காதல் காயங்களே 16 – 3

எல்லாவற்றையும் தேவகி கவனித்துக்கொண்டுதான் இருந்தார். எதற்கும் அவள் அவனைப் பார்ப்பதும், அவனுடைய கண்ணசைவில் வேலைகளைப் பார்த்ததும், முடிந்தவரை அவனை அண்டியே நின்றதும், அவனின் மெல்லிய இதமான அதட்டலில் மட்டுமே அவளின் கண்ணீர் கட்டுப் பட்டதையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தார்.

 

அவன் நெருங்க முடியாத பொழுதுகளில் நந்தினி அவளைக் கவனித்துக்கொண்டாள்.

 

எல்லாம் முடிந்து போயிற்று! இனி அவளின் அம்மா அந்த வீட்டுக்குள் வரவே மாட்டார். கடைசிப் பயணம்.. அதையும் அவர் முடித்துக்கொண்டார். அவரின் குரல் கேட்காது. அவளைப் பார்க்க மாட்டார். அம்மா அம்மா மனம் அரற்றி அழுது துடிக்க, அப்போதும் பிரமை அகழாதவராக சுவரில் சாய்ந்திருந்த செல்வேந்திரனின் மடியில் தலைசாய்த்துக் கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தாள் மயூரி.

 

பிரதீபனுக்கு அவளைக் கண்கொண்டு பார்க்கவே முடியவில்லை. அருகில் சென்று ஆறுதல் சொல்லித் தேற்ற முடியாத அளவில் துக்கம் விசாரிக்க ஆட்கள் வந்துகொண்டே இருந்தார்கள். நந்தினியும் கூடவே நின்றது மட்டுமே சின்ன ஆறுதல். அவள் கவனித்துக்கொண்டாலும் மயூரி தேறுவதைக் காணோம்.

 

அடுத்தநாள் புறப்பட்டான் பிரதீபன். அவளிடம் சொல்லிக்கொள்ளாமல் எப்படிப் போவது? கிடைத்த தனிமையில் அவளைத் தனியாக இழுத்துக்கொண்டு போனான். “இனி எனக்கு அம்மா இல்ல தீபன்..” என்று அப்போதும் அவன் மார்பில் விழுந்து கதறினாள் மயூரி. ஒற்றைப்பெண்ணாக வளர்ந்தவளுக்கு தாயின் இழப்பு மகா கொடுமையாகவே போயிற்று!

 

“யார் சொன்னது இனி அம்மா இல்லை எண்டு. உன்ர அம்மா உன்னோடதான் இருப்பா. அவவின்ர உடம்புதான் இனி இல்ல. அழுதது காணும் மய்யு. நீ கவனம். அப்பாவை பாத்துக்கொள். நீயும் அழுதா அவர் இதுல இருந்து வெளில வரவே மாட்டார். அம்மாதான் போயிட்டா. இருக்கிற அப்பாவை தேற்ற வேணும் எல்லா. என்ர செல்லம் நான் போனபிறகு அழுறேல்ல. சரியோ.. மனதை தேற்றிக்கொண்டு மாமாவையும் கவனிச்சுக்கொள். நான் போகோணும் மா. அக்காக்கும் அங்க மாப்பிள்ளை பாக்கீனமாம். அதுக்கும் நிக்கவேணும்.” என்று தன் நிலைமையை எடுத்துரைத்தான் அவன்.

 

அங்கிருந்து புறப்பட முதல் தேவகியையும் தனிமையில் சந்தித்தான் பிரதீபன். “ஆன்ட்டி, நான் வெளிக்கிடப்போறன். மயூரியையும் அங்கிளையும் கொஞ்சம் பாத்துக்கொள்ளுங்கோ!” என்று அன்போடு கேட்டுக்கொண்டான்.

 

“கட்டாயமப்பு. எனக்கும் வேற என்ன வேலை சொல்லு?” என்றவர் கேள்வியாக அவனைப் பார்த்தார்.

 

என்ன கேட்க வருகிறார் என்று அவனுக்கும் புரிந்தது. என்றாலும் அவரே கேட்கட்டும் என்று காத்திருக்க, “உனக்கும் மயூரிக்கும் என்ன பழக்கம் அப்பன்?” என்று கேட்டார்.

 

பதில் சொல்லச் சற்றுத் தயங்கினான் அவன். பின், “இந்த நேரத்தில இதை கதைக்கலாமா எண்டு தெரியேல்ல. அதோட, மயூரி இன்னும் எதுவும் வாயால சொல்லேல்ல ஆன்ட்டி. ஆனா மறுக்கமாட்டாள் எண்டு நம்புறன். எங்களுக்கு ஒருத்தரை ஒருத்தருக்கு பிடிச்சிருக்கு.” என்றான் அவன்.

