காதல் காயங்களே 15 – 1

அத்தியாயம் 15

 

 

அறைக்குள் வந்து கதவடைத்த பிரதீபன் தலையைப் பிடித்துக்கொண்டு அப்படியே கட்டிலில் அமர்ந்துகொண்டான்.

 

அவன் மனம் என்ன நினைக்கிறது? என்ன எதிர்பார்க்கிறது? என்ன வேண்டுமாம் அதற்கு? அவனுக்கே பிரித்தறிய முடியவில்லை.

 

வாலிபம் அரும்பிய வயதில் அழகான ஒரு காதல் மலர்ந்து, அது கருகி, காலம் ஓடி, இன்னொரு பெண்ணுடன் திருமணம் என்கிற புள்ளியைத் தொடுவதற்கே அவனுக்குப் பத்து வருடங்கள் பிடித்திருந்தன. அதைத் தொடப்போன கணத்தில் தான் கண்முன்னே வந்துநின்று, முடிந்தால் தொட்டுப்பார் என்று சவால் விட்டிருந்தாள் மயூரி.

 

அவளைப்பற்றி அவளிடம் பேசப்போனபோது அவள் காட்டிய அந்நியத்தனமும் இறுகிய முகமும் அவனைத் தூரத்தான் தள்ளி நிறுத்தியது! பழைய உறவைப் புதுப்பிக்கிற எண்ணமும் இல்லை அவனுக்கு. திருமணமாகிவிட்ட அவளோடு அப்படி நினைப்பானாயின் அவன் மனிதனேயில்லை. அவளின் வாழ்வைத்தான் சீராக்கிவிட முடியுமா என்று முயன்றான்.

 

முடியாது என்று அவள் மறுத்தபோது, வேறு எப்படி அவளின் வாழ்வைச் சீராக்கலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்தபோதுதான் ஆதிரா கண்முன்னே வந்து நின்றாள். சாதாரணமாக அல்ல! அவன் பறிகொடுத்த அவனுடைய குழந்தையை நினைவுபடுத்திக்கொண்டு! என்னை அப்பா இல்லாமல் இருக்க வைத்துவிட்டாயே என்று கேட்டுக்கொண்டு!

 

பிறகு எப்படி அவனால் இன்னொரு வாழ்க்கைக்குள் நுழைய முடியும்? மனச்சாட்சி மருந்துக்குக் கூடவா இல்லை?

 

அவளைக் காணாதவரைக்கும், எங்கிருக்கிறாள் எப்படியிருக்கிறாள் என்று தெரியாதவரைக்கும், எங்கோ நன்றாக இருக்கிறாள் என்று நம்பிக்கொண்டு, மனமே ஒப்பாமல் திருமணத்துக்குத் தலையாட்ட முடிந்தது. கண்முன்னால் கணவன் இல்லாமல் நிற்கிறவளைக் கண்டபிறகு அப்படியே விட்டுவிட்டுப் போக முடியாது.

 

இனியும் அவளோடு தனக்கொரு உறவு அமையும் என்று அவன் நினைக்கவில்லை. அவளுடைய குடும்பத்தைத்தான் மீண்டும் இணைத்துவிட முயன்றான். அப்போதுதான் அவனாலும் அவனுக்கு என்று ஒரு குடும்பத்தை உருவாக்க முடியும்.

 

ஒன்றில் அவள் அவளுடைய கணவனோடு சேர்ந்து வாழவேண்டும். அல்லது அவளோடுதான் அவன் வாழ்க்கை!

 

முடிவெடுத்துக்கொண்டான் பிரதீபன்! இதில் மாற்றமில்லை. ஆனால், இந்த மாற்றத்தை நிகழ்த்துவதும் இலகுவல்ல என்று எண்ணும்போதே, அன்றைய நாளில் நீண்ட நேரத்துக்குப்பிறகு அவன் உதடுகளில் முறுவல் வந்து அமர்ந்தது.

 

அவனுடைய மய்யு.. எவ்வளவு கம்பீரமாக அவனைப் பார்த்து வராதே என்றாள்!

