காதல் காயங்களே 16 – 1

அத்தியாயம் 16

 

 

 

அன்று முழுக்க மயூரிக்கு ஏனோ மனம் சரியே இல்லை. ஒருமுகமாக எந்த வேலையும் பார்க்க முடியாமல் கவனம் சிதறிக்கொண்டே இருந்தது. கையிலிருந்த ஃபோனை ஒருமுறை தவறவிட்டாள். என்னவோ யோசனையில் நடந்து தூணில் மோதிக்கொண்டாள். பர்ஸை வைத்துவிட்டுக் காண்டீனுக்குப் போனாள்.

 

“என்னடி பிரச்சனை உனக்கு?” பக்கத்து டேபிளில் இருந்த நந்தினி கேட்டும் சொல்லத் தெரியவில்லை.

 

மனதில் ஒரு நடுக்கம், இனம் புரியாத பயம், எதிலுமே கவனம் செலுத்த முடியாமல், “ப்ச்!” என்றபடி தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துகொண்டாள்.

 

“உடம்பு ஏதும் சரியில்லையாடி?” எழுந்துவந்து அவளின் நெற்றியில் கையை வைத்துக் கேட்டாள் நந்தினி.

 

“மனம் சரியே இல்ல நந்து. என்ன எண்டும் விளங்க இல்ல. பொறு, அப்பாவோட ஒருக்கா கதைச்சுப்போட்டு வாறன்!” என்றுவிட்டுப் போனவள் சற்று நேரத்தில் அப்படியேதான் திரும்பி வந்தாள்.

 

கேள்வியாகப் பார்த்தாள் நந்தினி. “அங்க ஒரு பிரச்சனையும் இல்லையாம்.” என்றபடி தன் டேபிளில் அமர்ந்தாள்.

 

“கேகேயோட ஏதும் சண்டைய கிண்டய பிடிச்சியா?” கண்களில் குறும்புடன் அவள் கேட்க, இவள் முறைத்தாள்.

 

“இல்ல. உம்மா உம்மம்மா விளையாட்டு ஏதும் விளையாடினீங்களா?”

 

பட்டென்று மேசையில் இருந்த தண்ணீர் போத்தலை அவளை நோக்கி எறிந்தாள் மயூரி. “விசரி! என்னவெல்லாம் கதைக்கிறாய்?” முகம் செக்கப் சிவந்துவிட்டிருந்தது.

 

போத்தலை லாவகமாகப் பிடித்தபடி, “அடிப்பாவி! அவனைப் பற்றிக் கதைச்சா காணுமே, முகம் முழுக்க பல்ப் எரியுது. அப்படி என்னதான்டி சொக்குப்பொடி போட்டவன் உனக்கு.” என்று கேட்டாள் நந்தினி.

 

“எருமை! பேசாம இரடி!” என்று அவளுக்குத் திருப்பிக்கொடுத்தாலும் உதடுகள் நாணச் சிரிப்பில் துடித்தது. அவன் போட்ட சொக்குப்பொடியை இவளிடம் சொல்லவா முடியும்?

 

பார்வையாலேயே அவளைப் பெண்ணாக உணரவைப்பானே! அவன் பார்வைகள் நெஞ்சில் ஊர்வலம் நடக்க நந்தினியை நேராகப் பார்க்கமுடியாமல் திண்டாடினாள் மயூரி.

 

அவளையே பார்த்துக்கொண்டிருந்த நந்தினிக்கு ஆச்சரியமாகப் போயிற்று!

 

மயூரியை அவளுக்கு நன்றாகத் தெரியும். வெறும் தோற்ற மயக்கத்திலோ வயதுக் கோளாரிலோ வாழ்க்கையை நடத்துகிறவள் அல்ல. சொல்லப்போனால், நந்தினியை விடவும் மனதளவில் பக்குவமானவள். அப்படியானவளின் மனதை முழுவதுமாகக் கைப்பற்றிக்கொண்டு இப்படி ஆட்சி செய்வது என்பது அத்தனை இலகுவான காரியம் அல்ல. பிரதீபனின் மீது மெல்லிய பொறாமை கூட எழுந்தது. அவள் முகத்தைப் பற்றித் தன்னை நோக்கி உயர்த்தினாள். “என்னைப் பாரடி!” என்றாள்.

 

“விடு நந்து!” அவள் கண்களைப் பார்க்க மறுத்தாள் மயூரி.

 

“அடிப்பாவி! இந்த மயங்கு மயங்கிப்போய் கிடக்கிறியேடி மய்யு. அப்படி என்னதான்டி தந்தவன் உனக்கு?” என்றுவிட்டு, காதோரமாக அவள் சொன்னவைகளைக் கேட்டு குங்குமமாக முகம் சிவந்துபோயிற்று மயூரிக்கு.