 

“நானும் அப்படித்தான் நினைச்சனான். தம்பியும் நீர் போன் எடுத்து கதைச்சனீராம் எண்டு சொன்னவர். உம்மை பாக்கவும் நல்ல பிள்ளையாத்தான் தெரியுது. மயூரிக்குப் பிடிச்சிருந்தா செல்வா ஒண்டும் சொல்லமாட்டார் எண்டுதான் நினைக்கிறன். ஆனா தம்பி காலத்துக்கும் அவளை நீர் சந்தோசமா வச்சிருக்க வேணும். விளங்கினதோ? தாயில்லா பிள்ளை அவள்.” உரிமையும் ஒரு அழுத்தமும் தொனிக்கச் சொன்னார் அவர்.

 

(இதுல வார ஸ்லாங் சற்றே வித்தியாசமா இருக்கலாம் உங்களுக்கு. எங்கட பக்கம், சற்றே பழக்கம் இல்லாத ஆனால் நல்லமாதிரி பழகும் மனிதர்களோடு கதைக்கும்போது அதுவும் பெரியவர்கள் சின்னவர்களோடு கதைக்கையில் வா போ என்று சொல்லமாட்டார்கள். அதே நேரம் வாங்கோ பொங்கோவும் வருவது குறைவு. சின்னவர்களானாலும் மரியாதை கொடுக்கும் விதமாக. நீ- நீர், வா- வாரும், இரு- இரும், சொன்னாயா-சொன்னீரே.. கதைத்தீரோ என்று இப்படி வரும்.)

 

“கட்டாயம் ஆன்ட்டி.”

 

“உம்மை(உன்னை) நம்புறன். அதை காப்பாத்தவேணும்!” என்றார் அவர்.

 

அதோடு விட்டுவிடாமல், அவன் குடும்பத்தின் முழு ஜாதகத்தையும் கேட்டு அறிந்துகொண்டார். எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு மனதில் பாரத்தோடு மயூரியிடம் தலையசைத்து விடைபெற்றுக்கொண்டான் பிரதீபன்.

 

நாட்கள் கனமாகவே நகர்ந்தன. பிரதீபன் ஆறுதலுக்கு அவளோடு தினமும் எடுத்துக் கதைதான். நந்தினியும் இரண்டு நாட்களில் புறப்பட்டிருந்தாள். எட்டுச் செலவும் முடிந்து போயிற்று. அவள் வேலைக்கு புறப்பட வேண்டும். போகவே மனமில்லை. ஆனால் அப்பா?

 

“என்னோட வாங்கோவன் அப்பா..” அவரின் மடியில் தலை சாய்த்திருந்தவள் கண்ணீருடன் தழுதழுத்த குரலில் கேட்டாள்.

 

அவரோ அவளின் தலையைத் தடவிக்கொண்டிருந்தார். பதில் சொல்லவில்லை. விழிகளோ, இத்தனை நாட்களாக ஊனும் உயிருமாக அவரோடிருந்து இன்று சட்டங்களுக்குள் அடங்கிப் போன மனைவியையே பார்த்திருந்தது. பின்னாட்களில் பெரிதாக நடமாட்டம் இல்லாமல் முடங்கிப் போனார்தான் என்றாலும் செல்வேந்திரனின் வாழ்க்கை அவரைச் சுற்றித்தானே இயங்கியது.

 

அவளுக்கு சமைக்கோணும்.. அவளை குளிக்க வைக்க வேணும்.. மருந்து குடுக்கோணும்.. நித்திரை கொண்டுட்டாளா.. காலையில் என்றால் எழுந்துவிட்டாளா என்று அத்தனையும் அவரைச் சுற்றித்தான். இனி?

 

வைத்தியர்கள் சாடை மாடையாகத் தெரிவித்தார்கள் தான். ஆனாலும் ஒரு நம்பிக்கை இழை தொங்கிக்கொண்டே தான் இருந்தது. மனைவியிடம் அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் அவரும் உணர்ந்திருக்க வேண்டும். கடைசி நாட்களில் மகளைப் பற்றி அதிகமாகப் பேசியதும், அவள் விரும்புகிற மாதிரியான ஒரு வாழ்க்கையையே அமைத்துக்கொடுக்க வேண்டும் என்று பகிர்ந்ததும், என்னால உங்களுக்கு சரியான கஷ்டம் என்னப்பா என்று அடிக்கடி கேட்டதும், அவரின் கையையே பற்றிக்கொண்டு உறங்கியதும். அவரின் துணையோடு வெளியே வந்து அவரோடு இருக்க முயன்றதும் என்று இன்று யோசித்துப் பார்க்கையில் கழிகிற நாட்களை முடிந்தவரை நிறைவோடு வாழ நினைத்திருக்கிறார் என்று தோன்றிற்று.