 

‘அண்டைக்குதான் உன்ர தீபனுக்கு மண்டைக்க சரக்கில்லை எண்டால் இண்டைக்குமா? நீ அடிச்சுத் துரத்தினாலும் வருவன்!’

 

கட்டிலில் விழுந்தவனின் விழிகள் மூடிக்கொண்டாலும் மனம் விழித்துக்கிடந்து பழங்கணக்குப் பார்த்தது.

 

அன்று, இராட்சத இராட்டினத்திலிருந்து இறங்கி வந்தவர்களை நந்தினி முறைத்த முறைப்புக்கு அளவேயில்லை. அதுவும் மயூரியின் கையைப் பற்றிக்கொண்டு பிரதீபன் நிற்க, அதற்கு அனுமதித்துவிட்டு முகச் சிவப்புடன் அவனுக்குப் பின்னால் மறைவாக நின்ற மாயூரியைக் கண்டு கொலைவெறியே வந்தது அவளுக்கு.

 

அவளை இழுத்துத் தன்முன்னே கொண்டுவந்து நிறுத்தினாள் நந்தினி. மயூரியோ என்னைக் காப்பாற்றேன் என்று பிரதீபனைத் திரும்பிப் பார்க்க, அவனோ ஒரு சிரிப்புடன் அவளையே பார்த்திருந்தான்.

 

“அங்க என்ன பார்வை? என்னைப் பாரடி!” என்று அவளின் தாடையைப் பற்றித் தன்னைப் பார்க்கவைத்தாள் நந்தினி.

 

“நந்து…” என்று கெஞ்சிய மயூரியிடம்,

 

“கதைக்காதடி! நான் கேட்ட நேரமெல்லாம், கேகேக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்ல. கதைக்கிறதே இல்ல எண்டு பொய்யச் சொல்லிப்போட்டு.. இண்டைக்கு பாத்தா.. என்னடி நடக்குது? முழு பூசணிக்காயை சோத்துக்க மறைக்கிறது கேள்விப்பட்டிருக்கிறன். நீ என்னடா எண்டால் முழு ஆளையே மறைச்சிருக்கிறாய்! நீயெல்லாம் ஒரு பிரென்ட்டாடி?” என்று சீறினாள் நந்தினி.

 

“ஐயோ நந்து.. உன்னட்ட மறைப்பனா..” என்றவளுக்கு பிரதீபனின் முன்னால் தன் மனத்தைச் சொல்லவும் முடியவில்லை. இதில் நந்தினியின் அருகில் செல்ல முடியாமல் பற்றியிருந்த அவளின் கையை அவன் விடமறுத்தான். நந்தினி அறியாமல் விடுவிக்க முயல தடுத்தான் அவன்.

 

‘படுத்தாதடா..’ திரும்பிப் பார்த்து முறைத்தாள். அவனோ சிரிக்கும் கண்களோடு அவளின் திண்டாட்டத்தை ரசித்துக்கொண்டிருந்தான். இதில், ‘அதென்ன கேகே?’ என்று ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேள்வி வேறு.

 

‘கடவுளே.. இனி இவனும் கேப்பானே.. மய்யு உனக்கு இண்டைக்கு எல்லா பக்கமும் சங்குதான்டி!’

 

அவனை முறைத்துவிட்டு ஒரே இழுவையில் தன் கையை அவனிடமிருந்து பிரித்துக்கொண்டு ஓடிப்போய் நந்தினியின் கையைப் பற்றிக்கொண்டாள் மயூரி. “என்ர செல்லக்குட்டியெல்லாடி நீ. உன்னட்ட மறைப்பனா? இப்பதான்டி அவனே எனக்குச் சொன்னவன்..” என்று கடைசி வரியை அவளுக்கு மட்டுமே கேட்குமாறு முணுமுணுத்தாள்.

 

“சொல்லிட்டானா? என்னடி சொன்னவன்?” அப்படியே தலைகீழாக மாறிப்போய் ஆவலாகக் கேட்டாள் நந்தினி.

 

“எரும! கத்தாதயடி! அவனுக்கு கேக்கப்போகுது!”