 

“எரும எரும! என்னவெல்லாம் கதைக்கிறியடி! வெக்கமே இல்லையா உனக்கு?” என்று அவள் மொத்த, “அதெல்லாம் நடக்காமத்தான் உனக்கு முகம் இந்தளவுக்குச் சிவந்து போனதோ.” என்று இன்னுமே நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டாள் நந்தினி.

 

அன்று இரவும் நிம்மதியாக உறங்க முடியாமல் உழன்று உழன்று கிடந்தவள் அதிகாலை நெருங்குகையில் தான் ஆழ்ந்த உறக்கத்துக்கே போயிருந்தாள்.

 

திடீரென எங்கிருந்தோ ஒலித்த செல்பேசியோடு வீட்டின் கதவும் தட்டப்பட்டுக்கொண்டிருந்தது. என்ன என்று பதறியடித்துக்கொண்டு ஃபோனைப் பார்க்க மகேஷ் என்று விழுந்தது.

 

“மகேஷ் அண்ணா..” கலவரத்துடன் இவள் ஏற்க, “கதவைத் திற மயூரி!” என்றான் அவன்.

 

“நீங்களா தட்டுறீங்க..” என்றபடி வேகமாக ஓடிப்போய் திறந்தவள் முகமெங்கும் கலவரம்.

 

இவன் எதற்கு இங்கே வந்தான்? அதுவும் இந்த நேரத்தில். அப்பா எதுவும் சொல்ல இல்லையே. அப்பா அம்மாக்கு.. மனம் நொடியில் பயந்து திடுக்கிட, என்ன என்று அறிய முதலே கைகால்கள் எல்லாம் நடுங்கத் தொடங்கியது. நெஞ்சு பதறியது.

 

“அம்மா.. அப்பாக்கு என்ன?”

 

“கெதியா வெளிக்கிடு. நாங்க நான் வந்த ட்ரெயின்லையே திரும்ப போகவேணும்!” என்றான் அவன்.

 

“ஏன்.. என்ன அம்மாக்கு என்ன? அப்பா.. அவருக்கு.. பொறுங்கோ அப்பாக்கு எடுக்கிறன்..” கட்டிலில் கிடந்த ஃபோனை எடுக்க, நடுக்கத்தில் கையிலிருந்து நழுவி விழுந்தது அது.

 

அவள் எடுப்பதற்குள் விழுந்த ஃபோனை தான் எடுத்துக்கொண்டான் மகேஷ். “அதெல்லாம் கதைக்க நேரமில்லை. நீ கெதியா வெளிக்கிடு மயூரி.”

 

அவளுக்கோ பயத்தில் கண்களில் கண்ணீர் பொலபொலவென்று வழியத் தொடங்கியது.

 

“யாருக்கு என்ன எண்டு சொல்லுங்கோவன் அண்ணா. அம்மாக்கு.. அம்மா.. ஐயோ அண்ணா அம்மாக்கு ஏதும் சீரியஸா?” படபடவென்று கேட்கையிலேயே மனம் உணர்த்தியது, நேற்று முழுக்க அவளுக்கு மனம் சரியில்லையே. ஆனா அப்பா ஒன்றுமில்லை எண்டாரே..

 

“ஒருத்தருக்கும் ஒண்டுமில்ல. நீயா எதையும் கற்பனை செய்யாம வெளிக்கிடன் மயூரி. நேரமாகுது!” என்றவன் ஒரே இழுவையாக அவளை இழுத்துக்கொண்டு புறப்பட்டான்.

 

அவளுக்கோ நெஞ்சைக் கவ்விக் பிடித்திருந்த பயம் அகன்றபாடில்லை. நடுக்கமும் நிற்கவில்லை. வழியும் கண்ணீரோடு கெஞ்சலும் பயமுமாக அருகில் அமர்ந்திருந்தவனைப் பார்த்தாள். ‘என்ன எண்டு சொல்லுங்கோவன்..’ விழிகள் கெஞ்சிற்று! மளுக் என்று வழிந்த கண்ணீரைத் துடைத்தாள்.

 

மகேஷுக்கும் அவளைப் பார்க்க முடியவே இல்லை. ஆனால்.. உள்ளதைச் சொன்னால் அங்கே போய்ச் சேருவதற்குள் அவளைச் சமாளிப்பது சிரமம். எனவே மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு அவளது கண்ணீரையும் தவிப்பையும் பார்வையாளனாக மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தான்.

 

காலை புலர்ந்ததும் எப்போதும்போல அழைத்தான் பிரதீபன்.

 

“தீபன்..” அவனுடைய பெயரே அடக்கப்பட்ட கதறலாக ஒலித்தது.

 

“மய்யு…! ஏன் குரல் ஒருமாதிரி இருக்கு? என்ன?” என்று, அங்கே அவனும் பதட்டமானான். “உடம்புக்கு ஏதும் செய்யுதா? நான் வரவா? எதுக்கும் பயப்படாத!” என்ன என்று தெரியமுதலே அவளைத் தேற்றினான். அந்தளவில் உயிரையே ஒரு ஆட்டு ஆட்டியிருந்தது அவளின் கதறல்.