 

“என்னப்பா? இன்னும் என்னத்தை மறைக்கிறீங்க?” அவரின் அமைதி பொறுக்க முடியாமல் கண்ணீரும் கோபமுமாகக் கேட்டாள் மயூரி.

 

“இனியும் என்னத்த மறைக்க இருக்கு? கொஞ்ச நாள் போகட்டும் அம்மாச்சி. உன்னவிட்டா இனி எனக்கும் ஆரு இருக்கினம் சொல்லு? ஒன்றில் நீ இங்க வா இல்ல நான் அங்க வாறன். நான் அங்க வாறதா இருந்தா ஒரு வருசம் முடியட்டும். ஒரு வருஷம் ஆகாம எங்கயும் நான் வரேல்லம்மா. இந்த வீடுதானம்மா எனக்கு ஆறுதல். முடிஞ்சா நீ வேலை மாத்திக்கொண்டு இங்க வரப்பார்.” என்றார் அவர்.

 

அதற்குமேல் அவரிடம் கேட்கமுடியவில்லை அவளுக்கு. அவளுக்கே அம்மா உலவிய அந்த வீட்டைவிட்டு நகரவே மனமில்லை என்கிறபோது அவரின் நிலை?

 

“நாளைக்கு போகோணும் அப்பா.” குரலடைக்கச் சொன்னாள்.

 

“நீ போய்ட்டுவா. அம்மா எங்கயும் போகேல்ல. அவள் எங்களோடதான் இருக்கிறாள். நீ கவலைப்படாம வெளிக்கிடு.” குரலடைக்கச் சொன்னார் செல்வேந்திரன்.

 

“கவனமா இருங்கோ என்னப்பா. சாப்பிடுங்கோ. ஆன்ட்டி அப்பா கவனம்.” மகேஷ் வேலை விசயமாக கொழும்பு போயிருந்தான். எனவே, வழியனுப்ப வருகிறேன் என்ற செல்வேந்திரனை மறுத்துவிட்டுப் புறப்பட்டாள்.

 

அவரோடு இருக்கிறவரை பெரியவள் போன்று அவரைத் தேற்றிவிட்டு ஆட்டோ மறையும் வரை பின் பக்க ஜன்னலால் திரும்பிப் பார்த்தபடியே வந்தவளுக்கு, அப்பாவும் அவர்களின் வீடும் மறைந்ததும் கண்ணீர் பொலபொல என்று கொட்டியது.

 

தனியா வரவே முடியாமல் மனம் பதறியது. யாராவது துணைக்கு இருந்தால்.. தேற்ற ஒரு உறவு இருந்தால், இந்தப் பாரத்தைக் கொஞ்சம் தாங்கிக்கொள்ள ஒருவர் இருந்தால்.. மனம் பிரதீபனின் அருகாமைக்காக வெகுவாக ஏங்கிப் போயிற்று! அவன் தோள் சாய்ந்து அழவேண்டும் போல எழுந்த உந்துதலை அடக்கி, நனைந்த இமைகளோடு இறங்கி பணத்தைக் கொடுத்துவிட்டுத் திரும்பியபோது அன்றுபோலவே இன்றும் அவளைப் பார்த்துக்கொண்டு பிரதீபன் நின்றிருந்தான்.

 

அவனைக் கண்டதும்அழுகையில் பிதுங்கிய உதட்டைக் கடித்து அடக்க முயன்றாள். அவன் முன்னிலையில் துக்கம் இன்னுமே பெருகித் தெரிந்தது. மனதில் அடைத்துக்கொண்டு கிடக்கும் அனைத்தையும் கத்திக் கதறவேண்டும் போலிருந்தது. அவனோ அருகில் வந்து, “பழகிப்பாக்க வேண்டிய தேவையே இல்ல எண்டு நினைக்கிறன். அதால நீ தாராளமா கிட்ட வரலாம். என்ர கையை பிடிக்கலாம். தோள்ல சாய்ஞ்சு அழலாம். உன்னை கட்டுப்படுத்த வேண்டாம்.” என்றான் கைகளை விரித்தபடி.

 

அவ்வளவுதான்!

 

“தீபன்!” கண்ணீரும் கதறலும் பொங்க அவனது கரம் சேர்ந்தாள் மயூரி. அந்தக் கணத்திலிருந்து செல்வேந்திரனின் மகளாக மட்டுமே இருந்தவள், இருவர் மனமொப்பிய பிரதீபனின் காதலியாகவும் முறைப்படி மாறிக்கொண்டிருந்தாள்.

 

error: Alert: Content selection is disabled!!