 

“கேட்டா என்ன? பயமா? நீ வா நான் கேக்கிறன்!” என்றவள் அவளின் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு பிரதீபனின் முன்னால் வந்து நின்றாள்

 

“சொல்லுங்க கேகே. என்ன சொன்னனீங்க இவளிட்ட?”

 

“அது என்ன கேகே?” நந்தினியின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் பதில் கேள்வி அவன் மயூரியிடம் கேட்டான்.

 

மயூரிக்கோ அவன் பார்வைக்கும் பதில் பார்வை கொடுக்க முடியவில்லை கேள்விக்கும் பதில் கொடுக்க முடியவில்லை. வேகமாக அவனிடமிருந்து பார்வையை அகற்றிக்கொள்ள அவன் உதட்டினில் முறுவல் மலர்ந்தது.

 

“ஆகாகாகா! என்ன நடிப்படியப்பா!” என்று மயூரியை முறைத்துவிட்டு, “உன்ன பிறகு கவனிக்கிறன், நீங்க சொல்லுங்கோ என்ன சொன்னநீங்க அவளிட்ட?” என்று பிரதீபனிடமே மீண்டும் வந்துநின்றாள் அவள்.

 

“சொல்லவா?” உதட்டில் மலர்ந்தே இருந்த புன்சிரிப்புடன் மயூரியிடம்தான் திரும்பவும் கேட்டான் அவன்.

 

அவள் தவிப்போடு வேண்டாம் என்று பார்க்க, “அது அவளுக்கும் எனக்குமானது. அதை எப்படி உங்களிட்டச் சொல்லுறது?” என்றான் பிரதீபன் மாறாத முறுவலோடு.

 

நந்தினியோ ஒரு வெட்டும் பார்வையை வீசினாள்.

 

“ஓ…! அந்தளவுக்கு போயிட்டுது போல. அப்ப நான் முக்கியமில்லை உனக்கு? என்னட்ட ஒண்டும் சொல்லமாட்டாய். சொல்லடி? நீயெல்லாம் ஒரு பிரென்டாடி?” என்று மீண்டும் மயூரியிடம் சண்டைக்குப் போனாள் நந்தினி.

 

“ஐயோ நந்து! நான் இன்னும் பதில் சொல்லேல்லடி!” என்று அவசரமாகச் சொல்ல, அந்தப் பதிலில் சற்றே சமாதானமானாள் நந்தினி.

 

“என்னைக் கேக்காம நீ பதில் சொல்லக்கூடாது! ஓகே!” என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டு, “வா போவம்!” என்று அவளை இழுத்துக்கொண்டு போக, அதற்குள் மயூரியின் கையைப் பற்றி அவளைத் தன்னிடம் இழுத்துக்கொண்டிருந்தான் பிரதீபன். “அவள் என்னோட வரட்டும். நீங்க போங்கோ!”

 

நந்தினி அவனிடம் ஒன்றும் சொல்லாமல், ‘இப்ப நீ வரப்போறியா இல்லையா?’ என்பதுபோல் மயூரியைத்தான் முறைத்தாள். மயூரிக்கு பிரதீபனைத் தாண்டிப் போகமுடியவில்லை. அவனிடமே நின்றுகொண்டு, ‘பிளீஸ்டி!’ என்று கண்ணால் கெஞ்சினாள்.

 

“மகளே! நாளைக்கு ஆபீஸ் வாடி! உனக்கு இருக்கு!” என்று பல்லைக் கடித்துவிட்டு, இருவரையும் நன்றாக முறைத்துவிட்டு விசுக்கென்று திரும்பிச் சென்றுவிட்டிருந்தாள் அவள்.

 

அவள் மற்றவர்களோடு சென்றதும் இவனைத் திரும்பிப்பார்த்து முறைத்தாள் மயூரி. அவனுடைய முறுவல் பெரிதாயிற்று! “என்ன?” என்றான் அவள் மீதே பார்வையைப் பதித்து.

