங்க!” என்றுவிட்டு, நந்தினியை விலக்கிக்கொண்டு உள்ளே ஏறி அமர்ந்து கண்ணாடிக்குடுவையின் கதவைச் சாற்றியும் விட்டிருந்தான் பிரதீபன்.
நந்தினி மயூரியை முறைக்க, அவளோ நம்பமாட்டாத வியப்பில் விழிகள் பளபளக்க பிரதீபனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். இவன் எப்போது எப்படி வந்தான்?
அங்கிருந்த வேலையாள் இவர்கள் ஒரு குழுவினர் போலும் என்று எண்ணி, ஐவரில் ஒருத்தியாக எஞ்சியவளின் குடுவைக்குள் நந்தினியை அனுப்பிவைத்தான்.
என்னதான் நண்பர்களோடு சுற்றிக்கொண்டிருந்தாலும், மாலை சந்திக்கலாமா என்று கேட்டவனின் நினைவுதான் அவளுக்குள் நிறைந்துபோயிருந்தது. அவனையே கண்டுவிட்டதில் மனம் துள்ளிற்று!
“இங்க என்ன பார்வை?” ஒன்றுமே நடவாதது போன்று புருவம் உயர்த்திக் கேட்டான் பிரதீபன்.
ஒன்றுமில்லை என்பதாகத் தலையசைத்தாள். அவன் அனுப்பிய கவிதை, அன்று காலையில் இரு கரங்களையும் பற்றிக்கொண்டு அவன் காட்டிய நெருக்கம் எல்லாம் நினைவில் வந்து அவளைத் தடுமாற வைத்தது. இதோ இப்போதுகூட அவளையே ரசித்துப் பார்க்கும் விழிகள்.. அவள் அவள் வசமாயில்லை.
இதில், மற்றவர்களை அடுத்தடுத்த குடுவைகளில் ஏற்ற ஏற்ற இவர்களின் குடுவை மெல்ல நகர்ந்து நகர்ந்து மேல்நோக்கிச் செல்லத் தொடங்கியிருந்தது. அதற்கே நடுங்கினாள் மயூரி. கையிலிருந்த டெடியை மார்புடன் இன்னுமே இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.
“பயமா இருந்தா கிட்டவா!” அவளையே பார்த்துக்கொண்டு இருந்தவன் சொன்னான்.
‘இவனுக்குக் கிட்ட.. அதுவும் நான்… தைரியம்தான் கள்ளனுக்கு!’
கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிக்கொண்டு இலகுவாக அமர்ந்தபடி, உதட்டினில் சின்னச் சிரிப்பை ஒட்டவைத்துக்கொண்டு, அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் ரசனையோடு பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.
ஒரு பெண்ணை யாராவது இப்படிப் பார்ப்பார்களா.. அவளின் விழிகள் அவனைத் தவிர்த்து அங்குமிங்கும் சுழன்று படபடத்தது.
அதற்குள் இராட்டினத்தின் உயரமான பகுதிக்கு இவர்கள் நகர்ந்திருந்தார்கள். அதை உணராமல் எட்டிப் பார்த்தவள், “அம்மாடி!” என்றபடி நெஞ்சைப் பற்றிக்கொண்டாள். பயத்தில் கைகால்கள் எல்லாம் நடுங்கியது!
ஒருமுறை நிதானமாக அவளின் பயத்தை உள்வாங்கிவிட்டு, “இப்பவும் நீயா பக்கத்தில வரமாட்டாய் என்ன!” என்றபடி, அவளருகில் நெருங்கி அமர்ந்துகொண்டான்.
விரிந்த விழிகளால் அவள் திரும்பிப் பார்க்க, “அப்படி என்ன செய்துபோடுவன் எண்டு இந்தப்பார்வை?” என்றான் அவள் முகத்திலேயே விழிகளைப் பதித்து.
‘இவன் கேக்கிற எல்லா கேள்வியுமே ஆபத்தான கேள்வியாத்தான் இருக்கு!’ ரகசியமாக ரசித்துக்கொண்டவளுக்கு கோபம் வரமாட்டேன் என்றது.
மெல்ல அவளின் கரத்தினைப் பற்றிக்கொண்டான் அவன். ‘இதயத்திலிருந்து பேசப்போகிறான்..’ அவள் மனது சொன்னது. இப்படி எப்போதெல்லாம் கரம் பற்றுகிறானோ அப்போதெல்லாம் அப்படித்தானே பேசியிருக்கிறான்.
அவனைப் பற்றிய அவளின் கணிப்பை அவனும் பொய்யாக்கவில்லை. பற்றிய கரத்தின் விரல்களோடு தன் விரல்களைக் கோர்த்தான். அவளின் கரத்தை தன் மடிக்கு மாற்றிக்கொண்டான். மயூரிக்குப் பதட்டத்தில் உதட்டின் மேலே வியர்வைப் பூக்கள் அரும்பிற்று!
அதை உணர்ந்தவன் அவளைத் திரும்பிப் பார்க்க, தழைந்த அவள் விழிகள் கோர்த்திருந்த அவர்களின் கரத்தினில் இருந்தது.
அதற்குள் கீழே வந்திருந்த அவர்களின் குடுவை மீண்டும் உச்சியை நோக்கி நகர்ந்தவேளையில் அவன் கேட்டான்.
“நீயும் நானும் பழகிப்பாக்கலாமா மய்யு?”