 

“இல்ல. நான் வீட்டை போய்க்கொண்டு இருக்கிறன். மகேஷ் அண்ணா வந்தவர்..” கேவல்களினூடு நடந்ததைச் சொல்ல, “ஓ..” என்று கேட்டுக்கொண்டவனுக்கும் என்னவோ சரியில்லை என்று புரிந்துபோயிற்று.

 

“அவர் பக்கத்தில இருந்தா குடு நான் கதைக்கிறன்.” என்றான்.

 

“உங்களோட கதைக்கவாம்..” என்று நீட்ட, யார் என்று கண்களில் கேள்வியோடு வாங்கிக்கொண்டான் மகேஷ். இவள் அவனையே பார்த்துக்கொண்டிருக்க எழுந்து தள்ளிப்போனான் அவன். என்ன கதைத்தார்களோ தெரியாது மீண்டும் கொண்டுவந்து இவளிடம் ஃபோனை நீட்டினான். கதைத்த பிரதீபனின் குரல் கனத்திருப்பது போலிருந்தது.

 

“என்னவாம் தீபன்? நீங்களாவது சொல்லுங்கோவன். எனக்குப் பயமா இருக்கு.” என்று அழுதாள் அவள்.

 

“ஒண்டும் இல்ல. மாமிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லையாம்.” என்று அவன் சொல்லிமுடிக்கவில்லை, “அம்மாக்கு சீரியசா? அப்படி என்ன வந்தது?” என்று ஃபோன் காதிலேயே இருக்க அவள் மகேஷிடம் பதற, “மயூ!” என்று அழுத்தம் கொடுத்துச் சத்தமாக அழைத்தான் பிரதீபன்.

 

“சொன்னா இப்ப நீ கத்தின மாதிரி கத்துவாய் எண்டுதான் அவர் சொல்லேல்ல. ஒன்றுக்கும் கவலைப்படாம போ, அங்க போனதும் நான் எடுக்கிறன்.” வார்த்தைகளை யோசித்து யோசித்து உதிர்த்தான் அவன்.

 

“ம்ம்..” முற்றிலும் பயம் அகழாமலேயே ம் கொட்டினாள் மயூரி.

 

“மயூ…”

 

“ம்?”

 

என்னவோ சொல்ல வந்து தயங்கிவிட்டு, “கவனமா போ என்ன. சும்மா அழக்கூடாது. நீ தைரியமானவள். துணைக்கு நான் இருக்கிறன். அங்க போனதும் எடுக்கிறன்.” என்றுவிட்டு வைத்தான் அவன்.

 

வீட்டுக்குப் போனதும் என்ன நடக்கும் என்று தெரியுமே. மனம் கனத்துப்போக அப்படியே அமர்ந்துவிட்டான் பிரதீபன். எப்படித் தங்குவாள்? அடுத்த கணமே அவனும் புறப்பட்டுவிட்டான்.

 

புகையிரத நிலையத்தில் இறங்கி, ஆட்டோ பிடித்து வீட்டை நெருங்க நெருங்க என்னவோ சரியில்லை என்று அவள் மனது அடித்துச் சொல்லியது. கைகால்கள் எல்லாம் படபடவென்று வெளிப்படையாகவே அடித்துக்கொள்ள ஆரம்பிக்க, அந்தச் சின்னப்பெண் என்ன என்று தெரியமுதலே படும் பாட்டைத் தாங்க முடியாமல் அவளின் கையில் தட்டிக்கொடுத்தான் மகேஷ்.

 

அதற்குமேல் அவளால் முடியவே இல்லை. “அம்மாக்கு என்ன அண்ணா?” அடக்கமுடியாத அழுகை வெடிக்க கேட்கும்போதே அவர்களின் வீடு நெருங்கி இருந்தது.

 

“வந்து பார்!” தொண்டை அடைக்க ஆட்டோவை விட்டு இறங்கி அவள் இறங்க வழிவிட்டான் மகேஷ்.

 

அதிகமாகத் தெரிந்த சனநடமாட்டம், அவர்களின் முகத்தில் அப்பிக்கிடந்த சோகம், இவளைக் கண்டதும் வலியோடு அவளையே பரிதாபமாக அவர்கள் பார்த்த பார்வை எல்லாம் வெளிவட்டத்தில் அவளின் கவனத்தில் விழுந்து நடுங்கச் செய்தாலும், வீட்டுக்குள் ஓடியவள் கண்ட காட்சியில் ஒருகணம் அதிர்ந்து நின்றுவிட்டாள். அடுத்த கணமே வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக, “அம்மாஆ..!” என்று கதறிக்கொண்டு பாய்ந்தவள் தாயின் உடலின் மீது விழுந்துவிடாமலிருக்க சுற்றியிருந்தவர்கள் அவளைப் பற்றிக்கொண்டனர்.

error: Alert: Content selection is disabled!!