 

“எல்லாம் உங்களால வந்தது! இனி என்னைப்போட்டு படுத்தி எடுக்கப்போறாள்! கடவுளே.. நாளைக்கு ஆபீஸ் போறத நினைச்சாலே பயமா இருக்கு! ஒரு கிழமைக்கு சிக் லீவு எடுக்கப்போறன்.” புலம்பித்தள்ளினாள் மயூரி.

 

“காதல் வந்தா களவு பொய் எல்லாம் வருமாம் எண்டு சொல்லிவிடு!” இளநகையோடு சொன்னான் அவன்.

 

“எனக்கு இன்னும் ஒண்டும் வரேல்ல!” என்றாள் பட்டென்று!

 

“கேக்கேல்ல மேடம்! இன்னொருக்காச் சொல்லுங்க!” அவளின் புறமாகக் குனிந்து கேட்க, அவனுடைய குறும்பில் அவளுக்குப் பதிலே இல்லாமல் போயிற்று!

 

“சரி என்னோட வா! வராதத வரவைப்பம்!” கண்ணால் சிரித்தபடி அவளைக் கரம்பற்றி அழைத்துக்கொண்டு போனான் அவன்.

 

“எங்கே போகிறோம்?” என்று கேட்கக்கூட முடியாத அளவில், அவனின் அருகாமையும் கேலியும் சீண்டலும் சிரிப்பும் அவளைப் போட்டுச் சுகமாகப் பந்தாடின!

 

கடற்கரைக்கு அழைத்துச் சென்றான் பிரதீபன். அந்தப் பயண நேரத்தில் ஓரளவுக்கு இயல்புக்கு மீண்டிருந்தாள் மயூரி. இருவருமாக அலைகளை நோக்கி நடக்கையில், அன்றொருநாள் அவன் நண்பர்களோடு கூடி விளையாடியதும் அவனைப் பார்த்து அவள் ரசித்ததும் நினைவலைகளில் மிதந்துவந்து முறுவலை மலரச் செய்தது.

 

காற்றுவந்து கலைத்த கேசத்தைக் கோதிவிட்டபடி என்ன என்று விசாரித்தான் அவன். அவள் சொல்ல, “அன்றைக்கு தானே நந்தினி என்னட்ட பெயரும் கேட்டவா?” என்று நினைவு கூர்ந்துவிட்டு, “அது என்ன கேகே?” என்றான் மீண்டும்.

 

‘மறந்திட்டான் எண்டு நினைச்சன்..’

 

“ரெண்டுபேருமா சேர்ந்து எனக்கு பட்டப்பெயர் வச்சு விளையாடி இருக்கிறீங்க. அது தெரியாம இவ்வளவு நாளா இருந்திருக்கிறன் நான்!” அவளோடு ஒரு படகினருகில் அமர்ந்தபடி சொன்னான் அவன்.

 

நந்தினி அவளைப்போட்டுப் படுத்திய பாடுகளின் நினைவில் மயூரிக்குச் சிரிப்பு வந்தது. அதையெல்லாம் எப்படி அவனிடம் சொல்வது?

 

“முதல் ‘கேகே’ எண்டுறதுக்கு விளக்கம் சொல்லு. பிறகு ஏன் அந்தப்பெயர் எண்டு சொல்லு!” என்று நின்றான் அவன்.

 

அவளின் தயக்கத்தில் அவனுக்குள் ஆர்வம் வளர்ந்துகொண்டே போயிற்று. அறிந்தே ஆகவேண்டும் என்கிற நிலைக்கு வந்திருந்தான்.

 

“சொல்லு மய்யு.”

 

அந்தக் கொஞ்சலில் மனம் மயங்க, “காதல் காயக்காரன்” என்று, அவன் முகம் பாராமல் சொன்னாள் மயூரி. அவனோ அதைக்கேட்டு சந்தோசமாக வாய்விட்டுச் சிரித்தான். காயக்காரன் என்பது மனதை நிரடினாலும் காதல் என்பதுஅவனாகச் சொல்லமுதல் அவனோடு இணைத்து அவளுக்குள் நந்தினி மூலம் தூவப்பட்டிருக்கிறது என்பதை எண்ணி மகிழ்ந்தான்.

 

error: Alert: Content selection is disabled!!