அதிர்வோடு அவனைப் பார்த்தாள் மயூரி. இப்போது அவன் விழிகளும் அவளிடம் தான் இருந்தன. அதில் எந்தத் தடுமாற்றமும் இல்லை.
“உனக்கு என்னைப் பிடிக்கும் எண்டு எனக்குத் தெரியும் மய்யு. எனக்கு உன்ன நிறைய பிடிக்கும் எண்டு உனக்கும் தெரியும். இந்தப் பிடிக்கும் எண்டுறதுக்குப் பெயர் என்ன? நான் அதை காதல் எண்டுதான் நினைக்கிறன். கல்யாணத்துல முடியிற காதல். உனக்கு? அதை நீதான் சொல்லவேணும்!” என்றான் அவளிடம்.
இராட்டினத்தின் உச்சியில் வைத்து உள்ளத்தைச் சொன்னவன் இவன் ஒருவனாகத்தான் இருக்க முடியும். அவளுக்கோ உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை நடுங்கியது! இராட்டினம் கீழ்நோக்கி இறங்கத்தொடங்கிய வேளையில் அடிவயிற்றில் ஒரு பயப்பந்து உருளத்தொடங்கிற்று! டெடியை இன்னும் இறுக்கமாய் பற்றினாள்.
“நான் இருக்கேக்க உனக்கு என்ன பயம்?” அதட்டியபடி அவளின் கரத்தினை அழுத்திக்கொடுத்தான்.
“பயமா இருந்தா என்னில சாய்ஞ்சுகொள்.” மென்மையாகச் சொன்னான்.
அவளுக்கும் அப்படிச் செய்தால் பாதுகாப்பாக இருக்கும்போல்தான் தோன்றிற்று. அந்தளவுக்கு நடுங்கினாள். இராட்டினம் வேறு தன் இராட்சதக் குணத்தைக் காட்டத் தொடங்கியிருந்தது. ஆனாலும் அவளாக எப்படி?
“அதைக்கூட செய்யமாட்டாய் நீ!” என்று அதட்டிவிட்டு, அவளின் தலையைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டான் அவன்.
“அந்த டெடியை எப்படி வச்சிருக்கிறாயோ அப்படி உன்ன வச்சிருக்கத்தான் எனக்கும் ஆசையா இருக்கு!” என்றான் காதோரமாய்.
எப்படி வைத்திருக்கிறாள்? தன் கைகளுக்குள் பொத்திக்கொண்டு மார்போடு இறுக்கி அணைத்தபடி. கடவுளே.. முகம் சிவக்க முறைக்க முயன்று அவள் தோற்றபோது, “இந்த நெருக்கத்துக்கு எந்தப் பிழையான பெயரும் இல்ல மய்யு. உனக்கு நான் இருக்கிறன் எண்டுறது மட்டும்தான்!” என்றான் அவள் விழிகளையே பார்த்து.
அவள் தேகத்தில் ஒரு நடுக்கம் ஓடி மறைந்தது. அதை உணர்ந்து, “என்ன?” என்றான் அவன்.
ஒன்றுமில்லை என்று தலையசைத்தாள் அவள்.
“வாயை திறந்து எதையுமே சொல்லமாட்டியா மய்யு?” காதோரமாக அவன் குரல் கெஞ்சியதில் அவள் உதடு கடித்தாள்.
“வருங்காலத்தில் எனக்குச் சொந்தமான ஒன்றை நீ கொடுமை செய்யாத!” சன்னச் சிரிப்புடன் சொன்னான் அவன்.
‘இவன..’ வேகமாக அவனிடமிருந்து விலகியவளின் முகமோ செக்கச் சிவந்துபோயிருந்தது.
சந்தோசமாய் பார்த்தான் பிரதீபன். அவனிடம் மயங்கும் பெண்மை அவனுக்குத்தான் சொந்தம். அதை அவள் சொல்லவில்லை. அவ்வளவுதானே. தன் மனதில் பூத்திருப்பது காதல் என்று உணர்ந்து அவளிடம் பகிர்வதற்கு அவனுக்கும் ஒரு காலம் எடுத்தது தானே. அப்படி அவளும் எடுத்துக்கொள்ளட்டும்!
அதற்குமேல் அதற்கான பதிலை அவன் அவளிடம் கேட்கவில்லை. அவனளவில் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய தேவையும் இல்லை.
இராட்டினமோ தலை தெறிக்க சுழலத் தொடங்கியிருந்தது. அவள் நடுங்கினாலும் இவனைப் பாராமல் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
அவனுக்கோ அவளை அப்படி விட்டுவைக்க மனமேயில்லை. எனவே, “என்ர தோள் இருக்கு. நீ சாய்ஞ்சுகொள்ளலாம். என்ர கை இருக்கு. அதை உன்னைச் சுத்திப் போடுறதுக்கு நீ சம்மதிக்கலாம். இன்னும் என்னென்னவோ இருக்கு. நீ எதையும் செய்யலாம். நான் உன்னை மாதிரி வெக்கப்படவும் மாட்டன். பொய்யா முறைக்கவும் மாட்டன்.” என்று சொல்லிக்கொண்டே போனவனை அடக்கும் வழி தெரியாமல் தடுமாறி, “தீபன்! என்ன எல்லாம் கதைக்கிறீங்க.. உங்களை!” என்றவள் அவனைத் தாறுமாறாக அடிக்கத் தொடங்கியிருந்தாள்.
அவனோ, வாய்விட்டுச் சிரித்தான். “வா!” என்றபடி, அவளை அணைத்துக்கொண்டான்.

